புதன், 25 ஜனவரி, 2012

பொழுது எப்படி போகுதுங்க?


கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குப் போகும்போது சமீப காலங்களில் நான் படும் கஷ்டங்கள் பலவகையானவை. முதல் சங்கடம் நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர் அறிமுகமில்லாதவர்கள். இதில் ஒன்றும் தொந்தரவு இல்லை. நான் பாட்டுக்கு ஒரு ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு எதையாவது கற்பனையில் மூழ்கி இருப்பேன்.

இந்த நூற்றில் ஒருவர் தெரிந்தவர் இருக்கிறாரே அவரிடம் சிக்கிக் கொண்டால்தான் கஷ்டமே ஆரம்பிக்கும். கொஞ்ச நேரம் ஏதாவது பொதுப்படையாகப் பேசிக்கொண்டு இருந்த பிறகு அவர் இந்த பிரம்மாஸ்திரத்தை பிரயோகிப்பார். “பொழுது எப்படி போகுதுங்கஅப்படீன்னு கேப்பார்.

நானோ பணியிலிருந்து ஓய்வு பெற்றவன். ஒரு வேலையும் கிடையாது. வேலைக்குப் போவதென்றாலும் வயது ஆகிவிட்டது. என்னுடைய வயதுக்கு எங்கவது கம்பெனியில் காவல்காரன் வேலைதான் கொடுப்பார்கள். அந்த வேலைக்குப் போவதற்கு என் சுயமரியாதை இடம் கொடுக்காது. ஆகவே வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டுசும்மாஇருக்கிறேன்.

திடீரென்று நம்மைப் பார்த்துபொழுது எப்படிப் போகுதுங்கஎன்று கேட்டால் பதில் சொல்வது கொஞ்சம் கடினம்தான். நான் இதற்கு ஒரு பதில் வைத்திருக்கிறேன்.

காலைல 3 மணிக்கு எழுந்திருப்பனுங்க, பல வெளக்கி மூஞ்சி கழுவிட்டு, சமையல் ரூம்ப்ல போயி ஒரு காப்பி போட்டுக் குடிப்பனுங்க. அப்புறம் கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இன்டர்நெட்ல பிளாக் பார்ப்பனுங்க. அப்புறம் 6 மணிக்கு விடியுதுங்களா, எந்திருச்சு வாக்கிங்க் போவனுங்க, …… .” இந்த ஸ்டேஜ் வரப்பவே பல பேர் வேற கிராக்கிய பார்த்துட்டு ஓடிடுவாங்க.

சில சமயம் அவங்களையே பார்த்துபொழுது போகமாட்டேங்குது, என்ன பண்ணலாம், சொல்லுங்கஅப்படீன்னாப் போதும். பார்ட்டி ஓடிடும்.

அப்புறம் சிலர்பென்சன் எவ்வளவு வருதுஅப்படீம்பாங்க. ஏதோ நான் வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்படற மாதிரியும், இவர்கள் நமக்கு அனுதாபம் காட்டுகிற மாதிரியும் சீன் போடுவாங்க. உண்மையான பென்ஷனைச் சொன்னால் இவர்கள் ஒன்று நம்ப மாட்டார்கள் அல்லது நான் பொய் சொல்லுகிறேன் என்று நினைப்பார்கள். ஆகவே நான் யாரிடமும் என் உண்மையான பென்ஷன் தொகையைச் சொல்வது இல்லை.

அவர்களிடமே பதில் கேள்வி கேட்பேன். எவ்வளவு வரும்னு நெனைக்கிறீங்க அப்படீம்பேன். என் பென்ஷனில் நாலில் ஒரு பங்கு சொல்வார்கள். ஆமாங்க, ஏறக்குறைய அவ்வளவுதானுங்க வருது என்று சொல்லிவிட்டால் அப்புறம் வாயைத் தெறக்க மாட்டார்கள்.
இப்படியாகத்தானே என் ஓய்வு வாழ்க்கை ஒடிக்கொண்டு இருக்கிறது.


21 கருத்துகள்:

  1. நம்ம ஆளுங்களுக்கு பொதுவாவே இங்கிதம்ங்கறது சுத்தமா கிடையாது.. எதை தான் கேக்கனும்னு விவஸ்தையே இல்லை.. 'ஆமா ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க வேணும்னா ஒரு பத்தாயிரம் தாங்களேன் மாசா மாசம்'னா எங்க வெச்சுப்பாங்க மூஞ்சிய?

    பதிலளிநீக்கு
  2. பதிலைச் சொல்ல ஆரம்பிச்சாலே பார்ட்டி ஓட்டம் படிக்குதா? நல்லா மடக்குறீங்க. அப்புறம், உங்க பென்சன் எவ்வளவுன்னு சொல்லவேயில்லையே. ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
  3. தங்களின் அனுபவத்தை (தொல்லையை) அழகாக சொல்லி உள்ளீர்கள்! நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  4. ஒருவருடைய அந்தரங்க விஷயங்களைத் தெரிந்து கொள்ள நம்மவர் காட்டும் ஆர்வமே அலாதி. இப்படியெல்லாம் விசாரிப்பதுதான் அவர்களுக்கு நம் மேல் இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஐயா,
    தங்களின் வயசான காலத்தில் ஓய்வு வேளையை எப்படிக் கழிக்கிறீங்க என்பதனை கொஞ்சம் சலிப்புடன், கொஞ்சும் இனிமை சேர்த்து சொல்லியிருக்கிறீங்க.
    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  6. தாங்கள் பதிவெழுதி நேரத்தை பயனுள்ளதாக்குகிறீர்கள்....

    பதிலளிநீக்கு
  7. எப்படியோ சார் இந்த பதிவை படிச்சு எனக்கு பொழுது போச்சு. . . . . நன்றி ! பதிவுக்கு

    பதிலளிநீக்கு
  8. இப்படி ஒரு பதிவை பார்த்ததும் ..ஆஹா, இவர் எப்படியெல்லாம் பொழுதை பயனுடைய தாக கழிக்கலாம் நு நம்ம புத்திசாலி வாசகர்கள் அட்வைஸ்கமென்ட் கொடுப்பாங்களோன்னு பயந்தேன் . நல்ல வேளை, ரசிப்பதோடு விட்டார்கள்.

    --

    பதிலளிநீக்கு
  9. ம்ம்... எல்லோருக்கும் இந்தத் தொந்தரவுகள் இருக்கிறது. சிலர் இது போல “எனக்குக் கேட்க மட்டும் தான் தெரியும்” என்று கேள்விக்கணைகளாகத் தொடுத்து அடுத்தவர்களை அவதிக்கு உள்ளாக்குகின்றனர்....

    பதிலளிநீக்கு
  10. எப்படியோ அன்றைய பொழுதை ஓட்டி விடுவீர்கள்..நம்ம பொழப்பும் அப்படித்தான் இருக்குதுங்கோ..

    பதிலளிநீக்கு
  11. உலகமெ ஸ்பீடா ஒடி போகுது, என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது

    பதிலளிநீக்கு
  12. இந்த சம்பளம் எவ்வளவு, பென்ஷன் எவ்வளவு என்று கேட்காத ஆளே கிடையாது போல.

    பதிலளிநீக்கு
  13. சிந்திக்க வைத்த பதிவு.
    மிக விரைவிலே ஒய்வு பெறப் போகும் நான் இந்த பதிவின் மையக் கருவான " எப்படி பொழுது போகிறது ?" என்று பலரை கேட்டிருக்கிறேன்.
    அவர்கள் குறிப்பாக பொதுப்பணி ஆற்றவில்லை என்றால் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லாமல் கொஞ்சம் சலிப்படைவது உண்டு. ஆனால், அவர்களுக்கு நம்மால் ஆனா வரை பொதுப்பணி ஆற்றி நேரத்தை ஓரளவு நல்ல விதத்தில் செலவு செய்யலாமே என்று சுட்டிக் காடியிருக்கிறேன். நாம் என்ன கூவத்தை மணம் வீசச் செய்ய முடியுமா என்று கேட்போர் உண்டு.
    தொடர்ந்த உரையாடலில், ஒவ்வொரு நபரும் தன அளவுக்கு சிறு பணிகள் செய்ய இயலும்; உங்கள் வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கும் பெண்மணியின் குழந்தைகளுக்கு இலவசமாக் பாடம் கற்பிக்கலாமே? நீங்கள் மாநகராட்சியில் பணி செய்தவர் என்றால், வீட்டு வரி செலுத்துவது, சிறு கடை வைக்க எந்தவிதம் உரிமம் வாங்க வேண்டும் என்று சொல்லி உதவி செய்யலாமே, நாம் தான் வேலை செய்யும் காலங்களில் என்பது-தொண்ணூறு சதவீதம் தான் வேலை செய்துவிட்டு , இப்போது ஓய்வூதியம் பெறுகிறோமே; என்பது போன்று பாங்காக சொல்லி, அவர்களை சிந்திக்க வைத்து இருக்கிறேன்.
    ஒருவர் சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் என்னைக் காண வந்தார்; இப்போது நான்கு சிறுவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறேன்; அவர்களில் இரண்டு பேரின் கல்விச் செலவை முழுதுமாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்; இப்போது மனம் மிக நல்ல நிலையில் உள்ளது; இரத்த அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக உள்ளேன்; உங்கள் அறிவுரைக்கு நன்றி என்று சொல்லிச் சென்றார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க, நானும் நண்பர்களுக்கு என் உடல் நிலைக்கு ஏற்றவாறு என்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  14. //இப்படி ஒரு பதிவை பார்த்ததும் ..ஆஹா, இவர் எப்படியெல்லாம் பொழுதை பயனுடைய தாக கழிக்கலாம் நு நம்ம புத்திசாலி வாசகர்கள் அட்வைஸ்கமென்ட் கொடுப்பாங்களோன்னு பயந்தேன் . நல்ல வேளை, ரசிப்பதோடு விட்டார்கள்.//
    இந்த பின்னூட்டத்தை பின்னர் தான் பார்த்தேன். என் பின்னூட்டம் இந்தக் குறையைத் தீர்த்திருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. பென்சன் காலத்திலும் 3 மணிக்கு எழுந்துவிடுவீர்களா? அந்த நல்ல பழக்கம்லாம் நம்மகிட்ட இல்லைங்க.
    வாழ்த்துக்கள்.
    வயசானவங்களைப் பார்த்தாவது நாமளும் திருந்த முயற்சி பண்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஒண்ணும் பெரிய சாதனை எல்லாம் இல்லீங்க, வயசானா தூக்கம் வர்ரதில்லீங்க, அவ்வளவுதான்.

      நீக்கு