சனி, 26 ஜூன், 2010

பொது மன்னிப்பு கேட்கிறேன்

 

சக பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி. தெரியாத்தனமா ஒர் விஷப்பரீட்சையில் இறங்கி தோற்றுவிட்டேன். நம் பதிவை அதிகம் யார் படிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் ஆரம்பித்த விஷப்பரீட்சை, விபரீதமாகப் போயிற்று. நான் தோற்றுப் போய்விட்டேன். ஆனால் தோற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய பதிவுகளை இவ்வளவு பேர் பார்க்கிறார்கள் என்னும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

அனைவருக்கும் நன்றி. நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி,

மொக்கைப் பதிவிற்கு முன்னூறு கும்மிகள்

(டிஸ்கி: இந்தப்பதிவு முற்றிலும் கம்பெனியினுடைய சொந்த தனிப்பட்ட முன்னேற்றத்துக்காகவே. யாரும் இது தங்களைக் குறிக்கிறது என்று கருதினால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.)


ரொம்ப நாளாக ஒரு தகாத ஆசை. வயசுக்குத் தகுந்த ஆசைதான் வரணும். ஆனா யாருக்கு என்ன கெட்ட காலமோ தெரியல, இந்த மாதிரி ஒரு ஆசை வந்துடுச்சு. வயசான பிறகு எந்த ஆசை வந்தாலும் அதை உடனே தீத்துக்கணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதனால உடனே செயல்ல இறங்கிட்டேனுங்க.
 நம்ம பதிவுக்கு, ஏதோ வயசான பெரியவரு எழுதறாரேன்னு ஒரு பத்து பேர் கமென்ட் போடறாங்க. அதுவும் எப்படி? சின்னக்குழந்தைக்கு முட்டாயி கொடுக்கறாப்ல, நல்லாயிருக்கு, எழுதறத உட்டுடாதீங்க, இன்னும் எழுதுங்க, இப்படி. ஏதோ நான் எழுதறதுனாலதான் சூரியன் தினமும் கிழக்கே உதிச்சு மேற்கே அஸ்தமனமாகிறது போல ஒரு பில்டப் கொடுத்துடுவாங்க. நானும் இதுலயே கிறுகிறுத்துப்போயி எழுதிக் கிளிச்சு நூறு பதிவு போட்டுட்டேன். ஆனா மனசுக்குள்ள ஒரு ஆசை ரொம்ப நாளா இருந்துட்டிருக்குது. அதுதான் எப்படியாச்சும் ஒரு மொக்கைப்பதிவு போட்டு முன்னூறு பின்னூட்டம் வாங்கீடறதுன்னு முடிவோட இந்தப்பதிவை போடுகிறேன்.

யாரும் தயவு செய்து என் மேல் பொறாமையோ, கோபமோ அல்லது வருத்தமோ பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன்.


ஞாயிறு, 20 ஜூன், 2010

நூறாவது மொக்கை




ஒரு நாள் நான் கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்து பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வாசலில் திடீரென்று சப்தம்.

மாமோய் மாமோய், இங்க வாங்க, இந்த மூட்டைய ஒரு கை புடிங்க

என்னமோ ஏதோன்னு போய்ப் பார்த்தா ஊரிலிருந்து என் மச்சினன் ஆட்டோவிலிருந்து இறங்கி ஒரு மூட்டைய இறக்கிக்கொண்டு இருக்கிறான். மூட்டைய இறக்கிட்டு பார்த்தா மச்சினனையையும் காணோம். மூட்டையையும் காணோம். உள்ள இருந்து சத்தம் மட்டும் கேக்குது. “மாமோவ், அந்த ஆட்டோக்காரனுக்கு வாடகையை கொடுத்து அனுப்பிச்சுட்டு வாங்கஅப்படீன்னு. காலங்காத்தால வம்பு என்னத்துக்குன்னு வாடகையைக் கொடுத்து ஆட்டோவை அனுப்பிச்சுட்டு வந்தா, அக்காளும் தம்பியும் குசுகுன்னு என்னமோ பேசீட்டு இருந்தாங்க. என்னப்பாத்ததும் பேச்ச நிறுத்தீட்டாங்க.

நான்: என்ன மாப்பிள்ள, திடீர்னு இந்தப்பக்கம் வந்திருக்கிறீங்க, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா” 


(அப்படீன்னு கேட்டுட்டு திருப்பியும் கம்ப்யூட்டர் முன்னால வந்து உக்கார்ந்தேன். மச்சின்னும் வந்து பக்கத்துல அடக்க ஒடுக்கமா நின்னான். அவன் நிக்கிரதப்பாத்தவுடனே ஏதோ வில்லங்கம் வரப்போகுதுன்னு நெனச்சேன். மேல படீங்க)

மச்சினன்: மாமோவ் என்ன பண்ணீட்டிருக்கீங்க?

நான்:  மாப்பிள்ள இதுதான் கம்ப்யூட்டரு. அதுல நானு அப்பிடியே ஏதாச்சும் பண்ணீட்டிருப்பேன்.

மச்சினன்: என்ன பண்றீங்க, எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன், நானும் தெரிஞ்சுக்கறேன்.

நான்: மாப்பிள்ள, இதுல இன்டர்நெட்டுனு ஒண்ணு இருக்கு, அதுல இல்லாத வசயமே ஒலகத்துல இல்ல, அத த்தான் நான் பாத்துட்டிருக்கேன்.

மச்சினன்: ஆமாங்க, மாமா, அதுதான் பேப்பர்லயே எல்லா நியூசும் வருதே, அப்பறம் இதுல எச்சா என்ன பாப்பீங்க.

நான்: அட மட மாப்பிள்ள, இதில வலைப்பதிவுன்னு ஒண்ணு இருக்கு. அதுல போய் பாத்தா நெறய விசயத்தைப்பத்தி நெறயப்பேரு விதவிதமா எழுதியிருப்பாங்க, அதயெல்லாம் படிச்சா நெறய விசயம் தெரிஞ்சிக்கலாம் மாப்பிள்ள.

மச்சினன்: அப்படீங்களா மாமா, நீங்களும் எதாச்சும் எழுதறீங்களா மாமா

நான்: ஆமாம் மாப்பிள்ள, நானும் மூணு வலைத்தளம் வச்சிருக்கேன்.

அதுங்கள்ல எழுதினா ஏதாச்சும் பணங்காசு வருமுங்களா.

நான்: பணமெல்லாம் ஒண்ணும் வராதுடா மாப்பிள்ள

மச்சினன்: அப்பறம் எதுக்கு விடிய விடிய இதுல உக்காந்து கண்ணைக் கெடுத்துக்கிறீங்க.


நான்: உங்க அக்கா சொல்லிக் குடுத்துட்டாளாக்கும். நாலு பேரு படிச்சுட்டு நல்லா எழுதீருக்கீங்கன்னு சொன்னா சும்மா தலை குளுகுளுன்னு ஆகுதில்ல, அதுக்குத்தான் மாப்பிள்ள எழுதறது.

மச்சினன்: இப்படி எழுதறவங்கள எல்லாம் எங்கயாச்சும் நேர்ல பாத்துப்பீங்களா

நான்: சில பேரு பாத்துப் பேசீக்குவாங்க. நானு யாரையும் பாத்ததில்லே.

மச்சினன்: அப்படிப் பாக்கறப்போ என்ன பேசீப்பாங்க மாமா

நான்: பொதுவா அவங்க எல்லாம் பெரிய ஓட்டல்லதான் சந்திப்பாங்க. அப்படியே எதாச்சும் வாங்கி குடிச்சுட்டே மூணு நாலு மணி நேரம் பொது சமாசாரங்களப் பேசீட்டிருப்பாங்க.

அத்தன நேரம் என்ன குடிப்பாங்க மாமா

நான்: பீரு, பிராந்தின்னு என்னென்னமோ வாங்கி குடிப்பாங்க.

மச்சினன்: ஏன் மாமா, நீங்களும் அப்படி எங்காச்சும் ஓட்டலுக்கு போவீங்களா?

நான்: பாத்தியா மாப்பிளே, ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, இப்ப என்னையே கடிக்க வந்துட்ட பார்த்தியா? இதுக்குத்தான் மடப்பசங்க கூட எல்லாம் பேசப்படாதூங்கறது.

மச்சினன்: மாமா, மாமா இப்படிக் கோவிச்சுக்கிறீங்களே, நான் சும்மா தமாசுக்கு கேட்டனுங்க மாமா. அது போகட்டும் மாமா. அதென்னமோ பதிவருங்க ஒண்ணுக்கொண்ணு சண்டை போட்டுக்குவாங்கன்னு அக்காகிட்ட சொன்னீங்களாமே, அது எதுக்கு மாமா இதுல சண்டையெல்லாம் கூட வருமா.

நான்: அதுடா மாப்பிள்ள, டாஸ்மாக்ல நம்மூரு ஆளுங்க குடிச்சுப்போட்டு வரப்போ அதயும் இதயும் பேசி, சண்டை போட்டுவாங்க இல்லியா, அந்த மாதிரி இவுங்களும் ஒவ்வொரு நாளைக்கு சண்டை போட்டுக்குவாங்க. இப்படித்தான் பாரு, ஒரு நாளு ரண்டு பேரு பெரிய ஓட்டல்ல குடிச்சுப்புட்டு வரப்போ ஒருத்தரு இன்னொருத்தரு மூக்கை ஒடச்சுப்புட்டாரு. ஆஸ்பத்திரிக்கெல்லாம் போகவேண்டி ஆயிடுச்சு.

மச்சினன்: மாமா, நீங்க எங்காச்சும் போயி இந்த மாதிரி வில்லங்கத்துல மாட்டிக்காதீங்க மாமா, அப்பறம் ஊர்ல என்ற மானம் மரியாதியெல்லாம் கப்பல்ல ஏறீடும் மாமா.

நான்: அட மடப்பயலே, நானு அப்படியெல்லாம் போகமாட்டேண்டா.

மச்சினன்: அது சரீங்க மாமா, அக்கா சொல்றமாதிரி, இந்தக்கருமத்துக்கு ஒரேயடியா தல முளுகிட்டு வேற வேல பாக்கலாமில்லீங்களா மாமா, ஏன் இந்தக் களுதையப் புடிச்சுட்டு அளுகிறீங்க.

நான்: அப்படி இல்ல, மாப்பிள்ள, இப்ப நானு இத உட்டுட்டுப் போறேன்னு வச்சுக்கோ, அப்பறம் நாலு பேருபயந்தாங்குள்ளிஅப்படீம்பாங்க. அதுவுமில்லாமெ ரிடைர்டு ஆன பொறகு பொளுது போறதுக்கு வேற என்ன பண்ணறது? நாலு பேரு அடிச்சுக்கற பாத்தா அப்படியே பொளுது நல்லா போயிருதில்ல.

மச்சினன்: அப்படீங்களா மாமா, எதுக்கும் அக்கா மனசு நோகறாப்பல எதையும் செஞ்சுடாதீங்க. வயசான காலத்துல அக்கா கண்ணுல தண்ணி வரப்படாதுங்க.

நான்: அதெல்லாம் ஒங்க அக்காளை பூப்போஙதான் வச்சுட்டிருக்கனப்பா, நீ எதுக்கும் கவலைப்படாத.

மச்சினன்: சரீங்க மாமா, ஊர்ல வேலைகளையெல்லாம் அப்படியப்படியே போட்டுட்டு ஓடியாந்தனுங்க. நானு ஒடனே ஊருக்குப் போகோணுங்க, போயிட்டு அப்பறமா ஒரு நளைக்கு சாவகாசமா வரணுங்க.

நான்: சரிப்பா, போயிட்டு வா. ஒங்கம்மா கிட்ட சொல்லு, மாமா நல்லாத்தான் இருக்கறாரு, அக்காதான் சும்மா மனசப்போட்டு அலட்டீக்குது அப்படீன்னு, சரியா.