தில்லுமுல்லு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தில்லுமுல்லு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஏப்ரல், 2016

19. அவசரச் செய்தி

                                          Image result for Indian election 2016

வந்த அவசரச்செய்தி என்னவென்றால், அனைத்து மாநிலங்களிலும் சில ஓட்டுச் சாவடிகளை "பூத் கேப்சர்" செய்வதற்காக குண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே.


இந்தக் குண்டர்களை ஓட்டுச் சாவடியில் இருக்கும் நமது கிங்கரர்களே கவனித்துக்கொள்வார்கள் என்றாலும் ஓட்டுச் சாவடிக்குப் பக்கத்தில் சலசலப்பு எதற்கு என்று, அவர்கள் அனைவரையும் நமது தூதரகத்திற்கு கொண்டுவரச் சொன்னேன்.

எல்லோரும் வந்து மீட்டிங் ஹாலில் உட்கார்ந்தார்கள். எதற்காக பூத் கேப்சர் பண்ண முயன்றீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒவ்வொரு எலெக்ஷன் நடக்கும்போதும் இதுதான் எங்களுக்கு வேலை. இந்தந்த பூத்துகளை கேப்சர் செய்யுங்கள் என்று வேட்பாளர்கள் சொல்லுவார்கள். அதன்படி செய்வோம். அடுத்த எலெக்ஷன் வரும்வரை நாங்கள் வாழ்வதற்கான செலவிற்கு பணம் கொடுப்பார்கள். அதை வைத்து பிழைத்துக்கொண்டிருந்தோம்.

இந்த எலெக்ஷனில் எங்களை ஒருவரும் கூப்பிடவில்லை. எங்களுக்குத் தெரிந்த தொழில் இது ஒன்றுதான். அதனால்தான் இந்த வேலைக்குக் கிளம்பினோம் என்றார்கள்.

அப்படியா சேதி, உங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான பணம் கொடுக்கப்படும். நீங்கள் அனைவரும் எல்லைக் காவல் படையில் சேர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பளம் உங்கள் வீட்டில் கொடுக்கப்படும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.

பிறகு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்தது. 98 சதம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. நடக்க முடியாதவர்களும் ஆஸ்பத்திரியில் இருந்தவர்களையும் தவிர அனைவரும் ஓட்டுப்போட்டிருந்தார்கள்.

மறு நாள் காலையில் ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்தது. மதியத்திற்குள் முடிவுகள் வெளியாகிவிட்டன. தேசீயக் கட்சி, எதிர் பார்த்தது போல் 90 சதம் இடங்களில் வெற்றி பெற்றார்கள். எதிர்க்கட்சிகளுக்கு 10 சதம் இடங்கள் கிடைத்தன. இது எப்படி நடந்தது என்று அனைத்து மக்களும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அந்த ரகசியம் தேவலோக தூதரகத்தில் இருக்கும் சூபர் கம்ப்யூட்டருக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.

மாநில சட்ட சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதினைந்து நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவர்களின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன, மாநில அரசின் பொறுப்புகள் என்ன, அவைகளை நிறைவேற்றுவது எப்படி ஆகிய விஷயங்களில் அவர்களுக்குத் தீவிரப் பயிற்சி கொடுக்கப்பட்டது.

அதே மாதிரி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. எல்லோரும் நாட்டை ஆளுவதற்கு தயாராகி விட்டார்கள்.

இந்தப் பயிற்சிகளில் வலியுறுத்தப்பட்ட அம்சங்கள் வருமாறு.

1. இந்திய நாட்டில் இனி லஞ்சம் எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது.

2. இலவசங்கள் எந்த ரூபத்திலும் இல்லை.

3. அனைவரும் வேலை செய்யவேண்டும்.

4. தொழிற்சாலைகள் தரமான பொருள்களையே உற்பத்தி செய்யவேண்டும்.

5. நாட்டில் பிச்சை எடுப்பது ஒழிக்கப்பட்டு விட்டது.

6. எல்லோரும் சமம். யாருக்கும் எந்தவிதமான சலுகைகளும் இல்லை.

7. பொருட்களுக்கு உற்பத்தி செலவிற்கு மேல் 30 சதம் லாபம் உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்கப்படும்.

8. வியாபாரத்தில் வாங்கும் விலைக்கு மேல் 10 சதம் மட்டுமே அதிகப் படுத்தி விற்கலாம்.

9. அனைத்து அரசு நிறுவனங்களும் மக்களின் சேவைக்காகவே தரமாக பணியாற்றும்.

10. ரயில்கள் குறித்த நேரத்தில் ஓடும்.

11. போக்குவரத்து நெரிசலான நேரங்களில் நகரின் மையப் பகுதிகளில்  தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

12. நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் அரசு அலுவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்.

13. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து விதிகள் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும்.

14. கல்விக்கூடங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும். தனியார் கல்விக்கூடங்களை அமைப்பது தடுக்கப்படுகிறது.

15. போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் அனைத்து கட்டிடங்களும் இடிக்கப்படும்.

16. பாராளுமன்ற, சட்டசபை உறுப்பினர்களுக்கு எந்த ஆடம்பர வசதிகளும் தரப்படமாட்டாது. மத்திய மந்திரிகள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்யலாம்.

17. டில்லியில் மீட்டிங் வைத்து மாநிலங்களிலிருந்து மந்திரிகளையும், செயலர்களையும் கூப்பிடும் வழக்கம் அடியோடு நிறுத்தப்படுகிறது.

இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவைகளை எனக்குத் தெரிவிக்குமாறு எல்லோருக்கும் அறிவித்தேன். பாராளுமன்றமும் சட்டசபைகளும் செயல்பட ஆரம்பித்தன. நாடு ஒழுங்கான பாதையில் போக ஆரம்பித்தது.


வெள்ளி, 17 ஜூலை, 2015

ஆடிட்டர்களின் அதிகப் பிரசிங்கித்தனம்- பாகம் 2

       
                             Image result for barbed wire

நான் தஞ்சாவூரில் ஒரு ஆராய்ச்சிப் பண்ணையின் தலைவராக இருந்தபோது அந்தப் பண்ணைக்கு முள் கம்பி வேலி போடுவதற்கு முயன்றதை இதற்கு முன்பு கூறியிருந்தேன் அல்லவா? அதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்.

இது மாதிரி முள் கம்பி வாங்குவதில் இதற்கு முன் ஒரு பண்ணையில் நடந்த கோல்மாலினால் முள் கம்பி வாங்குவதற்கான நடைமுறைகளில் புது சட்டதிட்டங்களை அமுல்படுத்தினார்கள். இந்த சட்ட திட்டங்களின்படி, ஒரு பொருள் வாங்குவதாக இருந்தால் அந்தப் பொருள் விற்கும் ஒரு நாலைந்து கடைகளுக்கு விலைப் பட்டியல் கேட்டு தபால் அனுப்பவேண்டும்.

அந்தக் கடிதங்களுக்கு அந்தக் கடைக்காரர்கள் தங்கள் விலையைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் தபால் மூலமாக அனுப்பவேண்டும். அந்தக்கடிதங்களை ஒரு நல்ல நாள் பார்த்து பிரித்து அதிலுள்ள விலைகளை ஒப்பிட்டு யார் விலை குறைவாகக் குறிப்பிட்டிருக்கிறார்களோ அவர்களிடம் இருந்து அந்தப் பொருளை வாங்க வேண்டும். இதுதான் சட்டப்படி அரசு அலுவலகங்களில் பொருட்கள் வாங்கும் நடைமுறை.

ஆனால் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்தால் காரியம் நடக்காது. ஆகவே நான் ஒரு முறையைக் கையாண்டேன். கடைக்காரர்களுக்கு அனுப்ப வேண்டிய கடிதங்கள் ஐந்து தயார் செய்து கொண்டேன். என் உடன் பணிபுரியும் ஒரு பொறியாளரையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்குப் போனோம். அங்குதான் முள்கம்பி விற்கும் பெரிய கடைகள் இருக்கின்றன. நான்கு கடைகளில் போய் விசாரித்தோம். விலை நிலவரம் தெரிந்தது. முள் கம்பிகளின் தரத்தையும் பார்த்துக் கொண்டோம்.

அவர்களிடம் விவரத்தைச் சொல்லி எங்களுக்கு இத்தனை டன் முள் கம்பி வேண்டும். அதற்கு ஒரு விலைப்பட்டியல் வேண்டும் என்றோம். அவர்களுக்கு நாங்கள் கொண்டு போயிருந்த கடிதத்தில் அந்தக்கடையின் பெயரை எழுதி அவர்களிடம் கொடுத்தோம். அவர்கள் "ஐயா, சர்க்கார் ஆபீஸ்களின் நடைமுறையில் எங்களுக்கு அனுபவம் நிறைய உண்டு. பொருட்களை வாங்கிக்கொண்டு போன பிறகு நாங்கள் பணம் வாங்குவதற்கு நாயாய் அலைய வேண்டியிருக்கும். அதனால் நாங்கள் அரசு அலுவலகங்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை" என்றார்கள்.

இந்த நடைமுறையை நானும் பார்த்திருக்கிறேன். சிவப்பு நாடா தர்பார் என்பது இதுதான். அரசு நிறுவனத்தில் பொருளை வாங்குபவர்கள் அந்த அலுவலகத்தின் நிர்வாக செயலர்கள். அவர்கள் வாங்கிய பொருளின் பட்டியலைப் பரிசீலித்து தொகை அனுப்புவர்கள் அலுவலகத்தில் பணி புரியும் உதவியாளர்கள். இந்த இரு சாராருக்கும் எப்போதும் ஆகாது. வேண்டுமென்றே ஒரு சொத்தையான காரணம் காட்டி, அந்த பட்டியலை தீர்வு செய்யமாட்டார்கள்.

பெரும்பாலும் அந்த அலுவலகத் தலைவருக்கு நிர்வாகத் திறமை இருக்காது. வெறும் சர்வீஸ் அடிப்படையில் பதவி உயர்வு பெற்று அந்த பதவிக்கு வந்திருப்பார். ஏறக்குறைய ஓரிரு வருடங்களில் பணி ஓய்வு ஆகவேண்டிய நிலையில் இருப்பார். அவர் கவனம் எல்லாம் நாம் வில்லங்கமில்லாமல் ஓய்வு பெறவேண்டும் என்பதிலேயேதான் இருக்கும். ஆகவே அவர் அலுவலக உதவியாளர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார். அவர்களுடைய பிரம்மாஸ்திரம் "சார் இதை ஆடிட்டர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்" என்பதே.

அலுவலக வேலைகள் நடந்தால் என்ன, நடக்காவிட்டால் என்ன என்ற பெரும்போக்கில் இருப்பார். நாம் சென்று இந்த மாதிரி அலுவலக உதவியாளர்கள் பட்டியல்களைத் தீர்வு செய்யவில்லை என்று சொன்னால், அதற்கு அவர் சொல்லும் பதில் "நான் ஒழுங்காக பணி ஓய்வு பெற வேண்டாமா? அனுசரித்துப் போங்கப்பா" என்பதாகும். இதை நன்கு உணர்ந்துள்ள நான் நம்பினது "உன் கை சுத்தமாக இருந்தால் ஒரு கெடுதலும் வராது" என்பதுதான். அதே மாதிரி நான் எந்த வில்லங்கமும் இல்லாமல் பணி ஓய்வு பெற்றேன்.

முள்கம்பி விவகாரத்திற்கு வருவோம். கடைக்காரர்கள் அரசு அலுவலகங்களுக்கு பொருள் கொடுத்தால் பணம் சரியாக வருவதில்லை என்று சொன்னார்கள் அல்லவா?அவர்களிடம் நான் சொன்னேன். நான் உங்களுக்கு பணம் கொடுத்துவிட்டுப் பொருளைப் பெற்றுக் கொள்கிறேன் என்றேன். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்! அரசு அலுவலகத்தில் அது எப்படி முடியும் என்று கேட்டார்கள்?  அதைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம், விலைப் பட்டியலை மட்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டேன்.
கூடவே அவர்கள் கடை விலாசம் அச்சடித்த கவர் ஒன்றையும் வாங்கிக்கொண்டேன்.

இப்படியாக நான்கு கடைகளில் விலைப் பட்டியலும் கவர்களும் வாங்கியாயிற்று. எந்தக் கடைக்காரர் விலை குறைவாகக் கொடுத்திருக்கிறார் என்பது அங்கேயே தெரியும்தானே. அந்த முள்கம்பி நல்ல தரமுள்ளதுதானா என்று என்னுடன் வந்திருந்த பொறியாளரைக் கேட்டேன். அது நல்ல தரம்தான் என்று அவர் கூறினார். உடனே அந்தக் கடைக்குச் சென்று எங்களுக்கு இவ்வளவு டன் முள்கம்பி வேண்டும். மூன்று நாள் கழித்துத் தேதி போட்டு ஒரு பட்டியல் கொடுங்கள் என்று கேட்டேன்.

அவர்களும் அப்படியே கொடுத்தார்கள். அந்த நான்கு கடைகளில் வாங்கியிருந்த விலைப் பட்டியல்களையும் அந்தந்த கடை கவரில் போட்டு நாங்கள் தயாராக கொண்டு போயிருந்த தபால் தலைகளை ஒட்டி அங்கு அருகில் உள்ள தபால் பெட்டியில் போட்டு விட்டு தஞ்சாவூருக்குத் திரும்பினோம். அலுவலக தபால் அனுப்பும் ரிஜிஸ்டரில் நாங்கள் கடிதம் கொடுத்த கடைக்காரர்களின் பெயர்களை எழுதி அவைகளை இரண்டு நாள் முன்பாக  தபாலில் சேர்த்ததாக கணக்கு எழுதி, அதற்கான தபால் தலைகளைக் கணக்கில் குறைத்தோம்.

இது எல்லாம் தில்லுமுல்லு வேலை அல்லவா என்று நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிகிறது. இங்குதான் நீங்கள் திருவள்ளுவர் சொல்லிப் போனதை நினைவு கூறவேண்டும்.

குறள்: 292 (பொய்ம்மையும்)

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின் (02)

இந்த விவகாரத்தில் நாங்கள் எந்தக் கடைக்காரரையும் விலையை ஏற்றச் சொல்லியோ குறைக்கச் சொல்லியோ கேட்கவில்லை. எந்தக் கடையிலும் ஒரு காப்பி கூட வாங்கிக் குடிக்கவில்லை. இந்த வாய்மையினால்தான் நான் செய்த இந்த தில்லுமுல்லுகள் என்னை ஒன்றும் செய்யவில்லை. முள் கம்பி போடுவது மிகவும் அவசியம். அதற்காக நான் இப்படி செய்தேன்.

அடுத்த நாள் நாங்கள் தபாலில் போட்ட விலைப் பட்டியல்கள் வந்து சேர்ந்தன. அதை முறைப்படி சரிபார்த்து, எந்தக்கடை குறைவாக விலை சொல்லியிருந்தார்களோ அவர்களுக்கு சப்ளை ஆர்டர் போட்டோம். அதைத் தபாலில் அவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.

அடுத்த நாள் அவர்கள் கொடுத்த பட்டியலை எடுத்து முள் கம்பிகள் வந்து சேர்ந்ந்தாக கணக்கில் காட்டி அந்தத் தொகைக்கு ஒரு செக் போட்டு அந்தப் பொறியாளரிடம் கொடுத்து இதைக் கொண்டு போய் அந்தக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு முள் கம்பியை எடுத்து வாருங்கள் என்று ஒரு டிராக்டருடன் அனுப்பி வைத்தேன். முள் கம்பி வந்து விட்டது. அதே பொறியாளர் அவைகளை வைத்து வேலி போட்டு முடித்து விட்டார்.

என் மேலதிகாரி அடுத்த முறை வந்தபோது இந்த வேலியைப் பார்த்து விட்டு நன்றாகச் செய்திருக்கிறீர்கள் என்று பாராட்டிவிட்டுப் போனார். ஆறு மாதம் கழித்து ஆடிட் ஆட்கள் வந்து ஆடிட் செய்து முடித்தார்கள். கடைசியாக அவர்கள் எழுதிய குறிப்புகளை ஆராய்ந்தபோது இந்த சமாச்சாரத்தில் ஒரு தப்பும் அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை.

ஆகவே அவர்களாக கற்பனை செய்து ஒரு குற்றத்தை எழுதினார்கள். அந்தப் பொறியாளர் விலைப் பட்டியல் வாங்குவதற்காக டூர் போனது அவருடைய டெக்னிகல் வேலையல்ல. ஆதலால் அந்த டூர் போனதிற்கான பயணப்படியைத் திரும்பப் பெறவேண்டும் என்று எழுதியிருந்தார்கள்.

எனக்கு கோபமான கோபம் வந்தது. எது டெக்னிகல் வேலை, எது நான்-டெக்னிகல் வேலை என்பதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? உங்கள் வேலை கணக்குகள் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது மட்டும்தான் அதை மட்டும் நீங்கள் ஒழுங்காகச் செய்யுங்கள். இப்படி எழுதுவதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சத்தம் போட்டு விட்டு, இதை இப்போதே நீங்கள் அடித்துவிடவேண்டும். அப்படி அடிக்காவிட்டால் நான் இப்பொழுதே உங்கள் மேலதிகாரிக்குப் போன் செய்து நீங்கள் எழுதியுள்ள அக்கிரமமான குறிப்பைப் பற்றி சொல்லுவேன். அது தவிர நான் இந்தக் குறிப்பைப் பார்த்தாகவும் கையெழுத்துப் போடமாட்டேன் என்று சொல்லிவிட்டு என் அறைக்குப் போய்விட்டேன்.

அந்த ஆடிட்டர்கள் என் கோபத்தைக் கண்டு பயந்து விட்டார்கள் மறு பேச்சுப் பேசாமல் அந்தக் குறிப்பை நீக்கினார்கள். ஆடுகிற மாட்டை ஆடிக்கறக்க வேண்டும், பாடுகிற மாட்டைப் பாடிக்கறக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்.