செவ்வாய், 30 ஜூன், 2015

80 வயது முடிந்தால் என்ன செய்ய வேண்டும்?

               

இது ஒரு கேள்வியா? பேசாமல் படைத்தவனைப் பார்க்கப் போக வேண்டியதுதான். அப்படிப் போகாட்டியும் பரவாயில்லை? பதிவு எழுதறேன்னுட்டு எங்களை வேற உயிரை எடுக்கறீங்க? இதை விட அக்கிரமம் உலகத்தில உண்டா? (DD to note)

நண்பர் ஜெயக்குமார் போட்டுள்ள பின்னூட்டத்தைப் பாருங்க.

ஐயா

தங்களுடைய 80 ஆவது பிறந்த நாள் (15ஜூன்)மற்றும் சென்றுவிட்ட 50ஆவது கல்யாண நாள் வீட்டின் 50 வயது முதிர்வு எல்லாவற்றையும் இந்த மாதம் ஒன்றாகக் கொண்டாட இருந்தீர்களே. கொண்டாட்டம் முடிந்து விட்டதா? அல்லது தள்ளிப் போடப்பட்டதா? அல்லது பேரன் மார்க் விவகாரத்தில் வேண்டாம் என்று கை விடப்பட்டதா?

எப்படியாயினும் இது பற்றி ஒரு பதிவு போடுங்கள்.


Jayakumar

இதைப்பற்றி ஒரு பதிவு போட்டா பத்தாதுங்க. இருந்தாலும் நண்பர்கள் வேண்டுகோளைத் தட்ட முடியுமா? அதனால சுருக்கமா ஒரு பதிவில சொல்லிப்புடறனுங்க.

என் வாழ்க்கையில் பல முடிச்சுகள் விழுந்திருக்கின்றன. அதற்குக் காரணம் நான் பிறந்த நேரம் என்று பல ஜோசியர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதில் ஒரு விநோதம் பாருங்க, நான் எப்ப பிறந்தேன் அப்படீங்கறதுதான் முதல் முடிச்சு.

நான் வேலைக்குப் போன முதல் நாள் (16-8-1956), கல்யாணம் பண்ணின நாள்
(9-9-1964), பணி ஓய்வு பெற்ற நாள் (30-6-1994) இதெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்குது.  ஆனால் நான் என்றைக்குப் பிறந்தேன் என்பது மட்டும் ஞாபகம் வரமாட்டேன் என்கிறது.

என்னுடைய  SSLC சர்டிபிகேட்டில் என் பிறந்த நாள் 15-6-1934 என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ரொம்ப நாள் நான் இதுதான் என் பிறந்த நாள் என்று நம்பிக்கொண்டு இருந்தேன். ஒரு நாள் அந்த நம்பிக்கையில் மண் விழுந்தது.
எங்கிருந்தோ ஒரு பழுப்பு சீட்டு திடீரென்று முளைத்தது. அதில் ஒரு தேதி -இங்கிலீசிலியும் தமிழ் மாதத்திலும் எழுதி நட்சத்திரம் எழுதி கிழமை எழுதி நேரம் எழுதி இந்த நேரத்தில் பழனியப்ப கவுண்டர்-பூவாத்தாள் தம்பதியினருக்கு  குமாரர் சுப ஜனனம் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த அரிய கண்டு பிடிப்பு நான்  SSLC படிக்கும்போது நடந்தது. இந்த சீட்டைக் கொண்டு போய் எனக்குத் தெரிந்த வாத்தியாரிடம் காட்டி இதற்கு என்ன பண்ணலாம் என்று கேட்டேன். அவர் உன்னுடைய  SSLC சர்ட்டிபிகேட் புத்தகத்தில் பழைய தேதியை எழுதியாய் விட்டது. தவிர இது ஒரு துண்டுக் காகிதம். ஒழுங்காக எழுதப்பட்ட ஜாதகம் என்றாலாவது ஏதாவது செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் நீ இந்த வருடம்  SSLC பரீட்சை எழுதவேண்டிய வயது இருக்காது. அடுத்த வருடம்தான்  SSLC பரீட்சை எழுத முடியும் என்றார்.

அப்போ எல்லாம்  SSLC பரீட்சை எழுத ஒரு குறிப்பிட்ட வயது முடிந்திருக்கவேண்டியது அவசியம். இது என்னடா கிணறு வெட்ட பூதம் வந்த கதையாகப் போயிற்றே என்று நான் அந்த விஷயத்தை விட்டு விட்டேன். இருந்தாலும் இந்த தேதி விவகாரம் எப்படி நடந்தது என்று ஆராய்ச்சி செய்து கொண்டேயிருந்தேன். அப்பவே என் மூளை எப்படி என்னை ஒரு ஆராய்ச்சியாளனாக ஆவேன் என்று அடையாளம் காட்டி இருக்கிறது பாருங்கள்.

அப்படி ஆராய்ச்சி செய்ததில் என் பாட்டி சொன்னதாவது. நான் சிறுவனாக இருந்தபோது என்னைவிட இரண்டு வயது மூத்தவனான என் அத்தை மகன் எங்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் போய்க்கொண்டு இருந்திருக்கிறான். என் அத்தையைக் கட்டிக் கொடுத்தது ஒரு வரப்பட்டிக்காடு. அங்கு பள்ளிக்கூடம் இல்லை. அதனால் டவுனில் நாங்கள் குடியிருந்ததினால் எங்கள் வீட்டில் இருந்து படித்திருக்கிறான்.

அவன் பள்ளிக்கூடம் போவதைப் பார்த்த நான் அவனுடன் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று அழுது ரகளை பண்ணியிருக்கிறேன். என் ரகளை பொறுக்க மாட்டாமல் என் பாட்டி என்னை ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு கூட்டிப்போய் என்னையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் பாட்டியிடம் இவன் வயதென்ன என்று கேட்டதற்கு என் பாட்டி அது எல்லாம் எனக்குத் தெரியாது, எப்படியோ நீங்கள் இவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தே ஆகவேண்டும். வீட்டில் இவன் ரகளை பொறுக்க முடிவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும். அதை கணக்கில் வைத்து அந்த ஆசிரியர் என் வயதை 15-6-1934 என்று குறித்துக் கொண்டார். அப்போதெல்லாம் பிறப்பு சான்றிதழ் வழக்கமெல்லாம் ஏற்படவில்லை. ஒருவருடைய ஜாதகம்தான் அவருடைய பிறப்பு சான்றிதழாக இருந்தது.

எனக்கு ஜாதகம் எழுதாததினால் குத்து மதிப்பாக இந்த பிறந்த தேதி நிர்ணயிக்கப்பட்டு விட்டது. வெகு காலம் கழித்து என் உண்மையான பிறந்த தேதி எழுதிய துண்டுக்காகிதம் கிடைத்தது என்று முன்பே கூறினேன் அல்லவா? நான் வேலைக்குச் சேர்ந்த பிறகு ஒரு பஞ்சாங்க ஐயர் எனக்குப் பழக்கமானார். அவர் என்னுடைய ஜாதகம் எங்கே என்று கேட்டார். எனக்கு ஜாதகம் எழுதவில்லை என்று சொன்னேன். பிறந்த தேதியும் நேரமும் தெரியுமா என்று கேட்டார். நான் இந்த துண்டு காகித த்தை எடுத்துக் காண்பித்தேன்.

அவர் அந்தக் காகிதத்தை வாங்கிக்கொண்டு போய்  சில நாட்கள் கழித்து என் ஜாதகத்தை ஒரு புது நோட்டில் எழுதிக்கொண்டு வந்து கொடுத்தார். அதை வைத்துக் கொண்டு இருந்தேன். சர்க்கார் ஆவணங்களிலெல்லாம் என் பிறந்த நாள்  SSLC சர்டிபிகேட் புத்தகத்தில் இருப்பது போன்று பதிவாகிவிட்டது. ஆனால் ஜாதகப்படி என் பிறந்த நாள் ஒரு வருடம் ஒரு மாதம் கழித்துத்தான் வருகிறது. இதைச் சரி செய்ய முடியுமா என்று விசாரித்தேன்.

அது கோர்ட்டுக்குப் போய் தீர்மானமாக வேண்டிய சமாச்சாரம். அங்கு போனால் என்னுடைய ஜாதகத்தைத்தான் ஆதாரமாக காட்ட வேண்டி இருக்கும். ஆனால் என் ஜாதகம் புதிதாக எழுதப் பட்டதாகையால் கோர்ட்டில் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லிவிட்டார்கள். சரி நானும் இந்த கோர்ட் வேலையெல்லாம் நமக்கு உதவாது என்று விட்டு விட்டேன்.

 SSLC தேதி பிரகாரம் ரிடைர்டு ஆகி விட்டேன். சஷ்டியப்த பூர்த்தி என்று ஒரு விசேஷம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அது எங்கள் சமூகத்தில் யாராலும் கொண்டாடப் பட்டதில்லை. நானும் அது பற்றி அதிகமாக நினைக்கவில்லை.அது மட்டுமல்ல, பிறந்த நாள், கல்யாண வலையில் விழுந்த நாள் என்று எல்லாம் கொண்டாடும் வழக்கம் கிடையாது. இறந்த நாளை மட்டும் இறந்தவரின் சந்ததியினர் "திவசம்" என்று அனுஷ்டிப்பார்கள். அவ்வளவுதான்.

இந்த சமயத்தில் என் நெருங்கிய நண்பன் ஒருவன் திருக்கடையூர் சென்று சஷ்டியப்தபூர்த்தி சடங்குகள் செய்து வந்தான். அதைப் பார்த்த எனக்கும் மனதிற்குள் ஒரு ஆசை தோன்றியது. நானும் இந்த வைபவத்தைக் கொண்டாடினால் என்ன? என்று யோசித்து அதை நிறைவேற்றினேன். இதை ஜாதகத்தில் இருக்கும் தேதி பிரகாரம்தான் கொண்டாடவேண்டும், அதுவும் ஒருவன் பிறந்த மாதத்தில் அவன் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில்தான் கொண்டாடவேண்டும் என்றும் சொன்னார்கள்.

அப்படியே திருக்கடையூர் சென்று சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடிவிட்டு வந்தேன். போட்டோக்கள் எடுத்துக்கொண்டேன். மனைவிக்கு இரண்டாம் முறை தாலி கட்டினேன். அதனால்தான் இதை அறுபதாம் கல்யாணம் என்றும் சொல்கிறார்கள். நான் என் மனைவி, எனது இரு மகள்கள், எனது சகோதரி, ஆகிய ஐந்து பேர் மட்டுமே போயிருந்தோம். அங்கு இந்த மாதிரி வைபவம் செய்ய வந்திருந்தவர்கள் ஒரு பெரிய கல்யாணக் கூட்டத்துடன் வந்திருந்ததைப் பார்த்து மலைத்தேன்.

ஆச்சு, அந்த வைபவம் முடிந்து 20 வருடங்கள் ஆயிற்று. நாங்கள் இருவரும் (இரத்த அழுத்தம், சர்க்கரை இவைகளுடன்) நலமாக இருக்கிறோம். ஆகவே 80 ஆம் கல்யாண வைபவத்தையும் ஏன் கொண்டாடக்கூடாது என்று தோன்றியது. ஆனால் திருக்கடையூர் சென்று வருவதற்கான சூழ்நிலை இல்லை. ஆகவே இங்கு பக்கத்தில் 15 கி.மீ. தூரத்தில் கால காலேஸ்வரர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்குதான் திருக்கடையூரில் சாபம் பெற்ற யமன் சாப விமோசனம் பெற்றதாக ஐதீகம். அங்கும் இந்த மாதிரி சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்களை நடத்தி வைக்கிறார்கள் என்று கேள்விப் பட்டோம்.

ஆகவே இங்கேயே என்னுடை சதாபிஷேகத்தையும் நடத்தி விடலாம் என்று முடிவு செய்தேன். நானாக கூகுளில் பஞ்சாங்கம் பார்த்து 1-7-2015 ல் என்னுடைய ஜன்ம நட்சத்திரம் வருவதைக் கண்டு பிடித்து அன்று சதாபிஷேகம் செய்வதாய் முடிவு செய்தேன். சரி, எதற்கும் அந்தக் கோவிலுக்கே சென்று இதன் நடைமுறைகளை அறிந்து வருவோம் என்று ஒரு மாதம் முன்பு நானும் என் மனைவியும் சென்றிருந்தோம்.

அங்குருந்த கோவில் குருக்கள் என் பிறந்த தேதி வருடம் ஆகியவைகளைக் கேட்ட பிறகு, இந்த சதாபிஷேகம் 80 வயது முடிந்து குறைந்தது மூன்று மாதம் கழித்துத்தான் செய்யவேண்டும் என்றார். நான் என்னுடைய கணக்குப் பிரகாரம் 1-7-2015 ல் சதாபிஷேகம் செய்ய துணி மணிகள், புதுத் தாலி ஆகியவை ஏற்பாடு செய்து விட்டேன். குருக்கள் ஆனந்தபோதினி பஞ்சாங்கத்தைப் பார்த்து நவம்பர் 15 ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை சரியாக இருக்கிறது, அன்று உங்கள் விசேஷத்தை வைத்துக் கொள்ளலாம் என்றார்.

எந்த நேரம் இந்த வைபவத்தை நடத்தலாம் என்று கேட்டேன். அவர் காலை 5 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் ஆரம்பித்தால் 8 மணிக்குள் எல்லா விசேஷங்களையும் முடித்து விடலாம் என்று கூறினார். எனக்கும் அது சரியாகப் பட்டதினால் அதற்கு ஒப்புக்கொண்டு கோவிலுக்குச் செலுத்த வேண்டிய ரூபாய் 3000 ஐக் கொடுத்து ரசீது வாங்கிக்கொண்டேன்.

கல்யாணம் முடிந்த 50 வது வருடம் 9-9-2014ல் பூர்த்தியானது. அதற்கு ஏதோ ஒரு கோவிலுக்குப் போய் வந்ததோடு சரி. ஆகவே இந்த சதாபிஷேகத்துடன் அந்த வைபவத்தையும் நடத்துவதாக எண்ணிக் கொண்டால் போகிறது என்று முடிவு செய்தேன்.

பல சமூகங்களில் இந்த வைபவத்தை ஏறக்குறைய கல்யாணம் போலவே செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் அப்படி ஏற்பாடு செய்தால் என் உறவினர்கள் எல்லாம் இவனுக்கு வந்த வாழ்வைப் பார் என்பார்கள். அதனால் என் குடும்பம் மட்டுமே இதில் கலந்து கொள்வதாக ஏற்பாடு. என் பங்காளிகளுக்கு மட்டும் எங்கள் குலதெய்வக் கோவிலில் ஒரு கடாவெட்டு விருந்து. இவ்வளவுதான் சதாபிஷேக ஏற்பாடுகள்.

ஆனால் பதிவுலக நண்பர்கள் விரும்பினால் என் சதாபிஷேக வைபவத்தில் தாராளமாகக் கலந்து கொள்ளலாம், வைபவம் கோவை-சத்தி ரோட்டில் கோவையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் கோவில்பாளையம் என்ற ஊரில் உள்ள கால காலேஸ்வரர் கோவிலில் காலை 5 மணி முதல் 8 மணி வரை நடக்கும். கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் கணபதி பாரதி நகரில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் காலை டிபனும் சாய்பாபா காலனியில் இருக்கும் அன்னபூர்ணா ஹோட்டலில் மதிய சாப்பாடும் உண்டு. இரவு சாப்பாட்டை அவரவர்களுக்குப் பிடித்த ஹோட்டலில் அவரவர்கள் செலவில் சாப்பிட்டுக் கொள்ளலாம். இரண்டு நாட்கள் (சொந்த சிலவில்) தங்கி ஊட்டி பார்த்து விட்டு ஊருக்குத் திரும்பலாம்.

                                      Image result for அன்னபூர்ணா, கோவை

அப்படிக் கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக நிறைய போட்டோக்கள் எடுத்து ஒரு ஸ்பெஷல் பதிவு போடப்படும் அதைக் கண்டு களிக்கலாம். நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு கொடுக்கிறேன். நான்கு நாட்கள் முன்னதாகவே சுற்றம் சூழ வந்திருந்து வைபவத்தில் கலந்து கொண்டு எங்களைக் கௌரவிக்கலாம். 

வியாழன், 25 ஜூன், 2015

நான் ஆடிட்டரை ஏமாற்றிய கதை

                                   Image result for ஜீப்

ஆடிட்டர்களுடைய தலையாய குணம் என்னவென்றால் நாம் எதை எப்படி ரூல்படிச் செய்திருந்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதுதான். இது எனக்கு நன்றாகத் தெரியும். இந்த யூகத்தின் அடிப்படையில் நான் ஒரு முறை ஆடிட்டர்களை வகையாக ஏமாற்றினேன். அது எப்படி என்று பாருங்கள்.

அரசு அலுவலகங்களில் உள்ள வாகனங்கள் அந்த அலுவலக உயர் அதிகாரி அலுவலக வேலைகளுக்குப் பயன்படுத்துவதற்காக மட்டுமே வாங்கப்பட்டவை ஆகும். ஆனால் இதை சொந்த வேலைகளுக்காகப் பயன்படுத்துபவர்கள் அதிகம். பெண்டாட்டி ஷாப்பிங்க் போவதற்கும் குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்கும் உபயோகப்படுத்துபவர்கள் உண்டு.

இதனால் வாகனங்கள் இருக்கும் அலுவலகங்களில் இந்த ஆடிட்டர்கள் கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு வெகு கவனமாகப் பார்ப்பார்கள். எனக்கு இது நன்றாகத் தெரியும். நான் தஞ்சாவூரில் ஆபீசராக இருந்த போது எனக்கு இந்த மாதிரி ஒரு வாகனம் கொடுத்திருந்தார்கள். நான் குடும்பத்தைக் கூட்டிக்கொண்டு போகாததினால் தனியாக இருந்தேன். சொந்த உபயோகம் என்று ஏதும் வந்ததில்லை.

ஒரு சமயம் என் குடும்பத்தினருக்கு தஞ்சாவூரிலும் பக்கத்து ஊர்களிலும் உள்ள கோவில்களைக் காட்டலாமே என்று நினைத்து அவர்களை வரவழைத்தேன். ஆபீஸ் வாகனத்திலேயே கூட்டிக்கொண்டு போகலாம் என்று முடிவு செய்தேன். இம்மாதிரி சொந்த உபயோகத்திற்கு ஆபீஸ் வாகனத்தை மேலதிகாரியின் முன் அனுமதியுடன் உபயோகித்துக் கொள்ளலாம். அப்படி உபயோகித்த அளவிற்குண்டான பணத்தைக் கட்டவேண்டும். இப்படி ஒரு விதி உண்டு.

நான் முன்னேற்பாடாக என் மேலதிகாரிக்கு விண்ணப்பம் எழுதி அனுப்பிவிட்டேன். குடும்பத்தினர் வந்தார்கள். ஆபீஸ் வாகனத்தில் ஏறி  எல்லா ஊரையும் பார்த்தார்கள். திரும்பிப் போய்விட்டார்கள். சில நாட்கள் கழித்து நான் அனுப்பிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று ஆர்டர் வந்தது. நானோ வாகனத்தை உபயோகித்தாகி விட்டது. வாகனத்தின் லாக் புஸ்தகத்திலும் சொந்த உபயோகம் என்று எழுதியாகி விட்டது. இனி அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

என் மேலதிகாரி எனக்கு நன்றாகப் பழக்கப்பட்டவர். என்பேரில் தனி அபிமானம் கொண்டவர். அதனால் நான் இந்த ஆர்டரைப் பற்றி அதிகம் கவலைப் படவில்லை. அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது இந்த சமாச்சாரத்தை மெதுவாகச் சொன்னேன். அவர் உன் சொந்த வேலையென்றால் உபயோகித்துக் கொள்ளவேண்டியதுதானே, அதை எதற்கு கணக்கில் காட்டுகிறார் என்று என்னைக் கோபித்துக்கொண்டார்.

நான் சொன்னேன், அப்படி நான் என் சொந்த உபயோகத்திற்காக ஆபீஸ் கணக்கில் அந்த வாகனத்தை உபயோகித்தால் ஆபீசில் வேலை செய்யும் எல்லோருக்கும் அது தெரிந்து விடும், பிறகு எனக்கு அங்கு மரியாதை கிடைக்காது. ஆகவே நான் ஏற்கனவே உபயோகித்து விட்டேன். அதை என் சொந்த உபயோகம் என்றும் லாக் புக்கில் எழுதிவிட்டேன். இனி மாற்ற முடியாதே, என்று சொன்னேன். அவர், சரி, நீ ஒரு கிறுக்கன், சொன்னால் கேட்கமாட்டாய், திரும்பவும் அந்த விண்ணப்பத்தை அனுப்பு, நான் சேங்க்ஷன் செய்து விடுகிறேன் என்றார்.

அப்டியே அந்த விண்ணப்பத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற குறிப்புடன் அனுப்பினேன். மேலதிகாரியின் ஒப்புதல் ஆர்டர் வந்து விட்டது. அதை நான் வாங்கி தனியாக என்னுடைய அலமாரியில் வைத்து விட்டேன். ஆபீசில் உள்ளவர்களுக்கு இந்த ஒப்புதல் ஆர்டர் வந்த விவரம் தெரியாது.

அந்த வருட ஆடிட் பார்ட்டி வந்தது. ஆபீஸ் வாகனத்தின் லாக் புக்கை ஆடிட் செய்தபோது நான் சொந்த வேலைக்காக உபயோகித்த விவரம் அவர்கள் கண்ணுக்குப் பட்டது. இதற்கு மேலதிகாரியின் ஒப்புதல் வாங்கியிருக்கிறதா என்று ஆபீசில் உள்ளவர்களைக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் விண்ணப்பம் போட்டு அது சேங்க்ஷன் ஆகாமல் திரும்பி வந்தது வரைக்கும்தான் தெரியும். மறுபடி நான் அதை திரும்பவும் அனுப்பி சேங்க்ஷன் வாங்கிய விவரம் அவர்களுக்குத் தெரியாது. நான்தான் அந்த ஆர்டரை என் அலமாரியில் வைத்திருக்கிறேனே?

அவர்கள் நடந்ததைச் சொல்லியிருக்கிறார்கள். ஆபீசர் விண்ணப்பம் அனுப்பினார், ஆனால் அது அப்ரூவல் ஆகவில்லை என்று சொல்லவிட்டார்கள். ஆடிட்டர்களுக்கு கன சந்தோஷம். அது வரையில் பெரிதாக எந்த தவறுகளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆஹா, இந்த ஆபீசர் வசமாக மாட்டிக்கொண்டார் என்று சந்தோஷப்பட்டுக்கொண்டு விலாவாரியாக இந்த சமாச்சாரத்திற்கு கை கால், வாய், மூக்கு, கண் எல்லாம் வைத்து, இந்த ஆபீசர் விதிகளுக்குப் புறம்பாக இந்த மாதிரியான குற்றம் செய்து அரசுக்கு இவ்வளவு நஷ்டம் ஏற்படுத்தியிருக்கிறார், இவரை உடனடியாக கழுவில் ஏற்றவேண்டும் என்று இரண்டு பக்கத்திற்கு நோட்ஸ் எழுதி வைத்துக் கொண்டார்கள். (உண்மையில் இப்படி நடந்திருந்தால் நான் கழுவில் ஏறித்தானாக வேண்டும்.)

ஆடிட் எல்லாம் முடிந்தது. ஆடிட் வழக்கம் என்னவென்றால் அவர்கள் எழுதியுள்ள ஆடிட் நோட்ஸை என்னிடம் காட்டி என் கையெழுத்து வாங்கவேண்டும். அப்போதுதான் அது செல்லுபடியாகும். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து நோட்ஸைப் பார்த்துக்கொண்டே வந்தோம். அப்படிப் பார்க்கும்போது என்னைக் கழுவில் ஏற்றச் சொல்லி எழுதியிருக்கும் குறிப்பு வந்தது. அப்போது நான் ஒரு டிராமா போட்டேன்.

ஆபீஸ் சூப்பிரன்ட்டைப் பார்த்து "நாம் இதற்கு மேலதிகாரியின் அனுமதி வாங்கவில்லையா?" என்று கோபமாகக் கேட்டேன். அவர் பவ்யமாக, அப்ளை செய்தோம் சார், ஆனால் அதை ரிஜெக்ட் பண்ணி விட்டார்கள் என்றார். அப்புறம் மறு பரிசீலனைக்கு எழுதவில்லையா என்றேன். எழுதினோம் சார், ஆனால் இதுவரை பதில் வரவில்லை, சார் என்றார். என்ன ஆபீஸ் நடத்துறீங்க, பதில் வரலைன்னா ரிமைண்டர் போட்டிருக்கணும், இல்லைன்னா எங்கிட்டயாவது சொல்லியிருக்கணும், இப்ப ஆடிட்டுக்கு என்ன பதில் சொல்றது என்று கேட்டு விட்டு, தலையைச் சொறிகிற மாதிரி பாவனை செய்து, ஆங். இப்ப ஞாபகம் வருது, ஆர்டர் வந்துதே  ஐயா, அதை உங்க கிட்ட கொடுக்கலியா என்று ஒரு புருடா விட்டேன். சார் எங்க கிட்டே வரலியே சார் என்று பரிதாபமாக முனகினார்கள்.

நான் திரும்பவும் தலையைச் சொறிந்து கொண்டு, ஆமாம் அது பத்திரமாக இருக்கட்டும் என்று என் அலமாரியில் வைத்தேன், இருங்கள் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு அலமாரியைத் திறந்து தேடுகிற மாதிரி பாவனை செய்து விட்டு அந்த ஆர்டர் இருக்கும் பைலை எடுத்துக் கொடுத்தேன். அதைப் பார்த்த ஆடிட்டர்களுக்கு முகம் தொங்கிப் போயிற்று. அந்த ஆர்டரைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார்கள். ஒரு குற்றமும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்புறம், சார் இதற்கு பணம் கட்டவில்லையே என்றார்கள்.

நான் உடனே சூப்பிரன்ட்டிடம் இதற்கு எவ்வளவு கட்டவேண்டும் என்றேன். அவர் கிலோ மீட்டருக்கு மூன்று ரூபாய் சார் என்றார். எத்தனை கிலோ ஓடியிருக்கிறது என்றேன். நூற்றி இருபது கிலோ ஓடியிருக்கிறது என்றார். அப்படியா, இதோ 360 ரூபாய், இப்பவே ரசீது போட்டுக்கொண்டு வந்து ஆடிட்டர் சாரிடம் காட்டு என்றேன். சார் பட்டம் கொடுத்தவுடனே ஆடிட்டருக்கு உச்சி குளிர்ந்து போனது. ஐந்து நிமிடத்தில் ரசீது வந்து விட்டது. அதைப் பார்த்து விட்டு எழுதி வைத்திருந்த கழுவேற்று நோட்ஸை அடித்து விட்டார்.

நான் இப்படிச் செய்யாமல் முதலிலேயே அந்த ஆர்டரையும் பணம் கட்டின ரசீதையும் ஆடிட்டர்களுக்குக் கொடுத்திருந்தால் வேறு ஏதாவது வகையில் ஒரு குறை கண்டுபிடித்து எழுதியிருப்பார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்யக் கடினமாக இருந்திருக்கும். நான் போட்ட டிராமாவினால் மேட்டர் சிம்பிளாக முடிந்து விட்டது.

வேறு ஒரு சமயம் அப்படி ஒரு குறையும் கிடைக்காமல் போனபோது அவர்கள் அநியாயமாக வேண்டுமென்றே எழுதிய ஒரு ஆடிட் குறிப்பைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

திங்கள், 22 ஜூன், 2015

என் ஆடிட் அனுபவங்கள்

                                 Image result for audit party

பொதுவாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலகங்களிலும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று - ஆபீஸ் டெக்னிகல் இன்ஸ்பெக்ஷன், இரண்டு - ஆடிட்.

ஒரு அலுவலகம் அதன் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா, அனைத்து நடவடிக்கைகளும் அந்தந்த அலுவலக விதிமுறைகளின்படிதான் நடக்கிறதா என்பதை இந்த இரண்டு நடவடிக்கைகளாலும்தான் மேலதிகாரிகள் கணிக்கிறார்கள். ஒரு அலுவலகத்தின் முன்னேற்றத்திற்கு இந்த இரண்டும் அவசியம்.

இதில் ஆபீஸ் டெக்னிகல் இன்ஸ்பெக்ஷன் தொழில் நுணுக்க வல்லுநர்களால் நடத்தப்படும். அந்த அலுவலகத்தின் நோக்கம் என்ன? அதை எவ்வாறு நிறைவேற்றியிருக்கிறார்கள், அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் என்ன, அவைகளை எவ்வாறு களையவேண்டும் என்பதைப் பற்றி ஆக்க பூர்வமான ஆலோசனைகள் வழங்கவே ஏற்பட்டது இந்த டெக்னிகல் இன்ஸ்பெக்ஷன்.

ஆடிட்டின் நோக்கமே வேறு. அந்த அலுவலகத்திற்குக் கொடுக்கப்பட்ட பணத்தை ஒழுங்காக, விதிமுறைகளின்படி செலவழித்திருக்கிறார்களா என்று சோதிப்பதுதான் ஆடிட்டர்களின் வேலை. இது பரஸ்பர அவநம்பிக்கையில் உருவான ஒரு நடைமுறை. மனிதர்கள் இடம் கொடுத்தால் கண்டிப்பாக ஏமாற்றுவார்கள் என்ற அடிப்படையில் உருவான ஒரு பழக்கம்.

அதனால் ஆடிட் என்றாலே பல அலுவலர்கள் அலறுவார்கள். காரணம் அவர்கள் அந்த அலுவலகத்தின் சட்ட திட்டங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததே. அப்படிப் புரிந்திருந்தாலும் அவர்கள் ஏதாவது தில்லு முல்லு செய்திருப்பார்கள்.

எனக்கு இந்த ஆடிட் மிகவும் பிடித்தமான ஒரு சமாச்சாரம். ஆபீசில் ஒரே மாதிரியான வேலைகளை இயந்திரத்தனமாக  தினம் தினம் செய்து போரடிக்கும்போது இந்த ஆடிட்காரர்கள் வந்தால் மூளைக்கு கொஞ்சம் வேலை கிடைக்கும். நான் இவர்களை ரொம்பவே விரும்புவேன். காரணம் இவர்கள் எல்லோருமே குறுக்குப் புத்தி உள்ளவர்கள். எங்கு தப்பு கண்டுபிடிக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

நான் இவர்களுக்கு மேல் குறுக்குப் புத்தி கொண்டவன். கொஞ்சம் கிறுக்கனும் கூட. அதாவது ஓவர் இன்டெலிஜென்ட். இன்டெலிஜென்ட் ஆட்கள் எல்லாம் எப்போதும் அரைக் கிறுக்கர்களாகத்தான் இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.. நான் ஓவர் இன்டெலிஜென்ட். அதனால் நான் முழுக் கிறுக்கனாக இருந்தேன்.(அப்பவும் இப்படித்தானா என்று சில பதிவர்கள் கேட்பது காதில் விழுகிறது. எப்பவுமே நான் அப்படித்தான். என் அந்தக் காலத்து மாணவர்களைக் கேளுங்கள். கதை கதையாகச் சொல்லுவார்கள்.) தவிர அலுவல சட்டதிட்டங்களை நன்கு புரிந்து வைத்திருப்பேன். மேலும் எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருப்பேன். தில்லு முல்லு எதுவும் செய்ய மாட்டேன். என் வேலைகளில் எப்போதும் ஒழுங்காக இருப்பேன். என் வேலையில் ஒருவர் குற்றம் கண்டு பிடிக்கும்படி விடமாட்டேன். ஆகவே ஆடிட்டர்களைக் கண்டு பயப்பட எனக்கு ஒன்றுமில்லை.

அப்போது நான் வேதியல் துறையில் உதவிப் பேராசிரியராக இருந்தேன். மாணவர்களுக்கு வேதியல் செயல்முறை வகுப்புகள் எடுப்பது என் வேலை. இந்த வகுப்புகளில் மாணவர்களுக்குப் பல கண்ணாடி உபகரணங்கள் தேவைப்படும். வருட ஆரம்பத்தில் அவைகளை அவர்களுக்கு கடனாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கொடுப்போம். மாணவர்கள் அவைகளை வாங்கி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கப்போர்டில் பூட்டி வைத்துக்கொள்வார்கள். வருடக் கடைசியில் அவைகளை திரும்ப வாங்கிக்கொள்வோம்.

மாணவர்கள் இந்த உபகரணங்களை உபயோகிக்கும்போது எப்படியும் சில உடைந்து விடும். அப்படி உடைந்தவைகளுக்கு அதன் விலையில் கால் பங்கு மட்டும் மாணவர்களிடமிருந்து வசூலிப்போம். இது ஒரு மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் மாணவர்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி வரவேண்டும் என்பதற்கான ஒரு நடைமுறை.  இது காலம் காலமாக அரசுக் கல்லூரிகளில் வேதியல் சோதனைச்சாலைகளில் அனுசரிக்கப்பட்டு வரும் ஒரு முறை. தனியார் கல்லூரிகளில் முழு விலையையும் வசூலிப்பார்கள்.

இந்த பணத்தை மாணவர்கள் கல்லூரி அலுவலகத்தில் கட்டி விட்டு, ரசீதை எங்களிடம் காட்டினால் அந்த விவரங்களைக் குறித்துக் கொண்டு, நாங்கள் நோஅப்ஷெக்ஷன் சர்டிபிகேட் கொடுப்போம். அதைக் காட்டினால்தான் அவர்களுக்கு பரீட்சை எழுத ஹால் டிக்கட் கிடைக்கும். இந்த ரசீதுகளின் அடிப்படையில் இந்த உபகரணங்களின் எண்ணிக்கையை ஸ்டாக் புக்கிலிருந்து குறைப்போம்.

இந்த நடைமுறை தவறில்லாமல் செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று ஆடிட்காரர்கள் சரி பார்ப்பார்கள். அதற்கு அவர்கள் இந்தப் பணம் வசூல் செய்யப்பட்ட பில் புஸ்தகங்களை கல்லூரி ஆபீசிலிருந்து வாங்கி, எங்கள் ஸ்டாக் புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒவ்வொரு பில்லாகப் பார்த்து டிக் அடிக்கவேண்டும். 400 மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று ஐட்டங்களையாவது உடைத்திருப்பார்கள். மொத்தம் 1200 ஐட்டங்கள். இவைகளை ஒவ்வொன்றாக சரி பார்ப்பது என்பது மிகவும் சள்ளை பிடித்த வேலை.

 ஆனால் என்ன செய்ய முடியும்? ஆடிட்டர்களின் வேலை அதுதானே. ஒரு வருடம் ஒரு ஆடிட்டருக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ஆடிட்டர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது எங்கள் கடமை. ஆகையால் அவர்கள் கூப்பிட்டால் போகாமலிருக்க முடியாது. நான் போனேன்.

அவர் என்னிடம் என்ன சொன்னார் என்றால், சார்,  இந்த மாணவர்கள் உடைத்த உபகரணங்களின் கணக்கைப் பார்க்கவேண்டும். நீங்கள் ஆபீசில் போய் அந்த பில் புத்தகங்களை வாங்கி வந்து என் பக்கத்தில் உட்கார்ந்து ஒவ்வொரு பில்லாகக் காட்டினால் நான் ஸ்டாக் புக்கில் டிக் அடித்து விடுவேன், என்றார். அதாவது அவர் வேலையில் பாதியை என்னை வைத்து செய்து விடலாம் என்று நினைத்திருக்கிறார்.

நானும் கொஞ்சம் கோணல் புத்திக்காரன்தானே? அவருடைய தந்திரம் புரிந்தது. நான் சொன்னேன். நான் வாத்தியார். மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவேண்டும். அந்த வேலையை விட்டு விட்டு இந்த வேலையைச் செய்ய என்னால் வரமுடியாது என்றேன். நீங்கள் வராவிட்டால் பரவாயில்லை, உங்களுக்கு கீழ் இருக்கும் அட்டெண்டர் யாரையாவது அனுப்பினாலும் போதும் என்றார். நான் விடுவேனா? நான் வகுப்பு எடுக்கும்போது என் உதவிக்கு அவர்களும் என்னுடன் இருக்கவேண்டும். ஆகையால் அவர்களையும் அனுப்ப முடியாது என்றேன்.

இப்படி சொன்னால் எப்படி? என்றார். பிறகு வேறு எப்படி சொல்லவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்? ஆடிட் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு. செய்ய முடிந்தால் செய்யுங்கள். முடியாவிட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி விட்டுப் போங்கள். நீங்கள் என்ன எழுதினாலும் அதற்குப் பதில் எழுத என்னால் முடியும். சர்க்கார் கொடுக்கும் பேப்பரும் பேனாவும் உங்களிடமும் இருக்கிறது. என்னிடமும் இருக்கிறது. நீங்கள் எழுதும் குறிப்புகள் பத்து வருடம் இழுவையில் இருக்கும். அதற்குள் நீங்கள் எங்கேயோ, நான் எங்கேயோ என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

இந்த ஆடிட்டர்கள் எழுதும் குறிப்புகளை ஆடிட் முடிந்த பிறகு அவர்களின் மேல் அதிகாரி ஒருவருடன் நாங்களும் உட்கார்ந்து ஒரு ஜாயின்ட் சிட்டிங்க் வைப்போம். அப்போது இந்த மேட்டர் பார்வைக்கு வந்தது. மேல் அதிகாரி என்ன விவரம் என்று என்னைக் கேட்டார். நான் சொன்னேன். சார் இந்த ஆடிட்டர்கள் என்னை பில் புக்கைக் கொண்டு வந்து ஒவ்வொரு பில்லாகத் திறந்து காட்டச் சொல்லுகிறார்கள். நான் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கவா அல்லது இந்த வேலையைச் செய்யவா? என்று கேட்டேன். அவர் ஆடிட்டர்களைப் பார்த்து இந்த வேலையை நீங்களே செய்யுங்கள், ஆசிரியர்களை ஏன் தொந்திரவு செய்கிறீர்கள் என்று சொல்லி விட்டார். ஆடிட்டர்களின் முகம் தொங்கிப் போயிற்று.

பிறகு என்ன நடந்ததோ எனக்குத் தெரியாது. சில நாட்களில் நான் வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டு இந்த மேட்டரை முற்றிலும் மறந்து போனேன்.

வெள்ளி, 19 ஜூன், 2015

பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா?

19-6-2015  மணி மாலை 7.30

தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் இன்றைய பதிவைப் பார்த்தீர்களா?

http://www.tamilvaasi.com/2015/06/blog-post.html

படிக்காதவர்கள் தயவு செய்து படிக்கவும்.

ஜாடை போடுவது பற்றிய என்னுடைய பதிவையும் படிக்கவும்.

http://swamysmusings.blogspot.com/2015/04/blog-post_19.html


என்னுடைய தலைப்பில் இருக்கும் கேள்விக்கு வருவோம்.

பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா?

இல்லையே. என் கண்களுக்கு எதுவும் படவில்லையே. அப்படி நடந்தால் பதிவுலகம் பொங்கி எழாதா? பதிவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?

நுண் கனிமங்களை பகுப்பாய்வு செய்வது எப்படி?

                                         Image result for chemistry lab equipment

இந்தப் பரந்து விரிந்த உலகிலுள்ள அனைத்துப் பொருள்களும் கனிமங்களாலும் (Elements) அவற்றின் தனிமங்களாலும் (Atoms) உருவாக்கப்பட்டவை என்பதை உங்கள் வேதியல் பாடத்தில் படித்திருப்பீர்கள். இவைகளைப் பகுப்பாய்வு செய்வது வேதியலின் ஒரு முக்கியமான செயல்முறைப் பயிற்சி.

பிற்காலத்தில் நீங்கள் ஒரு விஞ்ஞானியாக ஒரு ஆய்வகத்தில் பணி புரிய நேர்ந்தால் இந்த செயல்முறைப் பயிற்சி அதிகம் பயன்படும். ஆனாலும் படிக்கும்போது கற்றுக்கொள்ளும் பகுப்பாய்வு முறைகளுக்கும்  ஆய்வகத்தில் நடைமுறையில் உள்ள செயல் முறைகளுக்கும் அதிக வேறுபாடுகள் இருக்கும்.

ஒரு நவீன ஆய்வகத்தில் பல நவீன உபகரணங்கள் இருக்கும். அவை பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ளவைகளாக இருக்கும். அவை அடிப்படையில் பகுப்பாய்வுக் கருவிகள்தான் என்றாலும் மிக நுண்ணிய அளவில் இருக்கும் தனிமங்களைக் கூட அளக்கும் சக்தி பெற்றவை. இப்போது செய்தித்தாள்களில் பரவலாகப் பேசப்படும் "மேகி" விவகாரத்தில் சொல்லப்படும் கனிமங்களின் அளவு இத்தகைய கருவிகளின் மூலமாகத்தான் பகுப்பாய்வு செய்யப் பட்டிருக்கும்.

சுருக்கமாக இந்த பகுப்பாய்வுக் கருவிகளின் தத்துவத்தைச் சொல்கிறேன். கனிமங்களின் அணுக்களுக்கு ஒரு ஆகர்ஷண சக்தி உண்டு. சில அலைநீளம் கொண்ட ஒளியை இவை உள் வாங்கிக்கொள்ளும். இந்த உள்வாங்கிக்கொள்ளும் அலை நீளம் ஒவ்வொரு கனிமத்திற்கும் வேறுபடும்.

இந்த வேறுபாட்டை வைத்துத்தான் ஒவ்வொரு கனிமத்தின் அளவையும் பரிசோதித்து கண்டுபிடிக்கிறார்கள். இந்த வேறுபாட்டை துல்லியமாக அளக்க பல்வேறு விலை உயர்ந்த சாதனங்கள் உள்ளன. இத்தகைய சாதனங்கள் இருக்கும் பரிசோதனைச் சாலையில்தான் இந்த கனிம அளவுகளைக் கண்டுபிடக்க முடியும்.

இப்படி கனிமங்களின் நுண்ணிய அளவைக் கண்டுபிடிக்க உதவும் இந்தக் கருவிகளின் செயல்பாடு எவ்வளவு நம்பகத்தன்மையுடன் இருக்கும்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. சட்டென்று பதில் சொல்ல முடியாது.

கருவிகளின் தரம், அவைகளைப் பராமரிக்கும் செயல்கள், அதை உபயோகிக்கப் பயிற்சி எடுத்த நபர்கள், அவர்களின் அர்ப்பணிப்பு, சோதனை திரவங்களின் தரம் ஆகியவை இந்தக் கருவியின் பகுத்தாய்வுத் திறனை நிர்ணயிக்கும். முக்கியமாக ஒவ்வொரு தரம் இந்தக் கருவியை உபயோகிக்கும்போதும் அதன் செயல் திறனை பரிசோதிக்கவேண்டும்.

இப்படி கருவிகள் பராமரிக்கப்படும் பரிசோதனைச் சாலையில் கண்டு பிடிக்கப்படும் முடிவுகளை மட்டுமே நம்பலாம். ஆகவே இத்தகைய பரிசோதனைகளை ஒன்றுக்கு மேற்பட்ட பரிசோதனைச்சலைகளில் பரீட்சித்து அந்த முடிவுகள் ஒத்துப் போகின்றனவா என்று பார்த்து பிறகுதான் ஒரு முடிவிற்கு வருவார்கள்.

"மேகி" விவகாரத்தில் இந்த பரிசோதனைகளை எப்படி செய்தார்கள் என்பதைப் பொருத்தே அதன் எதிர்காலம் இருக்கும்.

புதன், 17 ஜூன், 2015

வெளிநாட்டு(க்கு) உதவி என்றால் என்ன?

                                        Image result for ஏரோப்ளேன்

நமது மாண்புமிகு பிரதம மந்திரி அவர்கள் பதவி ஏற்ற பிறகு பல வெளிநாட்டுகளுக்குப் போய் வருவது அனைவரும் அறிந்ததே.

இவ்வாறு நம் நாட்டிற்கும் வெளி நாட்டு முதல் மந்திரிகள் அல்லது பிரசிடெண்ட்டுகள் வருகிறார்கள். போகிறார்கள். இவர்களின் இந்த பயணங்களின் நோக்கம் என்னவென்று யாராவது யோசிக்கிறார்களா?

இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த வெளிநாட்டுப் பயணங்களின் முக்கிய நோக்கம் என்று சொல்லுகிறார்கள். இது சரியே. ஆனால் எப்படி இந்த இரு நாட்டு உறவுகள் பலப்படுத்தப் படுகின்றன?

எனக்கு இப்போது ஒரு வேலை வெட்டியும் இல்லாததால் இதைப் பற்றி கொஞ்சம் யோசித்தேன். நமது மாண்பு மிகு பிரதம மந்திரிதான் இந்த யோசனையைத் தூண்டிவிட்டார்.

இந்திய நாடு காலம் காலமாக அமெரிக்காவிடம் பிச்சை எடுப்பது உலகப் பிரசித்தம். அவ்வப்போது நம் செய்தித்தாள்களில் ஒரு மூலையில் இந்த விவகாரம், அதாவது நமது பிச்சைக்காரத்தனம் பற்றி ஏதாவது ஒரு அறிக்கை வெளியாகும்.. இந்தியாவின் அயல் நாட்டுக் கடன் இவ்வளவு ஆயிரம் அல்லது லட்சம் கோடி இருக்கிறது என்று செய்தி வெளியாகும்.

நமக்கு கோடிக்கு எத்தனை சைபர் என்பதே சந்தேகம். அப்புறம் எங்கே லட்சம் கோடி என்றால் என்ன என்று புரிந்து கொள்வது? ஏதோ வெளிநாட்டில் இந்தியாவிற்கு நிறைய சொத்து இருக்கிறது போல. அது நமக்கெதற்கு? அதையெல்லாம் மத்திய சர்க்கார் பார்த்துக்கொள்வார்கள்.  நமக்கு பஞ்சப்படி அதிகப்படுத்தியிருக்கிறார்களா? அதைப் பார் என்று அடுத்த பக்கத்திற்குப் போய் விடுவோம்.

நாமே அயல் நாட்டவரிடம் பிச்சையெடுத்துப் பிழைக்கிறோம். ஆனால் நமது பிரதம மந்திரி, தான் போகும் நாட்டில் எல்லாம் 10000 கோடி கொடுக்கிறேன், 20000 கோடி கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டு வருகிறாரே,  அது எப்படி என்று எனக்கு ஒரே குழப்பம்?

இதைப் பற்றி சில நண்பர்களிடம் விவாதித்தேன். அவர்கள்  இப்படியும் ஒரு அடிமுட்டாள் இருப்பானா என்கிற மாதிரி ஒரு லுக் விட்டு விட்டு, என்னைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு டீக்கடை வாசலில் உட்கார்த்தி வைத்து டீ வாங்கிக்கொடுத்து (செலவு என்னுடையது) எனக்கு ட்யூஷன் எடுத்தார்கள். டீக்கடை வாசல் எதற்காகவென்றால் அங்கிருந்துதான் ஒரு நாட்டின் பிரதம மந்திரிகள் உற்பத்தியாகிறார்களாம்.

அவர்கள் சொன்னதாவது. அட, மடப்பயலே, இப்போ நீ ஒரு டீக்கடை ஆரம்பிக்கறேன்னு வச்சுக்கோ. இன்னும் ஒரு இருபது முப்பது வருஷத்தில நீ இந்த நாட்டிற்குப் பிரதம மந்தி(ரி)யாய் ஆகி விடுவாய். அப்புறம் நாங்க எல்லாம் எங்கே போறது? உங்கூடத்தான் இருப்போம். அப்புறம் எங்களுக்கெல்லாம் ஒரு வழி காட்டவேண்டியது உன் பொறுப்பாகி விட்டதல்லவா?

அப்போ நீ என்ன பண்ணறே? வெளிநாட்டுக்கு டூர் போற. அப்படிப்போறப்ப எங்களையும் கூட்டீட்டுப் போற. அங்க போய் உங்களுக்கு என்னவேணும்னு கேக்கற. அவனுங்க எங்கூர்ல கரண்ட் பத்தல, கரன்ட் வேணும்கறாங்கன்னு வச்சுக்குவோம். உடனே நீ என்ன பண்ற, ஆஹா, இதோ இருக்காங்களே இவங்கதான் எங்க ஊர்ல கரன்ட் ஸ்பெஷலிஸ்ட்டுக, உங்க ஊருக்கு இவிங்க கரன்ட் மிசின் வச்சுக்கொடுப்பாங்க, சரியான்னு கேட்டுட்டு, அவங்க மண்டைய மண்டைய ஆட்டுன ஒடனே ஒரு ஒப்பந்தம் போடுவியாம்.

அந்த ஒப்பந்தத்தில நீ (அதாவது, பிரதம மந்திரியான நீ) உங்க நாட்டிற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுக்கிறேன். அந்தப் பணத்தில உங்களுக்கு வேண்டிய கரன்ட் மிசினையெல்லாம் வாங்கிக்கோங்க. அந்த மிசினை இவிய சப்ளை பண்ணுவாங்க. அவங்களே அதை எப்படி ஓட்டறதுன்னும் சொல்லிக்கொடுப்பாங்க. நீங்க கரன்ட்ல ஏசி மாட்டிட்டு அனுபவிச்சிட்டு இருக்கவேண்டியதுதான் அப்படீன்னு பேசி முடிச்சுடு. அவ்வளவுதான் மிச்சத்த நாங்க பாத்துக்குறோம். வர்ற லாபத்தை ஈக்வலா பகுந்துக்குவோம்.

இப்படியாக வருங்கால பிரதம மந்திரியாகிய எனக்கு என் தோஸ்த்துகள் யோசனை கூறினார்கள். எனக்கும் புரிபடாமல் இருந்த பல சந்தேகங்களுக்கு விடை தெரிந்தது.

திங்கள், 15 ஜூன், 2015

வலைச்சரம் பற்றிய ஒரு கண்டனம்

வலைச்சரம் ஒரு இரண்டு மாதங்களாக செயல்படவில்லை என்பதை பதிவர்கள் அனைவரும் அறிவார்கள், காரணங்கள் பல இருக்கலாம் அதைப் பற்றி எனக்கு கருத்துக் கூற ஒன்றுமில்லை.

ஆனால் சமீபத்தில் அதை செயல்படுத்த முன் வந்த பிரபல பதிவர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. அவர்களின் பாணி வலைச்சர விதிகளுக்கு ஒத்துப்போகவில்லை என்று தெரிகிறது. அதைச் சுட்டிக்காட்டியவுடன் அவர் வலைச்சர ஆசிரியர் பணியிலிருந்து விலகி விட்டார் என்று அவர் பதிவுகளிலிருந்து தெரிகிறது.

வலைச்சரத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. திரு. சீனா அவர்களும் மற்றும் பலரும் இதை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வலைச்சரம் பல சாதனைகளைச் செய்திருக்கிறது. அதற்காக அதன் நிர்வாகிகளைப் பாராட்ட வேண்டும்.

இப்போது கடைசியாக ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய திரு வை.கோபாலகிருஷ்ணன் வலைச்சர விதிகளைச் சரியாக கடைப்பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை ஒரு காரணமாக வைத்து அவருடைய பதிவில் (http://gopu1949.blogspot.in/2015/06/14.html) திரு தமிழ்வாசி அவர்கள் இட்டுள்ள பின்னூட்டங்கள் அவசியமற்றவை என்று நான் கருதுகிறேன். தனிப்பட்ட பிரச்சினை இதில் ஏதுமில்லை. ஆனாலும் பல பின்னூட்டங்கள் போடப்பட்டுள்ளன. என்ன காரணம் என்று தெரியவில்லை?

இது பதிவுலக தர்மத்திற்கும் வலைச்சர பாரம்பரியத்திற்கும் பெருமை சேர்க்கும் செயலல்ல என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஞாயிறு, 14 ஜூன், 2015

கொள்கைப் பிடிப்பு - வைராக்கியம்

                                        Image result for உழைப்பாளர் சிலை


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 
     
அ- 67 கு-66


எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.


வாழ்க்கையில் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் வாழ்கிறோம். சிலர் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைகின்றனர். சிலரால் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைய முடிவதில்லை. ஏன்?

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுவாக அவன் "விதிப் பயன்" என்று எல்லோரும் கூறிவிடுவார்கள். ஆனால் இது சரியா? அனைத்துக் காரியங்களும் விதிப்படிதான் நடக்கிறதென்றால் மனித முயற்சிக்குப் பலன் ஏதும் கிடையாதா?

இது காலம் காலமாகக் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்குப் பதில்தான் இதுவரை யாரும் சொல்லவில்லை. பதில் கண்டுபிடிப்பதுவும் லேசான காரியம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு பழனி. கந்தசாமி பதில் தேடுகிறார். என்ன தைரியம் பாருங்கள்.

பலருடைய அனுபவத்தில் நேர்மையாக உழைப்பவர்கள் அப்படி ஒன்றும் சீக்கிரத்தில் மேலுக்குப் போனதாக தெரியவில்லை. தில்லு முல்லு செய்பவர்கள் சீக்கிரம் மேலுக்குப் போவதை கண்கூடாகப் பார்க்கிறோம். இதை அவரவர்கள் விதி என்று சொல்லிவிட்டு நாம் நம் வேலையைக் கவனிக்கப் போய்விடுவோம்.

இங்குதான் நீங்கள் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய விதி என்ன வென்று அவனுக்கும் தெரியாது. வேறு யாருக்கும் தெரியாது. ஆனாலும் நாம் உண்மையாக முயற்சி செய்தால் அதற்கு உண்டான பலன் கிடைக்கும் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவரே சொல்லிப் போயிருக்கிறார்.

தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன்
மெய்வருந்தக் கூலி தரும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் தம்மாலான முயற்சியைச் செய்வது அவசியமல்லவா? இதைத்தான் வைராக்யம் என்கிறோம். இப்படி ஒரு முயற்சி செய்வதைப் பற்றிய ஒரு பாடலைப் படியுங்கள்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்.

எல்லோரும் தங்கள் தங்களை முயற்சியினால் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன். இதில் ஒரு ஒரு முக்கிய பாய்ன்டைக் குறித்துக்கொள்ளவும். இருட்டில் போகும்போது ஒரு விளக்கை கையில் எடுத்தப்போவது போல் இந்த மாதிரி முயற்சிகளுக்கு மோடி மாதிரி அல்லது அதானி மாதிரி ஒரு துணை இருந்தால் உங்கள் முயற்சி 100 சதம் வெற்றியடையும். அந்த மாதிரி துணை கிடைப்பதுவும் உங்கள் முயற்சியினால்தான் சாத்தியமாகும். 

வெள்ளி, 12 ஜூன், 2015

Mohamed ali at பெட்டகம்

வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை!

Mohamed ali at பெட்டகம் - 2 hours ago

சமீப காலமாக இவருடைய எந்தப் பதிவைத் திறந்தாலும் கீழ்க்கண்ட மாதிரி ஒரு எச்சரிக்கைச் செய்தி வருகிறது. அதன் பிறகு மேலே போய் படிக்கத் தயக்கமாக இருக்கிறது.

என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னுடைய கம்ப்யூட்டரில் ESET antivirus programme இன்ஸ்டால் செய்திருக்கிறேன். வேறு யாருக்காவது இந்த மாதிரி தொந்திரவு இருக்கிறதா என்று தெரியவில்லை.


ஓவியமாம் ஓவியம்?

இந்த ஓவியம் 140 மில்லியன் டாலராம்.

அப்படீன்னா எத்தனைங்க?

most expensive paintings

இதுல என்ன இருக்கு? என் மர மண்டைக்கு ஒண்ணும் புரியல? உங்களுக்காவது எதாச்சும் புரியுதா பாருங்க.

அதைவிட இது கொடுமை. 186 மில்லியன் டாலராம்.

expensive painting

இந்தப் படம் அதைவிடக் கொடுமை. நம்ம வீட்டுப் பாப்பா இதை விட நல்லாப் படம் போடும்.

ஆதாரம். எனக்கு வந்த பாபா மெயில்.

ஒரு கணக்கு - எனக்கு கணக்கு கொஞ்சம் வீக். இருந்தாலும் ஒரு கணக்கு போட்டுப் பார்ப்போமா?

ஒரு மில்லியன்  =  10 லட்சம்
ஒரு டாலர்           =   60 ரூபாய்
10 லட்சம் டாலர் = 600 லட்சம் ரூபாய் அதாவது 6 கோடி
ஆகவே ஒரு மில்லியன் டாலர் என்பது 6 கோடி ரூபாய்.

அப்போ 140 மில்லியன் டாலர் என்பது 840 கோடி ரூபாய்.
                 186 மில்லியன் டாலர் என்பது 1116 கோடி ரூபாய்.

எனக்கு ஒரு சந்தேகம். இத்தனை பணம் அவர்கள் எப்படி சம்பாதித்தார்கள்? இந்தப் படத்திற்கே இப்படி கோடிக்கணக்காக செலவழிப்பவர்கள் மொத்தம் எத்தனை பணம் வைத்திருப்பார்கள்?

புதன், 10 ஜூன், 2015

அஜினோ மோட்டோவும் மேக்கி நூடுல்ஸ்ஸும்

                                     
                                      Image result for maggi noodles images

இன்றைய தேதியில் மிக மிக ஹாட் டாபிக் இந்த "மேக்கி நூடுல்ஸ்" தான். இதைப் பற்றி நாமும் ஏதாவது சொல்லாவிடில் இந்திய நாடு எம்மை மன்னிக்காது. (இந்த தன்மைப் பன்மை ஒரு flow வுக்காக உபயோகப் படுத்தப்பட்டுள்ளது).

முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது இந்த "பிபிஎம்" என்றால் என்ன என்பதாகும்.

ppm என்பது Parts per Million என்பதின் சுருக்கம். அதாவது பத்து லட்சம் கிராம் பொருளில் ஒரு கிராம் வேறு ஒரு பொருள் இருப்பதை இந்த அளவினால் குறிப்பிடுவார்கள். இது மிக மிகக் குறைந்த அளவில் அந்தப் பொருள் இருக்கிறது என்று புரிவதற்கான அளவு.

அது எப்படி இவ்வளவு குறைவாக இருக்கும் பொருளைக் கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்வி இதற்குள் உங்கள் மனதில் தோன்றியிருக்கவேண்டும். அப்படித் தோன்றவில்லை என்றால் இப்போது தோன்ற வைத்துக்கொள்ளுங்கள்.

இதற்காகத்தான் பல ஊர்களில் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து
"National Analytical Laboratory" என்கிற பெயரில் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி, அவைகளை பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதியை விட்டுத் திறக்க வைத்து, பல விஞ்ஞானிகள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கிய பல பல நூதன பகுப்பறியும் கருவிகள் இங்கே இருக்கும்.

இந்தக் கருவிகளில்தான் இந்த மாதிரியான நுண்ணிய அளவில் இருக்கும் பொருளை பகுத்தறிவார்கள். இந்த சோதனைச்சாலைகளுக்கு ஒரு டைரக்டர், பல உதவி டைரக்டர்கள், கணக்கில்லாத ஆரய்ச்சியாளர்கள் என்று ஒரு பெரிய படையே இருக்கும். இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கும் மேக்கி நூடுல்ஸ் மாதிரி சமாச்சாரங்களுக்கான ஆணி வேர் இத்தகைய ஆராய்ச்சி சாலைகளில்தான் உதயமாகும்.

இந்த சோதனைச் சாலைகள் பற்றிய இத்தகைய செய்திகள் எல்லாம் சும்மா உங்கள் மாதிரி பொது மக்களை மயக்குவதற்காக சொல்லப்படும் சமாச்சாரங்கள். அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களைப் போன்ற இந்த மாதிரி சோதனைச்சாலைகளில் பணி புரிந்தவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் நாங்கள் உண்மையை வெளியே சொல்ல மாட்டோம் ஏனென்றால் எவனாவது தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொள்வானா?

இப்போது என்ன நடந்திருக்கும் என்றால் இந்த மேக்கிக்காரன் யாரையோ உசுப்பி விட்டிருக்கவேண்டும். என்ன உசுப்பல்? வழக்கமான நடைமுறைகளில் ஏதாவது கசமுசா ஆகியிருக்கவேண்டும். விலைவாசிகளெல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடப்பதை இந்த மேக்கிக்காரன் புரியாமல் இருந்திருக்கவேண்டும்.. அதில் வந்த வினையாகத்தான் இருக்கவேண்டும்.

அதில் சம்பந்தப்பட்டவன் நாயைச் "சூ" காட்டுகிற மாதிரி தன் கீழ் இருக்கும் ஒரு டிபார்ட்மென்ட்டுக்கு ஜாடை காண்பித்திருப்பான்.  நம் ஆட்களுக்குச் சொல்ல வேண்டுமா?  "எள் என்றால் எண்ணையாக" நிற்பவர்களல்லவா? உடனே அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டு சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டு இந்த சோதனைச்சாலைகளுக்கு அனுப்பி பரிசோதனை செய்யச்சொல்லி இருப்பார்கள்.

அந்தச் சோதனைச்சாலையில் இருக்கும் டைரக்டரும் மற்றவர்களும் இந்த "சோதனைச்சாலைக்கு வந்த சோதனையைப் பார்" என்று வருத்தப்பட்டு, சோதனை இயந்திரங்களை தூசி தட்டி, துடைத்து இந்த சேம்பிளை பகுப்பாய்வு செய்து மேல் அதிகாரிகள் விரும்பும் முடிவை விரும்பியபடி தயார் செய்து அறிக்கை கொடுத்து விடுவார்கள்.

இந்த முடிவுகளைப் பற்றி செய்தித்தாள்களில் வந்த விவரங்களைப் பாருங்கள். காரீயம் 2.5 பிபிஎம் க்கு மேல் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஐயா, துல்லியமாக சோதனை செய்திருந்தால் எவ்வளவு காரீயம் இருக்கிறது என்று தெரிந்திருக்கும் இல்லையா? அது எவ்வளவு என்று சொல்லலாம் இல்லையா? ஊஹூம், சொல்ல மாட்டமே? தன் கழுத்துக்கு தானே எவனாவது சுருக்கு மாட்டிக்கொள்வானா? சட்டத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கிறது. அவ்வளவுதான். மேட்டர் முடிந்து விட்டது. அப்பறம் நடப்பதெல்லாம் சட்டக்காவலர்கள் செய்ய வேண்டிய வேலை. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.

இதேபோல்தான் எம்எஸ்ஜி விவகாரமும். சட்டப்படி இருக்கவேண்டியதை விட மிக அதிகமாக இருக்கிறது.அவ்வளவுதான். எவ்வளவு என்று நாங்கள் சொல்ல மாட்டோம். அது எங்கள் வேலையல்ல. உண்மையான காரணத்தை இதற்குள் நீங்கள் யூகித்திராவிடில் நான் வருந்துவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே ஓடையில் தண்ணீர் குடித்த கதை தெரியுமல்லவா? அதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.

சட்டக்காவலர்கள் தங்கள் வேலையைப் பொறுப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். மேக்கி விற்ற கடைக்கார ர்கள் எல்லாம் மேக்கி பேக்கட்களை கடைக்குப் பின்னால் கொண்டு போய் விற்கிறார்கள். ஆபீசர்கள் வந்து கேட்டால் "மேக்கியா, அப்படீன்னா என்ன சார் ? அப்படீன்னு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில்  New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.

பின் சேர்க்கை. உங்கள் கவனத்திற்காக மட்டும்.

MSG எனப்படும்  குளுடாமிக் ஆசிட் பற்றி சில விபரங்கள்.

தினமும் ஒருவரது உணவில் 40 முதல் 50 கிராம் வரையிலான புரதமானது உள்ளெடுக்கப்படவேண்டும். புரதங்கள் பல்வேறு அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் 9அமிலங்கள் உடலுக்கு அத்தியாவசியமானவை. இவை தவிர்ந்த ஏனையவை உடலால் தொகுக்கப்படும் பால் இறைச்சி முட்டை ஆகிய விலங்குப் புரதங்கள் மிகவும் சிறந்த புரதங்களை கொண்டவை. இவற்றில் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் காணப்படும். குளுடாமிக் ஏசிட் என்பதுவும் இத்தகைய அத்தியாவசிய அமினோ அமிலங்களில் ஒன்று.

குளுடாமிக் ஏசிட்டின் இராசயன அமைப்பு.


C5H9NO4                         

Image result for glutamic acid                 

அஜினோ மோட்டோ அல்லது மோனோ சோடியம் குளுடாமேட்/எம்எஸ்ஜி
- இராசயன அமைப்பு


C5H8NO4Na           



Image result for msg chemical structure

இரண்டிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் - எம்எஸ்ஜி யில் ஒரு ஹைட்ரஜன் அணுவிற்குப் பதிலாக ஒரு சோடியம் அணு சேர்க்கப்பட்டிருக்கிறது                                


மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.

MSG—or monosodium glutamate—is a flavor enhancer used in savory foods, especially Asian foods. It contains sodium, but only a third of the amount that you’d get from the same amount of salt.
MSG also includes glutamic acid (aka glutamate), an amino acid that’s found naturally in foods like tomatoes, mushrooms and soybeans and is the source of our fifth taste—umami.
In fact, we eat about 13 grams of natural glutamate a day on average, compared to only around half a gram from MSG.
Some people say they have an MSG allergy—or that MSG gives them headaches, worsens their asthma, causes chest pain or palpitations, or causes mild mood changes or other symptoms, all of which are collectively referred to as Chinese Restaurant Syndrome (because MSG is commonly found in Asian-style meals).
Contrary to popular belief, decades of research fails to support the link between MSG and these reported side effects.
Modest amount of MSG found in the typical Western diet is not linked to symptoms of Chinese Restaurant Syndrome, according to scientific literature from the 1970s to today.
No adverse symptoms were observed when people consumed MSG as part of a meal—even at high doses (up to 147 grams/day), according to a review of studies, published in 2000 in the Journal of Nutrition.
There’s one caveat though: eating MSG may lead to classic symptoms of Chinese Restaurant Syndrome when it is consumed solo and on an empty stomach.
In a 2013 study, researchers gave healthy adults about 10 grams of MSG on average (a fairly large dose) without any food.
Almost all of them experienced headaches, as well as short-term increases in blood pressure and heart rate.
But because MSG is generally used in small amounts as a flavoring (like salt), the likelihood that you’d eat it by itself is slim.
MSG might just be the most love-to-be-hated additive of the day, but the science fails to supports its “bad guy” reputation.

News:
Delhi health minister Satyendar Jain said, "Last week, we lifted 13 samples of Maggi for testing following media reports of these being unsafe for consumption. We found the masala samples, tastemakers of at least 10 such packets, had lead content beyond the prescribed limit of 2.50pm." Jain also said five samples of masala were found containing monosodium glutamate (MSG) without proper label declaration.