நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 ஜூலை, 2015

நான் ஒரு பக்காத் திருடன்.

                                              Image result for thief

நண்பர் திரு நடனசபாபதி அவர்கள் அவருடைய வகுப்புத் தோழர் ஒருவருக்கு ஏற்பட்ட தொல்லைகளைப் பற்றி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தார்.

என் வகுப்புத்தோழர் ஒருவர் வேளாண் விரிவாக்க அலுவலராக பணி ஆற்றியபோது, ஆண்டு இறுதிக்குள் நிலக்கடலை விதைகளை வாங்க அனுமதிக்கப்பட்ட தொகையை அவர் செலவழிக்கவேண்டும் என்று அவரது மாவட்ட வேளாண் அலுவலர்
கட்டாயப்படுத்தியிருக்கிறார். விதை கிடைக்காத நிலையில் ஒரு விவசாயி ஒரு மாதம் கழித்து அறுவடை செய்து தருவதாக சொன்னதின் பேரில் அவரிடம் வாங்கியதுபோல் கணக்கு காட்டி அதை இருப்பில் ஏற்றிக்கொண்டு அவரது பெயருக்கு காசோலை வழங்கவும் செய்துவிட்டார். பின்பு அந்த விவசாயி சொன்னபடி விதைக்கடலையை கொடுக்க மறுத்ததும் அதற்கான பணமான ரூபாய் 4000 த்தை இவர் கட்டவேண்டியதாகிவிட்டது. அப்போது (1966-67) அவருக்கு மாத சம்பளமே ரூபாய் 303 தான்.
நீங்கள் சென்ற பதிவுக்கான பின்னூட்டத்தில் சொன்னதுபோல் அதிர்ஷ்டமும் துணை புரிய வேண்டும். 

இதில் அந்த வேளாண் அலுவலருக்குப் போதிய அனுபவம் இல்லாததினால் இந்த மாதிரி சிக்கலில் சிக்கிக்கொண்டார். அவர் இந்த நடவடிக்கையை எப்படிச் செய்யவேண்டும் என்று அவருடைய மேலதிகாரியிடமே ஆலோசனை கேட்டிருக்கவேண்டும். அல்லது அந்த ஆபீசில் இருக்கும் ஆபீஸ் தலைமை கிளார்க்கிடம் கேட்டிருக்கலாம். அல்லது ஒரு மூத்த சக பணியாளரிடம் ஆலோசனை செய்திருக்கலாம். எப்படியோ தவறு நேர்ந்து விட்டது.

அலுவலக நடவடிக்கைகளின் விதி முறைகளை அவர் நன்கு அறிந்து வைக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்திருக்குமென்றால், அந்த விவசாயி, அரசு விவசாய இலாக்காவின் நடைமுறைகளை நன்கு அறிந்தவராக இருந்திருப்பார். அந்த வேளாண் அலுவலர்களின் உதவி அலுவலர்களே செக் வந்த விஷயத்தை அவரிடம் கூறியிருப்பார்கள். அந்த விவசாயியை அலுவலகத்திற்கு வந்து செக்கை வாங்கிக் கொள்ளுமாறு தூண்டியிருக்கலாம்.

அந்த விவசாயி ஆபீஸ் நடைமுறைகளை நன்கு அறிந்தவராதலால் இந்த மாதிரி செக் வந்த பிறகு அதை உரியவர்களிடம் கொடுக்காமல் தள்ளிப்போடுவது விதி முறைகளுக்கு எதிரானது என்று அறிந்து வைத்திருப்பார். அவர் விவசாய அலுவரிடம் வந்து பவ்யமாக செக் வந்து விட்டதாமே, அதைக் கொடுத்தால் என்னுடைய அறுவடைக் கூலி கொடுப்பதற்கு வசதியாயிருக்கும். அறுவடை முடிந்ததும் நான் கடலையை சப்ளை செய்து விடுகிறேன் என்று சொல்லியிருப்பார், இந்த விவசாய அலுவலர் மறுத்திருந்தால் அந்த விவசாயி இவரை மிரட்டியிருக்கலாம்.

எப்படி மிரட்டியிருப்பார் என்றால், உங்கள் ஆபீஸ் ரெக்கார்டுகள் பிரகாரம் நான் கடலை சப்ளை செய்து பில் கொடுத்ததாக பதிவு செய்திருக்கிறீர்கள். அந்தப் பில்லுக்கான செக் இப்போது உங்கள் மேல் ஆபீசிலிருந்து வந்திருக்கிறது. அதை நீங்கள் எனக்கு இப்போது கொடுக்காவிட்டால் நான் அந்தச் செக்கைக் கொடுப்பதற்காக லஞ்சம் கேட்கிறார் என்று உங்கள் பேரில் உங்கள் பெரிய அதிகாரிக்கும் உங்கள் மந்திரிக்கும் பெட்டிஷன் எழுதுவேன். உங்கள் வேலை போய்விடும் என்று மிரட்டியிருப்பார். இவர் பயந்து போய் செக்கைக் கொடுத்திருப்பார்.

அந்த விவசாயி மலை முழுங்கி மகாதேவனாக இருந்திருப்பான். இவரை நன்றாக ஏமாற்றி விட்டான். இந்த மாதிரி சிக்கலில் இருந்து சூதானமாகத் தப்பிக்க நீங்களும் ஒரு திருடனாக இருக்கவேண்டும். அதாவது திருடர்களின் குணங்களை நன்கு அறிந்திருக்கவேண்டும். இந்த வேளாண் அலுவலர் என்ன செய்திருக்கவேண்டுமென்றால்-

1. கடலை சப்ளை செய்த பில் அந்த விவசாயியிடம் இருந்து வாங்கும்போதே இன்னொரு கடிதத்தில் இந்த பில்லில் குறிப்பிட்டுள்ள கடலையை நான் இன்னும் சப்ளை செய்யவில்லை. அறுவடை முடிந்ததும் கடலையை சப்ளை செய்து விட்டு செக்கை வாங்கிக்கொள்கிறேன் என்று எழுதி அவரிடம் கையெழுத்து வாங்கி, இரண்டு சாட்சிகளிடமும் கையெழுத்து வாங்கி வைத்திருந்திருக்கவேண்டும்.

2. இவருடைய மேலதிகாரிதான் செக் போட அதிகாரம் பெற்றவராயிருப்பார். அவரிடம் , சார் இந்த பில்லுக்கு செக் போட்டு இங்கேயே வைத்திருங்கள். நான் அந்த விவசாயி கடலையை சப்ளை செய்த பிறகு வந்து வாங்கிக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்கவேண்டும். பில் பாசாகி செக் போட்ட விவரம் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கவேண்டும்.

அப்படி அந்த விவசாயி கடலையைக் கொடுக்காவிடில் அவரிடம் வாங்கிய கடிதத்தை வைத்து நடந்தவைகளை விவரமாக எழுதி மேலதிகாரிக்குத் தெரிவித்து விட்டால் வேலை முடிந்தது. அரசுக்கு எந்தப் பணமும் நட்டமாகவில்லை. நடைமுறைகளில் ஒரு தவறு ஏற்பட்டுவிட்டது. ஒரு எச்சரிக்கை கடிதம் வரும் அவ்வளவுதான்.

இந்த குயுக்தி எல்லாம் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ஒருவரும் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் என்னுடைய அதிர்ஷ்டம் நான் முதல் முதலாகச் சேர்ந்த ஆபீசில் என் மேல் அதிகாரியே சில திருட்டுகளைச் சொல்லிக்கொடுத்தார்.

சென்னை மாநகராட்சியில் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் மஸ்டர் ரோல் ஊழல் என்று ஒன்று பிரபலமாகப் பேசப்பட்டது அநேகருக்கு நினைவிருக்கலாம். தினக்கூலி வாங்கும் ஆட்களுக்கு ஒரு பட்டியல் உண்டு. அதற்கு மஸ்டர் ரோல் என்று பெயர். சென்னை மாநகராட்சியில் தினமும் எப்படியும் இருநூறு முன்னூறு ஆட்கள் தேவைப்படும். அப்படி முன்னூறு ஆட்களை எடுக்கும்போது கூட இருபத்தைந்து ஆட்களை எடுத்ததாக கணக்குக் காட்டினால் யாரும் கண்டு பிடிக்க முடியாது.

இதை கூட்டாக எல்லோரும் சேர்ந்து செய்து, வெளியில் தெரிந்து பிரபலமாகப் பேசப்பட்டது. அப்போது நான் நினைத்துக் கொள்வேன். நான் பார்க்காத மஸ்டர் ரோலா, நான் செய்யாத ஊழலா என்று நினைத்துக் கொள்வேன். நான் பொள்ளாச்சியில் பண்ணை மேலாளராக இருந்தபோது தினம் எப்படியும் இருபது முப்பது பேரை வேலைக்கு எடுப்போம். கூட நாலைந்து பேரைச் சேர்த்தால் யாரும் கண்டுபிடிக்க முடியாது.

இப்படி நானே, கைசுத்தம் என்று இன்றைக்குப் பீற்றிக்கொள்ளும் நானே, செய்திருக்கிறேன். ஆனால் அது எனக்காகச் செய்ததில்லை. என்னுடைய மேலதிகாரியே சொல்லி நான் செய்து அந்தப் பணத்தை அவரிடம் கொடுத்திருக்கிறேன். அதிலிருந்து ஒரு பைசா கூட நான் எடுத்ததில்லை. அங்குதான் நான் இந்த மஸ்டர் ஊழலைக் கற்றுத் தேர்ந்தேன்.

பிறகு முதுகலைப் பட்டம் பெற்று கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்டில் சேர்ந்த பிறகு பல ஊழல்களைப் பார்த்திருக்கிறேன். பிறகு நான் பதவி உயர்வு பெற்று ஸ்டோர்ஸ் ஆபீசர் என்ற பதவியில் இருந்திருக்கிறேன். பொருட்கள் வாங்குவதில் எப்படி எப்படி திருட்டுத்தனம் செய்வார்க்ள என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

ஒரு முறை எங்கள்  துணைவேந்தரே என்னைக் கூப்பிட்டு கெமிஸ்ட்ரி லேபில் கெமிகல்ஸ் வாங்காமலேயே பில் மட்டும் வாங்கி பாஸ் பண்ணமுடியுமா என்று கேட்டார். மற்றவர்களாயிருந்தால் அவருக்குப் பயந்து கொண்டு அப்படியெல்லாம் செய்ய முடியாது சார், என்று கூறியிருப்பார்கள். நான் உண்மையைக் கூற என்றும் பயந்ததில்லை. செய்யலாம் சார். கெமிகல்ஸ் வாங்காமலேயே வாங்கியதாக கணக்குக் காட்டி அந்த கெமிகல்ஸை கொஞ்சம் கொஞ்சமாக உபயோகப் படுத்தியதாகக் கணக்கு காட்டினால் யாராலும் கண்டு பிடிக்க முடியாது. இது அந்தந்த அலுவலகர்களின் நாணயத்தைப் பொறுத்தது என்று சொன்னேன். அவர் இதைக் கேட்டுக் கொண்டாரே தவிர எந்த அபிப்பிராயமும் கூறவில்லை.

அன்று நான் நினைத்திருந்தால் ஒரு பக்காத் திருடனாக இருந்திருக்கலாம். ஆனால் அப்படி இருந்திருந்தால் இன்று, அதாவது ஓய்வு பெற்று 20 ஆண்டுகள் கழித்தும் உடல் நலத்தோடும் மனநலத்தோடும் இருந்திருக்க முடியாது. படுக்கையில் படுத்தால் நான் செய்த திருட்டுகள்தான் கண்முன் வரும், தூக்கம் வராது. இப்போது படுக்கையில் படுத்தால் இரண்டு நிமிடத்தில் தூங்கி விடுகிறேன்.

திங்கள், 30 ஜனவரி, 2012

ஒரு கற்பனை நிகழ்வு (நிஜம்)



சமீபத்தில் ஒரு நாள் என் மச்சினன் வந்திருந்தான். அவன் வரும்போது நான் கணினியில் மும்முரமாக இன்டர்நெட்டில் பிளாக் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் வந்ததைக் கூட கவனிக்கவில்லை. அவனாக என்னைக் கூப்பிட்டபோதுதான் அவன் வந்திருப்பது தெரிய வந்தது. பிறகு நடந்ததைப் பாருங்கள்.

மச்சினன்: என்னங்க மாமா, நான் வந்ததக் கூடப் பாக்காமெ என்ன பண்ணிட்டிருக்கீங்க?

மாமா: வா மாப்ளே, கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பார்த்திட்டிருக்கேன்.

மச்சினன்: இன்டர்நெட்னா அது என்னங்க மாமா?

மாமா: டேய், அதெல்லாம் சொன்னா உனக்குப் புரியாதுடா.

மச்சினன்: உங்களுக்குச் சொல்லத் தெரியல்ல, அத மறைக்கறதுக்கு இந்த சமாதானம் சொல்றீங்க.

மாமா: டேய், அது தெரியாமயா கம்ப்யூட்டர் வாங்கி வச்சிருக்கிறேன்.

மச்சினன்: அப்போ எனக்கு இன்டர்நெட்டுன்னா என்னன்னு சொல்லுங்க.

மாமா: அது ஒரு பிரபஞ்சம் மாதிரி. ஆரம்பம் எது, முடிவு எதுன்னே தெரியாது. சுரங்கத்தை வெட்டினா எப்படி போய்ட்டே இருக்குமோ அந்த மாதிரி இதுலயும் போய்ட்டே இருக்கும். சில சமயம் உள்ளே போய்ட்டு வெளில வரமுடியாமயும் போயிடும்.

மச்சினன்: அதுல நீங்க என்ன பண்ணறீங்க.

மாமா: நானா, அதுல பிளாக் எழுதறேன்.

மச்சினன்: அதென்னங்க பிளாக்கு, அப்படீன்னா என்னங்க மாமா?

மாமா: அது வந்து இன்டர்நெட் ஒரு பெரிய உலகம்னு சொன்னனில்லயா? அதுல ஒரு ஊர்ல ஒருத்தன் பெரிய சுவர் கட்டி உட்டுருக்கான். யார் வேணும்னா போயி அந்த செவுத்தில அவங்கவுங்களுக்கு தோண்றத எழுதி வச்சுக்கலாம். அதுதான் பிளாக்கு.

மச்சினன்: ஏன் மாமா அப்ப அந்த செவுத்த கட்டி வச்சிருக்கிறவன் ஏதாச்சும் வாடகை கேக்கமாட்டானா?

மாமா: இப்பத்திக்கு சும்மாதான் கொடுத்திருக்கான். பின்னாடி எப்பவாச்சும் காசு கேட்டாலும் கேப்பான். அப்படி காசு கேட்டான்னா, இப்ப பிளாக் எழுதிட்டு இருக்கறவென்லாம் துணியக் காணோம், துண்டக் காணோம்னு ஓடிப்போயிடுவாங்க.

மச்சினன்: இப்படி பிளாக் எழுதறீங்களே, அதனால என்ன வருதுங்க மாமா?

மாமா: ஒரு சிங்கிள் டீக்குக் கூட வக்கில்லே மாப்பளே.

மச்சினன்: அப்பறம் எதுக்கு இந்த கசமாலத்தைக் கட்டீட்டு அளுகிறீங்க, மாமா?

மாமா: அதுல பாரு மாப்ள, இந்த பிளாக் எழுதறது சீட்டாட்டம் மாதிரி. காசு வருதோ இல்லையோ, காலைல எந்திருச்ச ஒடனே கம்ப்யூட்டரத் தொறந்து பிளாக்கப் பாக்கலீன்னா பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிப் போகுது மாப்ள.  

மச்சினன்: அக்கோவ், மாமாவுக்கு பயித்தியம் நல்லா முத்திப்போச்சு, அதுக்கு மந்திரிக்கோணும் அக்கா, எங்கூர்ல ஒரு நல்ல மந்திரவாதி இருக்கான் அக்கா, நான் இப்பவே போயி அவன கூட்டிட்டு வந்து ஒரு மண்டலம் மந்திரிச்சாதான் மாமா வழிக்கு வருவாரு அக்கா.

அக்கா: என்னமாச்சும் பண்ணி உங்க மாமாவை இந்தப் பயித்தத்திலிருந்து காப்பாத்திடறா தம்பி.

மச்சினன்: இப்பவே ஊருக்குப் போறேன் அக்கா.

முற்றிற்று

புதன், 29 டிசம்பர், 2010

ஈரோட்டுக்காரரின் கோவை ஆக்கிரமிப்பு

ஈரோட்டுக்காரரான அருண் என்னும் வால் பையன் கோவைக்கு வந்து செய்திருக்கும் ஆக்கிரமைப்பைப் பார்க்கவும்.







மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டியைப்பார்க்கவும்.
http://valpaiyan.blogspot.com/2010/12/blog-post.html







ஞாயிறு, 3 அக்டோபர், 2010

உங்களுக்குப் பைத்தியம்தான் புடிச்சிருக்கு !





இன்று காலையில் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் யாரு, யாருக்காக இந்த அறிவிப்பை ஒலிபரப்புகிறார்கள் என்று சுற்று முற்றும் பார்த்தேன். என் மனைவிதான் நின்றுகொண்டிருந்தார்கள். (எதுக்கும் கொஞ்சம் மரியாதையாகவே இருப்போம் - எதிரணியின் உத்தி என்னவென்று தெரியவில்லையே).
என்ன, யாருக்கு இந்த அர்ச்சனை என்று கேட்டேன்.
எல்லாம் உங்களுக்குத்தான், என்றார்கள்.
ஏன், என்ன ஆச்சு, எனக்கு எதுக்காக இப்போ இந்தப் பட்டம்?
ஆமா, நானும் அரை மணி நேரமா டிபன் சாப்பிடக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன், உங்க காதிலேயே விழல்ல, அந்தக் கம்ப்யூட்டர்ல அப்படி என்ன இருக்கு, அதயே எப்பப் பார்த்தாலும் பயித்தியம் மாதிரி பார்த்துட்டே இருக்கீங்க, அதனாலதான் அந்தப் பட்டம் என்றார்கள்.
பதில் பேசாமல் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து ஒரு சுய பரிசோதனை செய்தேன்.
பயித்தியம், கிறுக்கு, பிராந்து, மென்டல், கீழ்ப்பாக்கம், லூஸு என்று பல சொற்களால் அழைக்கப்படும் ஒரு மனிதனுடைய (இது, அது என்றுதான் குறிப்பிடப்படுவதால் அந்த மனிதன் அஃறிணை லெவலுக்கு தள்ளப்படுகிறான்) குணங்கள் என்னென்ன என்று ஒரு ஆராய்ச்சி செய்தேன். {என்ன இருந்தாலும் நான் ஒரு ஆராய்ச்சியாளனல்லவா}. அந்த ஆராய்ச்சியில் கண்டு பிடித்தவை.
1. பைத்தியம் எப்போதும் ஒரு வேலையையே திரும்பத் திரும்ப செய்யும்.

ஆமாம், நானும் எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டரையே நோண்டிக் கொண்டிருக்கிறேன்.

2. பைத்தியம், ஏதாவது ஒன்றையே முறைத்துப்பார்த்துக்கொண்டே இருக்கும்.
ஆமாம், நானும் எப்பொழுதும் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
3. பைத்தியத்திற்கு சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையே இருக்காது.

ஆமாம், என்ன நடந்தாலும், யார் வந்தாலோ, போனாலோ எனக்குத் தெரிவதில்லை.

4. பசி, தாகம் என்ற உணர்வுகள் இருக்காது.
ஆமாம், சாப்பிடவேண்டும் என்றே தோணுவதில்லை.
5. யாராவது கூப்பிட்டால் காது கேட்காது.
கரெக்ட், கூப்பிட்டா காது கேட்பதில்லை.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் நான் ஒரு பைத்தியம்தான் என்ற முடிவுக்கு வந்தேன். மனைவியைக் கூப்பிட்டு, ஆமாம், நீ சொன்னது சரிதான் போல இருக்குது என்றேன்.
எது சரியாய் இருக்கு என்றாள்.
அதுதான், நீ சொன்னது போல் எனக்குப் பைத்தியம்தான் போல இருக்கு என்றேன்.
சரிதான், இப்பத்தான் உங்களுக்கு பைத்தியம் முத்திக்கொண்டு வருகிறது என்றாள்.
இனி மேற்கொண்டு இவளிடம் பேசினால் வம்பு வந்துவிடும் என்று பேசாமல் இருந்தேன்.
என் மகள் வந்தவுடன் (அவள் ஒரு கைனகாலஜிஸ்ட்) யாராவது ஒரு பைத்தியக்கார டாக்டர் பக்கத்துல இருக்காங்களா என்று விசாரித்தேன்.
அப்படி பைத்தியக்கார டாக்டர் யாரும் கிடையாது, பைத்தியத்துக்கு வைத்தியம் பண்ற டாக்டர்தான் இருக்கிறாரு, சரி, யாருக்கு இப்போ பைத்தியம் என்று கேட்டாள்.
எனக்குத்தான் என்றேன்.
யாரு சொன்னா என்றாள்.
உங்கம்மாதான் சொன்னாள், எனக்குப் பைத்தியம் என்று, அப்படீன்னேன்.
பைத்தியம் யாரும் தனக்குப் பைத்தியம்னு சொல்லமாட்டாங்களே, இது என்ன புது குழப்பம் என்று அவங்கம்மாவைக் கூப்பிட்டு விசாரித்தாள்.
விசாரணை முடிவில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்னவென்றால் நான் இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்தான் கம்ப்யூட்டர் பார்க்கலாம். அதற்கு மேல் பார்த்தால் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்படும்.
இந்த தீர்ப்புக்கு அப்பீல் செய்ய முடியுமா?
ஆகவே, என் பெருமதிப்பிற்குரிய பதிவுலக நண்பர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் :-
1. இனி என் பதிவுகள் வாரத்துக்கு ஒன்றுதான் வரும்.
2. அப்படி வரும் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு எதிர்வினை போடுவது தாமதமாகும்.
3. அப்படிப்பின்னூட்டம் போட்டவர்களின் பதிவுகளுக்குப் போய் அந்தப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது இன்னும் தாமதமாகும்.
4. அது போக புதிதாக மற்றவர் பதிவுகளுக்குப் போய் அந்தப் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் போடுவது மேலும் தாமதமாகும்.
என்னுடைய கைகளுக்கு மீறி சுற்றுப்புற சுழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட்டதால் நிலைமைகள் சீராகும் வரை இந்த நிலையே தொடரும் என்பதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன். எல்லோரும் வழக்கம்போல் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
என்னுடைய இந்த முடிவுகளினால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
(டிஸ்கி: நீண்ட நேரம் உட்கார்ந்தால் பின்புறத்தில் வலி வருகிறது. கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்ப்பதால் கண்களில் பார்வை மங்குகிறது. இவைதான் உண்மையான காரணங்கள். பதிவுகள் தொடரும்.)

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

எனக்கு ஒரு உண்மை புரியலீங்க.

 
இந்த தகவல் எல்லோருக்கும் சென்றடைய ஓட்டு போடுங்க

 
 இந்த வார்த்தைகளை பதிவர்கள் எல்லோரும் பல பதிவுகளில் பார்த்திருப்பார்கள். இந்த வார்த்தைகளில் இருந்து நான் புரிந்து கோண்டது என்னவென்றால் :-

அவர்களுடைய எழுத்துக்கள் மிகவும் பொருளும், மதிப்பும் மிக்கவை. அவை நிறையப் பேருக்குப் போய்ச் சேர்ந்தால் அந்த மக்கள் அதைப் படித்து ஜன்ம சாபல்யம் அடையட்டும் என்பதுதான் அவர்கள்  அவா. அதனால்தான் அந்த எழுத்துக்கள் பல பேரைச் சென்றடையட்டும் என்று நம்மை பல திரட்டிகளில் ஓட்டுப்போடச் சொல்லுகிறார்கள்.

நான் புரிந்துகொண்டது சரி என்று நினைக்கிறேன். அப்படியானால் அந்தப்பதிவை காப்பி பேஸ்ட் செய்கிறவர்களும் அதே வேலையைத்தானே செய்கிறார்கள். ஏன் அப்போது மட்டும் எல்லோரும் லபோ திபோ என்று அடித்துக்கொள்கிறார்கள். அந்த எழுத்துக்களை நீங்கள் பிறக்கும்போதே கொண்டு வந்தீர்களா, இல்லையே. நீங்களும் அந்தக் கருத்துக்களை எங்கிருந்தோ எடுத்துக்கொண்டவர்கள்தானே? நீங்கள் எங்கிருந்தோ எடுத்ததை, உங்களிடமிருந்து ஒருவர் எடுக்கிறார், அவ்வளவுதானே.