சனி, 7 ஜனவரி, 2012

சாலை விபத்துகள் ஏன் நடக்கின்றன?

அவைநாயகன் எனும் நா.சபாபதி, போக்குவரத்துத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி, சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க தன்னாலான முயற்சிகளை செய்து வருகிறார். அவர் தன்னுடைய பதிவில் சக பதிவர்களுக்காக ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். இப்போது நடக்கும் சாலைப் பாதுகாப்பு வாரம் முடிவடையும் நாளான 7-1-2012 அன்று, அனைத்துப் பதிவர்களும் சாலைப் பாlதுகாப்பு பற்றி ஒரு பதிவு இட்டால் சாலை விபத்துகள் குறையலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதை திரு. தருமி அவர்களும் தன்னுடைய பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார். அவைநாயகன் அவர்களின் ஆதங்கத்தைப் பாருங்கள்.

"என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்—உதவுவீர்களா?
அவைநாயகன் எனும் நா.சபாபதி"  


சாலை விபத்துகளைப் பற்றி 13, ஜூன், 2011 ல் நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்தப் பதிவு இன்றும் பொருத்தமாகவே இருப்பதால் அதை இன்று மீள்பதிவு செய்கிறேன்.



சமீப காலங்களில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு காரணமாக இருந்தாலும், பெரும்பாலான விபத்துக்களில் மனிதக் கவனக் குறைபாடே காரணமாக அமைகின்றன. நான் பல ஆண்டுகளாக இந்த விபத்துகளை கவனித்துக்கொண்டு வருகிறேன். பொதுவான சில காரணிகள் என் மனதிற்குத் தோன்றின. அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன்.

   1.   அவசரம்: நேரம் பொன்னானதுதான். ஆனால் உயிர் அதனினும் மேலானதல்லவா? இந்த உண்மையை அநேகர் புறக்கணிப்பதால் ஏற்படும் விபத்துகள்தான் அநேகம். சமீபத்தில் ஒரு மந்திரி இறந்தது இதனால்தான். சரியானபடி திட்டமிட்டு நிதானமாக பயணிக்கவேண்டும். சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்திற்கு சீக்கிரம் போக்கூடாது. சீக்கிரம் போகவேண்டுமென்று அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டும்போது பல தவறுகள் நிகழும். அதனால் நிச்சயமாக விபத்துகள் ஏற்படும்.

   2.   உடல் சோர்வு: உடலுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் அது ஒரு கட்டத்தில் நம் அனுமதி கேட்காமலேயே ஓய்வு எடுத்துக்கொள்ள முயலும். இது உடலின் இயற்கை. இயற்கை விதிகளை மீறுவதால் ஏற்படும் அனர்த்தங்களை வேறு பல சூழ்நிலைகளிலும் காண்கிறோம். வாகனம் ஓட்டும்போது இந்த நிலை ஏற்பட்டால் அது நிச்சயமாக விபத்தை உண்டாக்கும்.

ஆனால் பலர் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்துக் கொள்கிறார்கள். சொந்த சிலவில் சூன்யம் வைத்துக்கொள்பவர்களை என்ன செய்ய முடியும்?

   3.   தூக்கமின்மை: வழக்கமாக வாடகை வண்டி ஓட்டுபவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக தூக்கத்தை தியாகம் செய்கிறார்கள். அது உயிர்த் தியாகத்தில் முடியும் என்பதை உணருவதில்லை. எவ்வளவுதான் அனுபவம் உள்ள ஓட்டுநர்களானாலும் அவர்களின் உடம்பும் மற்றவர்களின் உடம்பு மாதிரிதானே ?
  
அறுபது கிலோமீட்டர் வேகத்தில் போகும் வாகனம் நிமிடத்திற்கு ஒரு கிலோமீட்டர் போகும், அதாவது ஒரு விநாடிக்கு 16.7 மீட்டர் அல்லது ஏறக்குறைய 50 அடி தூரம். ஓட்டுபவர் ஒரு விநாடி கண் மூடினால் வாகனம் 50 அடி சென்றுவிடும். அந்த 50 அடிக்குள் ஒரு பாலம் இருக்கலாம். அல்லது ஒரு வளைவு இருக்கலாம். அதைக் கவனிக்க முடியாததால் விபத்து ஏற்படலாம்.

   4.   தேவையற்ற ரிஸ்க்: ஒருவர் சென்னையில் வியாபாரியாக இருப்பார். சொந்த ஊரில் ஞாயிற்றுக்கிழமை அவருடைய சொந்தங்கள் ஒரு விசேஷம் வைத்திருந்தால், அவர் என்ன செய்வார் என்றால் – சனிக்கிழமை வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு ஒரு டாக்சியில் புறப்படுவார். அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை ஊருக்குப்போய் அந்த விசேஷத்தைப் பார்த்துவிட்டு, அன்று இரவே அங்கிருந்து புறப்பட்டு திங்கள் அதிகாலை சென்னை வந்து சேர்ந்து வழக்கம்போல் வியாபாரத்தைக் கவனிப்பதாகத் திட்டம்.

திட்டம் என்னமோ நல்ல திட்டம்தான். ஆனால் அந்த ஓட்டுநர், சனிக்கிழமை பகல் முழுவதும் வேலை செய்திருக்கக் கூடும். அவருடைய முதலாளி வரும் கிராக்கியை விட மனமில்லாமல் இந்த ஒட்டுநரையே அனுப்புவார். அவருக்கும் வேறு ஓட்டுநர் கைவசம் இருந்திருக்கமாட்டார். இந்த ஓட்டுநரும் கிடைக்கப்போகும் அதிக ஊதியத்திற்காக இந்த வேலையை ஒப்புக்கொள்வார்.

நிகழ்வதென்ன? விபத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதுதான்.

   5.   வாகனத்தின் தன்மையை அறியாதிருத்தல்: வாடகை வண்டிகள் ஓட்டும் ஓட்டுநர்கள் வழக்கமாக ஒரே வண்டியைத்தான் ஓட்டுவார்கள். அப்போதுதான் அவர்களுக்கு அந்த வண்டியின் நெளிவு சுளிவுகள் நன்றாகத் தெரிந்திருக்கும். சில சமயம் அவர்கள் வேறு வண்டிகளை ஓட்டவேண்டிவரும். அப்போது அவர்கள் மிகுந்த கவனத்துடன் அந்த வண்டியை ஓட்டவேண்டும். ஆனால் அதிக அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள் பழைய வண்டி ஞாபகத்திலேயே ஓட்டுவார்கள்.

இதுவும் விபத்துக்களை ஏற்படுத்தும்.

   6.   அதிக பயணிகள்: சொந்த வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் அனுபவத்தில் கண்டிருப்பார்கள். வாகனத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாகனம் ஓட்டும்போது மிகுந்த வித்தியாசம் தெரியும். வாகனத்தின் வேகம் மிகக் குறையும். திருப்பங்களில் வண்டி அதிகமாக சாயும். இந்த வித்தியாசங்களைக் கண்டுகொள்ளாமல் வாகனத்தை ஓட்டும்போது பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பயணிகள் மட்டுமல்ல. அதிக பாரம் ஏற்றினாலும் இதே நிலைதான்.

   7.   செல்போன்: விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் மிகக் குறுகிய காலத்தில் அதிகம் பேர் உபயோகப்படுத்தும் பொருள்களில் செல்போன்தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சரியாக உபயோகித்தால் மிகவும் பயன் தரக்கூடிய சாதனம். ஆனால் இதுவே, முறையற்ற பயன்பாட்டினால் பல அனர்த்தங்களை விளைவிக்கக் கூடியது.


எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும் செல்போன் அழைப்பு வந்தால் அந்த வேலையை விட்டுவிட்டு செல்போன் பேசுகிறார்கள். செல்போன் பேசிக்கொண்டே ரோட்டில் நடக்கிறார்கள். ரயில்வே லைனை கிராஸ் செய்கிறார்கள். கார், பஸ்ஸை ஓட்டுகிறார்கள். ஆங்காங்கே வைத்திருக்கும் போர்டுகளில் ‘’ செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள் ‘’ என்று விளம்பரம் வைத்திருக்கிறார்கள். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல்தான் எல்லோரும் நடந்துகொள்கிறார்கள். விபத்துகளை சம்பாதிக்கிறார்கள். எந்த சுவற்றில் முட்டிக்கொள்வது? 

   8.   ஆணவம் அல்லது Road Rage: நல்ல சாதுவான, பொறுமையான மனிதர்கள் கூட வாகனம் ஓட்டும்போது தங்கள் இயல்புக்கு மாறாக நடந்துகொள்கிறார்கள் என்று சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பின்னால் வரும் ஓட்டுநர் ஹார்ன் அடித்தாலோ அல்லது நம் வண்டியை நம் அனுமதியின்றி ஓவர்டேக் செய்தாலோ, பெரும்பாலான சமயங்களில் நம் ஆணவம் மேலோங்குகிறது. அப்போது நாம் நம் இயல்பை மறந்து பல தவறுகள் செய்கிறோம். இது விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.

   9.   சாலை விதிகளைக் கடைப்பிடியாமை: சாலை விதிகள் நமக்கு அல்ல, அடுத்தவர்களுக்குத்தான் என்கிற மனப்பான்மை பொதுவாக எல்லாரிடமும் இருக்கிறது. அல்லது அவை போலீஸ்காரர் இருக்கும்போது மட்டும்தான் அமலில் உள்ளவை என்று நினைக்கிறோம். மேலை நாடுகளில், நடு இரவில் கூட சிகப்பு விளக்குக்கு வண்டிகள் நின்றுதான் செல்லும் என்று கேள்விப்படுகிறோம். அவர்கள் மடையர்கள் என்று கூட சிலர் நினைக்கலாம்.

சாலை விதிகள் நம் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டவை என்ற எண்ணம் நம்மிடையே இல்லை. அது மட்டுமல்ல. எந்த விதிகளுமே நமக்குப் பொருந்தாது என்கிற மனப்பான்மையை இன்றைய அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதைப் படிப்பவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறினால் ஒரு உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு சேரும்.

11 கருத்துகள்:

  1. வணக்கம்! நீங்கள் சொன்ன எட்டு காரணங்களும் விளக்கமும் மனதில் பதியும்படி விளக்கமாக உள்ளன. மீள் பதிவு என்றாலும் இந்த வாரத்திற்கு பொருத்தமான பதிவு. நன்றி!

    பதிலளிநீக்கு
  2. "பெரும்பாலான விபத்துக்களில் மனிதக் கவனக் குறைபாடே காரணமாக அமைகின்றன" என்று மிகச்சரியாக எழுதியிருக்கிறீர்கள்.
    எல்லா காரணங்களையும் அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.
    ''இதைப் படிப்பவர்களில் யாராவது ஒருவராவது மனம் மாறினால் ஒரு உயிரைக் காப்பாற்றிய புண்ணியம் எனக்கு(ம்) சேரும்''

    பதிலளிநீக்கு
  3. எக்காலத்துக்கும் பொருந்தும் காரணங்களை அன்றே எழுதியுள்ளீர்கள். சாலையில் பயணிக்கிறோம் என்னும் நினைவு கூடவே இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. எட்டாவது மற்றும் ஒன்பதாவது கருத்துக்கள் இதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பெரிய வண்டி ஓட்டுபவர்கள் யாரும் சிறிய வண்டி ஓட்டுபவர்களையோ, பாதசாரிகளையோ ஒரு மனிதராகவே மதிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  5. இதுல சொன்ன ஒவ்வொரு காரணமும் யோசிக்கவேண்டியது தான் அதிலும் 8,9 முதல் இரெண்டு இடத்துல வந்திருந்தா ரொம்ப சந்தோஷம் . :-)

    அவசியமான பதிவு :-)

    பதிலளிநீக்கு
  6. I accept all the above things which create accidents.I woould like to express my heartiest thanks for sharing such things.
    I would like to add one more thing / activity of the driver which is EATING / DRINKING WATER during driving.
    A RAJENDRAN

    பதிலளிநீக்கு
  7. பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் எப்போதும் நம் மனதுக்குள் ஓடும் திமிர்த்தனமே முக்கிய காரணமாக ஓடுகிறது.

    செம egoists நாமெல்லோரும்!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்! எனது கருத்தினை பதியும் போது ஒன்பது காரணங்கள் என்பதற்கு பதிலாக எட்டு என்று தட்டச்சு செய்து விட்டேன்.

    //நீங்கள் சொன்ன எட்டு காரணங்களும் விளக்கமும்//

    தவறுக்கு வருந்துகிறேன்! மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  9. //தருமி said...
    பல காரணங்கள் சொல்லலாம். ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் எப்போதும் நம் மனதுக்குள் ஓடும் திமிர்த்தனமே முக்கிய காரணமாக ஓடுகிறது.

    செம egoists நாமெல்லோரும்!//

    சரியாகச் சொன்னீர்கள் தருமி, அவர்களே. நேற்று நடந்த விபத்தைப் பாருங்கள். கடலூரிலிருந்து சென்னை விமான நிலையம் சென்று தன் சகலையை அழைத்து வந்தவர், கன்டெய்னர் லாரியில் தன் காரை மோதியுள்ளார். விபத்துக்குள்ளான காரைப் பார்த்தால் அவர் அசுர வேகத்தில் ஓட்டுயிருக்கவேண்டும்.

    தவிர இரவெல்லாம் தூங்கியிருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். என்னைப்போல் கார் ஓட்டுபவர் யார் என்ற ஆணவம்தான் இந்த விபத்துக்குக் காரணம். விபத்து ஏற்படலாம் என்ற பயம் எப்போதும் மனதிற்குள் இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. //சீக்கிரம், சீக்கிரம் என்று அவசரப்பட்டு யமலோகத்திற்கு சீக்கிரம் போக்கூடாது.//நன்றாக சொன்னீர்கள் உண்மையும் கூட !

    பதிலளிநீக்கு
  11. மிகவும் உண்மையான கருத்துக்கள்!

    பதிலளிநீக்கு