திங்கள், 4 மே, 2009

தேர்தலும் சாதாரண பிரஜையும்

2009 பாராளுமன்ற தேர்தல்களின் கடைசி கட்ட வாக்குப் பதிவுகள் தங்கத்தமிழ் நாட்டில் வருகின்ற 13ந்தேதி நடைபெறப்போகின்றது. பாண்டிச்சேரியையும் சேர்த்து மொத்தம் 40 தொகுதிகள். எனக்கு அவ்வளவாக அரசியலில் ஈடுபாடு இல்லை. எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாளனும் இல்லை. ஆனால் சுற்றிலும் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டு வருகிறேன்.
நான் கொஞ்சம் படித்திருக்கிறேன் (அதாவது Ph.D. விவசாயம்). இந்த அரசியல்வாதிகளுக்கு படித்தவர்களைக் கண்டால் பிடிப்பதில்லை என்பது என் எண்ணம். காரணம் இந்த படித்தவன் பேசிப்பேசியே காரியத்தைக் கெடுத்து விடுவான். அடுத்தவன் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளமாட்டான். காசு வேண்டுமென்று கேட்க மாட்டான். காசு கொடுத்தாலும் வாங்கமாட்டான். அவன் யாருக்கு ஓட்டு போடுவான் என்று கணிக்க முடியாது. இப்படிப்பட்டவனை வைத்துக்கொண்டு எப்படி அரசியல் பண்ண முடியும்?
அரசியல்வாதிக்கு வேண்டியது, கேள்வி கேட்காமல் அவன் கொடுக்கும் காசை வாங்கிக்கொண்டு, அவன் போடும் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு அவன் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடவேண்டும். அவ்வளவுதான். கூட்டங்கள் போட்டால் பேட்டா வாங்கிக்கொண்டு லாரியில் ஏறிக் கொண்டு போய் கோஷம் போட வேண்டியது. இல்லாவிட்டால் எதிர்க்கட்சி கூட்டத்தில் போய் கலாட்டா செய்து கூட்டத்தைக் கலைப்பது.
இந்தக்காரியங்கள் எதிலும் இந்த படித்த முட்டாள் இருக்கிறானே, அவன் உபயோகப்படமாட்டான். பிறகு அவனை வைத்துக்கொண்டு என்ன அரசியல் செய்து உருப்படியாவது? அது மட்டுமா! தேவையில்லாத (அதாவது அரசுயல்வாதிக்கு தேவையில்லாத) கேள்விகளைக்கேட்டு மக்களை குழப்புவான். ஒரு வேட்பாளர் சொல்கிறார்; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் மும்மாரி பொழிய வைப்போம், தபிழ்நாட்டின் ஆறுகளில் பாலாய் ஓடும், எல்லோருக்கும் சாப்பாடு அவரவர் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும், யாரும் வேலைக்கு சென்று கஷ்டப்பட வேண்டியதில்லை. இப்படி எல்லாவேட்பாளர்களும் தங்களுக்கு முடிந்தவரை எல்லோர் காதிலும் பூ சுற்றுகிறார்கள். இதைக்கேட்கும் இந்நாட்டு குடிமகன்கள் (?) ஆகா, இவரல்லவோ நம்மை வாழவைக்க வந்த தெய்வம் என்று முடிவு செய்து கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.
இந்த படித்தவன் என்ன செய்வான். அரசியல்வாதி கூறுவதில் சொத்தை சொள்ளை கண்டு பிடித்து, மேலும் புள்ளி விவரங்கள் சேகரித்து, இந்த வேட்பாளர் சொல்வது போல் செய்யமுடியாது என்று பேசுவான். ஆனால் நம் நாட்டு குடிமக்கள் விவரமானவர்கள். இந்த படித்த முட்டாள்கள் பேச்சைக்கேடகக்கூடாது, அவர்கள் தாங்களும் பிழைக்க மாட்டார்கள், அடுத்தவனையும் பிழைக்க விடமாட்டார்கள் என்று முடிவு செய்து யார் அதிக பணம் கொடுக்கிறார்களோ அந்தக்கட்சிக்கு ஓட்டுப்போடுவார்கள்.
எனக்குத்தெரிந்து 1968 லிருந்து இப்படித்தான் நடைமுறை. நடப்பவை நடந்தே தீரும்.
தொடரும்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக