திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மாறிவரும் கலாசாரங்கள்


"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று அந்தக் காலத்திலேயே நன்னூலில் எழுதி வைத்துச் சென்றார்கள் நம் முன்னோர்கள். இந்தக் காலத்து நடப்புகள் அதை நிரூபணம் செய்கின்றன.

நான் சிறுவனாக இருந்தபோது கல்யாணங்களில் பெண்ணும் பையனும் பார்த்துக்கொள்வது என்பது தாலி கட்டும் சமயத்தில்தான். இருவரும் உறவினர்களாக இருந்தால் அது வேறு விஷயம்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த வழக்கம் மாறி கல்யாணத்திற்கு முன்பு பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரு கோயிலிலோ அல்லது ஒரு பொது இடத்திலோ பார்த்துக்கொள்வது பழக்கமாகியது. நான் சொல்வது பிராமணரல்லாத சமூகங்களில் நடக்கும் பழக்கவழக்கங்கள்.

கொஞ்ச நாள் கழித்து நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பெண்ணும் பையனும் சேர்ந்து ஓட்டலுக்குப் போவதும் சினிமாவிற்குப் போவதும் சகஜமாயிற்று. இவை எல்லாம் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன்தான் நடந்தன.

இப்போது புதிதாக ஒரு வழக்கத்தை எங்கள் பக்கத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். பஞ்சாங்கம் பார்ப்பவர்களுக்குத் தெரியும். அதில் ஒரு இடத்தில் விருந்திற்குப் போகக் கூடாத நாட்கள் என்று ஒரு குறிப்பு இருக்கும். அதாவது ஒருவர் வீட்டிற்குப் புதிதாக விருந்திற்குப் போவதாக இருந்தால் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் போகக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கும். ஏன் என்றால் அப்படிப் போய் விருந்துண்டால் அந்த உறவு பாதிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதை கல்யாணப் பெண்ணுக்கும் நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது கல்யாண முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் அன்று அந்தப்பெண் புருஷன் வீட்டிற்குப்போவதும் ஞாயிற்றுக்கிழமையாகவே இருக்கும் அல்லவா ? பஞ்சாங்கப்படி அப்படி விலக்கப்பட்ட நாளில் பெண் புருஷன் வீட்டிற்குப் போனால் உறவுகள் பாதிக்கப்படும் என்று யாரோ ஒரு அதி மேதாவி சொல்லி, அதற்கு ஒரு மாற்று ஏற்பாடும் சொல்லியிருக்கிறான்.

அதாவது அந்தக் கல்யாண நாளான ஞாயிற்றுக்கிழமைக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அந்தப் பெண் புருஷன் வீட்டிற்குப் போய்விட்டு வந்தால் இந்த பஞ்சாங்க விதிக்கு தப்பித்து விடலாமாம். இப்போது எங்கள் பக்கம் இப்படி ஒரு புது நடைமுறை பழக்கத்திற்கு வந்துள்ளது.

முற்காலத்தில் உண்டான பழக்கவழக்கங்கள்  அனுபவத்தின் அடிப்படையில் ஏற்பட்டவை. அவைகளில் பல நன்மைகள் உண்டு. ஆனால் தற்காலத்தில் அந்தப் பழக்க வழக்கங்களை நாகரிகத்தின் பெயரால் மாற்றி அமைக்கிறோம். அவைகளின் விளைவுகள் எப்படியிருக்கும் என்று நாளாவட்டத்தில்தான் தெரிய வரும்.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கல்யாணமாகாத இளைஞனும் இளைஞியும் "சேர்ந்து வாழுதல்" என்ற ஒரு கலாச்சாரம் உருவாகியுள்ளதை அறிவீர்கள். அப்படி சில மாதங்கள் அல்லது வருடங்கள் வாழ்ந்து இருவருக்கும் ஒத்துப்போனால் பிறகு கல்யாணம் செய்து கொள்வார்கள். இதற்குள் அவர்களுக்கு ஓரிரு குழந்தைகள் கூடப் பிறந்திருக்கலாம். இந்தப் பழக்கம் நம் நாட்டில் கூட பெரிய நகரங்களில் பரவ ஆரம்பித்திருப்பதாக கேள்விப்படுகிறோம்.

பழங்காலத்தில் ஆதிவாசிகள் சமூகத்தில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது என்று படித்திருக்கிறோம். ஆக மொத்தம் நாம் பழங்கால கலாச்சாரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம். வாழ்க நாகரிகம். 

9 கருத்துகள்:

  1. நாகரிகம் என்ற போர்வையினைப் போர்த்திக் கொண்டு, பின்னோக்கிப் பயணிக்கிறோம்
    உண்மைதான் ஐயா
    தம 2

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான். இதே போல முன்பெல்லாம் திருமண வரவேற்பு என்பது தாலி கட்டியபின் நடைபெறும் நிகழ்வாக இருந்தது. 90 களிலேயே திருமணத்துக்கு முதல் நாளே மணப்பெண்ணும் பையனும் ஒன்றாய் நின்று போஸ் கொடுக்கும் வழக்கம் ஆரம்பித்து விட்டது. அலுவலக நண்பர்களுக்காக சௌகர்யம்!

    பதிலளிநீக்கு
  3. ஆக மொத்தம் நாம் பழங்கால கலாச்சாரத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்

    பல விஷயங்களில் , உடையிலும், உணவுகளிலும் கூட பின்னோக்கித்தான் கலாச்சாரம் நடைபோடுகிறதோ என்கிற எண்ணம் வலுப்பெறுகிறது..!

    பதிலளிநீக்கு
  4. பல வழக்கங்களை அதன் கருத்தை ஆராயாமல் - குறுக்கு வழி கண்டுபிடிக்க முயற்சிப்பது சங்கடங்களுக்கே வழி காட்டும்

    பதிலளிநீக்கு
  5. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  6. //அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கல்யாணமாகாத இளைஞனும் இளைஞியும் "சேர்ந்து வாழுதல்" என்ற ஒரு கலாச்சாரம் உருவாகியுள்ளதை அறிவீர்கள். அப்படி சில மாதங்கள் அல்லது வருடங்கள் வாழ்ந்து இருவருக்கும் ஒத்துப்போனால் பிறகு கல்யாணம் செய்து கொள்வார்கள். இதற்குள் அவர்களுக்கு ஓரிரு குழந்தைகள் கூடப் பிறந்திருக்கலாம். இந்தப் பழக்கம் நம் நாட்டில் கூட பெரிய நகரங்களில் பரவ ஆரம்பித்திருப்பதாக கேள்விப்படுகிறோம்.//
    ஐயா!
    வந்து விட்டது. நீயா நானாவில், ஒரு 27 வயது ஆண் ,தான் 2 வருடம் சேர்ந்து வாழ்ந்ததாகவும்
    இப்போ பிடிக்காததால் பிரிந்து விட்டதாகவும், சர்வ சாதாரணமாகக் கூறினார். எதிர்ப்பக்கம் தாயார் இருந்தார்.

    பதிலளிநீக்கு
  7. நாகரிகம் என்ற போர்வையில் அநாகரிகம் அரங்கேற்றம் ஆகிக் கொண்டு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. திருமணத்திற்கு முன்பு சேர்ந்து வாழ்தல் என்பது வேண்டுமானால் நம் தமிழ்நாட்டில் இன்னும் பிரபலம் அடையாமல் இருக்கலாம். ஆனால் பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணங்களின் விகிதம் குறைந்துக் கொண்டே வருகிறது என்பது உண்மை. இப்படியொரு காலக்கட்டத்தில் இன்னும் பஞ்சாங்கம் பார்த்து உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதா வேண்டாமா என்று முடிவு செய்வதுதான் கற்காலத்திற்கு செல்வது போலுள்ளது என்பேன்.

    பதிலளிநீக்கு
  9. பூமி உருண்டை அல்லவா எப்படித்தான் உயர்ந்தாலும் ஒரு நிலையில் பழைய நிலைக்கே வருகின்றோம். இதற்கு இக்கால பேஷன் கூட அத்தாட்சியாகின்றது

    பதிலளிநீக்கு