ஆன்மீகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஜூலை, 2016

ஆனைமலை மாசானியம்மன்

                            Image result for மாசானியம்மன்

எனக்கு முதன்முதலில் வேலைக்கு ஆர்டர் வந்த ஊர் ஆனைமலை என்று முன் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். நான் தனியாளாக இருந்தபடியால் அங்கு ஒரு வீட்டின் முன் பக்கம் தனியாக இருந்த ஒரு அறையில் வாடகைக்கு இருந்தேன். அதே வீட்டில்தான் அந்த ஊர் விவசாய டெமான்ஸ்ட்ரேட்டரும் குடியிருந்தார்.

நான் குடியிருந்த வீடு இப்போதும் இருக்கிறது. அதற்கு ஒரு அடையாளம் சொல்கிறேன். தெரிந்து கொள்ளுங்கள். பொள்ளாச்சியிலிருந்து ஆனைமலை மாசானியம்மன் கோவில் போகவேண்டுமென்றால் ஆனைமலை போய் ஒரு இடத்தில் இடது புறம் திரும்ப வேண்டும். அப்படித் திரும்பும்போது இடது புறம் இருக்கும் முதல் வீடுதான் நான் குடியிருந்த வீடு.

அப்போது அந்தத் தெரு சாதாரணமாகத்தான் ஆள்  நடமாட்டமே  இல்லாமல்தான் இருந்தது. இப்போது இருக்கும் பிரபல  மாசானியம்மன் கோவில் அப்போது இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது. உள்ளூர்காரர் ஒருவர் இங்கே ஒரு கோவில் இருக்கிறது பார்க்கலாம் வாருங்கள் என்று ஒரு நாள் கூட்டிக்கொண்டு போனார்.

ஒரு நீண்ட சதுரக் கட்டிடம். ஓடு போட்டது. 40 அடிக்கு 20 அடி இருக்கும். நீளமாக இருக்கும் இரண்டு சைடுகளிலும் மூன்று மூன்று கதவுகள். கதவுகளில் மேல் பாதியில் வெறும் கம்பிகள் மட்டுமே இருந்தன. அதன் வழியாக உள்ளே பார்க்கலாம். உள்ளே தென்வடலாக ஒரு சுதையினால் ஆன ஒரு பெரிய உருவம் படுத்துக் கிடந்தது.

கட்டிடத்தைச் சுற்றிலும் புதர் மண்டிக்கிடந்தது. அந்தச் சிலைக்கு யாரும் பூசை செய்த மாதிரித் தெரியவில்லை. அந்த இடத்திற்கு யாரும் வந்து போகிற மாதிரியும் தெரியவில்லை. சரி ஏதோ ஒரு கிராம தேவதை கோவில் பராமரிப்பின்றி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

பல வருடங்கள் கழித்து திடீரென்று ஆனைமலை மாசானியம்மன் கோவில் பிரபலமாகி விட்டது. ஒரு தடவை அந்தப் பக்கம் போனபோது நான் போய்ப்பார்த்தேன். நான் முன்பு பார்த்ததிற்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது. ஜனங்கள் கூட்டம் அலை மோதியது. அம்மனைப் பார்க்க பெரிய வரிசை, ஒரு மைல் தூரத்திற்கு நின்று கொண்டிருந்தது.

நான் மலைத்துப் போய்விட்டேன். கோவிலின் சுற்றுப் புறம் முழுவதும் கடை கண்ணிகள், ஓட்டல்கள், பூஜை சாமான் கடைகள் என்று வியாபித்திருந்தன. ஏறக்குறைய நூறு இருநூறு குடும்பங்கள் அந்தக் கோவிலை நம்பிப் பிழைத்துக்கொண்டிருந்தன. இந்த மாற்றம் எப்படி வந்தது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்தக் கோவிலின் நடைமுறையைக் கவனித்தேன். மக்கள் தங்கள் தனிப்பட்ட கோரிக்கைகளை இந்த அம்மனிடம் வைத்தால் அவை நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் வருவதைக் கவனித்தேன். சாதாரணக் கோரிக்கைகளைக் காகித த்தில் எழுதி அங்குள்ள அர்ச்சகர் மூலமாக அம்மனிடம் சேர்க்கப்பட்டு விட்டால் அந்தக் கோரிக்கைகள் நிறைவேறி விடும் என்று நம்புகிறார்கள். இந்த மாதிரி கோரிக்கைகளை எழுதிக்கொடுக்க அங்கே ஏகப்பட்ட புரோக்கர்கள் சுற்றிக்கொண்டு இருப்பதைப் பார்த்தேன்.

இரண்டாவது கோரிக்கை முறை கொஞ்சம் விநோதமானது. உங்கள் வீட்டில் ஏதாவது பொருள் திருட்டுப்போய் விட்டால் இந்தக் கோவிலுக்கு வந்து அங்கிருக்கும் ஆட்டுக் கல்லில் கொஞ்சம் மிளகாயை நன்றாக அரைத்து அங்கே இருக்கும் ஒரு கல்லின் மீது தடவி விட்டால் அந்த பொருளைத் திருடியவனுக்கு உடம்பு முழுவதும் மிளகாயை அரைத்துப் பூசிய மாதிரி எரிச்சல் வந்து விடுமாம். என்ன செய்தாலும் அந்த எரிச்சல் போகாதாம். அந்தத் திருடின பொருளை எடுத்த இடத்தில் திரும்ப வைத்தால்தான் அந்த எரிச்சல் போகுமாம்.

இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற அங்கே நாலைந்து ஆட்டுக்கல்கள் போடப்பட்டிருந்தன. பல பெண்கள் அவைகளில் மிளகாய் அரைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பரவாயில்லையே, மாசானியம்மன் போலீஸ் வேலையும் பார்க்கிறதே என்று நினைத்துக்கொண்டேன். இப்படியாக ஒரு கோவில் பிரபலமானதை என் வாழ்நாளில் நேரில் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது அந்த மாசானியம்மன் அருளால்தான் என்று நம்புகிறேன்..

திங்கள், 24 அக்டோபர், 2011

உயிர் போனால் என்ன ஆகும்?


டிஸ்கி: இந்தப் பதிவைப் படிக்க நிறையப் பொறுமை வேண்டும்.
(அது இல்லைன்னா என்ன பண்ணுவது???? - கொஞ்சம் சிரமந்தான்)

மனிதன் என்பவன் உடல் + ஆன்மா + மனம் (+ புத்தி) என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து இயங்கினால்தான் மனிதன் வாழ்கிறான் என்று சொல்லலாம். ஒருவன் இறக்கும்போது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து செல்கிறது என்று கூறப்படுகின்றது. அப்போது அந்த ஆன்மாவுக்கும் இந்த உடலுக்கும் உள்ள தொடர்பு அறுந்து விடுகிறது என்று கூறுகிறார்கள். ஆன்மா பிரியும்போது மனமும் அழிந்து போகிறது.

ஆன்மாவுக்கு எந்த குணமும் கிடையாது என்று சொல்லுகிறார்கள். பகவத்கீதையில் ஒரு அத்தியாயம் முழுவதும் இந்தக் கருத்து பல விதமாக திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆன்மா அருவமானது, ஆதி அந்தம் இல்லாதது, அழிவற்றது, இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறது.

சாதாரண நடைமுறையில் நாம் சொல்லும் உயிர் என்ற வார்த்தையை ஆன்மீக குருக்கள் ஒருபோதும் உபயோகிப்பதே இல்லை. இதைப்பற்றி கேள்வி கேட்பதற்கும் அனுமதிப்பதில்லை. குரு சொல்லும் உபதேசத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லி நம் வாயை அடைத்துவிடுகிறார்கள்.

நான் கருதுவது என்னவென்றால் இந்த ஆன்மா என்பதும் உயிர் என்பதும் ஒன்றுதான். இது உடலுடன் இருந்தால்தான் உடல் இயங்கும். இது பிரியும்போது உடல் சவமாகி விடுகிறது. உயிர் ஏன் உடலை விட்டுப் பிரிகிறது? உயிரை வைத்துப் போற்றும் திறன் உடலுக்கு இல்லாதபோது உயிர் பிரிந்து விடுகிறது.

அப்புறம் எதற்காக இந்த ஆன்மீகவாதிகள் “ஆன்மா” என்ற பெயரைப் புகுத்தினார்கள் என்றால் மக்களை குழப்புவதற்காகவே. அவர்கள் கூற்றுப்படி ஆன்மாவிற்கு எந்த குணபேதங்களும் இல்லையென்றால் அந்த ஆன்மா குடியிருக்கும் மக்களிடையே இவ்வளவு குணபேதங்கள் ஏன் இருக்கின்றன? ஒருவனுடைய கர்மவினைகள் அவன் இறந்த பிறகு அவனுடைய மறு ஜன்மத்திலும் அவனைத் தொடர்கின்றன என்று கூறுகிறார்கள். ஒருவன் இறந்த பிறகு எந்த சாதனத்தின் மூலம் அவனுடைய கர்ம வினைகள் அடுத்த ஜன்மத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன? இதற்கு எந்த ஆன்மீகவாதியும் சரியான விளக்கம் கொடுப்பதில்லை.

ஆக மொத்தம் உடல், உயிர், மனது+புத்தி இருப்பது நிஜம். மற்றவை எல்லாம் ஒரு நம்பிக்கை மட்டுமே. அவரவர்களுக்குப் பிடித்த நம்பிக்கையை அவரவர்கள் பின்பற்றலாம். ஆனால் நான் பின்பற்றும் நம்பிக்கைதான் உயர்ந்தது என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. அதுதான் முக்கியம். பல ஆன்மீக குருக்கள் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை என்று மூடத்தனமாக நம்பக்கூடாது. அவரவர்களாக யோசித்து தங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை நம்புவதே சிறந்தது.