நான் தஞ்சாவூரில் ஒரு ஆராய்ச்சிப் பண்ணையின் தலைவராக இருந்தபோது அந்தப் பண்ணைக்கு முள் கம்பி வேலி போடுவதற்கு முயன்றதை இதற்கு முன்பு கூறியிருந்தேன் அல்லவா? அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.
இது மாதிரி முள் கம்பி வாங்குவதில் இதற்கு முன் ஒரு பண்ணையில் நடந்த கோல்மாலினால் முள் கம்பி வாங்குவதற்கான நடைமுறைகளில் புது சட்டதிட்டங்களை அமுல்படுத்தினார்கள். இந்த சட்ட திட்டங்களின்படி, ஒரு பொருள் வாங்குவதாக இருந்தால் அந்தப் பொருள் விற்கும் ஒரு நாலைந்து கடைகளுக்கு விலைப் பட்டியல் கேட்டு தபால் அனுப்பவேண்டும்.
அந்தக் கடிதங்களுக்கு அந்தக் கடைக்காரர்கள் தங்கள் விலையைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் தபால் மூலமாக அனுப்பவேண்டும். அந்தக்கடிதங்களை ஒரு நல்ல நாள் பார்த்து பிரித்து அதிலுள்ள விலைகளை ஒப்பிட்டு யார் விலை குறைவாகக் குறிப்பிட்டிருக்கிறார்களோ அவர்களிடம் இருந்து அந்தப் பொருளை வாங்க வேண்டும். இதுதான் சட்டப்படி அரசு அலுவலகங்களில் பொருட்கள் வாங்கும் நடைமுறை.
ஆனால் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்தால் காரியம் நடக்காது. ஆகவே நான் ஒரு முறையைக் கையாண்டேன். கடைக்காரர்களுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்கள் ஐந்து தயார் செய்து கொண்டேன். என் உடன் பணிபுரியும் ஒரு பொறியாளரையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்குப் போனோம். அங்குதான் முள்கம்பி விற்கும் பெரிய கடைகள் இருக்கின்றன. நான்கு கடைகளில் போய் விசாரித்தோம். விலை நிலவரம் தெரிந்தது. முள் கம்பிகளின் தரத்தையும் பார்த்துக் கொண்டோம்.
அவர்களிடம் விவரத்தைச் சொல்லி எங்களுக்கு இத்தனை டன் முள் கம்பி வேண்டும். அதற்கு ஒரு விலைப்பட்டியல் வேண்டும் என்றோம். அவர்களுக்கு நாங்கள் கொண்டு போயிருந்த கடிதத்தில் அந்தக்கடையின் பெயரை எழுதி அவர்களிடம் கொடுத்தோம். அவர்கள் "ஐயா, சர்க்கார் ஆபீஸ்களின் நடைமுறையில் எங்களுக்கு அனுபவம் நிறைய உண்டு. பொருட்களை வாங்கிக்கொண்டு போன பிறகு நாங்கள் பணம் வாங்குவதற்கு நாயாய் அலைய வேண்டியிருக்கும். அதனால் நாங்கள் அரசு அலுவலகங்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை" என்றார்கள்.
இந்த நடைமுறையை நானும் பார்த்திருக்கிறேன். சிவப்பு நாடா தர்பார் என்பது இதுதான். அரசு நிறுவனத்தில் பொருளை வாங்குபவர்கள் அந்த அலுவலகத்தின் நிர்வாக செயலர்கள். அவர்கள் வாங்கிய பொருளின் பட்டியலைப் பரிசீலித்து தொகை அனுப்புவர்கள் அலுவலகத்தில் பணி புரியும் உதவியாளர்கள். இந்த இரு சாராருக்கும் எப்போதும் ஆகாது. வேண்டுமென்றே ஒரு சொத்தையான காரணம் காட்டி, அந்த பட்டியலை தீர்வு செய்யமாட்டார்கள்.
பெரும்பாலும் அந்த அலுவலகத் தலைவருக்கு நிர்வாகத் திறமை இருக்காது. வெறும் சர்வீஸ் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று அந்த பதவிக்கு வந்திருப்பார். ஏறக்குறைய ஓரிரு வருடங்களில் பணி ஓய்வு ஆகவேண்டிய நிலையில் இருப்பார். அவர் கவனம் எல்லாம் நாம் வில்லங்கமில்லாமல் ஓய்வு பெறவேண்டும் என்பதிலேயேதான் இருக்கும். ஆகவே அவர் அலுவலக உதவியாளர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார். அவர்களுடைய பிரம்மாஸ்திரம் "சார் இதை ஆடிட்டர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்" என்பதே.
அலுவலக வேலைகள் நடந்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன என்ற பெரும்போக்கில் இருப்பார். நாம் சென்று இந்த மாதிரி அலுவலக உதவியாளர்கள் பட்டியல்களைத் தீர்வு செய்யவில்லை என்று சொன்னால், அதற்கு அவர் சொல்லும் பதில் "நான் ஒழுங்காக பணி ஓய்வு பெற வேண்டாமா? அனுசரித்துப் போங்கப்பா" என்பதாகும். இதை நன்கு உணர்ந்துள்ள நான் நம்பினது "உன் கை சுத்தமாக இருந்தால் ஒரு கெடுதலும் வராது" என்பதுதான். அதே மாதிரி நான் எந்த வில்லங்கமும் இல்லாமல் பணி ஓய்வு பெற்றேன்.
முள்கம்பி விவகாரத்திற்கு வருவோம். கடைக்காரர்கள் அரசு அலுவலகங்களுக்கு பொருள் கொடுத்தால் பணம் சரியாக வருவதில்லை என்று சொன்னார்கள் அல்லவா?அவர்களிடம் நான் சொன்னேன். நான் உங்களுக்கு பணம் கொடுத்துவிட்டுப் பொருளைப் பெற்றுக் கொள்கிறேன் என்றேன். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! அரசு அலுவலகத்தில் அது எப்படி முடியும் என்று கேட்டார்கள்? அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம், விலைப் பட்டியலை மட்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டேன்.
கூடவே அவர்கள் கடை விலாசம் அச்சடித்த கவர் ஒன்றையும் வாங்கிக்கொண்டேன்.
இப்படியாக நான்கு கடைகளில் விலைப் பட்டியலும் கவர்களும் வாங்கியாயிற்று. எந்தக் கடைக்காரர் விலை குறைவாகக் கொடுத்திருக்கிறார் என்பது அங்கேயே தெரியும்தானே. அந்த முள்கம்பி நல்ல தரமுள்ளதுதானா என்று என்னுடன் வந்திருந்த பொறியாளரைக் கேட்டேன். அது நல்ல தரம்தான் என்று அவர் கூறினார். உடனே அந்தக் கடைக்குச் சென்று எங்களுக்கு இவ்வளவு டன் முள்கம்பி வேண்டும். மூன்று நாள் கழித்துத் தேதி போட்டு ஒரு பட்டியல் கொடுங்கள் என்று கேட்டேன்.
அவர்களும் அப்படியே கொடுத்தார்கள். அந்த நான்கு கடைகளில் வாங்கியிருந்த விலைப் பட்டியல்களையும் அந்தந்த கடை கவரில் போட்டு நாங்கள் தயாராக கொண்டு போயிருந்த தபால் தலைகளை ஒட்டி அங்கு அருகில் உள்ள தபால் பெட்டியில் போட்டு விட்டு தஞ்சாவூருக்குத் திரும்பினோம். அலுவலக தபால் அனுப்பும் ரிஜிஸ்டரில் நாங்கள் கடிதம் கொடுத்த கடைக்காரர்களின் பெயர்களை எழுதி அவைகளை இரண்டு நாள் முன்பாக தபாலில் சேர்த்ததாக கணக்கு எழுதி, அதற்கான தபால் தலைகளைக் கணக்கில் குறைத்தோம்.
இது எல்லாம் தில்லுமுல்லு வேலை அல்லவா என்று நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது. இங்குதான் நீங்கள் திருவள்ளுவர் சொல்லிப் போனதை நினைவு கூறவேண்டும்.
குறள்: 292 (பொய்ம்மையும்)
- பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
- நன்மை பயக்கு மெனின் (02)
இந்த விவகாரத்தில் நாங்கள் எந்தக் கடைக்காரரையும் விலையை ஏற்றச் சொல்லியோ குறைக்கச் சொல்லியோ கேட்கவில்லை. எந்தக் கடையிலும் ஒரு காப்பி கூட வாங்கிக் குடிக்கவில்லை. இந்த வாய்மையினால்தான் நான் செய்த இந்த தில்லுமுல்லுகள் என்னை ஒன்றும் செய்யவில்லை. முள் கம்பி போடுவது மிகவும் அவசியம். அதற்காக நான் இப்படி செய்தேன்.
அடுத்த நாள் நாங்கள் தபாலில் போட்ட விலைப் பட்டியல்கள் வந்து சேர்ந்தன. அதை முறைப்படி சரிபார்த்து, எந்தக்கடை குறைவாக விலை சொல்லியிருந்தார்களோ அவர்களுக்கு சப்ளை ஆர்டர் போட்டோம். அதைத் தபாலில் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.
அடுத்த நாள் அவர்கள் கொடுத்த பட்டியலை எடுத்து முள் கம்பிகள் வந்து சேர்ந்ந்தாக கணக்கில் காட்டி அந்தத் தொகைக்கு ஒரு செக் போட்டு அந்தப் பொறியாளரிடம் கொடுத்து இதைக் கொண்டு போய் அந்தக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு முள் கம்பியை எடுத்து வாருங்கள் என்று ஒரு டிராக்டருடன் அனுப்பி வைத்தேன். முள் கம்பி வந்து விட்டது. அதே பொறியாளர் அவைகளை வைத்து வேலி போட்டு முடித்து விட்டார்.
என் மேலதிகாரி அடுத்த முறை வந்தபோது இந்த வேலியைப் பார்த்து விட்டு நன்றாகச் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்டிவிட்டுப் போனார். ஆறு மாதம் கழித்து ஆடிட் ஆட்கள் வந்து ஆடிட் செய்து முடித்தார்கள். கடைசியாக அவர்கள் எழுதிய குறிப்புகளை ஆராய்ந்தபோது இந்த சமாச்சாரத்தில் ஒரு தப்பும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆகவே அவர்களாக கற்பனை செய்து ஒரு குற்றத்தை எழுதினார்கள். அந்தப் பொறியாளர் விலைப் பட்டியல் வாங்குவதற்காக டூர் போனது அவருடைய டெக்னிகல் வேலையல்ல. ஆதலால் அந்த டூர் போனதிற்கான பயணப்படியைத் திரும்பப் பெறவேண்டும் என்று எழுதியிருந்தார்கள்.
எனக்கு கோபமான கோபம் வந்தது. எது டெக்னிகல் வேலை, எது நான்-டெக்னிகல் வேலை என்பதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்கள் வேலை கணக்குகள் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது மட்டும்தான் அதை மட்டும் நீங்கள் ஒழுங்காகச் செய்யுங்கள். இப்படி எழுதுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சத்தம் போட்டு விட்டு, இதை இப்போதே நீங்கள் அடித்துவிடவேண்டும். அப்படி அடிக்காவிட்டால் நான் இப்பொழுதே உங்கள் மேலதிகாரிக்குப் போன் செய்து நீங்கள் எழுதியுள்ள அக்கிரமமான குறிப்பைப் பற்றி சொல்லுவேன். அது தவிர நான் இந்தக் குறிப்பைப் பார்த்தாகவும் கையெழுத்துப் போடமாட்டேன் என்று சொல்லிவிட்டு என் அறைக்குப் போய்விட்டேன்.
அந்த ஆடிட்டர்கள் என் கோபத்தைக் கண்டு பயந்து விட்டார்கள் மறு பேச்சுப் பேசாமல் அந்தக் குறிப்பை நீக்கினார்கள். ஆடுகிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும், பாடுகிற மாட்டைப் பாடிக்கறக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.
வரிக்கு வரி உண்மை. நம் கை சுத்தமாக இருந்தால் நமக்கு ஒன்றும் நேராது என்ற வரிகளில் மட்டும் கொஞ்சம் மாறுபடுகிறேன்! வேண்டாத தொல்லைகளால் அவஸ்தைப் பட்ட அனுபவஸ்தர்களை அறிவேன் - என் சொந்தத்தில் கூட.
பதிலளிநீக்குஒய்வு பெறப் போகிறவர்களை நல்ல காரியங்கள் கூடச் செய்ய விடாமல் தடுப்பதும் இது போன்று விதிகளை மட்டுமே கட்டிக்கொண்டு அழும் ஆடிட்டர்களால்தான். அதே சமயம் அவர்களிலும் இடம் பொருள், சிரமம் உணர்ந்து புரிந்து கொண்டவர்கள் உண்டு.
அனுபவங்கள் பல வகை. பொதுவாக இவ்வாறு ரிஸ்க் எடுத்த செயல்பட சில குணங்கள் உங்களிடம் இருக்கவேண்டும். நீங்கள் எப்போதும் நியாயமல்லாத காரியங்கள் செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் மேலதிகாரகளிடம் இருக்கவேண்டும். இரண்டாவதாக நீங்கள் எப்போதும் எதிலும் பாரபட்சமாக நடக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் வேண்டும். தவிர சூழ்நிலையை சரியாக கணித்து செயல்பட வேண்டும். இவை இல்லாவிட்டால் சங்கடங்கள் வரும்.
நீக்குஇந்த முள்வேலி சமாச்சாரத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்தவரின் பூரண நம்பிக்கையைப் பெற்றிருந்ததால் நான் தைரியமாக இந்த வேலையைச் செய்தேன். அப்படி நம்பிக்கை இல்லாமலிருந்தால் நான் இந்த மாதிரி செய்திருக்க மாட்டேன்.
தணிக்கையாளர்களிடம் நீங்கள் கோபப்பட்டது ஆச்சர்யமாக உள்ளது. உங்கள் கோபம் நியாயமானதே. அவர்கள் அதை எதிர்கொண்டது அதைவிட ஆச்சர்யம். ஏனென்றால் நம்மிடம் தப்பை கண்டுபிடித்து அதனை பூதாகரமாக்குவதே அவர்களின் தலையாய பணி என்பதை நான் பல முறை கண்டுள்ளேன்.
பதிலளிநீக்குMost of these auditors are ;penny wise and pound foolish".
பதிலளிநீக்குRajan
நல்ல வேளை எனக்கு இந்த அனுபவம் ஏற்படவில்லை. வங்கிகளில் பெரும்பாலும் தேவையான பொருட்களை வங்கியின் தலைமையகத்தில் உள்ள துறையே ஒப்பந்தப் புள்ளி பெற்று குறைந்த விலைக்கு தர இருக்கும் நிறுவனத்திடம் வாங்கி விடுவார்கள்.
பதிலளிநீக்கு‘மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயம் இல்லை’ என்று சொல்வது போல் நீங்கள் நேர்மையாக நடந்துகொண்டதால் அந்த கணக்கு தணிக்கையாளர்களுக்கு அஞ்சவில்லை என எண்ணுகிறேன்
வங்கிகளின் பொருள் தேவைகள் ஒரு Standard ஆக இருக்கும். எல்லா வங்கிகளுக்கும் அவை பொதுவானவைகளாகவும் இருக்கும். அதனால் நீங்கள் சொன்ன முறை நல்லபடியாக நடந்தது. ஆனால் ஆராய்ச்சி நிர்வாகத்தில் தேவைகள் பல தரப்பட்டவை. பெரும்பாலும் Non-standard ஆக இருக்கும்.
நீக்குநியாயமான கோபம் வெற்றியைத் தரும் என்பதற்கு இது ஒரு சான்று...
பதிலளிநீக்குSuper Post
பதிலளிநீக்குநம் கை சுத்தமாக இருந்தால் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை... அருமை ஐயா
பதிலளிநீக்குநம் கை சுத்தமாக இருந்தால் நல்லது நடக்கும் என்று நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள். சரிதான் இருக்கலாம் ஐயா. ஆனால் கை சுத்தமாகவும், மனதும் நேர்மையாகவும் இருக்கின்றவர்களுக்கு நிறை இடர்பாடுகள் வந்து அவர்கள் வேலையையே விட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் வீட்டிலேயே...ஆனால் அதற்காகச் சுத்தத்தைக் கைவிட முடியுமா? நிகழ்வை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்...வேறு வழி?
பதிலளிநீக்குஉங்கள் அனுபவம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குஒவ்வொரு முறை ஆடிட்டர்கள் வரும்போதும் சிக்கல்கள் தான். குறையே இல்லை என்றாலும் குறை கண்டுபிடிக்க முயல்வார்கள். :)
அது சரி, இங்கே ஆடிட்டர்கள் எங்கு அதிகப் பிரசங்கித் தனம் செய்தார்கள்?
பதிலளிநீக்குMaterial ஐ receive பண்ணுவதற்கு முன்பே அது வந்ததாக நீங்கள் ஸ்டாக் எண்ட்ரி பண்ணினது எனக்குச் சரியாகப் படவில்லை.
எனக்கென்னமோ நீங்கள் சரியான ஆடிட் குரூப்பை சந்திக்க வில்லை என்றே தோன்றுகிறது.
மேலும் அவர்களுக்கு உங்கள் மேல் நல்ல மரியாதை இருந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. இல்லையென்றால் அவர்கள் உங்களை தங்கள் பாஸ் மாதிரி நடத்தியிருக்க மாட்டார்கள்.
அரசு அலுவலங்களில் நீங்கள் சொன்ன குறை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நீங்கள் நல்லவராய் இருக்கப்போய் ஏதும் கோளாறு இல்லை. ஆனல் உங்களைத் தவிர சற்று கோணலான ஆள் வந்து பணம் பண்ண நினைத்தாரானால் அவருக்கு நீங்கள் குறுக்கு வழி காட்டியதாய் இருக்கக் கூடாதல்லவா?
Proceedure violation is always not advisable.
ஆனாலும் பதிவு சுவாரசியமாய் இருந்தது.
டெக்னிகல் அலுவலரை நான்-டெக்னிகல் வேலைக்குப் பயன்படுத்தினீர்கள் என்று சொல்வதற்கு ஆடிட்டர்களுக்கு அதிகாரம் இல்லை. எது டெக்னிகல் வேலை, எது நான்-டெக்னிகல் வேலை என்று பாகுபடுத்தி அலுவலர்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கும் பொறுப்பு அந்தந்த அலுவலகத் தலைவருக்கே உண்டு. உலகம் முயுவதும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களில் டெக்னிகல் அலுவலர்கள்தான் தலைவராக வரமுடியும். உதாரணமாக நான் (I) டெக்னிகல்லி ஒரு புரொபசர், என் வேலை வகுப்பு எடுப்பது மற்றும் ஆராய்ச்சிகளை வழி நடத்துவதுதான். ஆனால் அதற்கு உண்டான அட்மினிஸ்ட்ரேடிவ் வேலைகளை யார் செய்வார்கள்? அதை ஒரு அட்மினிஸ்ட்ரேடர் என்று ஒருவரைப் பார்த்துக்கொள்ளச் சொன்னால் அவர் என் வேலைகளுக்கு ஒரு முட்டுக் கட்டையாகவே இருப்பார். நான் அலுவலகத் தலைவராக இருந்தாலும் ஒரு பைசா செலவழிப்பதாக இருந்தாலும் அவரைக் கேட்டுத்தான் செய்யவேண்டும் என்ற நிலை உருவாகிவிடும். உலகம் முழுவதும் ஆராய்ச்சி நிறுவனங்களுல் டெக்னிகல் ஆபீசருக்கு கீழேதான், அவர் ஆணைப்படிதான் அட்மினிஸ்ட்ரேடிவ் அலுவலகர்கள் வேலை செய்யவேண்டும். இதுதான் நடைமுறை.
நீக்கு//Procedure violation is always not advisable.//
நீக்குநீங்கள் Management புஸ்தகங்களைப் படித்திருந்தால் அதில் ஒரு கொள்கையை வலியுறுத்தியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். Rules are only for guidance. An efficient Executive is one who takes sensible exceptions to the rules. Clerk will always be obstinate about rules but an Executive is not to follow the clerk.
ஒரு மாவட்டத்தில் கலெக்டர் இருக்கிறார். வழக்கமாக எல்லா வேலைகளும் ரூல் பிரகாரம்தான் நடக்கும். ஒரு ஊரில் வெள்ளம் வந்து விட்டது. வெள்ளம் வரும் வழியைத் தடுத்து வெள்ளத்தை ஆற்றுக்குத் திருப்பவேண்டும். அப்போது அவர் ரூல்பிரகாரம் டெண்டர் விட்டுத்தான் அந்த வேலையை முடிக்கவேண்டும் என்று நினைத்தால் என்ன ஆகும்? உயிர்ச்சேதம், பொருட்சேதம் என்று ஏகப்பட்ட சேதங்கள் ஏற்படும். அந்த மாதிரி இயற்கை சீற்றங்களைச் சமாளிப்பதற்காக அந்தக் கலெக்டர் என்ன வேண்டுகென்றாலும் செய்யலாம். எவ்வளஙு பணம் வேண்டுமென்றாலும் செலவு செய்யலாம். இந்த மாதிரி சமயங்களில் செய்யப்படும் செலவுகளுக்கு ஆடிட் கிடையாது என்பது பலருக்குத் தெரியாது.
அவர் அப்படி நிவாரண வேலைகள் செய்யாவிட்டால் அவர் தன் கடமையிலிருந்து தவறியவராகக் கருதப்படுவார்.
நான் ரூல் பிரகாரம் செய்யவில்லை என்று என் பேரில் குற்றம் சுமத்தினால் நான் ஏன் ஆவ்வாறு செய்தேன், அதன் அவசியம் என்ன என்று காரணங்களைச் சொல்லி என் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்தும் தன்னம்பிக்கை இருந்ததால்தான் அவ்வாறு செய்தேன். அவ்வாறு செய்வதை நான் தனிப்பட்ட முறையில் மேலதிகாரிகளிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன்.
//Material ஐ receive பண்ணுவதற்கு முன்பே அது வந்ததாக நீங்கள் ஸ்டாக் எண்ட்ரி பண்ணினது எனக்குச் சரியாகப் படவில்லை.//
நீக்குஇந்த மாதிரி செய்வது வருடக் கடைசியில் எல்லா அலுவலகங்களிலும் நடப்பதுதான். இந்த மாதிரி பட்டியல்களுக்கு Proforma Invoice என்று பெயர். அந்த வருடத்திய பட்ஜெட் காலாவதியாகாமலிருக்கு இந்த மாதிரி செய்வது வழக்கம்தான். நான் இந்த வழக்கத்தைத்தான் கடைப்பிடித்தேன்.
ஐயா
பதிலளிநீக்குநீங்கள் அந்தக்காலத்தில் நேர்மை கை சுத்தம் என்று இருந்ததால் பிழைத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையின் கடாட்சம் கூட உண்டு, இல்லாவிட்டால் ப்ரெஸ்டிஜ் பத்மநாபனை மாட்டிவிட்டவர்கள் போல் யாராவது ஏதாவது வேலை செய்திருப்பார்கள். இது போன்ற மாட்டி விடுதல் எனெது மைத்துனருக்கு கொஞ்சம் காலம் முன்பு நேரிட்டது. பணி ஒய்வு பெற்று 5 ஆண்டுகளுக்குப் பின்தான் நீதி மன்றம் வழியாக நீதி கிடைத்தது.
அதே போல் திருநெல்வேலியில் பொறியாளர் முத்துகுமாரசாமி நேர்மையாய் நடந்ததின் பரிசு தற்கொலை.
இது இந்தக்காலம். எல்லாவற்றிற்கும் தற்போது சொல்லப்படும் பதில் "பிழைக்கத் தெரியாத பயல்" என்பதே ஆகும்.
காலம் எவ்வாறு மாறிவிட்டது பார்த்தீர்களா?
Jayakumar
--
Jayakumar
உண்மைதான். எனக்கு அதிர்ஷ்டமும் துணை புரிந்திருக்கலாம்.
நீக்குஎன் வகுப்புத்தோழர் ஒருவர் வேளாண் விரிவாக்க அலுவலராக பணி ஆற்றியபோது, ஆண்டு இறுதிக்குள் நிலக்கடலை விதைகளை வாங்க அனுமதிக்கப்பட்ட தொகையை அவர் செலவழிக்கவேண்டும் என்று அவரது மாவட்ட வேளாண் அலுவலர்
பதிலளிநீக்குகட்டாயப்படுத்தியிருக்கிறார். விதை கிடைக்காத நிலையில் ஒரு விவசாயி ஒரு மாதம் கழித்து அறுவடை செய்து தருவதாக சொன்னதின் பேரில் அவரிடம் வாங்கியதுபோல் கணக்கு காட்டி அதை இருப்பில் ஏற்றிக்கொண்டு அவரது பெயருக்கு காசோலை வழங்கவும் செய்துவிட்டார். பின்பு அந்த விவசாயி சொன்னபடி விதைக்கடலையை கொடுக்க மறுத்ததும் அதற்கான பணமான ரூபாய் 4000 த்தை இவர் கட்டவேண்டியதாகிவிட்டது. அப்போது (1966-67) அவருக்கு மாத சம்பளமே ரூபாய் 303 தான்.
நீங்கள் சென்ற பதிவுக்கான பின்னூட்டத்தில் சொன்னதுபோல் அதிர்ஷ்டமும் துணை புரிய வேண்டும்.
உங்கள் வகுப்புத்தோழர் முன் கூட்டியே ஸ்டாக் புக் என்ட்ரி போட்டு செக் தயார் செய்தது தவறில்லை. பொருளை வாங்காமல் செக்கைக் கொடுத்ததுதான் தவறு. செக்கை அந்த விவசாயியின் கண்ணுக்கு முன்னால் ஆட்டிக்கொண்டே கடலைக்காயை வாங்கிய பிறகு செக்கைக் கொடுத்திருக்க வேண்டும்.
நீக்குஇங்குதான் அரசு விதிகளின் அறியாமை விளையாடியிருக்கிறது. செக்கை வாங்கின பிறகு அதை கொடுக்கவேண்டிய நபருக்கு கொடுக்காவிட்டால் அது குற்றம் என்று யாராவது பயமுறுத்தியிருப்பார்கள். இவர் அந்த விவசாயியை நம்பி செக்கைக் கொடுத்திருப்பார். யாரையும் நம்புவதற்கு முன்னால் தற்காப்பு அவசியம்.
கடைசி வரி நீங்கள் பின்னூட்டத்தில் சொன்னதுபோல் அதிர்ஷ்டமும் துணை புரிய வேண்டும். என்றிருக்கவேண்டும்
பதிலளிநீக்கு