இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜனவரி, 2016

இணையமும் புத்தகங்களும்

                                  இன்று எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அநேகமாக உங்களில் பலருக்கும் இந்த மின்னஞ்சல் வந்திருக்கலாம்.


இந்தக் கட்டுரையை தமிழாக்கம் செய்து த.சீனிவாசன் tshrinivasan@gmail.com என்பவர் மின்னஞ்சலாக அனுப்பியிருக்கிறார்.

இந்தக் கட்டுரை ஒரு பெரிய உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதில் 

கூறப்பட்டுள்ளவை அனைத்தும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

நான் சிறுவயதில் ஏறக்குறைய என்னுடைய பத்தாவது வயதில் விகடனுக்கு அறிமுகமானேன். பக்கத்து வீட்டில் விகடன் வாங்கினார்கள். அதை ஓசியில் வாங்கிப் படிப்பேன். அப்போது இரண்டாம் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அதைப் பற்றிய செய்திகள் விகடனில் வந்து கொண்டிருந்தன. 

விகடனை ஒரு உச்சிக்குடுமி முகமாகவும் அந்த யுத்தச் செய்திகளைத் தரும் நிருபரை ஒரு குரங்காகவும் சித்தரித்து படங்கள் போடுவார்கள். இன்றும் அந்த உச்சிக்குடுமி படம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போதுதான் குமுதம் பத்திரிக்கை வெளி வர ஆரம்பித்தது. அந்தப் பத்திரிக்கையின் கோவை ஏஜன்ட் எங்கள் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ தூரத்தில் இருந்தார். குமுதம் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டவுடன் கமுதம் வரும் நாளில் அந்த ஏஜன்ட்டின் வீட்டிற்கே காலையில் ஆறரை மணிக்குப் போய்விடுவேன். குமுதம் பார்சல் வந்து பிரித்தவுடன் முதல் பிரதியை நான் வாங்கி படித்துக்கொண்டே வீட்டிற்கு வருவேன். வீட்டிற்கு வருவதற்குள் ஏறக்குறைய முழுக் குமுதத்தையும் படித்து விடுவேன்.


அப்போது அவ்வளவு ஆர்வத்துடன் படித்த விகடன் எப்போது உருமாறியதோ அப்போதே அதில் ஆர்வம் போய்விட்டது. குமுத த்தின் பாணியும் மாறி விட்டது. அது தவிர இப்போது வரும் வாரப் பத்திரிக்கைகளில் சினிமா செய்தி தவிர வேறு எதையும் காணோம். இப்போது வாரப் பத்திரிக்கைகளைப் பார்த்தால் எடுத்துப் புரட்டிப் பார்க்கக் கூடத் தோன்றுவதில்லை.

கொஞ்ச நாளில் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய/மொழிபெயர்த்த துப்பறியும் நாவல்கள் எனக்கு மிகவும் பிடித்துப்போயின. ஜே.ஆர். ரங்கராஜு என்வரும் அப்போது துப்பறியும் நாவல்கள் எழுதிக்கொண்டிருந்தார். இந்த இரண்டு பேரின் நாவல்களையும் ஏறக்குறைய எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் என் வாசிப்பின் வேகம் மணிக்கு நூறு பக்கம். ஒரு நாவலைப் படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் அதை கீழே வைக்க மாட்டேன். பள்ளியில் டெஸ்க்குக்கு கீழே வைத்துப் படித்ததும் உண்டு. 


பிற்காலத்தில் ஆங்கில நாவல்களையும் அதே ஆர்வத்துடன் படிப்பேன். வேலையில் சேர்ந்து அதில் மூழ்கிய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் படிக்கும் வழக்கம் குறைந்து போனது. அதுவும் இந்த இணையம் வந்த பிறகு புத்தகம் என்று ஒன்று இருப்பதையே மறந்து போனோம். நான் மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையே.

ஆனால் சமீப காலமாக இணையத்தில் மீதுள்ள ஆர்வம் குறைந்துள்ளது. பதிவு எழுதுவதற்கு கற்பனை ஓடமாட்டேனென்கிறது. ஆனால் புத்தகம் படிக்க ஆர்வம் வந்துள்ளது. இணையத்தில் கோடிக்கணக்கான புத்தகங்கள் கிடைக்கின்றன. அவைகளை தரவிறக்கி ஒவ்வொன்றாகப் படித்துக்கொண்டு வருகிறேன்.

அதே போல் நல்ல பாட்டுகளையும் தரவிறக்கி வைத்துக்கொண்டு கேட்கிறேன். சமீபத்திய ஆங்கிலத் துப்பறியும் நாவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. எனக்கு அன்பளிப்பாக க் கிடைத்த "டேப்" பில் புத்தகங்களை சேமித்து வைத்துக் கொண்டு படிக்க வசதியாக இருக்கிறது. அதுவும் அமேசான் காரன் இலவசமாகவும் மிக சலீசான விலையிலும் நிறைய புத்தகங்கள் கொடுக்கிறான். எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன். படித்துக்கொண்டும் வருகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக பதிவுகள் எழுதுவதில் ஆர்வம் குறைந்து கொண்டு வருகிறது. காரணம் பதிவுலகம் நலிந்து விட்டது. நல்ல பதிவுகள் எழுதுபவர்களைக் காண முடிவதில்லை. போட்டி இருந்தால்தானே எதுவும் சோபிக்கும். 

திங்கள், 7 ஜூலை, 2014

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட்டும் நானும்


நான் ஐந்து வருடங்களாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட் உபயோகித்து வருகிறேன். பிளான் பெயர்   BSNL FN COMBO 500.
இந்த பிளான் எனக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது. எப்படியென்றால் இந்த பிளானில் காலை 2 மணி முதல் 8 மணி வரை இன்டர்நெட் உபயோகத்திற்கு கட்டணம் இல்லை. காலை 8 மணி முதல் மறுநாள் காலை 2 மணி வரையிலான உபயோகத்திற்கு 1.5 GB இலவசமும் அதற்கு மேல் உபயோகித்தால் ஒரு MB க்கு 20 பைசா என்றும் கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள். இன்டர்நெட் நல்ல வேகமும் கூட ( 2 MBPS).

என்னைப்போல் ஜாமக்கோடங்கிகளுக்கு இது மிகவும் உபயோகமாக இருந்தது. காலை 3 மணிக்கு எழுந்திருந்து 8 மணிக்குள் இன்டர்நெட் வேலைகளையெல்லாம் முடித்து விடுவேன். பகல் நேரத்தில் இன்டர்நெட் மிகவும் அத்தியாவசியமாக இருந்தால் ஒழிய உபயோகிப்பதில்லை. பகல் நேர உபயோகத்தை இலவச லிமிட்டை தாண்டாமல் உபயோகித்து வந்தேன்.

இரவு நேர இலவச உபயோகத்தில் மாதத்திற்கு ஏறக்குறைய 50-60 GB உபயோகித்து விடுவேன். இது மிகவும் சலீசான பிளானாக இருந்தது. இதைப் பொறுக்காத யாரோ ஒரு பிஎஸ்என்எல் ல் வேலை பார்க்கும் பொறாமைப் பிண்டம், மேலிடத்திற்குப் போட்டுக்கொடுத்து விட்டார்கள் போல இருக்கிறது. பிஎஸ்என்எல் ஏற்கனவே எதிலெல்லாம் ரேட்டை உயர்த்தலாம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு காத்திருந்தார்கள். காரணம் பிஎஸ்என்எல் நஷ்டத்தில் ஓடுகிறதாம். மந்திரிகள் போன் பில்லை வசூல் செய்வதே இல்லை. அப்புறம் என்ன லாபம் வரும்?


வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்து விட்டது. சும்மா இருப்பார்களா? இரவு இலவசத்திற்கு வேட்டு வைத்து விட்டார்கள். அதற்குப் பதிலாக சலுகை கட்டணம் வழங்கப் போகிறார்களாம். எவ்வளவு தெரியுமா?
ஒரு  MB க்கு வெறும் 15 பைசாதானாம். அப்போ ஒரு  GB க்கு எவ்வளவு ஆகிறது என்று பார்த்தால் வெறும் 150 ரூபாய்தான். என்னுடைய மாத உபயோகமான 50  GB க்கு சும்மா 7500 ரூபாய் கொடுத்தால் போதும்.

ஒரு பிளாக்கருக்கு வந்த சோதனையைப் பாருங்கள். இந்த ரேட்டில் நான் என் தலையை அடகு வைத்தால் கூட டெலிபோன் பில் கட்டமுடியாது. என் தலையை எவன் அடகு வாங்குவான் என்பது வேறு விஷயம்.

உடனே வேறு மாற்று ஏற்பாடு செய்தாகவேண்டுமே. பிஎஸ்என்எல் ஆபீசுக்கு ஓடினேன். இந்த மாதிரி கஸ்டமருக்கு சொல்லாமல் பிளானை மாற்றுவது நியாயமா என்று கேட்டேன். அங்கிருந்தவர்கள் அப்படியா, ஏதோ நைட் பிளானை மாற்றுவதாக ஒரு பேச்சு அடிபட்டது, மாற்றி விட்டார்களா என்று என்னையே திருப்பிக் கேட்டார்கள். இது எப்படி இருக்கு பாருங்க.

உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று அடுத்த கேள்வி. நான் தினமும் காலையில் கம்ப்யூட்டரை ஆன் பண்ணினதும் இன்டர்நெட் உபயோகக் கணக்கை பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன். இதனால் கணக்கில் ஏதோ தவறு மாதிரி தெரிந்ததும் உஷாராகி விட்டேன். இப்போது இந்தப் பிரச்சினைக்கு என்ன பண்ணலாம் என்று கேட்டேன்.

நீங்கள் இன்டர்நெட் பிளானை மாற்றி விடுங்கள், அது ஒன்றுதான் வழி என்றார்கள். பேய்க்கு வாழ்க்கைப் பட்டு விட்டு புளியமரம் ஏறமாட்டேன் என்றால் எப்படி? இருக்கிற பிளானில் என் பர்சுக்கு ஏற்றமாதிரி எனக்கு கண்ணில் பட்ட ஒரு பிளானுக்கு மாற்றித் தரும்படி கேட்டேன். ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடுத்து விட்டுப் போங்கள். நாளைக்கு மாற்றி விடுகிறோம் என்றார்கள். அப்படியே எழுதிக்கொடுத்து விட்டு வந்தேன்.

சொன்னபடி அடுத்த நாள் மாற்றி விட்டார்கள். எஸ்எம்எஸ் என் செல் போனுக்கு வந்தது. நான் மிக உற்சாகமாகி கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இனடர்நெட்டை ஓபன் செய்தேன். தலையில் கல் விழுந்தது போல் உணர்ந்தேன். காரணம் இன்டர்நெட் ஆமை வேகத்தில் நகர்கிறது. போன் பண்ணிக் கேட்டால், நாங்கள்தான் அப்போதே சொன்னோமே, வேகம் குறைவாக இருக்கும் என்று, நீங்கள் சரியென்று மண்டையை ஆட்டினீர்களே என்று என் தலை மீது இன்னொரு கல்லைப் போட்டார்கள்.

அவர்கள் கொடுத்திருந்த லிஸ்ட்டில் பார்த்தால் வேகம் அதிகமுள்ள பிளான்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் விலை போட்டிருக்கிறது. என்ன ஒரே ஆறுதல் என்றால் நான் வாங்கிய பிளான் அன்லிமிடெட் டவுன்லோடு உள்ள பிளான். நேற்று ஒரு டவுன்லோடை டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். முன்பு ஒரு மணி நேரத்தில் முடிந்த டவுன்லோடு இப்போது ஒரு இரவில் முடிந்து விட்டது.

நான் வாங்கிய பிளான். 650 C Home ULD. மாதம் 650 ரூபாய். வரிகள் தனி.

கழுதைக்கு தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்தாயிற்று. எப்படியாவது குடித்தனம் பண்ணித்தான் ஆகவேண்டும். விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள் !