ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

கோளாறு

கொங்கு நாட்டிலே கோளாறு என்கிற வார்த்தைக்கு அர்த்தம் – தகராறு, வம்பு, தவறு, நட்டு லூஸு, இப்படி பல அர்த்தங்கள் உண்டு. ‘ஏண்டா கோளாறு பண்றே?’ என்று சொன்னால் ‘ஏன் தகராறு பண்ணுகிறாய்?’ என்று அர்த்தம். ‘அவன் கொஞ்சம் கோளாறு பிடித்த ஆளப்பா’ என்றால் அவனுக்கு கொஞ்சம் மறை கழண்டு போய்விட்டது என்று புரிந்து கொள்ளவேண்டும். ஒரு காரியம் கோளாறாய் போய்விட்டது என்றால் அந்த காரியம் கெட்டு விட்டது என்று அர்த்தம்.

இப்படியிருக்கையில் எனக்கு ஆபீஸில் மதுரைக்கு மாற்றல் ஆகிவிட்டது. தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் கொண்டுபோய் செட்டில் ஆனேன். ஆபீஸ் குவார்ட்டர்சில் வீடு. அப்போது ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தேன். ஒரு நாள் அந்த ஸ்கூட்டரில் ஒரு கோளாறு.

ஒரு லீவு நாளன்று உள்ளூர் நண்பன் ஒருவனைக்கூட்டிக்கொண்டு ஒரு ஸ்கூட்டர் வொர்க்ஷாப்பிற்கு போனேன். அங்கு அந்த வொர்க் ஷாப் அதிபரிடம் விபரத்தை, அதாவது ஸ்கூட்டரில் ஏற்பட்டுள்ள கோளாறைச் சொன்னேன். அவர் உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்த வேளையாளைக் கூப்பிட்டு ‘டேய், ஐயா நம்ம கடைக்கு புதுசாய் வந்திருக்கிறார், அவர் வண்டியை கோளாறாய் செய்து முடிச்சிறு’ என்று கூறினார்.


இதைக்கேட்ட எனக்கு பகீரென்று ஆகிவிட்டது. ஏற்கனவே கோளாறு என்றுதானே இங்கே கொண்டு வந்திருக்கிறோம். இவர் என்னடாவென்றால் இதை இன்னும் கோளாறாக்க சொல்லுகிறாரே என்று கூட வந்த நண்பரை தனியாக கூட்டிக்கொண்டு போய் ‘இதென்னப்பா, ஏற்கனவே வண்டியில் கோளாறு என்றுதானே இங்கே கொண்டு வந்திருக்கோம், இந்த கடைக்காரர் இதை இன்னும் கோளாறு பண்ணச்சொல்கிறாரே? வேறு கடையைப் பார்க்கலாமா’ என்று கேட்டேன். அந்த நண்பன் பலமாக சிரித்தான்.

எனக்கு கோபம். நான் ஒரு சீரியஸ் மேட்டர் சொல்கிறேன், இவன் விளையாட்டாக சரிக்கிறானே என்று மனதில் நினைத்துக்கொண்டு ‘ஏன் சிரிக்கிறாய்’ என்று கேட்டேன்.
அவன் கடைக்காரரிடம் என்னைக்கூட்டிக்கொண்டு போய் ‘சார் இவருக்கு ஒரு சந்தேகம். அவர் வண்டியில் ஏதோ கோளாறு என்றுதான் இங்கு வந்தோம். வந்த இடத்தில் நீங்கள் வண்டியை இன்னும் கோளாறு செய்யச் சொல்கிறீர்களே’ என்று கூறினார்.

இதைச்சொன்னவுடன் இருவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் திருதிருவென முழித்தேன். பிறகு கடைக்காரர் நண்பரைப்பார்த்து ‘உங்கள் நண்பர் மதுரைக்கு புதுசா’ என்று கேட்ட்டார். அவரும் ‘ஆமாம்’ என்றார். கடைக்காரர் ‘அதனால்தான் இந்த சந்தேகம்’ என்று சொல்லிவிட்டு என்னைப்பார்த்து கூறினார் ‘சார், இந்த ஊர்லே கோளாறு என்றால் கெட்டிக்காரத்தனமாக அல்லது புத்திசாலித்தனமாக என்று அர்த்தம் சார், நீங்கள் கவலைப்படாமல் போய்ட்டு நாளைக்கு வாங்க, வண்டி ரெடியாய் இருக்கும்’ என்றார்.

மதுரையில் மேலும் சில வருடங்கள் இருந்தேன். இந்த ‘கோளாறு’ விஷயம் பழக்கமாகிவிட்டது. யாராவது ‘டேய், அந்த வேலையை கோளாறாய் முடித்துவிட்டு வா’ என்று சொன்னால் அதை சாதாரணமாய் எடுத்துக்கொள்வேன். பிறகு சொந்த ஊருக்கு வந்தவுடன் கோளாறை கோளாறாகப் பார்க்க பழக வேண்டியதாய் போய்விட்டது.

தொடரும்.....

1 கருத்து: