வெள்ளி, 15 ஜூன், 2012

மாறுவது காலமா, மனிதனா?


காலம் மாறிவிட்டது என்று நாம் அடிக்கடி அலுத்துக் கொள்கிறோம். இன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் பணத்தைத் தேடி பேயாய் அலைகிறார்கள். (பேயை நான் பார்த்ததில்லை. அது எப்படி அலையும் என்பதுவும் எனக்குத் தெரியாது. இருந்தாலும் உலக வாழ்க்கையில் இந்த வாசகத்தைப் பல முறை கேட்டிருக்கிறேன். அதனால் அதை உபயோகப்படுத்தினேன்.) அவர்களுக்கு மனித உறவுகளை பராமரிக்க நேரம் இல்லை.

சில ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கு மதிப்பு இருந்தது. உறவினர் வீட்டுக்குப் போனாலோ அல்லது நண்பர்கள் வீட்டுக்குப் போனாலோ, அவர்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். குசலம் விசாரித்தார்கள். இரு குடும்பத்தின் நல்லது கெட்டதுகளைப் பற்றி கலந்து பேசினார்கள். மன ஆறுதல் பெற்றார்கள். குடும்பத்தோடு போனால் இரட்டிப்புச் சந்தோஷம் அடைந்தார்கள்.

ஆனால் இன்றோ ஒருவர் வீட்டிற்குப் போவதென்றால், என்ன, எதற்கு, என்று கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சும்மா, இந்தப்பக்கம் வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன், என்று ஒருவர் வீட்டிற்குப் போக முடியாது. முன்னாலேயே சொல்லவேண்டும். அவர்கள் சரி என்று சொல்ல வேண்டும். ஏதாவது வாங்கிக்கொண்டு போகவேண்டும். குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போவது குற்றம். அதே போல் அவர்கள் வீட்டுக் குழந்தைகளையும் கொஞ்சுவது மகாக் குற்றம். குழந்தைகள் கெட்டுப் போய் விடுவார்களாம்.

அப்புறம் பரஸ்பரம் நீங்க நலமா, நான் நலம், இதற்கு மேல் விசாரித்தால் அது அநாகரிகம். காப்பி அதுவாக வந்தால் குடிக்கலாம். காப்பி குடிக்கிறீர்களா என்று கேட்டால், இப்போதுதான் குடித்தேன் என்று சொல்லவேண்டும். சரி குடிக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் சரியான காட்டுமிராண்டி என்று எடை போடுவார்கள். நீங்கள் போன வீட்டுக்காரர்கள் உங்களை விட வசதியானவர்கள் என்றால் நீங்கள் வாங்கிப்போன ஸ்வீட் அல்லது பழங்கள் அவர்கள் வீட்டு வேலைக்காரிக்குப் போவது உறுதி.

பத்து நிமிடத்திற்கு மேல் தங்கினீர்கள் என்றால் வீட்டுக்காரர்கள் முள் மேல் உட்கார்ந்திருப்பது போல் தவிப்பார்கள். இந்தப் பத்து நிமிடத்திலேயே அவருக்கு நான்கு போன் கால்கள் வந்திருக்கும். பத்து நிமிடத்தில் நீங்கள் இடத்தைக் காலி செய்யவில்லையானால், கடைசி போன் கால் பேசி முடித்தவுடன், பாருங்கள், ஒரு அர்ஜென்ட் வேலை, போன் வந்து விட்டது, நான் போக வேண்டும், இன்னொரு நாளைக்கு சாவகாசமாக வாங்களேன் என்று உங்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அனுப்பி வைப்பார்கள். ஏண்டா இவர்கள் வீட்டுக்குப் போனோம் என்று ஆகிவிடும்.

ஸ்வீட், பழம் செலவு 200ரூ, போகவர பஸ்ஸோ, ஆட்டோவோ, அதற்கு ஒரு 200, இப்படி 400, 500 ரூபாய் செலவு செய்து மனச் சஞ்சலத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டுக்காரியின் அர்ச்சனையை வேறு சகித்துக்கொள்ளவேண்டும்.

ஆகக்கூடி, காலம் மாறியிருக்கிறதா? அல்லது மனிதர்கள் மாறியிருக்கிறார்களா? யோசியுங்கள்.

24 கருத்துகள்:

  1. //காலம் மாறிவிட்டது என்று நாம் அடிக்கடி அலுத்துக் கொள்கிறோம். இன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் பணத்தைத் தேடி பேயாய் அலைகிறார்கள். //

    எல்லா காலத்திலும் மனிதன் பணத்துக்காகவும், காமத்திற்காகவும் அலையவே செய்தான், நாடு பிடித்தல் என்பது ஏன் என்று கேட்டுக் கொள்ளுங்கள்.

    //சில ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கு மதிப்பு இருந்தது. உறவினர் வீட்டுக்குப் போனாலோ அல்லது நண்பர்கள் வீட்டுக்குப் போனாலோ, அவர்கள் சந்தோஷத்துடன் வரவேற்றார்கள். குசலம் விசாரித்தார்கள். //

    முன்பு பொருளீட்டல் பெரும் சவாலாக இல்லை, தற்பொழுது குருவி மாதிரி சேர்த்தால் தான் ஒரு குடிசை போட முடியும், இந்த சூழலில் விருந்தாளிகளுக்கான உபசரிப்பு அல்லது கவனிப்பு தேவையற்ற நேர விரயம் பண விரயம் என்று நினைப்பதாலும், இன்றைய குடும்பங்கள் மூவர் (பெற்றோருடன் சேர்த்து) அல்லது நால்வர் என்ற அளவில் தங்களுடைய மகிழ்ச்சிக்கான எல்லை குடும்பம் மட்டுமே என்று நினைக்கிறார்கள், முன்பு பெரிய குடும்பங்களுக்கு உறவுகளும் ஆலமரமாக விரிந்திருந்தது, அதனால் உறவுகளைக் கண்டுவருவது கட்டாயம் என்ற அளவில் இருந்தது, இல்லை என்றால் கோவித்துக் கொள்வார்கள், இந்த காலத்தில் மாமன்காரனுக்கு பொண்ணு கொடுப்பது சரி தான் என்பீர்களா ? அதற்கு வாய்ப்புகளும் இல்லை. மாமனுக்குக்கும் மாமனோட அக்கா பொண்ணுக்கும் வயது வேறுபாடு 20க்கு மேல் இருக்குமே.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வது உண்மை ஆனால் இன்னும் பல உறவுகள் உண்மையுடனும் அன்புடனும் இருக்கிறார்கள் எனப்தும் கண்கூடு

    பதிலளிநீக்கு
  3. //அப்புறம் பரஸ்பரம் நீங்க நலமா, நான் நலம், இதற்கு மேல் விசாரித்தால் அது அநாகரிகம். காப்பி அதுவாக வந்தால் குடிக்கலாம். காப்பி குடிக்கிறீர்களா என்று கேட்டால், இப்போதுதான் குடித்தேன் என்று சொல்லவேண்டும்.//

    உணவுக்கட்டுப்பாடு பற்றி ஓரளவு விழிப்புணர்வு தற்காலத்தில் இருப்பதும் ஒரு காரணம், கொடுக்கிறாங்களேன்னு குடிப்போம் என்கிற மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளார்கள், ஒருவருக்கு சர்கரை இருக்கிறதா இல்லையான்னு அக்கரையாக கேட்காமல் ஒண்ணறைவண்டி சர்கரைப் போட்டு காப்பியக் கொண்டு வந்து நீட்டினால் தான் அன்பு இருக்கிறது என்று பொருளா ?

    கொஞ்சம் மாற்றி யோசிங்க ஐயா

    :)

    பதிலளிநீக்கு
  4. //பத்து நிமிடத்திற்கு மேல் தங்கினீர்கள் என்றால் வீட்டுக்காரர்கள் முள் மேல் உட்கார்ந்திருப்பது போல் தவிப்பார்கள்.//

    புருசன் பொண்டாட்டி இரண்டு பேருமே வேலை செய்யும் வீட்டின் நிலை இது தான், இதை ஒப்புக் கொள்ளும் மனநிலை வேண்டும், இரண்டுபேருக்குமே ஓய்வு கிடைப்பது வீட்டில் இருக்கும் போது தான், அப்போதும் வருகிறவர்களுக்கு பணிவிடை செய்வதற்கு அலுத்துக் கொள்ளமாட்டார்கள், ஆனால் எப்படா இவங்க கிளம்புவாங்கனு இருக்கும். சனி / ஞாயிறு எதாவது நாளில் சமைக்க வேண்டாமே வெளியே சாப்பிட்டு ஓய்வெடுப்போம் என்கிற திட்டம் இருக்கும் போது திடுதிப்பன ஒருவர் வந்து காலைமுதல் மாலைவரை அறுத்தால் கையப் பிசையாமல் என்ன செய்வது ?
    :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயமாக பல சூழ்நிலைகள் இருக்கின்றன. மாறுதல் தவிர்க்கமுடியாதது. அவைகளில் மனித உறவும் ஒன்று. அதற்கு நம்மை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். நிறைய குழந்தைகளுக்கு நெருங்கிய உறவுகள் கூட பரிச்சியமில்லாமல் போகிறது.

      காலத்திற்கேற்ப மனிதர்களின் நடைமுறையும் மாறுகிறது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. நிதர்சன உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்தான். என்னைப்போன்ற பெரிசுகளுக்கு இந்த மாற்றம் மன வேதனையாக இருக்கிறது. அதைத்தான் நான் இங்கு கொட்டினேன்.

      நீக்கு
  5. //ஸ்வீட், பழம் செலவு 200ரூ, போகவர பஸ்ஸோ, ஆட்டோவோ, அதற்கு ஒரு 200, இப்படி 400, 500 ரூபாய் செலவு செய்து மனச் சஞ்சலத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டுக்காரியின் அர்ச்சனையை வேறு சகித்துக்கொள்ளவேண்டும்.//

    இப்பெல்லாம் யார் இனிப்புகளை விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை, என்னைக் கேட்டால் ஒருவரை அவரது வீட்டுக்குச் சென்று சந்திப்பதைவிட வெளியே எங்கேயாவது 'கெதரிங்க்' என்ற பெயரில் அழைத்து சந்தித்து மகிழ்வதே நன்று.
    :)

    உஜாலாவுக்கு மாறனும்.

    அந்தகாலத்தில் மாமியாருக்கு அடங்கிய மருமகள் உண்டு, உங்க காலத்திலேயே அந்த காட்சி மாறிவிட்டது, தற்பொழுது மாமியார் வீட்டுக்கு சென்றுவருவதே கூட பிரச்சனைகள் என்ற அளவில் தானே உள்ளது, எல்லாம் வாழ்கைப் பரிணாமம், ஒப்புக்கொள்ள முடியாவிட்டாலும், புரிந்து கொள்ள வேண்டும்.
    :)

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அருமையான பதிவு ஐயா ! நீங்களாவது செலவு செய்து போய் பார்க்கவாவது செய்தீர்கள் ... இங்கு கனடாவில் எனது உறவினர்கள், நண்பர்கள் பலரைப் பார்ப்பதே கடினம் .. தொலைப்பேசியில் அழைத்து வரவா என முன்பதிவு செய்ய வேண்டும் .. ஏனெனில் எப்போது அங்கு போனாலும் அவர்கள் வீடு பூட்டியே கிடக்கும் ... !!! கேட்டால் நேரம் இல்லை என்பதே பதிலாக வரும் ... !

    மனிதர்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள் என்பது தான் உண்மை !

    பதிலளிநீக்கு
  7. எல்லாத்தையும் கோவியாரே கொட்டி விட்டார்!

    பதிலளிநீக்கு
  8. இன்றைய நிலையை தெளிவாக உரைத்தீர் காலம் மாறவில்லை! கால
    வேகத்தில் மனிதன் தான் மாறிவிட்டான்

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  9. || ஆகக்கூடி, காலம் மாறியிருக்கிறதா? அல்லது மனிதர்கள் மாறியிருக்கிறார்களா? யோசியுங்கள்.||

    இரண்டும் இல்லை;மாறியிருக்கும் காலம் மனிதர்களை மாற்றியிருக்கிறது என்பது தான் உண்மை :)

    வார்த்தை சாலத்திற்காக இதைச் சொல்ல வில்லை.

    கண்ணன் சொன்னது போல் பணம் சம்பாதிப்பது ஒன்றே வாழ்வின் குறிக்கோளாகவும் உயிர்வாழ்வதன் குறிக்கோளாகவும் நான் நினைக்கத் தொடங்கி விட்டோம்.

    அந்தக் காரியத்திற்கு இடையூறாக வரும் எதையும் வெறுப்பு மேலிடத்தான் பார்க்கிறோம்,அது பெற்றோராக இருந்தாலும் !

    இந்நிலையில் உறவுகளையும் நட்பையும் எச்சமாக மதிப்பதும் தொந்தரவாக நினைப்பதும் இயல்பாக மாறியிருக்கிறது..

    இங்கிதம் அறிந்து நடந்து கொள்ளுதல் எக்காலத்திலும் இருக்கத்தான் இருக்கிறது.அக்காலத்தில் கோடிட்டுக் காட்டுவார்கள்;இப்போது பட்டவர்த்தனமாகச் சொல்லி விடுகிறார்கள்..

    கோடிட்டுக் காட்டி விளங்க வைக்குமளவுக்கு கால அவகாசம் இருப்பதில்லை. :))

    பதிலளிநீக்கு
  10. இதைப் படிக்கும் போது 'ஏண்டா உயிரோட இருக்கோம்'னு தோணுது !

    'ஒரு பய புள்ள வீட்டுக்கும் போகக்கூடாது இனிமேல்'னும் தோணுது !!

    பதிலளிநீக்கு
  11. எல்லோரும் அப்படியா ? முகம் பார்க்கும் கண்ணாடி நம் முகத்தை தான் காட்டும் .நம் வீட்டை தேடி வருவோரிடம் நாம் அன்பாக நடந்தால் அவர்களும் நம்மிடம் அன்பாக நடப்பார்கள்.இதனால் கூறவருவது .புரிந்ததா ஐயா .வருவோரிடம் நாம் அன்பாக நடந்தால் அவர்களும் நம்மிடம் அன்பாக நடப்பார்கள்.இதனால் கூறவருவது .புரிந்ததா ஐயா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இக்கரைக்கு அக்கரை பச்சைதான். இருபுறமும் ஒரே கதைதான்.

      நீக்கு
  12. விருந்தினரின் பார்வையில் மட்டும் சொல்லீருக்கீங்க. வீட்டினரின் பார்வையிலும் யோசித்திருக்கலாம். இக்காலத்தில் ஆஃபீஸ் வேலை என்பது 9-5 ஆக இல்லை. பள்ளிகளும் மாணவர்களைப் பிழிந்தெடுக்கின்றன. வீட்டில் இருப்பவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அமர்ந்து உண்பதே அரிதாகிவரும் இக்காலச்சூழ்நிலையில் யாரையும் பழித்துப் பயனில்லை. அழைத்தால் மட்டுமே விருந்தினர்களாகப் போவதே இருதரப்புக்கும் நல்லது.

    பதிலளிநீக்கு
  13. //குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போவது குற்றம். அதே போல் அவர்கள் வீட்டுக் குழந்தைகளையும் கொஞ்சுவது மகாக் குற்றம்.//

    //நீங்க நலமா, நான் நலம், இதற்கு மேல் விசாரித்தால் அது அநாகரிகம்//

    இதெல்லாம் நம் உறவு/நட்பின் நெருக்கத்தைப் பொறுத்து நாம் செய்யவேண்டும். நாமே அதிக உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    //உங்களை விட வசதியானவர்கள் என்றால் நீங்கள் வாங்கிப்போன ஸ்வீட் அல்லது பழங்கள் அவர்கள் வீட்டு வேலைக்காரிக்குப் போவது உறுதி//
    நீங்களாக எப்படி முடிவு செய்கிறீர்கள்? பார்த்தீர்களா? வேலைக்காரி சொன்னாளா? கொஞ்சம் டூ மச்சாக இருக்குதே!! :-)))))

    //பத்து நிமிடத்திலேயே அவருக்கு நான்கு போன் கால்கள் வந்திருக்கும்.//
    வரத்தானே செய்தது? அவர் யாருக்கும் செய்யவில்லையே? அவர்மீது தப்பில்லையே?

    விருந்தினராகப் போய்விட்டு ஃபோன்கால் பற்றி அலுத்துக் கொள்கிறீர்களே!! என் வீட்டுக்காரரிடம் மாலை வீட்டிலிருக்கும்போதும் நான் ஏதாவது பேச வேண்டும் என்றால் அவரின் ஃபோன்கால்களுக்கு நடுவில்தான் பேச வேண்டும். எல்லாம் ஆஃபிஸிலிருந்து வரும் ஃபோன்கால்கள்!! என்ன செய்யமுடியும்? வேலையை விடவா முடியும் இந்த ரிஸஷன் காலத்தில்? அப்படியாக உழைப்பு பிழிந்தெடுக்கப்படும் காலம் இது. ஒருவகையில் உங்கள் காலத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், நிம்மதியான வேலையும் வாழ்வும் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
  14. என் அனுபவத்திலிருந்து பார்த்தவைகளை எழுதியிருக்கிறேன். எல்லோரும் இப்படித்தான் என்று கருத வேண்டியதில்லை. விதி விலக்குகள் நிறைய இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  15. பணத்திற்கு இருக்கும் மதிப்பு மனிதனுக்கு இல்லாததால் வந்த வினை இது.!

    பதிலளிநீக்கு
  16. ஐயா! இது என்னமோ வாங்கிக்கட்டிக்கிட்டு எழுதினமாதிரி இருக்கு??? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "வாங்கிக்கட்டிக்கிட்டு" அப்படி சொல்லப்படாது, நிலவன்பன். சொந்த அனுபவம்னு சொல்லோணுமுங்க. நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கில்ல?! :)

      நீக்கு