திங்கள், 30 மார்ச், 2015

அக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப் - தொடர்ச்சி

                                          Image result for hanging portraits

அவர் சொல்ல நினைத்தது - "நானும் ஒரு நாள் பெரிய ஆபீசர் ஆக பிரபலமாகி, என் படமும் ஒரு நாள் இங்கு இதே மாதிரி தொங்கும்" என்பதே. ஆனால் இதை நல்ல ஆங்கிலத்தில் சொல்ல அவருக்குத் தெரியவில்லை. ஏன், பெரும்பாலானவர்களுக்கே கடினமான விஷயம்தான்.

அவர் என்ன சொன்னார் என்றால் - "one day I will hang like this"  இதன் அர்த்தம் என்னவென்றால் "ஒரு நாள் நான் இங்கு இது மாதிரி (தூக்கில்) தொங்குவேன்".

இந்த வாக்கியமானது பல வருடங்கள் பிரபலமாக இருந்தது. இந்த வாக்கியத்தைச் சொன்னவர்தான் எங்களுக்கெல்லாம் அன்அஃபிசியல் தலைவர் அதாவது லீடர். நல்ல தைரியசாலி. இவருடைய தலைமையில்தான் நாங்கள் ஆபீசர்ஸ் கிளப்பில் பல லீலைகள் புரிந்தோம்.

இந்த ஆபீசர்ஸ் கிளப்புக்கென்று ஒரு மெஸ் உண்டு. அதற்கு ஆபீசர்ஸ் மெஸ் என்று பெயர். அதை நடத்த ஒரு கான்ட்ராக்டரிடம் ஒப்பந்தம் போட்டு அவர் நடத்தி வந்தார். நான் கல்லூரியில் படிக்கும்போது சில வகுப்புகள் காலை 6.30 மணிக்கே தொடங்கும். நான் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவில்லை. காரணம் வீடு பக்கத்தில் ஆர்எஸ்புரத்தில் இருந்ததால் 10 நிமிடத்தில் கல்லூரிக்கு வந்து விடலாம்.

இப்படி 6.30 மணி வகுப்பிற்கு வரும்போது வீட்டில் டிபன் ரெடியாகி இருக்காது. அதனால் இந்த ஆபீசர்ஸ் மெஸ்சில்தான் டிபன் சாப்பிட்டு விட்டு வகுப்பிற்குப் போவேன். நான் வழக்கமாகச் சாப்பிடுவது - இரண்டு இட்லி (ஒரு அணா), ஒரு தோசை (ஒன்றரை அணா) ஒரு காப்பி (ஒன்றரை அணா), ஆக மொத்தம் நான்கு அணா அதாவது 25 நயா பைசா.

அன்று இருந்த விலைவாசி நிலவரம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியட்டும் என்றுதான் இவ்வளவு விவரம் கொடுத்தேன். இன்று அந்த 25 பைசாவே இல்லை.

இந்த ஆபீசர்ஸ் கிளப்பின் அங்கத்தினர்கள் எல்லோருக்கும் இந்த மெஸ்சில் கணக்கு உண்டு. எது வேண்டுமானாலும் சாப்பிட்டு விட்டு கணக்கில் எழுதச் சொல்லி விட்டு வந்து விடலாம். மாதக் கடைசியில் ஒவ்வொருவரும் சாப்பிட்ட கணக்குகளை ஒன்று சேர்த்து மெஸ் பில் தயாரித்து நோட்டீஸ் போர்டில் போடுவார்கள். 10 தேதிக்குள் அங்கத்தினர்கள் பில்லைக் கட்ட வேண்டும். அவர்களில் ஒரு சிலர் கட்டாவிட்டாலும் கிளப்பிலிருந்து மெஸ் கான்ட்ராக்டருக்கு 10 ம் தேதி பணம் கொடுக்கப்பட்டு விடும்.

இந்த வழக்கம் எல்லாம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வழக்கங்கள். இங்கிலீஷ்காரன் ஆண்டு கொண்டு இருக்கும் வரையில் எல்லாம் ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தது. அவனைக் கப்பல் ஏற்றி அனுப்பியவுடன் அவன் கற்பித்த ஒழுங்கு முறைகளையெல்லாம் நம்மவர்கள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.

பல அங்கத்தினர்கள் இந்த மெஸ் பில்லை ஒழுங்காகக் கட்டாததினால் ஆபீசர்ஸ் கிளப் திவாலாகும் நிலமைக்கு வந்து விட்டது. கிளப் நிர்வாகத்திற்கு வேறு வழி தெரியவில்லை. ஆகவே இந்த கடனில் சாப்பிடும் முறையை ஒழித்துக் கட்டினார்கள். பழைய பாக்கிகளை முடிந்தவரை வசூல் செய்தார்கள். பலர் பாக்கிகளை ஏப்பம் விட்டு விட்டார்கள்.

இந்தக்கால கட்டத்தில்தான் நாங்கள் முதுகலைப் படிப்பு முடிந்து எல்லோரும் வேலையில் சேர்ந்திருந்தோம். எங்கள் எல்லோருக்கும் அப்போது நான்-கெஜட்டெட் ஆபீசர்ஸ் என்று பெயர். எப்படியோ நாங்களும் ஆபீசர்ஸ் ஆகிவிட்டோம். அந்த ஜபர்தஸ்தைக் காட்டவேண்டாமா? ஆகவே ஆபீசர்ஸ் கிளப்பில் மெம்பர்களானோம்.

இந்தக் கிளப்பில் பெரிய ஆபீசர்கள், சின்ன ஆபீசர்கள், எங்களைப் போன்ற கத்துக்குட்டி ஆபீசர்க்ள எல்லோரும் மெம்பர்களாக இருந்தோம். ஆபீஸில் காட்டும் பந்தா, தோரணை எல்லாம் இங்கு இல்லை. எல்லோரும் சமமாகப் பழகுவார்கள்.

கிளப்பில் சில தினப் பத்திரிக்கைகள், வார, மாதப் பத்திரிக்கைகள் வாங்கி அங்கத்தினர்கள் படிப்பதற்காகப் போட்டிருப்பார்கள். கேரம்போர்டு, டேபிள் டென்னிஸ், செஸ் ஆகிய உள்ளே விளையாடும் விளையாட்டுகளும், வெளியில் விளையாடும் டென்னிஸ் ஆகியவை உண்டு. நாங்கள் எல்லாம் புது அங்கத்தினர்களானதால் மிகவும் பவ்யமாக பேப்பர் படித்துக்கொண்டு மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம்.

முக்கியமான விளையாட்டு ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டேன். அதுதான் சீட்டாட்டம். அதில் காசு வைத்துத்தான் ஆடுவார்கள். காசு இல்லாவிட்டால் அதில் சுவாரஸ்யம் ஏது? ஆனால் காசை வெளிப்படையாக டேபிளில் வைத்து விளையாடக் கூடாதல்லவா? அதனால் பல வர்ணங்களில் டோகன்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மதிப்பு. ரொம்ப அதிகப் பணம் வைத்து ஆடமாட்டார்கள். ஆனாலும் ஒரு நாளைக்கு ஐம்பது, நூறு என்று வரும்,  போகும்.

கொஞ்ச நாள் ஆனதும் நாங்களும் டேபிள் டென்னிஸ், கேரம் ஆகிய விளையாட்டுகள் விளையாட ஆரம்பித்தோம். நான் கேரத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றேன். நாங்கள் ஒரு நாலு பேர் ஒரு டீமாகச் சேர்ந்தோம். ஒரு டீம் கேரம் விளையாட ஆரம்பித்தால் அவர்க்ள ஒரு முழுமையான கேம் விளையாடி முடிக்கும் வரை அடுத்தவர்கள் கேரம் விளையாட உரிமை கோர முடியாது. அப்படி ஒரு எழுதப்படாத சட்டம் எங்கள் கிளப்பில் அமுலில் இருந்தது.

                                           Image result for carrom board

கேரம் விளையாட்டு ஆடினவர்களுக்குத் தெரியும். எந்த டீம் முதலில் 29 பாய்ன்ட் எடுக்கிறதோ அந்த டீம்தான் வென்றதாக கருதப்படும். நாங்கள் நால்வரும் மாலை ஆறு மணிக்கே போய் கேரம் போர்டைப் பிடித்துக் கொள்வோம். முதலில் ஒழுங்காக அவரவர் சாமர்த்தியத்திற்கு ஏற்ப விளையாடுவோம். ஏதாவது ஒரு டீம் 25 அல்லது 26 பாய்ன்ட் எடுத்த பிறகு அந்த டீம் அதற்குப் பிறகு வேண்டுமென்றே அடுத்த டீமுக்கு பாய்ன்ட் ஏறும்படியாக விளையாடும்.

இப்படி விளையாடி இரண்டு டீமும் தலா 28 பாய்ன்ட் எடுத்து விடும். அதற்குள் ஏறக்குறைய இரவு 8.45 மணி ஆகிவிடும். அதற்குப் பிறகுதான் கடைசி ஆட்டம். இரு டீமும் போட்டி போட்டுக் கொண்டு ஆடும். ஏதாவதொரு டீம் ஜெயிக்கும். இதற்குள் மணி 9 ஆகியிருக்கும். 9 கணிக்கு கிளப் மூடும் டைம். ஆகவே அன்று வேறு யாரும் கேரம் விளையாட முடியாது.

மறுநாளும் இப்படியே. இப்படியாக இரண்டு வருடம் நாங்கள் மட்டும்தான் கேரம் விளையாட்டை ஏகபோக உரிமையாக்கி விளையாடினோம். வேறு மெம்பர்கள் ஆட்சேபணை தெரிவித்தால் எங்கள் தலைவர் அடாவடியாகப் பேசி அவர்களை அடக்கி விடுவார். "நீங்களும் நேரத்தோடு வந்து கேரம் விளையாட்டை ஆரம்பிக்கவேண்டியதுதானே? இப்போது இவர்கள் நேரத்தோடு வந்து விளையாட்டை ஆரம்பித்து விட்டார்கள். இந்த கேம் முடியட்டும், அடுத்த கேம் நீங்கள் விளையாடலாம்" என்று பேசி அவர்களை அடக்கி விடுவார்.

நாங்கள்தான் எங்கள் டெக்னிக் பிரகாரம் ஆடி கிளப் மூடும் சமயத்தில்தான் கேமை முடிப்பதாச்சே? அப்புறம் எங்கே மற்றவர்கள் விளையாடுவது? இப்படியாக அந்த இரண்டு வருடமும் வேறு யாரும் எங்கள் கிளப்பில் கேரம் விளையாட நாங்கள் விடவில்லை.

இப்படியாக நாங்கள் அட்டுழியம் பண்ணிக்கொண்டு இருக்கும்போது இந்த சீட்டாட்டக்காரர்களுடன் ஒரு மோதல் ஏற்பட்டது. அது என்னவென்று அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.



சனி, 28 மார்ச், 2015

என் அந்தப்புரத்தில் இன்னும் ஒரு ராணி

என் அந்தப்புரத்தில் ஏற்கெனவே பல ராணிகள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். வயதாகி விட்டதால் அவர்களின் எண்ணிக்கை சட்டென்று நினைவிற்கு வருவதில்லை. லேட்டஸ்டாக இப்போது ஒரு ராணி வந்திருக்கிறார்கள்.

ஒல்லியான உருவம். நல்ல வெள்ளை நிறம். பார்க்க துடைத்து வைத்த குத்து விளக்கு போல் இருக்கிறாள். என் மனதிற்கு மிகவும் பிடித்துப் போனது.
                                Image result for Samsung Galaxy tab 4
அவள்தான் சாம்சங்க் கேலக்சி டேப் 4 எனப்படும் அழகி. என் நண்பர் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்து அன்பளிப்பாகக் கொடுத்தார். விலை கேட்டேன்.. சொல்ல மறுத்து விட்டார். அநேகமாக 20000 ரூபாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஏறக்குறைய கம்ப்யூட்டரில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இதில் இருக்கின்றன. சின்ன வயசுப் பையன்களுக்கு விளையாட, பொழுது போக்க நல்ல கருவி. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

வெள்ளி, 27 மார்ச், 2015

அக்ரி காலேஜ் ஆபீசர்ஸ் கிளப்.

                                   Image result for Coimbatore Agricultural College
இங்கிலாந்து நாட்டிலுள்ள பெரிய நகரங்களில் எல்லாம் பொழுதுபோக்கு கிளப்கள் இருப்பது பிரசித்தம். மேஜரான ஒவ்வொரு ஆங்கிலேயனும் ஏதாவதொரு கிளப்பில் அங்கத்தினராக இருக்கவேண்டும். இல்லாவிடில் அவனை ஒரு கனவானாக யாரும் அங்கீகரிக்க மாட்டார்கள். இந்தப் பழக்கம் அனைவரும் அறிந்ததே.

ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றி 200 வருடங்களுக்கு மேலாக ஆண்டு வந்ததை சரித்திரம் கூறும். அந்தக் காலகட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் பெரிய பதவிகளில் எல்லாம் ஆங்கிலேயர்கள்தான் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆகவே அனைத்துப் பெரிய ஊர்களிலும் கணிசமான அளவு ஆங்கிலேயர்கள் இருந்தார்கள்.

அவர்கள் தங்கள் கலாச்சாரச் சின்னமான கிளப் கலாச்சாரத்தையும் அவர்கள்இருக்கும் இடங்களில் நிறுவினார்கள். இங்கிலாந்தில் உள்ள இப்படிப்பட்ட கிளப்களைப் பற்றி நான் படித்தவற்றில் இருந்து சில குறிப்புகள் கொடுக்கிறேன். நான் இங்கிலாந்து போனதில்லையானதால் இவைகளைப் பற்றிய நேரடி வர்ணனை கொடுக்க இயலாததற்கு மன்னிக்கவும்.

இந்தக் கிளப்புகளில் பொதுவாக சுகஜீவனம் நடத்தும் இங்கிலாந்து பிரமச்சாரி கனவான்களுக்கு ( Bachelor Gentlemen with independent income - இது தமிழ் தெரியாத இந்தியக் கனவான்களுக்கான மொழி பெயர்ப்பு) ஒரு நல்ல புகலிடம். இங்கு அவர்கள் நாட்கணக்கில் தங்கிக்கொள்ளலாம். இந்தக்கிளப்புகளில் கூடவே மெஸ்சும் இருக்கும். ஆகவே உணவுப்பிரச்சினை இல்லை. செய்தித்தாள்கள், வார, மாத சஞ்சிகைகள் எல்லாம் வரவழைக்கப்பட்டு அங்கத்தினர்கள் படிப்பதற்காக இருக்கும். உடம்புக்கு வருத்தம் தராத விளையாட்டுகள் இருக்கும்.

(உடம்புக்கு வருத்தம் தராத விளையாட்டு - சீட்டாட்டம்தான். அதுவும் பெரிய மனிதர்கள் ஆடுவது "பிரிட்ஜ்" என்று சொல்லப் படுவதுதான். நம்ம ஊர் கனவான்கள் ஆடுவது "ரம்மி" எனப்படுவதாகும். நம்ம ஊர் சேரிக் கனவான்கள் ஆடுவது "மூன்று சீட்டு" அல்லது "மங்காத்தா" எனப்படும் ஆட்டங்கள்)

இப்படியான ஒரு கலாச்சாரத்தில் வளர்ந்த ஆங்கிலேயர்கள் தாங்கள் ஆண்ட இந்தியாவிலும் இந்தக் கலாச்சாரத்தைப் புகுத்தினார்கள். அந்தக் காலத்தில், அதாவது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்திய காலத்தில், விவசாயக் கல்லூரியில் நிறைய ஆங்கிலேயர்கள் பணிபுரிந்து வந்தார்கள். அவர்களில் பலரின் உருவப்படங்கள் இன்றைக்கும் கல்லூரியில் "பிரீமேன் ஹால்" என்று அழைக்கப்படும் ஹாலில் தொங்குகின்றன.

                                     Image result for Coimbatore Agricultural College

முன்பு அந்த ஹாலில் கல்லூரி வகுப்புகள் நடக்கும். அதில் வகுப்பு நடத்திய ஒரு பேராசிரிய நண்பருக்கு ஆங்கிலம் சற்றுத் தடுமாற்றம். அவர் மாணவர்களுக்கு அந்தப் படங்களைக் காண்பித்து அவர்களின் பெருமைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, தானும் அது மாதிரி ஒரு நாள் வருவேன் என்று ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது காட்டுத்தீ போல கல்லூரி முழுவதும் ஒரே நாளில் பரவி அது ஒரு பெரிய நகைச்சுவை ஜோக் ஆகி விட்டது.

அவர் என்ன சொன்னார் என்பதை அடுத்த பதிவில் பாருங்கள்.

புதன், 25 மார்ச், 2015

கீரை வடையும் அன்னபூர்ணா ஹோட்டலும்.

                                        Image result for கோவை அன்னபூர்ணா ஓட்டல்
இது ஐம்பது வருடத்திற்கு முந்திய கதை. நான் 1960 களில் விவசாயக் கல்லூரியில் உதவி ஆசிரியனாகப் பணி புரிந்த காலம். நாங்கள் மொத்தம் 6 பேர். இளநிலை விவசாயப் படிப்பு அப்போது 4 வருடத்துப் படிப்பாகும். இப்போதும் அப்படித்தான்.

ஒவ்வொரு வருடத்திலும் 162 மாணவர்கள். இவர்களுக்கு வேதியல் பாடத்தில் செய்முறை வகுப்புகள் எடுப்பதுதான் எங்கள் வேலை. செய்முறை வகுப்புகள் அநேகமாக காலை வேளைகளில்தான் இருக்கும். காலை 7 மணிக்கே வகுப்புகள் ஆரம்பமாகும். 9 மணிக்கு ஒரு பேட்ச் முடிந்து 9.30 க்கு அடுத்த பேட்ச் வரும். இந்த பேட்ச் 11.30 க்கு முடியும். ஒவ்வொரு பேட்சிற்கும் மூன்று ஆசிரியர்கள் வேண்டும்.

இந்த வேலையை நாங்கள் முறை வைத்துக் கொண்டு நிறைவேற்றுவோம். தினமும் வகுப்புகள் உண்டு. காலையில் வகுப்புகள் முடிந்து விடும். பிறகு வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டுத் தூங்கி எழுந்து மாலையில் மூன்று மணிக்குத்தான் ஆபீசுக்கு வருவோம். எல்லோரும் பக்கத்தில் குவாட்டர்சில்தான் இருந்தோம்.

மாலையில் என்ன வேலை என்றால் பசங்களுடைய ரிக்கார்டு நோட்டுகளைத் திருத்துவதுதான். இதை அப்படியே அரட்டை அடித்துக்கொண்டே செய்யும்போது மாலை 4 மணி ஆனால் வயிற்றுக்குள் ஒரு மணி அடிக்கும். அதாவது அதற்கு ஏதாவது சிறுதீனி வேண்டும் என்று அர்த்தம்.

அப்போதுதான் வடகோவையில் சென்ட்ரல் தியேட்டர் என்று ஒன்று புதிதாகக் கட்டியிருந்தார்கள். அங்கு நடந்து கொண்டிருந்த கேன்டீனில் கீரைவடை என்று ஒன்று போடுவார்கள். சாதாரணப் பருப்பு வடை மாவில் ஏதாவது ஒரு கீரையை நன்றாக சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு பிசைந்து வடை சுடுவார்கள். வடை மொறுமொறுவென்று அவ்வளவு ருசியாக இருக்கும்.
விலை கொஞ்சம் ஜாஸ்தி.ஒரு வடை அரை அணா  என்று நினைவு.

ஆறு பேருக்கு ஆளுக்கு நாலு வடை வீதம் 24 வடைக்கு எவ்வளவு ஆகும் பாருங்கள்? 12 அணா, சுளையாக முக்கால் ரூபாய். எங்களுக்கு அப்போது சம்பளமே மாதத்திற்கு 150 ரூபாய்தான். ஆனாலும் இது அத்தியாவசியச் செலவு என்பதால் முறை வைத்துக் கொண்டு (ஆளுக்கு ஒரு நாள்- வாரத்தில் ஆறு நாள்) செய்தோம். இது தவிர ஆறு பேருக்குக் காப்பி. ஒரு காப்பி விலை ஒன்றரை அணா. ஆறு காப்பிக்கு 9 அணா. 24 வடைக்கு 12 அணா. ஆக மொத்தம் ஒரு நாளைக்கு 21 ஆணா. அதாவது ஒரு முழு ரூபாயும் ஐந்து அணாவும். அதாவது இன்றைய கணக்கில் ஒரு ரூபாய் முப்பது பைசா.

தினம் ஒருவர் முறை வைத்துச் செலவு செய்வதால் ஒருவருக்கு வாரம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் ஐந்தணா அவ்வளவு பெரிய செலவாகத் தோன்றவில்லை. இது தவிர அவ்வப்போது பெரிய கடை வீதியில் உள்ள "பாம்பே ஆனந்த பவன்" ஓட்டலுக்குப் போகவேண்டி வரும். யாராவது ஒருவர் ஏதாவது ஒரு வாக்குவாதத்தில் சிக்கித் தோற்றுப்போனால் அவர் அன்று மற்றவர்களுக்கு அந்த ஒட்டலில் இட்லி சாம்பார் வாங்கித்தரவேண்டும். எப்படியும் இந்த வைபவம் வாரத்திற்கு ஒரு முறையாவது நடக்கும். அதைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

 எங்களுக்கு செய்முறை வகுப்புகளில் உதவி செய்வதற்காக "லேப் பாய்" என்று ஒரு கடைநிலை ஊழியர்கள் ஐந்தாறு பேர் உண்டு. மாலையில் இவர்களுக்கும் வகுப்புகள் இல்லாததால் வேறு வேலை இல்லை. இவர்களில் ஒருவனைப் பிடித்து கீரைவடை வாங்கவும் இன்னொருவனைப் பிடித்து காப்பி வாங்கவும் அனுப்புவோம். நான்கு மணிக்கு இவை இரண்டும் வந்து விடும். இவைகளைச் சாப்பிட்டு முடிக்கும் போது ஐந்து மணி ஆகிவிடும். அவ்வளவுதான். கடையைக் கட்டிவிட்டு வீட்டுக்குப் போய் கைகால் கழுவிவிட்டு 6 மணிக்கு ஆபீசர்ஸ் கிளப் போவோம். அந்தக் கதையை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இப்போ இந்தக் கீரைவடையின் மூலத்திற்கு வருவோம். அந்தக் காலத்தில் கோயமுத்தூரில் நூற்பாலைகள் அதிகம். அவைகளைப் போதுவாக நூல்மில்கள் என்று அழைத்துப் பிறகு வெறும் மில் என்றாலே நூல்மில் என்று ஆகிப்போனது. அதிகம் படிக்காத உள்ளூர் பசங்கள் எல்லாம் மில் வேலைக்குத்தான் போவார்கள். அங்கு வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம். நாங்கள் 18 வருடம் படித்து எம்எஸ்சி பட்டம் வாங்கி பெரிய அரசாங்க உத்தியோகம் என்ற பெயரில் வேலை பார்க்க சம்பளம் 150 ரூபாய். ஸ்கூலுக்கே போகாமல் குண்டு விளையாடிக்கொண்டிருந்து விட்டு மில் வேலைக்குப் போகிறவர்களுக்கும் அதே 150 ரூபாய் சம்பளம். அது தவிர தீபாவளிக்கு 6 மாத சம்பளம் போனஸ் தருவார்கள்.

அன்றைக்கு இருந்த பொருளாதார நிலை அப்படி. இன்றைய நிலை எப்படி என்று சொன்னால் எல்லோருடைய வாயும் வயிறும் வெந்து விடும். வேண்டாம், அந்தப் பாவம் எனக்கு வேண்டாம். ஆனாலும் அப்படி மில் வேலைக்கு போய்கொண்டிருந்த சிலர் தாங்கள் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற குறிக்கோளுடன் பற்பல தொழில்கள் செய்து முன்னேறியிருக்கிறார்கள்.

அந்த மாதிரி நாலு பேர் சேர்ந்துதான் இந்த சென்ட்ரல் தியேட்டர் கேன்டீனை குத்தகைக்கு எடுத்து நடத்தினார்கள். அவர்களுடைய அம்மாவிற்கு சமையலில் கைப் பக்குவம் அதிகம். அவர்கள் வழிகாட்டுதலில் இந்தக் கேன்டீன் ஜேஜேவென்று ஓடியது. அவர்கள் போட்ட கீரை வடை கோயமுத்தூர் ஜில்லா முழுவதும் பெயர் பெற்றது.

இப்படியாக அனுபவம் பெற்ற அவர்கள் ஆர்எஸ்புரம் திவான் பகதூர் ரோட்டில் ஒரு கடை வாடகைக்கு எடுத்து சிறியதாக ஒரு ஓட்டல் ஆரம்பித்தார்கள். அவர்களின் முழு கவனமும் விற்பனை செய்யும் உணவுப் பொருட்கள் தரமாகவும் ருசியாகவும் விலை அதிகமில்லாமலும் இருக்கவேண்டுமென்பதில்தான் இருந்தது. இப்படி ஒரு ஓட்டல் நடந்தால் அது வளர்வதற்குத் தடை ஏது?

அந்த நாலு பேரும் அல்லும் பகலும் உழைத்தார்கள். அந்த ஓட்டல் வளர்ந்தது. சொந்தமாக இடம் வாங்கினார்கள். உள்ளூரில் கிளைகள் போட்டார்கள். எல்லாக் கிளைகளிலும் வியாபாரம் அமோகமாக நடந்தது. வெளியூரிலும் கிளைகள் ஆரம்பித்தார்கள். கோயமுத்தூர் வரும் வெளியூர் ஆட்கள் இந்த ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டால்தான் கௌரவம் என்ற அளவிற்கு இந்த ஓட்டல் பெயர் பெற்றது.

அந்த ஓட்டல்தான் இன்று கோவையில் கோலோச்சி வரும் அன்னபூர்ணா-கௌரிசங்கர் குரூப் ஓட்டல்கள்.
                                  Image result for அன்னபூர்ணா ஓட்டல்

திங்கள், 23 மார்ச், 2015

சுட்ட கத்தரிக்காய் சட்னி

                                  Image result for கத்தரிக்காய்

அந்தக் காலத்தில நான் சிறுவனாக இருந்த போது பள்ளி விடுமுறை நாட்களில் என் பாட்டி வீட்டுக்குப் போவேன். அதாவது என் பாட்டி இருந்த தோட்டத்து வீட்டுக்குப் போவேன். அந்த தோட்டம் என் மாமா விவசாயம் செய்து கொண்டிருந்த தோட்டம்.

அப்ப எல்லாம் தோட்டங் காட்டுகளில் விவசாயம் செய்தவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் தேவைகளுக்கு எங்கும் வெளியில் செல்வதில்லை. அவர்களுக்குத் தேவையான தானியங்கள், காய்கறிகள், பால், எண்ணை வகைகள் இவை அனைத்தையுமே அவர்கள் தங்கள் தோட்டத்தில் விளைவித்துக் கொண்டார்கள். உடுத்துவதற்கான துணிகள் மற்றும் பாத்திர பண்டங்கள், நகைகள் இவைகள் மட்டுமே வெளிச் சந்தையில் வாங்குவார்கள்.

அன்றாட வாழ்வில் பணப்புழக்கம் என்பது மிகவும் அரிதாக இருந்தது. வருடத்திற்கு ஒரு முறைதான், அதாவது தீபாவளி சமயத்தில்தான் துணிமணிகள், நகைநட்டுகள் எல்லாம் வாங்குவார்கள். பிறகு பணம் செலவு செய்யவேண்டிய சந்தர்ப்பங்களே ஏறக்குறைய இல்லை. உப்பு, தீப்பெட்டி, சில எண்ணை வகைகள் இவைகள்தான் வெளியிலிருந்து வாங்கவேண்டி வரும். இவைகளை வியாபாரிகள் தோட்டம் தோட்டமாகக் கொண்டு வருவார்கள். அதற்கு ஈடாகத் தோட்டத்துக்காரர்கள் தோட்டத்தில் விளைந்துள்ள ஏதாவது தானியம் அல்லது பருத்தி ஆகியவைகளைக் கொடுப்பார்கள்.

இப்படிப்பட்ட காலத்தில் நான் என் பாட்டி (மாமா) தோட்டத்தில் விடுமுறையைக் கழித்தேன் என்றால் எப்படி இருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள். காசு கண்ணிலேயே படாது. அப்படி ஏதாவது காசு வைத்திருந்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது? அக்கம் பக்கம் காத தூரத்திற்கு எந்த விதமான கடைகளும் கிடையாது.

மிக அதிசயமான தின்பண்டம் என்பது தேங்காய் ஒப்புட்டுத் தான். அப்படி என்றால் என்னவென்று தெரியாதவர்கள் பின்னூட்டத்தில் சொன்னால் ஒரு செய்முறைப் பதிவு போடுகிறேன். ஞாயிற்றுக் கிழமை இட்லி பலகாரம் கிடைக்கும். இட்லி ஒரு பலகாரமாக இருந்த காலம் அது. இல்லையென்றால் தினமும் காலையில் தயிர் விட்டுக் கரைத்த பழைய சோளச்சோறுதான் காலை டிபன்.

ஏன் ஞாயிற்றுக்கிழமையில் இட்டிலி என்றால் அது வார விடுமுறை என்பதால் அல்ல. விவசாயிகளுக்கு எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான். சனிக்கிழமைதோறும் தவறாமல் எண்ணைக் குளியல் உண்டு. வீட்டில் காய்ச்சிய விளக்கெண்ணை ஒரு அரை லிட்டர் எடுத்துக் காய வைத்து எங்கள் எல்லோர் தலையிலும் ஊற்றி விடுவார்கள். ஒரே வயதில் ஏறக்குறைய ஐந்தாறு பேர் இருப்போம்.

தலையிலிருந்து வழியும் எண்ணையை அப்படியே கையினால் உடம்பு முழுவதும் பூசிக்கொள்ள வேண்டியதுதான். கோவணம் எல்லாம் கிடையாது. அப்படியே ஒரு அரை மணி நேரம் இருந்த பிறகு ஒவ்வொருவராகக் குளிப்பாட்டி விடுவார்கள்.  அரப்பு கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுதான் அன்றைக்கு ஷாம்பு. அரப்புக் கரைசலை கைநிறைய எடுத்து தலையில் வைத்து அரக்கித் தேய்த்து குளிப்பாட்டுவார்கள். அப்படித் தேய்க்கும்போது அரப்பு கண்ணுக்குள்ளும் வாய்க்குள்ளும் போகும். அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.

அன்று மதியச் சாப்பாடு நெல்லஞ்சோறும் செலவு அரைத்த ரசமும். செலவு என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக ஒரு குறிப்பு. மிளகு, சீரகம், கடுகு இவைகளைத்தான் செலவு சாமான்கள் என்று சொல்வது அந்தக் காலத்து வழக்கம். இப்போது அஞ்சறைப் பெட்டி என்று நாகரிக யுவதிகள் சொல்கிறார்களே, அதற்கு செலவுப் பெட்டி என்றுதான்  எங்கள் ஊரில் இன்றைக்கும் பெயர். மிளகு சீரகம் அரைத்துப் போட்டு வைக்கும் ரசத்திற்குப் பெயர்தான் செலவரைச்ச ரசம்.

இந்த ரசம் சாப்பிட்டால் சாப்பிட்ட சாப்பாடு எளிதில் ஜீரணமாகும். எண்ணை தேய்த்துக் குளித்த அன்று உடல் முழுவதும் லேசாகி உடம்பு வெடுக்கென்று இருக்கும். ஜீரண சக்தி குறைந்திருக்கும். அதனால் அன்று எளிதில் ஜீரணமாகக் கூடிய நெல்லஞ்சோறும் செலவரைச்ச ரசமும்தான் மதியம் சாப்பிடவேண்டும்.

அடுத்த நாள், அதாவது ஞாயிற்றுக் கிழமை மதியம் கட்டாயம் கறிச்சாப்பாடு உண்டு. கறி என்றால் ஆட்டுக் கறிதான். வேறு எதுவும் அந்தக் காலத்தில் கிடையாது. கோழிக்கறி உடம்புக்கு சூடு என்று பொதுவாக யாரும் சாப்பிடமாட்டார்கள். மதியச் சாப்பாடு கனமாக இருக்குமாதலால் அன்று காலை எளிதில் ஜீரணமாகக் கூடிய இட்லி செய்வார்கள்.

இட்லிக்கு இன்று மாதிரி விதவிதமான சட்னி சாம்பார் எல்லாம் கிடையாது. ஏதோ ஒன்று தொட்டுக் கொள்ளக் கிடைக்கும் அப்படிப்பட்ட ஒன்றுதான் சுட்ட கத்தரிக்காய்ச் சட்னி. தோட்டத்தில் எப்படியும் ஓரிரண்டு பாத்தியில் கத்தரிக்காய் நட்டிருப்பார்கள். அவ்வப்போது குழம்பிற்குப் பறிப்பதற்காக இந்த
ஏற்பாடு. குழம்பிற்கு எப்போதும் பிஞ்சுக்காய்களைத்தான் பறிப்பார்க்ள. இதில் எப்படியும் மறைவாக இருக்கும் சில காய்கள் தப்பி விடும். அவை நன்கு பெரிதாகி, குழம்பிற்கு லாயக்கற்றதாய் இருக்கும்.

ஞாயிறு அன்று அந்தக் காய்கள் நாலைந்தைப் பறித்து வந்து இட்லி வெந்து கொண்டிருக்கும் அடுப்புத் தணலில் வைத்து விடுவார்கள். அப்போதெல்லாம் விறகு அடுப்புதானே. இந்தக் காய்களை இரண்டொரு தடவை திருப்பிப் போடுவார்கள். அந்தக் காய்கள் தணலில் நன்றாக வெந்து விடும். அதை எடுத்து தோலை உரித்து ஒரு சட்டிக்குள் போட்டு நாலைந்து பச்சமொளகாய், கொஞ்சம் புளி, உப்பு எல்லாம் போட்டு, பருப்பு மத்தால் நன்கு கடைந்து விடுவார்கள்.

இதுதான் இட்லிக்கு சைட் டிஷ். சூடான இட்லிக்கும் இந்த சட்னிக்கும் இவ்வளவு பொருத்தமாக இருக்கும். இரண்டிலும் எண்ணை என்பதே கிடையாது. ஒவ்வொருவரும் குறைந்தது ஆறு ஏழு இட்லிகள் சாப்பிடுவோம். குறைவாகச் சாப்பிட்டால் "வளர்ற பசங்க சாப்பிறதப் பாரு, இன்னும் ரெண்டு இட்லி சாப்பிட்றா" என்று வலுவில் போட்டு விடுவார்கள். இப்படிச் சாப்பிட்டு வளர்ந்த ஒடம்பாக்கும் இது.

இதுதான் சுட்ட கத்தரிக்காய்ச் சட்னி. இந்தக்காலத்தில் பெங்களூர் கத்தரிக்காய் என்று பெரிதாக மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதை கேஸ் அடுப்பில் சுட்டு இந்த சட்னி பண்ணலாம். இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள தேவாம்ருதமாக இருக்கும்.

சனி, 21 மார்ச், 2015

நேந்திரன் பழ பஜ்ஜி

                                      Image result for நேந்திரம் பழம்
கேரளாவின் அடையாளமே நேந்திரன் பழம்தான். கேரளாக்காரர்கள் எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் இந்தப் பழத்திற்காக உயிரையே விடுவார்கள். அந்த ஊர் பெண்கள் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுத்தான் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.
                                    Image result for கேரளா பெண்கள்

கேரளாவில் வழக்கமான காலை சிற்றுண்டி என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? குழாய்ப் புட்டு, கடலைக்குழம்பு, அவிச்ச நேந்திரன் பழம், கடைசியாக பாலில்லாத டீ. கேரளாவில் எந்த குக்கிராமத்திற்குப் போனாலும் இந்த காலைச்சிற்றுண்டி அங்குள்ள டீக்கடைகளில் கிடைக்கும். கேரளாவில் பால் வளம் குறைவு. காரணம் அந்த சீதோஷ்ண நிலைக்கும் அங்கு இருக்கும் விவசாய சூழ்நிலைக்கும் மாடுகளை வளர்ப்பது கடினம். ஆகவே அவர்கள் அன்றாட உணவில் பால், தயிர் ஆகியவை உபயோகிப்பது அபூர்வம்.

எங்க ஊர் அதாவது கோயமுத்தூர் கேரளா எல்லையிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இந்த ஊரில் கேரளாக்காரர்கள் ஏறக்குறைய 30 விழுக்காடு இருக்கிறார்கள். இங்கு நடக்கும் தங்க நகை வியாபாரம் முழுவதும் கேரளாக்காரர்கள் கையில்தான் இருக்கிறது. கொஞ்சம் வியாபாரம் சேட்டுகள் கையில் இருக்கிறது. 50 வருடங்களுக்கு முன் நங்க நகை வியாபாரத்தில் கோலோச்சிய வைசியச் செட்டியார்கள் அநேகமாகக் காணாமல் போய்விட்டார்கள்.

இப்ப நம்ம சமாச்சாரத்திற்கு வருவோம். என்னென்னமோ பஜ்ஜிகள் எல்லாம் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அறுசுவையும் கொண்ட இந்த நேந்திரன் பஜ்ஜி சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். கோயமுத்தூரில் இரண்டு விதமான உணவகங்கள் உண்டு. ஒன்று பிராமணாள் காப்பி கிளப், இரண்டு கேரளாக்காரர்களின் சாயாக் கடை. பிராமணாள் காப்பிக் கடைக்குப் போய் டீ கேட்பவனும் சாயாக்கடைக்குப் போய் காப்பி கேட்பவனும் அசலூர்க்காரர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

பிராமணாள் காப்பிக் கிளப்பில் சாயந்தரமானால் வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய்ச்சட்னியும் போடுவார்கள். சாயாக் கடைகளில் எப்பொழுதும் சுடுசாயாவும் காஞ்ச வர்க்கியும்தான் கிடைக்கும். எத்தனை நாளைக்குத்தான் இந்த காஞ்சுபோன வர்க்கியை வைத்துக்கொண்டே கடையை ஓட்ட முடியும்? யோசிச்சான் கேரளாக்காரன். ஆஹா, நம்ம ஊரு நேந்திரன் பழத்தில பஜ்ஜி போட்டால் எப்படி இருக்கும் என்று யோசிச்சான்.

அப்போது பிறந்ததுதான் நேந்திரன் பழபஜ்ஜி. பிராமணாள் சுடும் வாழைக்காய் பஜ்ஜி டெக்னிக்கேதான். என்ன மொந்தன் வாழைக்காய்க்குப் பதிலாக நேந்திரன் பழம். அவ்வளவுதான். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் வாழைக்காய் பஜ்ஜியில் உப்பும் காரமும் மட்டும்தான் இருக்கும். நேந்திரன்பழ பஜ்ஜியில் கூடவே இனிப்பும் இருக்கும்.

கோயமுத்தூர்க்காரன் அப்படியே இந்த பஜ்ஜியில் மயங்கிப்போனான். ஏனென்றால் அவன் அடிக்கடி கேரளா போய் இந்த நேந்திரன் பழமும் அதைச் சாப்பிட்டு சுந்தரமாய் இருக்கும் சுந்தரிகளும் அவனுக்குப் பரிச்சயம். அதனால் இந்தப் பஜ்ஜிகளை அந்த பின்னணி நினைவுகளை மனதில் அசைபோட்டவாறே சாப்பிடப் பழகிக்கொண்டான். இவ்வாறு நேந்திரன் பழ பஜ்ஜி கோவையில் வலம் வரத்தொடங்கியது.

                                     Image result for நேந்திரன் சிப்ஸ்

இதன் கூடவே நேந்திரன்பழ வறுவல்களும் வர ஆரம்பித்தன. கோயமுத்தூரில் எல்லாப் பயல்களும் இந்த இரண்டிற்கும் அடிமையானார்கள். இந்த இரண்டு சமாச்சாரங்களுக்கும் அடிப்படையான நேந்திரன் பழம் கேரளாவிலிருந்துதான் வரவேண்டியிருந்தது. இங்கு டிமாண்ட் அதிகமாகவே, போதுமான அளவு நேந்திரன் பழங்கள் கேரளாவிலிருந்து கிடைக்கவில்லை.

கோயமுத்தூர் விவசாயி என்ன லேசுப்பட்டவனா? அது என்ன அவன் மட்டும்தான் நேந்திரன் பழம் போடுவானா? நானும் போடுகிறேன் பார் என்று ஆரம்பித்து நேந்திரன் பழ விவசாயம் கோவையிலும் சூடு பிடித்தது. எங்கள் சம்பந்தி தோட்டத்திலும் நேந்திரன் பழமரங்கள் நட்டார்கள். நன்றாகவே விளைந்தது. பழங்கள் எங்கள் வீட்டிற்கும் வர ஆரம்பித்தது.

நான் முன்பே இந்த நேந்திரன் பழ பஜ்ஜியை ருசி கண்டவனாதலால் இந்தப் பழத்தில் பஜ்ஜி சுட்டால் என்ன என்று வீட்டுக்காரியிடம் ஒரு நாள் நைசாகக் கேட்டேன். அது எப்படி சுடுவதென்று எனக்குத் தெரியாதே என்று முதலில் பின் வாங்கினாள். நாம் விடுவோமா? இதென்ன பெரிய ஆரிய வித்தை?  நான் உனக்கு உதவி செய்கிறேன் பார், என்று சொல்லி, நான் கற்ற வித்தைகளையெல்லாம் காட்டி எப்படியோ அவளைச் சம்மதிக்க வைத்தேன்.

வாழைக்காய் பஜ்ஜி சுடுவதற்கான அதே கடலைமாவு-அரிசி மாவு கலவைதான். வாழைக்காய்க்குப் பதிலாக நேந்திரன் பழம். என்ன நேந்திரன் பழத்தை நீள வாக்கில் சீவுவது கடினம். அதனால் குறுக்கு வாட்டில் துண்டுகளாக வெட்டிக் கொடுத்தேன். அந்த துண்டுகளை மாவுக் கரைசலில் முக்கி எடுத்து எண்ணையில் பொரிக்கவேண்டியதுதான். நேந்திரன் பழ பஜ்ஜி ரெடி.
                                     Image result for பஜ்ஜி வகைகள்
இந்த வட்ட வடிவில் உள்ள பஜ்ஜியில் இன்னுமொரு சௌகரியம் என்ன வென்றால் ஒரு பஜ்ஜியை அப்படியே முழுசாக வாயில் போட்டுக் கொள்ளலாம்.நீள பஜ்ஜி மாதிரி கடித்துக் கடித்து சாப்பிடவேண்டியதில்லை. என்ன, பஜ்ஜியின் சூடு அளவாக இருக்கவேண்டும். இல்லையென்றால் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவஸ்தைப்பட நேரிடும்.

இந்த பஜ்ஜிக்கு எந்த சைடு டிஷ்ஷும் வேண்டியதில்லை. சுடச்சுட சாப்பிட்டுக்கொண்டேஏஏஏஏஏ இருக்கலாம். நேந்திரன் பழமும் கடலை மாவும் தீர்ந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.

நீங்களும் உங்கள் வீட்டில் இந்த பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம். ஆனால் அதற்கு முன் கேரளாவிற்கு ஒரு முறை போய் வருவது பஜ்ஜியின் சுவையைக் கூட்டும்.