சனி, 30 ஜனவரி, 2016

இணையமும் புத்தகங்களும்

                                  இன்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அநேகமாக உங்களில் பலருக்கும் இந்த மின்னஞ்சல் வந்திருக்கலாம்.


இந்தக் கட்டுரையை தமிழாக்கம் செய்து த.சீனிவாசன் tshrinivasan@gmail.com என்பவர் மின்னஞ்சலாக அனுப்பியிருக்கிறார்.

இந்தக் கட்டுரை ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதில் 

கூறப்பட்டுள்ளவை அனைத்தும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

நான் சிறுவயதில் ஏறக்குறைய என்னுடைய பத்தாவது வயதில் விகடனுக்கு அறிமுகமானேன். பக்கத்து வீட்டில் விகடன் வாங்கினார்கள். அதை ஓசியில் வாங்கிப் படிப்பேன். அப்போது இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிய செய்திகள் விகடனில் வந்து கொண்டிருந்தன. 

விகடனை ஒரு உச்சிக்குடுமி முகமாகவும் அந்த யுத்தச் செய்திகளைத் தரும் நிருபரை ஒரு குரங்காகவும் சித்தரித்து படங்கள் போடுவார்கள். இன்றும் அந்த உச்சிக்குடுமி படம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போதுதான் குமுதம் பத்திரிக்கை வெளி வர ஆரம்பித்தது. அந்தப் பத்திரிக்கையின் கோவை ஏஜன்ட் எங்கள் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ தூரத்தில் இருந்தார். குமுதம் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டவுடன் கமுதம் வரும் நாளில் அந்த ஏஜன்ட்டின் வீட்டிற்கே காலையில் ஆறரை மணிக்குப் போய்விடுவேன். குமுதம் பார்சல் வந்து பிரித்தவுடன் முதல் பிரதியை நான் வாங்கி படித்துக்கொண்டே வீட்டிற்கு வருவேன். வீட்டிற்கு வருவதற்குள் ஏறக்குறைய முழுக் குமுதத்தையும் படித்து விடுவேன்.


அப்போது அவ்வளவு ஆர்வத்துடன் படித்த விகடன் எப்போது உருமாறியதோ அப்போதே அதில் ஆர்வம் போய்விட்டது. குமுத த்தின் பாணியும் மாறி விட்டது. அது தவிர இப்போது வரும் வாரப் பத்திரிக்கைகளில் சினிமா செய்தி தவிர வேறு எதையும் காணோம். இப்போது வாரப் பத்திரிக்கைகளைப் பார்த்தால் எடுத்துப் புரட்டிப் பார்க்கக் கூடத் தோன்றுவதில்லை.

கொஞ்ச நாளில் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய/மொழிபெயர்த்த துப்பறியும் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்துப்போயின. ஜே.ஆர். ரங்கராஜு என்வரும் அப்போது துப்பறியும் நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தார். இந்த இரண்டு பேரின் நாவல்களையும் ஏறக்குறைய எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் என் வாசிப்பின் வேகம் மணிக்கு நூறு பக்கம். ஒரு நாவலைப் படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் அதை கீழே வைக்க மாட்டேன். பள்ளியில் டெஸ்க்குக்கு கீழே வைத்துப் படித்ததும் உண்டு. 


பிற்காலத்தில் ஆங்கில நாவல்களையும் அதே ஆர்வத்துடன் படிப்பேன். வேலையில் சேர்ந்து அதில் மூழ்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் படிக்கும் வழக்கம் குறைந்து போனது. அதுவும் இந்த இணையம் வந்த பிறகு புத்தகம் என்று ஒன்று இருப்பதையே மறந்து போனோம். நான் மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையே.

ஆனால் சமீப காலமாக இணையத்தில் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது. பதிவு எழுதுவதற்கு கற்பனை ஓடமாட்டேனென்கிறது. ஆனால் புத்தகம் படிக்க ஆர்வம் வந்துள்ளது. இணையத்தில் கோடிக்கணக்கான புத்தகங்கள் கிடைக்கின்றன. அவைகளை தரவிறக்கி ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டு வருகிறேன்.

அதே போல் நல்ல பாட்டுகளையும் தரவிறக்கி வைத்துக்கொண்டு கேட்கிறேன். சமீபத்திய ஆங்கிலத் துப்பறியும் நாவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. எனக்கு அன்பளிப்பாக க் கிடைத்த "டேப்" பில் புத்தகங்களை சேமித்து வைத்துக் கொண்டு படிக்க வசதியாக இருக்கிறது. அதுவும் அமேசான் காரன் இலவசமாகவும் மிக சலீசான விலையிலும் நிறைய புத்தகங்கள் கொடுக்கிறான். எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். படித்துக்கொண்டும் வருகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக பதிவுகள் எழுதுவதில் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. காரணம் பதிவுலகம் நலிந்து விட்டது. நல்ல பதிவுகள் எழுதுபவர்களைக் காண முடிவதில்லை. போட்டி இருந்தால்தானே எதுவும் சோபிக்கும். 

18 கருத்துகள்:

  1. //சமீப காலமாக இணையத்தில் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது.//

    //கொஞ்சம் கொஞ்சமாக பதிவுகள் எழுதுவதில் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. காரணம் பதிவுலகம் நலிந்து விட்டது. நல்ல பதிவுகள் எழுதுபவர்களைக் காண முடிவதில்லை.//

    இவர் சொல்வது சரியென்றே எனக்கும் தோன்றுகிறது. நல்ல பதிவுகள் எழுதுபவர்கள் குறைந்துகொண்டேதான் வருகிறார்கள் என்பதை நன்கு நம்மால் உணரவும் முடிகிறது.

    அப்படியும் வெகு சிலர் மட்டும் இன்னும் நல்ல பதிவுகளாகக் கொடுத்து வருகிறார்கள். அந்த வெகுசிலரை அடையாளம் கண்டு உற்சாகப்படுத்தி ஆதரிக்கும் வாசகர்கள் குறைந்து வருகிறார்கள் என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. யம்மாடி...! வேகம் மணிக்கு நூறு பக்கம்...!

    போட்டி தானே...? வைத்து விடுவோம் ஐயா...

    பதிலளிநீக்கு

  3. ஐயா

    .// குமுதம் பார்சல் வந்து பிரித்தவுடன் முதல் பிரதியை நான் வாங்கி படித்துக்கொண்டே வீட்டிற்கு வருவேன். வீட்டிற்கு வருவதற்குள் ஏறக்குறைய முழுக் குமுதத்தையும் படித்து விடுவேன்.//

    தற்போது அவ்வாறு செய்வீர்களானால் நேரே குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அவர்களிடமே சென்று விடுவீர்கள்.

    கொஞ்சம் நாள் முன்பு நீங்களே பதிவுலகில் பல பதிவர்களும் காணாமல் போய் விடுகிறார்கள் என்று கவலைப் பட்டீர்கள்.பின்னர் "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்" என்று கூற ஆரம்பித்தீர்கள்.

    தற்போது பதிவுலகில் இருந்து விலகப் போகிறீர்கள்.

    இது அநியாயம். வயதில் மூத்த பதிவர் (உங்களை விட மூத்தவர் யாரும் பதிவு எழுதுவதாகத் தெரிய வில்லை.) நீங்களே இப்படி சொன்னால் எப்படி. நான் இது உங்களுடைய பிரசவ வைராக்கியம் என்று கருதுகிறேன்.
    -- .
    Jayakumar

    .

    பதிலளிநீக்கு
  4. முனைவர் அய்யா அவர்களுக்கு, படிப்பது ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் வலைப்பதிவில் அவ்வப்போது எழுதும்படியும் கேட்டுக் கொள்கிறேன். தனிமையை மறக்கடிக்க, ஃபேஸ் புக்கைவிட வலைப்பதிவு மேல் எனலாம். எனவே இந்த பின்னூட்டம் வழியே ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற தொடர் பதிவை எழுதுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அல்லது நீங்களே ஒரு வித்தியாசமான தலைப்பில் தொடர் பதிவு ஒன்றை புதிதாகத் தொடங்கி வைக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. முனைவர் ஐயா அவர்கள் இதனைக் கட்டாயமாக பரிசீலிக்க வேண்டும் என நானும் கேட்டுக்கொள்கிறேன்.

      நீக்கு
  5. வாசிப்பே குறைந்து விட்டது - புத்தகமாக இருந்தாலும், இணைய இதழ்களாக இருந்தாலும்.....

    பதிலளிநீக்கு
  6. நாம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டால் நல்ல பதிவு எழுதுபவர்கள் எண்ணிக்கை குறைகிறது என்று அர்த்தமா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ, நான் உங்களைச் சொல்லவில்லை. உங்கள் பதிவுகளை மிஞ்சவதற்கு யாரும் இல்லை. என்னுடைய பதிவுகளெல்லாம் வெறும் சாறு பிழிந்த சக்கைகள்.

      நீக்கு
  7. உண்மை . நானும் கூட குமுதம் விகடன் பத்திரிகைகளை வாங்கிப் படிக்கும் பழக்கம் சொல்லப் போனால் பைத்தியாமாகவே இருந்தேன்,டெல்லியில் இருந்தபோது சனிக்கிழமை வரும் குமுதத்துக்காகவே கனாட் பிளேஸ் போய் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் லேட்டாக வந்தால் குமுதம் கடைக்கு வர தாமதாக வரும் . காத்திருந்து வாங்கிய நாட்களும் உண்டு .இப்பொழுது குமுதமோ விகடனோ வாங்குவது இல்லை படிப்பதும் இல்லை

    பதிலளிநீக்கு
  8. யோசிக்க வேண்டிய விசயம்தான்
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
  9. படிக்கப் படிக்க சிந்தனை கூடும். அப்போது எழுத கை தானாக துருதுருக்கும்! எழுதுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. சார்...!
    நீங்க படியுங்க... வேணாங்கலை!
    இங்கேயும் எழுதுங்க... அம்புட்டுதான்...

    பதிலளிநீக்கு
  11. தொடர்ந்து படித்து பகிர்ந்துகொள்ளுங்கள் ஐயா. உங்களது எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துவருவோரில் நானும் ஒருவன்.

    பதிலளிநீக்கு


  12. இணையத்தின் மீதுள்ள ஆர்வம் குறைந்தாலும் பதிவிடுவதை நிறுத்தமாட்டீர்கள் என நம்புகிறேன். நிறுத்தவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. சார்... நீங்கள் நினைப்பது தவறு. இணையத்தில் பதிவுகள் எல்லோராலும் முழுமையாக உடனுக்குடன் படிக்கப்படுவதில்லை. நீங்கள் சொன்ன துரைசாமி ஐயங்கார் நூல்களைப் பற்றி யாருக்கும் (பெரும்பான்மை. தற்காலத்தவர்) தெரியாது. ஆனால், எனக்கு, டவுண்லோடு லிங்க் கிடைத்துப் படித்தேன். உங்கள் பழைய பதிவுகளையும் அவ்வப்போது படிக்கிறேன். தன் அனுபவத்தையும், தான் கற்றுத்தேர்ந்தவைகளையும் பதிவாக எழுதிவைப்பது எப்போதும் நல்லது. நிச்சயம் வாசகர்கள் படிப்பார்கள். ஒரு வகுப்பு என்றிருந்தால், முதல் பெஞ்சில் இருந்து கடைசி பெஞ்ச் வரை இருக்கும். இதில் போட்டி எதற்கு? படிப்பவர்களுக்குத் தெரியாதா எது பதர் எது 'நெல் என்று?

    பதிலளிநீக்கு
  14. முன்பெல்லாம் ஆனந்தவிகடன், குமுதம் கல்கி என்று வாசித்ததுண்டு ஆனால் இப்போதெல்லாம் எதுவும் வாசிப்பதில்லை. ஆனால் இணையத்தில் வாசிப்பது உண்டு. வாசிப்பு இருந்தால் எழுதவும் மேட்டர் தேருமே ஐயா.

    பதிலளிநீக்கு