ஞாயிறு, 18 அக்டோபர், 2015

புதுக்கோட்டை பதிவர் மகாநாடு


இப்பதிவில்தான் புதுக்கோட்டை பதிவர் மகாநாட்டு நிகழ்வுகளைப் பற்றிக் கூறப்போகிறேன்.

ஒரு விழா நடத்துவதென்றால் அதற்கு எவ்வளவு முன்னேற்பாடுகளும் திட்டமிடுதலும் தேவை என்பதை இம்மாதிரி விழாக்கள் நடத்தியவர்கள் அறிவார்கள். அந்த முறையில் திரு. முத்து நிலவன் தலைமையில் ஒரு பெரிய பட்டாளமே இந்த விழாவிற்காகப் பாடுபட்டிருக்கிறது. அந்தக் குழு மிக ஒற்றுமையாகப் பணியில் ஈடுபட்டதை நான் கண்டேன்.

                             

அனைத்து நிகழ்ச்சிகளும் சீரிய முறையில் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. விழா சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்ணின் குரல் மிகவும் இனிமையாஆக இருந்தது. அந்தப் பெண் ஒரு பதிவரின் மகள் என்று அறிந்து மகிழ்ந்தேன்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் கம்பீரமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். அவரின் கணீர் குரலும் சரளமான தீந்தமிழும் என்னை மிகவும் கவர்ந்தன. அனைத்து சிறப்பு விருந்தினர்களும் மேடையில் அமர்ந்த பிறகு திரு.முத்து நிலவன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அந்த உரையில் அவர் இந்த விழாவை எவ்வளவு நுணுக்கமாகத் திட்டமிட்டிருக்கிறார் என்பது வெளிப்பட்டது.

முதலில் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய தமிழ் மன் கட்டுரைப் போட்டிகளுக்கான பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. அதன் பிறகு வேறு சில விருதுகளும் பல பதிவர்களுக்கு வழங்கப்பட்டன. பின்பு சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராகப் பேசினார்கள்.

தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர் திரு.ரவிசங்கர் புதுக்கோட்டைக்காரர். அவர் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவத்தை அருமையாக எடுத்துரைத்தார்.

அடுத்துப்பேசிய தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் துணை இயக்குனர் திரு.தமிழ்ப் பரிதி, இணையக் கல்விக்கழகம் ஆற்றி வரும் பணிகளைப் பற்றி விரிவாக எடுத்தரைத்தார்.

அடுத்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சுப்பையா அவர்கள் பதிவர் திருவிழாவைப் புகழ்ந்து சில வார்த்தைகள் பேசிய பின்பு அடுத்த பதிவர் மகாநாட்டில் அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து செயலாற்றும் என்ற வாக்குறுதி கொடுத்தார்.

சென்ற பதிவர் சந்திப்புகளிலெல்லாம் வந்திருக்கும் பதிவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக வரிசையாக மேடையில் ஏற்றி சுய அறிமுகம் செய்வித்தார்கள். இதற்கு பல மணி நேரம் ஆனதோடு அல்லாமல் கூட்டத்தில் அமைதி காக்க முடியவில்லை. திரு முத்து நலவன் இந்த சந்திப்பில் நூதனமான முறை ஒன்றைக் கடைப்பிடித்தார். நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒரு ஐந்து முதல் பத்துப் பதிவர்களை மேடையில் ஏற்றி சுய அறிமுகம் செய்யவைத்தார்.

இந்த முறையில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் சோர்வு தருவதைத் தவிர்க்க முடிந்தது. இது ஒரு அருமையான திட்டமாக அமைந்தது. பதிவுலகப் பிதாமகர் என்று சொல்லக்கூடிய புலவர் திரு.ராமானுசம் ஐயா அவர்கள் தன்னுடைய உடல் நிலையைக் கருதாது விழாவிற்கு வந்திருந்தது ஒரு தனிச்சிறப்பு. என் பேரில் அவருக்கு ஒரு தனிப் பாசம் உள்ளது. என்னை அவர் பக்கத்திலேயே அமர்த்திக்கொண்டார்.


அவரை மேடைக்கு வரவழைத்து பொன்னாடை போர்த்தி, நினைவுக்கேடயம் தந்து சிறப்பாகப் பெருமைப் படுத்தினார்கள். அதே போல் வலைச்சர ஆசிரியர் திரு சீனா ஐயா அவர்களுக்கும் போன்னாடை போர்த்தி நினைவுக் கேடயம் தந்து கௌரவம் செய்தார்கள். இந்த இரண்டு பேருக்கும் சிறப்புச் செய்தது அனைத்துப் பதிவர்களுக்கும் சிறப்பு செய்ததற்கு ஒப்பாகும்.

பிறகு மதிய உணவு இடைவேளை வந்தது. நானும் புலவர் இராமனுசம் அய்யாவும் சாப்பிடப்போனோம். சாப்பிட்டு முடித்தவுடன் எனக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. இந்திர சபையில் ரம்பையும் மேனகையும் நடனமாடுவதைப் பார்க்க வருமாறு இந்திரன் அழைத்தான். இது என் தினசரி மாமூல் வாடிக்கைதான். ஆதலால் விழாக்குழு பொருளாளரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு லாட்ஜுக்குப் போய்விட்டேன்.

உணவு இடைவேளைக்குப் பிறகு பதிவர் திருவிழாவில் புத்தகங்கள் வெளியீடும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் பேச்சும் மற்ற பதிவர்களின் அறிமுகங்களும் நன்றியுரையும் நடந்தேறியதாகப் பதிவுகளில் படித்துத் தெரிந்து கொண்டேன். தேசீய கீதம் பாடி விழா இனிதே நிறைவேறியது. ஆக மொத்தம் ஒரு அரசு விழா எப்படி நடத்தப்பட வேண்டுமென்று நடைமுறை இலக்கணங்கள் இருக்கிறதோ அதில் இம்மியளவும் மாறாமல் விழா சிறப்பாக நடைபெற்றது. 

10 கருத்துகள்:

  1. ஹா....ஹா... திடீரென சுருக்கமாகக் கொண்டுபோய் விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. விரிவாக எழுத எழுத தவறுகளும் விரிவடையும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  3. சந்திப்பு பற்றிய உங்கள் பதிவினை ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அன்று உங்கள் நீங்கள் செய்த உதவி என்றும் என்னால் மறக்க இயலாது! நன்றி முனைவரே!

    பதிலளிநீக்கு
  5. இருந்தாலும் ஒரு விழாவில் இருக்கும் பொழுது இந்திர சபையிலிருந்து உடனே வரச்சொல்லி அழைப்பது சபை நாகரீகம் இல்லை ஐயா

    பதிலளிநீக்கு
  6. மாநாடு முடிவடைந்தது.
    அதன்பின் வீடு திரும்பும்வரை ...
    நிகழ்வுகள் பதிவில் வருமா?

    பதிலளிநீக்கு
  7. //சாப்பிட்டு முடித்தவுடன் எனக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. இந்திர சபையில் ரம்பையும் மேனகையும் நடனமாடுவதைப் பார்க்க வருமாறு இந்திரன் அழைத்தான். இது என் தினசரி மாமூல் வாடிக்கைதான். ஆதலால் விழாக்குழு பொருளாளரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு லாட்ஜுக்குப் போய்விட்டேன்.//

    ஜீவனுள்ள நகைச்சுவையான இவ்வரிகளை நான் மிகவும் ரஸித்தேன். நல்ல காரியம் செய்தீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  8. விரிவாக எழுதுவீர்கள் என நினைத்திருந்தேன். சுருக்கமாக முடித்துவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு