திங்கள், 15 ஆகஸ்ட், 2011

கல்யாணத்துக்கு உப்பு, ஜவுளி வாங்குதல்



அந்தக்காலத்திலயும், இப்பவும் கிராமங்கள்ல நிச்சியம்னு சொல்றது இல்லீங்கோ, “நல்ல வார்த்தெ பேசப்போறோம் னுதான் சொல்லுவாங்க, 
கல்யாண நிச்சியம் முடிஞ்ச பொறவுதான்மத்த எல்லா வேலைகளையும் பாப்பாங்க. தாராபுரத்தான்கேட்டாரு. நிச்சியத்தண்ணிக்கே மங்கிலியம் செய்யறதுக்குபொன் உருக்குவாங்களே, அதப்பத்தி ஒண்ணும் சொலல்லியே,அப்படீன்னு கேட்டிருக்காரு. அது மாதிரியே அன்னிக்கே வெறகுவெட்டறதுக்கும் போவாங்களேன்னும் கேட்டிருக்காருங்ககவுண்டருங்களுக்குள்ளயே ஊரு ஊருக்கு பளக்கவளக்கங்களெல்லாம் வித்தியாசப்படுமுங்க. எங்க ஊருமொறைமகளெல்லாம் தாராபுரத்துக்கு மாறுபாடா இருக்குமுங்க.தாராபுரத்துல கவுண்டருங்கள்லெயே ரெண்டு வகை உண்டுங்க,ஒண்ணு நெலம் நீச்செல்லாம் வச்சிட்டிருக்கிறவுங்க.அவங்களயெல்லாம் எசமானரு அப்படீன்னுதான்சொல்லோணுமுங்க. அப்பறம் நிலம் கிலம் இல்லாமெ கூலிவேலைக்குப்போறவங்களெ குடியானவங்க அப்படீன்னுசொல்லுவாங்க. எசமானருங்க எல்லாம் இன்னிக்குமளைமாரியில்லாம படற பாடு அவங்களுக்குத்தான் தெரியும்.அவியகிட்ட படி வாங்கிப் பொளச்சவனெல்லாம் இன்னிக்குவெளியூரு போயி சம்பாதிச்சு, காரு பங்களான்னு ரொம்பசௌகரியமா இருக்கறாங்க. இந்த எசமானருங்கஊரவிட்டுப்போக முடியாமெ அல்லாடிட்டு இருக்காங்க.

ரொம்ப வருசத்துக்கு முன்னாலயெல்லாம் ரொம்பவசதியானவங்கதான் தங்கத்தாலி, தங்கக்கொடியோடபோட்டுட்டு இருப்பாங்க. வசதி கொறஞ்சவங்க கல்யாணத்துக்குஅந்த ஊர்ல இருக்கற பெரியவங்க தாலிய எரவல்வாங்கித்தான் கல்யாணம் பண்ணுவாங்களாம். அப்றமா அந்ததாலிய திருப்பிக்கொடுத்துடுவாங்க. ( இங்கிலாந்துலகல்யாணப்பொண்ணுங்க கல்யாண டிரஸ்ஸை இரவல்வாங்கிப்போடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம், அதுமாதிரி, நம்மூர்ல தாலி இரவல் வாங்கறது அந்தக்காலத்துலபழக்கம் இருந்திருக்கிறது)
அந்தக்காலத்துல அவங்கவங்க ஊட்லதான் எல்லா கல்யாணவிசேசங்களும் நடக்குமுங்க. இப்ப மாதிரி கல்யாணமண்டபத்துல ரெண்டு ஊட்டுக்காரங்களும் சேந்து எல்லாசீர்களையும் ஒண்ணாச்செய்யறது இல்லீங்க.
உப்பு,ஜவுளி வாங்கறதுக்குன்னு நிச்சியத்தன்னிக்கே ஒரு நல்ல நாளு பாத்திருப்பாங்க. உப்பு, ஜவுளி வாங்கப்போறதுக்கும் ஒரம்பர கூப்டோணுமுங்க. முக்கியமான பங்காளிங்க,தாயாதிங்க, மாமன், மச்சான்னு இதுக்கும் ஒரு அம்பது பேரச்சேத்தீடுவாங்க. ரெண்டு ஊட்லயும் சேந்து ஒரு நூறு பேரு ஆகிடுமுங்க. கோயமுத்தூரு ராஜவீதீல இந்தக்கடைக்கு வந்துருங்கன்னு அளைப்பு குடுக்கறப்பவே சொல்லிப்போடுவாங்க.
அதுக்கு முன்னால உப்பு வாங்கோணுமுங்க. அதுக்குன்னு கோயமுத்தூர் பெரிய மார்க்கெட்ல மாமூல் கடை இருக்குங்க.ரெண்டு ஊட்லயும் சேர்ந்து ஒரு பத்திருவது பேரு அந்தக்கடைக்குப்போவாங்க. ரெண்டு ஊட்டுக்காரங்களும் உப்பு வாங்கறதுக்குன்னு ஒரு அளவான தூத்துக்கூடை கொண்டு வந்திருப்பாங்க. கடைக்குப்போனவுடனே கடைக்காரனுக்கு இந்தக்கவுண்டருங்க என்னென்ன வாங்குவாங்கன்னு தெரியுமுங்க, மளமளன்னு ரண்டு வள்ளம் உப்பு, அரை வீசம் ஆரஞ்சு முட்டாயி. கால் வீசம் வெட்டுப்பாக்கு,திண்ணீர்ப்போட்டலம். செகப்புப்பொட்டலம், ஊதுபத்தி, கப்பூரம்,தீப்பொட்டி எல்லாம் ரெண்டு கூடையிலியும் வச்சுருவாங்க.அதுக்குள்ள ரெண்டு ஆம்பளைங்க போயி ரெண்டு ஈரெளைத்துண்டு (சும்மாடு கட்டறதுக்கு), வெத்தல. ரெண்டு சீப்பு வாளப்பளம், நாலு மொளப்பூவு, மூணு தேங்காய், மூணு எலுமிச்சம்பளம், கொஞ்சம் சந்தனம் இதெல்லாம் வாங்கிட்டு வந்துடுவாங்க. கடைக்காரன் பில்லுப்போட்டு மொத்தம் இத்தனையாச்சுங்கன்னு சொல்லுவான். அதுல ஒரு பத்தோ இரபதோ புடிச்சுட்டு மிச்சத்தை ரெண்டு ஊட்டுக்காரங்களும் ஆளுக்குப்பாதியா கணக்குப்போட்டு கணக்க தீர்ப்பாங்க. அதுல மாப்பிள்ள ஊட்டுக்காரங்க ஒரு ரூபாயாச்சும் எச்சாக்கொடுப்பாங்க. ஏன்னா மாப்பிள்ள ஊட்டுக்காரங்க பொண்ணு ஊட்டுக்காரங்களுக்கு இளைச்சவங்களா ஆயிரப்படாது பாருங்க.
மார்கெட்டுக்குள்ளயே ஒரு அம்மன் கோயிலும் அதுக்குள்ள ஒரு விநாயகர் சந்நிதியும் இருக்குங்க. வாங்குன சாமானத்தெயெல்லாம் எடுத்துட்டு அந்தக்கோயிலுக்கு எல்லாரும் போவாங்க. அந்தப்பூசாரிக்கு கவுண்டகமொறையெல்லாம் அத்துபடிங்க. அதான் மாசத்துக்கு எப்படியும்ஒரு நூறு பேராச்சும் உப்பு வாங்கிட்டுஅந்தக்கொயிலுக்குத்தானே வராங்க.
அந்தப்பூசாரி இந்த மாதிரி நாளுக்குன்னு ரெண்டு அசிஸ்டென்ட்வச்சிருப்பானுங்க. அவங்க மளமளன்னு ரெண்டு கூடைக்கும்திண்ணூரு, சந்தனம், செகப்பு வச்சு, தேங்காய் ஒடச்சு வச்சு,இந்தக்கூடைலிருந்து மூணு கை உப்ப அந்தக்கூடைக்கு மாத்தி,அந்தக்கூடைலெயிருந்து மூணு கை உப்பை இந்தக்கூடைக்குமாத்தி பூசைக்கு, விநாயகருக்கும் தேங்காய் ஒடச்சு, பளம் வச்சுபூசைக்கு ரெடி பண்ணீருவாங்க. ஒடனே மெயின் பூசாரிவிநாயகருக்கு பூசையப்பண்ணி எல்லாத்துக்கும்கப்பூரத்தக்காட்டி, ஊம், உப்புக்கூடைய வாங்கறவுங்க முன்னாடிவாங்க அப்படீம்பானுங்க. உப்புக்கூடையை மாப்பிள்ள ஊட்லஇருந்து ஒரு பங்காளிப்பொம்பள, பொண்ணூட்ல இருந்து ஒருபங்காளிப்பொம்பள, அப்படி ரெண்டு பேருதான்வாங்கோணுமுங்க. நெருங்கின பங்காளி ஒருத்தருஅந்தக்கூடைகளெ எடுத்து அந்தப்பொம்பளைக கிட்டகுடுப்பாருங்க. மொதல்ல மாப்பிள்ள ஊட்டுக்காரங்களுக்குத்தான்கொடுக்கோணுமுங்க. அப்பறம்தான்பொண்ணூட்டுப்பொம்பளைக கிட்டக்கொடுப்பாங்க.வாங்கறவுங்க கொடுக்கறவுங்க காலத்தொட்டுக்கும்பிட்டுத்தான்கூடைய வாங்கி தலை மேல சும்மாடு கூட்டி வச்சு அது மேலகூடைய வச்சுக்குவாங்க. அப்படியே கோயிலச்சுத்திவந்துவெளில வந்து கூடைய கூட வந்திருக்கற நாசிவன் கிட்டகொடுத்துடுவாங்க. அவந்தான் அந்தக்கூடைய ஊட்டுக்குகொண்டு வந்து சேப்பானுங்க.
இப்படி உப்புக்கூடைய வாங்கினவுங்க கல்யாணம்முடியறவரைக்கும் எந்த தீட்டு ஊட்டுக்கும் போகப்படாதுங்க.
ஆமாங்க, உப்பு வாங்கறதுக்கே இத்தன நேரம் ஆயிடுச்சே,ஜவுளி எப்பப்பாத்து முடிக்கறது? அடுத்த பதிவுலபாத்துக்கலாங்களா?

4 கருத்துகள்:

  1. “நல்ல வார்த்தெ பேசப்போறோம்”
    “நல்ல வார்த்தெ பேசப்போறோம்”

    கேட்கவே ஆனந்தமாக இருக்கிறது.
    அந்தநாளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. நம்ம சம்பரதாயத்தை எல்லாரும் தெரிஞ்சுக்க இந்த பதிவு உதவும் , வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  3. கொங்கு தமிழில் ஒரு இனிமையான பயனுள்ள பதிவு!

    பதிலளிநீக்கு