சனி, 25 பிப்ரவரி, 2017

எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்!

Image result for lean manImage result for big man    ➨➨➨

காலம் மனிதனின் வாழ்வில் பல மாற்றங்களைத் தோற்றுவிக்கிறது. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவாகும்.

என்னுள் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றத்தைப் பற்றி இங்கு விவரிக்கிறேன்.

நான் உயர் நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது துப்பறியும் நாவல்களில் ஆர்வம் உண்டாயிற்று. என் ஒன்று விட்ட அண்ணன் இந்த ஈடுபாட்டை என்னுள் ஏற்படுத்தினான். இந்த ஆர்வம் ஒரு கட்டத்தில்   (கெரசின், பெட்ரோல் ஆகிய எதுவுமில்லாமலேயே) கொழுந்து விட்டு  எரிய ஆரம்பித்தது.

எப்படியென்றால் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக்  கொண்டிருக்கும் போதே, டெஸ்க்குக்கு அடியில் இந்த நாவல்களை வைத்துப் படிக்கும் அளவிற்குப் போய்விட்டது. வீட்டில் இரவு என்னேரமானாலும் எடுத்த புத்தகத்தைப் படித்து முடிக்காமல் தூங்க மாட்டேன்.

ஒரு மணி நேரத்தில் தமிழ் புத்தகங்களானால் 130 பக்கங்கள் படிப்பேன். ஆங்கில புத்தகங்களானால் 90 பக்கங்கள் படிப்பேன். ஆனந்த விகடன், குமுதம் வாரப் பத்திரிகைகளை தவறாமல் வாங்கி அவைகளில் வரும் தொடர்கதைகளை தனியே பிரித்து வைத்து, அது முடிந்தவுடன் பைண்ட் செய்து வைப்பேன்.

இப்படியெல்லாம் படித்துக் கொண்டிருந்த நான் இப்போது ஆனந்த விகடன் குமுதம் பத்திரிக்கைகளைத் தொடுவதே இல்லை. அவைகள் முன் மாதிரி இல்லை என்பதுவும் ஒரு காரணம். மற்ற கதைகளைப் படிப்பதற்கு ஆர்வம் இல்லை.

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் ஒரு "டேப்" எனக்கு பரிசளித்தார். அதில் அமேசான்காரன் இலவசமாகவும் சலீசான விலையிலும் பல புத்தகங்களைக் கொடுத்தான். அவைகைள வாங்கி வைத்துள்ளேன். அதில் பல துப்பறியிம் கதைகள்

அவைகளைப் படிக்கலாமென்று ஆரம்பித்தேன். ஒரு நான்கைந்து பக்கங்கள் பிடித்தால் அதில் வரும் சஸ்பென்சைத் தாங்க முடிவதில்லை. நரம்புகள் புடைக்கின்றன. இரத்தம் சூடேறுகிறது. நெஞ்சு படபடக்கிறது. பிறகு அந்தக் கதையைத் தொடர முடிவதில்லை. மறு நாள் படிக்க ஆரம்பித்தால் இன்னும் ஒரு நான்கு பக்கங்களே படிக்க முடிகிறது.

இப்படியாக ஒரு கதையை முடிக்க பத்துப் பதினைந்து நாட்கள் ஆகின்றன. நினைத்துப் பார்த்தேன். ஒரு நானூறு பக்க நாவலை மூன்று மணி நேரத்தில் படித்த நான் எப்படி ஆகி விட்டேன் என்று நினைக்கும் போதுதான் என் வயதின் தாக்கம் புரிகிறது. இனி அந்த நாட்கள் வரப்போவதில்லை. மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.

சனி, 4 பிப்ரவரி, 2017

நான் ஏன் பணம் சேர்க்கிறேன்?


                                              Image result for அனில் அம்பானி
ஒரு ஊரில் ஒருவன் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வியாபாரம் நல்ல வியாபாரம்தான். ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம் அவனுக்கு ஏகப்பட்ட கடன் ஏற்பட்டு விட்டது. விற்ற பொருள்களுக்கு பணம் வரவில்லை. வாங்கின பொருள்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை.

எங்கு பார்த்தாலும் பிரச்சினை. ஒரு கட்டத்தில் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு அவன் ஒரு பாட்டில் பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு, பூங்காவிற்குப் போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தான்.

அவன் உட்கார்ந்த சில நொடிகளில் ஒரு டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். இந்த வியாபாரி மிகவும் சோகமாக இருப்பதைப் பார்த்துவிட்டு அவர் என்ன விஷயம் என்று கேட்டார். இவன் தன்னுடைய கஷ்டங்களையெல்லாம் சொல்லிவிட்டு, தான் தற்கொலை செய்யப் போவதைப் பற்றியும் அவரிடம் சொன்னான்.

அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சொன்னார். நான் இப்போது உனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு செக் தருகிறேன். அதை வைத்து உன் வியாபாரத்தை விருத்தி செய். சரியாக ஒரு வருஷம் கழித்து நாம் இதே இடத்தில் சந்திப்போம். உன் வியாபாரம் விருத்தியடைந்தால் இந்தப் பணத்தைத் திருப்பிக்கொடு. இல்லாவிட்டாலும் என்ன ஆயிற்று என்று விவாதிப்போம் என்றார். இவனும் சரியென்றான்.

அவர் தன் கோட்டுப் பாக்கெட்டில் இருந்து ஒரு செக் புக்கை எடுத்து ஒரு கோடி ரூபாய் என்று எழுதி கையெழுத்துப் போட்டு, இவனிடம் கொடுத்தார். இவனும் அவருக்கு பலவிதமாக நன்றி சொல்லி விட்டு அந்தச் செக்கை வாங்கிக்கொண்டான். அந்த விஷ மருந்தைத் தூக்கி எறிந்து விட்டு சந்தோஷமாக திரும்பிப் போனான்.

வீட்டிற்குப் போனதும் அந்த செக்கில் இருந்த கையெழுத்தைப் பார்த்தான். அனில் அம்பானி என்று இருந்தது. இவனும் சந்தோஷமாக அந்தச் செக்கை தன்னுடைய இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டுத் தூங்கினான். அடுத்த நாள் இவன் தன்னுடைய கடைக்குப் போய் வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தான்.

தன் வீட்டு இரும்புப் பெட்டியில் ஒரு கோடி ரூபாய்க்கான செக் இருப்பது அவனுக்கு மிகுந்த தைரியத்தைக் கொடுத்தது. வரவு செலவுகளைப் பார்த்து ஒழுங்கு செய்ய ஆரம்பித்தான். வராக் கடன்களை எல்லாம் வசூல் செய்தான். கொடுக்கவேண்டிய கடன்களை எல்லாம் கொடுத்தான். அந்தச் செக்கை இவன் பயன்படுத்தவேயில்லை. இவன் தைரியத்தைப் பார்த்து எல்லோரும் இவனிடம் வியாபார உறவுகளைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.

ஒரு வருடத்தில் இவன் பெரிய பணக்காரன் ஆகி விட்டான். அந்த நாளும் வந்தது. அதாவது இவனுக்கு செக் கிடைத்த நாள். அந்த செக்கை எடுத்துக்கொண்டு அதே பார்க்குக்குச் சென்றான்.  இவனுக்கு செக் கொடுத்த அனில் அம்பானியும் முன்னரே வந்து இவனுக்காகக் காத்திருந்தார். இவன் இவனுடைய வெற்றிக் கதையைச் சொல்லி விட்டு அந்தச்செக்கை மிகுந்த நன்றியுடன் அவரிடம் திருப்பிக்கொடுத்தான்.

அப்போது ஒரு நர்சும் இரண்டு தடி ஆட்களும் அங்கு வந்து இந்த செக் கொடுத்த ஆளைப் பிடித்துக் கொண்டார்கள். அப்போது இந்த வியாபாரி அவர்களிடம் கேட்டான். ஏன் இவரைப் பிடிக்கிறீர்கள்  என்றான். அப்போது அவர்கள் சொன்னார்கள், இந்த ஆள் பக்கத்தில் உள்ள எங்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து வந்து விட்டான். அவன் உங்களிடம் தான்தான் அனில் அம்பானி என்று சொல்லியிருப்பானே என்றார்கள்.

அப்போதுதான் வியாபாரிக்கு உண்மை புரிந்தது. பைத்தியக்காரன்  கொடுத்த செக்கையா நாம் இவ்வளவு நாள் வைத்திருந்தோம் என்று  அதிசயப்பட்டான். ஆனாலும் அந்தச் செக் நம்மை உயர்த்தியது அல்லவா. ஆகவே அந்தச் செக்கை விட, பணம் நம்மிடம் இருக்கிறது என்ற தைரியம்தான் நமக்கு முன்னேற்றத்தைக் கொடுத்தது என்று புரிந்து கொண்டான்.

இந்தக் கதை ஒரு ஆங்கிலக் கதையின் தழுவல் ஆகும். இருந்தாலும் கதையின் நீதி எல்லோருக்கும் புரியும்.

பின் குறிப்பு: அதனால்தான் நான் பணத்தைச் சேர்த்து பேங்கில் போட்டு வைத்திருக்கிறேன்.