வியாழன், 7 ஜூலை, 2016

ஆனைமலை மாசானியம்மன்

                            Image result for மாசானியம்மன்

எனக்கு முதன்முதலில் வேலைக்கு ஆர்டர் வந்த ஊர் ஆனைமலை என்று முன் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். நான் தனியாளாக இருந்தபடியால் அங்கு ஒரு வீட்டின் முன் பக்கம் தனியாக இருந்த ஒரு அறையில் வாடகைக்கு இருந்தேன். அதே வீட்டில்தான் அந்த ஊர் விவசாய டெமான்ஸ்ட்ரேட்டரும் குடியிருந்தார்.

நான் குடியிருந்த வீடு இப்போதும் இருக்கிறது. அதற்கு ஒரு அடையாளம் சொல்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள். பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை மாசானியம்மன் கோவில் போகவேண்டுமென்றால் ஆனைமலை போய் ஒரு இடத்தில் இடது புறம் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பும்போது இடது புறம் இருக்கும் முதல் வீடுதான் நான் குடியிருந்த வீடு.

அப்போது அந்தத் தெரு சாதாரணமாகத்தான் ஆள்  நடமாட்டமே  இல்லாமல்தான் இருந்தது. இப்போது இருக்கும் பிரபல  மாசானியம்மன் கோவில் அப்போது இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது. உள்ளூர்காரர் ஒருவர் இங்கே ஒரு கோவில் இருக்கிறது பார்க்கலாம் வாருங்கள் என்று ஒரு நாள் கூட்டிக்கொண்டு போனார்.

ஒரு நீண்ட சதுரக் கட்டிடம். ஓடு போட்டது. 40 அடிக்கு 20 அடி இருக்கும். நீளமாக இருக்கும் இரண்டு சைடுகளிலும் மூன்று மூன்று கதவுகள். கதவுகளில் மேல் பாதியில் வெறும் கம்பிகள் மட்டுமே இருந்தன. அதன் வழியாக உள்ளே பார்க்கலாம். உள்ளே தென்வடலாக ஒரு சுதையினால் ஆன ஒரு பெரிய உருவம் படுத்துக் கிடந்தது.

கட்டிடத்தைச் சுற்றிலும் புதர் மண்டிக்கிடந்தது. அந்தச் சிலைக்கு யாரும் பூசை செய்த மாதிரித் தெரியவில்லை. அந்த இடத்திற்கு யாரும் வந்து போகிற மாதிரியும் தெரியவில்லை. சரி ஏதோ ஒரு கிராம தேவதை கோவில் பராமரிப்பின்றி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

பல வருடங்கள் கழித்து திடீரென்று ஆனைமலை மாசானியம்மன் கோவில் பிரபலமாகி விட்டது. ஒரு தடவை அந்தப் பக்கம் போனபோது நான் போய்ப்பார்த்தேன். நான் முன்பு பார்த்ததிற்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஜனங்கள் கூட்டம் அலை மோதியது. அம்மனைப் பார்க்க பெரிய வரிசை, ஒரு மைல் தூரத்திற்கு நின்று கொண்டிருந்தது.

நான் மலைத்துப் போய்விட்டேன். கோவிலின் சுற்றுப் புறம் முழுவதும் கடை கண்ணிகள், ஓட்டல்கள், பூஜை சாமான் கடைகள் என்று வியாபித்திருந்தன. ஏறக்குறைய நூறு இருநூறு குடும்பங்கள் அந்தக் கோவிலை நம்பிப் பிழைத்துக்கொண்டிருந்தன. இந்த மாற்றம் எப்படி வந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்தக் கோவிலின் நடைமுறையைக் கவனித்தேன். மக்கள் தங்கள் தனிப்பட்ட கோரிக்கைகளை இந்த அம்மனிடம் வைத்தால் அவை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் வருவதைக் கவனித்தேன். சாதாரணக் கோரிக்கைகளைக் காகித த்தில் எழுதி அங்குள்ள அர்ச்சகர் மூலமாக அம்மனிடம் சேர்க்கப்பட்டு விட்டால் அந்தக் கோரிக்கைகள் நிறைவேறி விடும் என்று நம்புகிறார்கள். இந்த மாதிரி கோரிக்கைகளை எழுதிக்கொடுக்க அங்கே ஏகப்பட்ட புரோக்கர்கள் சுற்றிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.

இரண்டாவது கோரிக்கை முறை கொஞ்சம் விநோதமானது. உங்கள் வீட்டில் ஏதாவது பொருள் திருட்டுப்போய் விட்டால் இந்தக் கோவிலுக்கு வந்து அங்கிருக்கும் ஆட்டுக் கல்லில் கொஞ்சம் மிளகாயை நன்றாக அரைத்து அங்கே இருக்கும் ஒரு கல்லின் மீது தடவி விட்டால் அந்த பொருளைத் திருடியவனுக்கு உடம்பு முழுவதும் மிளகாயை அரைத்துப் பூசிய மாதிரி எரிச்சல் வந்து விடுமாம். என்ன செய்தாலும் அந்த எரிச்சல் போகாதாம். அந்தத் திருடின பொருளை எடுத்த இடத்தில் திரும்ப வைத்தால்தான் அந்த எரிச்சல் போகுமாம்.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அங்கே நாலைந்து ஆட்டுக்கல்கள் போடப்பட்டிருந்தன. பல பெண்கள் அவைகளில் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பரவாயில்லையே, மாசானியம்மன் போலீஸ் வேலையும் பார்க்கிறதே என்று நினைத்துக்கொண்டேன். இப்படியாக ஒரு கோவில் பிரபலமானதை என் வாழ்நாளில் நேரில் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது அந்த மாசானியம்மன் அருளால்தான் என்று நம்புகிறேன்..

12 கருத்துகள்:

  1. முனைவர் ஐயா அவர்களுக்கு...
    பதிவில் தாங்கள் சொல்லியிருக்கும் ஒரு விடயத்தால் எனக்கு குழப்பம் வருகின்றது அதாவது நீங்கள் ஆரம்பத்தில் பார்த்த அதே கோயில் (இன்று கொஞ்சம் மாற்றப்பட்டு இருக்கலாம்) அதே தெய்வம் அன்றிலிருந்து இன்றுவரை ஒரே சக்திதானே இருந்திருக்கும் இப்பொழுது மட்டும் அதற்கு பவர் கூடி இருப்பதைக்காணும் பொழுது சில திரைப்பட நடிகர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக நடிக்க வருகின்றார்கள் பிறகு பத்து வருடங்களில் முதல்வராக வா என்று ரசிகர்கள் சொல்வதும், சிலர் அவர்களை கடவுளைப்போல் ஆராதிப்பதையும் காணும் பொழுது இரண்டும் ஒரே கோணத்தில் எனக்கு படுகின்றது.

    //இப்படியாக ஒரு கோவில் பிரபலமானதை என் வாழ்நாளில் நேரில் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது அந்த மாசானியம்மன் அருளால்தான் என்று நம்புகிறேன்//

    முடிவில் ஸூப்பர் டயலாக் ஐயா.

    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழப்பவாதியான உங்களுக்கு குழப்பம் வருவதில் என்ன அதிசயம்? என்னுடைய பதிவுகளை ஒழுங்காகப் படித்து வந்திருந்தால் ஒன்று உங்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். அதாவது கடவுள்களை உண்டு பண்ணியவன் மனிதன். ஆகவே கடவுள்களுக்கும் அவர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஒரு ஜாதகம் கணிக்கப்பட்டிருக்கும். அந்த ஜாதக பலன் பிரகாரம் கடவுளுக்கு பிடித்திருந்த ஏழரை நாட்டு சனி விலகின பின் அதனுடைய சக்தி அபாரமாக அதிகரித்திருக்கும்.

      இது எல்லாம் புரிவதற்கு மேல் மாடியில் கொஞ்சம் சரக்கு (சிவசம்போ அல்ல) இருக்க வேண்டும்!!!

      நீக்கு
  2. மிளகாய் அரைத்துப் பூசுவது பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். பல கோவில்கள் இப்படித்தான் பிரபலமடைந்து விடுகின்றன.....

    பதிலளிநீக்கு
  3. மாசாணியம்மனை நானும் தரிசிச்சு இருக்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. அந்தக் கோவிலை நிறுவினவருக்கு / நிர்வகிப்பவருக்கு மார்க்கெடிங் சென்ஸ் அதிகம் இருந்திருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் முன்பு பார்த்த போது, அதாவது அந்தக் காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியிருந்தனர். அன்றாடப் பிழைப்பே கடினம். இதில் எங்கே கோயில் அம்மன் என்று செலவழிக்க முடியும். மேலும் இது போன்ற நாட்டார் தெய்வங்களை போற்றிடும் திராவிட மக்கள் அன்று நிலவிய கடவுள் மறுப்புக் கொள்கையால் ஈர்க்கப் பட்டு கோயில்களை புறக்கணித்தனர்.

    தற்போதைய நிலைமை வேறு.செய்த பாவங்களையும் குறுக்கு வழியில் சம்பாத்தித்த பணத்தையும் போக்க கோயில்களுக்கு செலவு செய்து புகழும் பெறுவோம் என்று பணமும் புகழும் பெறுகிறான்.

    தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் சிலை என்றால் சிலை தான். கிடைக்கும் நன்மைகளுக்கு எல்லாம் ஒரு காரணகர்த்தா அம்மனோ சாமியோ இருந்து விட்டு போகட்டுமே.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. இக்கோயிலுக்கு நான் இரு முறைகள் சென்றுள்ளேன். பார்க்கவேண்டிய கோயில்களில் ஒன்று. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கடந்த மே மாதம் கோவை - பாலக்காடு சென்றபோது மேற்படி கோயிலையும் பார்க்கவேண்டும் என்று என் மனைவி விரும்பினார். அன்று அமாவாசை ஆனதால் கூட்டம் பொங்கி வழிந்துகொண்டிருந்தது. கோவிலை சுற்றிலும் சிறு வணிகர்களின் அட்டகாசம் சொல்லி மாளாது. வாகனங்களில் இருந்து இறங்கிவரும் பயணிகளை வழிப்பறிக் கொள்ளையர்கள் போல் ஓடிவந்து சூழ்ந்து கொள்கிறார்கள். பொருளை வாங்காமல் போனால் வசைபாடுகிறார்கள். அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் இவர்களைக் குறித்து மிளகாய் அரைக்கலாம் என்று உத்தேசம்.-இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்து இந்து கோவில்களிலும் இதே நிலைதான். ஏண்டா கோவிலுக்குப் போனோம் என்று ஆகி விடுகிறது.

      நீக்கு
  8. இதையும் படித்துப் பாசுருங்கள்

    http://raboobalan.blogspot.com/2016/07/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்தேன். நல்ல அலசல். மூட நம்பிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போயிற்று.

      நீக்கு