அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 பிப்ரவரி, 2017

எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்!

Image result for lean manImage result for big man    ➨➨➨

காலம் மனிதனின் வாழ்வில் பல மாற்றங்களைத் தோற்றுவிக்கிறது. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவாகும்.

என்னுள் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றத்தைப் பற்றி இங்கு விவரிக்கிறேன்.

நான் உயர் நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது துப்பறியும் நாவல்களில் ஆர்வம் உண்டாயிற்று. என் ஒன்று விட்ட அண்ணன் இந்த ஈடுபாட்டை என்னுள் ஏற்படுத்தினான். இந்த ஆர்வம் ஒரு கட்டத்தில்   (கெரசின், பெட்ரோல் ஆகிய எதுவுமில்லாமலேயே) கொழுந்து விட்டு  எரிய ஆரம்பித்தது.

எப்படியென்றால் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக்  கொண்டிருக்கும் போதே, டெஸ்க்குக்கு அடியில் இந்த நாவல்களை வைத்துப் படிக்கும் அளவிற்குப் போய்விட்டது. வீட்டில் இரவு என்னேரமானாலும் எடுத்த புத்தகத்தைப் படித்து முடிக்காமல் தூங்க மாட்டேன்.

ஒரு மணி நேரத்தில் தமிழ் புத்தகங்களானால் 130 பக்கங்கள் படிப்பேன். ஆங்கில புத்தகங்களானால் 90 பக்கங்கள் படிப்பேன். ஆனந்த விகடன், குமுதம் வாரப் பத்திரிகைகளை தவறாமல் வாங்கி அவைகளில் வரும் தொடர்கதைகளை தனியே பிரித்து வைத்து, அது முடிந்தவுடன் பைண்ட் செய்து வைப்பேன்.

இப்படியெல்லாம் படித்துக் கொண்டிருந்த நான் இப்போது ஆனந்த விகடன் குமுதம் பத்திரிக்கைகளைத் தொடுவதே இல்லை. அவைகள் முன் மாதிரி இல்லை என்பதுவும் ஒரு காரணம். மற்ற கதைகளைப் படிப்பதற்கு ஆர்வம் இல்லை.

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் ஒரு "டேப்" எனக்கு பரிசளித்தார். அதில் அமேசான்காரன் இலவசமாகவும் சலீசான விலையிலும் பல புத்தகங்களைக் கொடுத்தான். அவைகைள வாங்கி வைத்துள்ளேன். அதில் பல துப்பறியிம் கதைகள்

அவைகளைப் படிக்கலாமென்று ஆரம்பித்தேன். ஒரு நான்கைந்து பக்கங்கள் பிடித்தால் அதில் வரும் சஸ்பென்சைத் தாங்க முடிவதில்லை. நரம்புகள் புடைக்கின்றன. இரத்தம் சூடேறுகிறது. நெஞ்சு படபடக்கிறது. பிறகு அந்தக் கதையைத் தொடர முடிவதில்லை. மறு நாள் படிக்க ஆரம்பித்தால் இன்னும் ஒரு நான்கு பக்கங்களே படிக்க முடிகிறது.

இப்படியாக ஒரு கதையை முடிக்க பத்துப் பதினைந்து நாட்கள் ஆகின்றன. நினைத்துப் பார்த்தேன். ஒரு நானூறு பக்க நாவலை மூன்று மணி நேரத்தில் படித்த நான் எப்படி ஆகி விட்டேன் என்று நினைக்கும் போதுதான் என் வயதின் தாக்கம் புரிகிறது. இனி அந்த நாட்கள் வரப்போவதில்லை. மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.

சனி, 4 பிப்ரவரி, 2017

நான் ஏன் பணம் சேர்க்கிறேன்?


                                              Image result for அனில் அம்பானி
ஒரு ஊரில் ஒருவன் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வியாபாரம் நல்ல வியாபாரம்தான். ஆனால் அவனுடைய துரதிர்ஷ்டம் அவனுக்கு ஏகப்பட்ட கடன் ஏற்பட்டு விட்டது. விற்ற பொருள்களுக்கு பணம் வரவில்லை. வாங்கின பொருள்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை.

எங்கு பார்த்தாலும் பிரச்சினை. ஒரு கட்டத்தில் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தோடு அவன் ஒரு பாட்டில் பூச்சி மருந்து வாங்கிக்கொண்டு, பூங்காவிற்குப் போய் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தான்.

அவன் உட்கார்ந்த சில நொடிகளில் ஒரு டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். இந்த வியாபாரி மிகவும் சோகமாக இருப்பதைப் பார்த்துவிட்டு அவர் என்ன விஷயம் என்று கேட்டார். இவன் தன்னுடைய கஷ்டங்களையெல்லாம் சொல்லிவிட்டு, தான் தற்கொலை செய்யப் போவதைப் பற்றியும் அவரிடம் சொன்னான்.

அவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சொன்னார். நான் இப்போது உனக்கு ஒரு கோடி ரூபாய்க்கு செக் தருகிறேன். அதை வைத்து உன் வியாபாரத்தை விருத்தி செய். சரியாக ஒரு வருஷம் கழித்து நாம் இதே இடத்தில் சந்திப்போம். உன் வியாபாரம் விருத்தியடைந்தால் இந்தப் பணத்தைத் திருப்பிக்கொடு. இல்லாவிட்டாலும் என்ன ஆயிற்று என்று விவாதிப்போம் என்றார். இவனும் சரியென்றான்.

அவர் தன் கோட்டுப் பாக்கெட்டில் இருந்து ஒரு செக் புக்கை எடுத்து ஒரு கோடி ரூபாய் என்று எழுதி கையெழுத்துப் போட்டு, இவனிடம் கொடுத்தார். இவனும் அவருக்கு பலவிதமாக நன்றி சொல்லி விட்டு அந்தச் செக்கை வாங்கிக்கொண்டான். அந்த விஷ மருந்தைத் தூக்கி எறிந்து விட்டு சந்தோஷமாக திரும்பிப் போனான்.

வீட்டிற்குப் போனதும் அந்த செக்கில் இருந்த கையெழுத்தைப் பார்த்தான். அனில் அம்பானி என்று இருந்தது. இவனும் சந்தோஷமாக அந்தச் செக்கை தன்னுடைய இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டுத் தூங்கினான். அடுத்த நாள் இவன் தன்னுடைய கடைக்குப் போய் வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தான்.

தன் வீட்டு இரும்புப் பெட்டியில் ஒரு கோடி ரூபாய்க்கான செக் இருப்பது அவனுக்கு மிகுந்த தைரியத்தைக் கொடுத்தது. வரவு செலவுகளைப் பார்த்து ஒழுங்கு செய்ய ஆரம்பித்தான். வராக் கடன்களை எல்லாம் வசூல் செய்தான். கொடுக்கவேண்டிய கடன்களை எல்லாம் கொடுத்தான். அந்தச் செக்கை இவன் பயன்படுத்தவேயில்லை. இவன் தைரியத்தைப் பார்த்து எல்லோரும் இவனிடம் வியாபார உறவுகளைப் பலப்படுத்திக்கொண்டார்கள்.

ஒரு வருடத்தில் இவன் பெரிய பணக்காரன் ஆகி விட்டான். அந்த நாளும் வந்தது. அதாவது இவனுக்கு செக் கிடைத்த நாள். அந்த செக்கை எடுத்துக்கொண்டு அதே பார்க்குக்குச் சென்றான்.  இவனுக்கு செக் கொடுத்த அனில் அம்பானியும் முன்னரே வந்து இவனுக்காகக் காத்திருந்தார். இவன் இவனுடைய வெற்றிக் கதையைச் சொல்லி விட்டு அந்தச்செக்கை மிகுந்த நன்றியுடன் அவரிடம் திருப்பிக்கொடுத்தான்.

அப்போது ஒரு நர்சும் இரண்டு தடி ஆட்களும் அங்கு வந்து இந்த செக் கொடுத்த ஆளைப் பிடித்துக் கொண்டார்கள். அப்போது இந்த வியாபாரி அவர்களிடம் கேட்டான். ஏன் இவரைப் பிடிக்கிறீர்கள்  என்றான். அப்போது அவர்கள் சொன்னார்கள், இந்த ஆள் பக்கத்தில் உள்ள எங்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து வந்து விட்டான். அவன் உங்களிடம் தான்தான் அனில் அம்பானி என்று சொல்லியிருப்பானே என்றார்கள்.

அப்போதுதான் வியாபாரிக்கு உண்மை புரிந்தது. பைத்தியக்காரன்  கொடுத்த செக்கையா நாம் இவ்வளவு நாள் வைத்திருந்தோம் என்று  அதிசயப்பட்டான். ஆனாலும் அந்தச் செக் நம்மை உயர்த்தியது அல்லவா. ஆகவே அந்தச் செக்கை விட, பணம் நம்மிடம் இருக்கிறது என்ற தைரியம்தான் நமக்கு முன்னேற்றத்தைக் கொடுத்தது என்று புரிந்து கொண்டான்.

இந்தக் கதை ஒரு ஆங்கிலக் கதையின் தழுவல் ஆகும். இருந்தாலும் கதையின் நீதி எல்லோருக்கும் புரியும்.

பின் குறிப்பு: அதனால்தான் நான் பணத்தைச் சேர்த்து பேங்கில் போட்டு வைத்திருக்கிறேன்.

வியாழன், 8 டிசம்பர், 2016

முதுமை ஒரு வரம்.
முதுமை ஒரு வரம்தான். எந்த சூழ்நிலையில் என்பதுதான் கேள்வி? இளமையில் ஒழுங்காக வாழ்ந்திருந்தால் முதுமை ஒரு வரமே.

"ஒழுங்காக" என்பதற்கு பலவிதமாக வியாக்யானம் கொடுக்கலாம். நான் "ஒழுங்காக" என்று நினைப்பது மற்றவர்களுக்கு ஒழுங்கற்றதாகத் தெரியலாம். அதை பின்னூட்டங்களில் விவாதித்துக் கொள்ளலாம்.

"ஒழுங்காக" என்பதற்கான இலக்கணங்கள்.

1. படிக்கவேண்டிய வயதில் நன்றாகப் படிக்கவேண்டும்.

2. படித்து முடித்தவுடன் தன் தகுதிக்கேற்ப ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும்.

3. வேலையில் செட்டில் ஆனவுடன் ஒரு கல்யாணம் செய்துகொண்டு குடும்பத்தை விருத்தி செய்யவேண்டும்.

4. வரவிற்குள் செலவை அடக்கி சேமிப்பும் செய்யவேண்டும்.

5. தன் வாரிசுகளுக்கு நல்ல படிப்பும் நல் ஒழுக்கமும் கற்றுத் தரவேண்டும்.

6.அவர்களுக்கு காலா காலத்தில் ஆணாக இருந்தால்   நல்ல வேலையில் அமர்த்த வேண்டும், பெண்ணாக இருந்தால் ஒரு கல்யாணம் செய்து வைக்கவேண்டும்.

7. ரிடையர் ஆன பிறகு கிடைக்கும் தொகைகளை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்படியெல்லாம் வாழ்ந்திருந்தால் முதுமை ஒரு வரமே.

எல்லோரும் இப்படி வாழ முடியுமா என்று பலரும் நினைக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் இப்படித்தான் வாழ்ந்தேன். இன்று முதுமையில் கவலை இல்லாமல் இருக்கிறேன்.

என் அனுபவத்தைச் சொல்வதன் மூலம் ஒரு சிலராவது பலனடைந்தால் அது என் எழுத்திற்கு கிடைத்த சன்மானம்.

சனி, 12 நவம்பர், 2016

என் பதிவுத் தளத்தை வாடகைக்கு விடுகிறேன்.


                      Image result for for rent sign

பதிவு எழுத விஷயங்களைக் கண்டு பிடிப்பது வர வர மிக கஷ்டமாக இருக்கிறது. இந்தக் கஷ்டத்தை எப்படிப் போக்கவது என்று யோசித்ததில் ஒரு வழி புலனாகியது.

இந்த ஞானோதயம் எப்படி வந்தது என்றால், சமீபத்தில் என் ஆப்த நண்பர், திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு பதிவில் போட்டிருந்த பின்னூட்டம் என் மனதைக் கவர்ந்தது.

சுட்டி- http://engalblog.blogspot.com/2016/10/blog-post_18.html
கேட்டு வாங்கிப் போடும் கதை :: தானம் 

இந்தப் பின்னூட்டம் எல்லோருடைய சிந்தனைக்கும் விருந்தாகட்டுமே என்று அதை என் தளத்தில் பதிவிட்டேன். அந்தப் பதிவில் என்னுடைய பங்களிப்பு மூன்றே மூன்று வரிகள்தான்.

நான் பதிவிடும்போது அதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்கவில்லை. 

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் 
எண்ணுவம் என்பது இழுக்கு. 

இந்தக் குறளைப் பலமுறை படித்திருந்தும் பதிவு போடும்போது நினைவிற்கு வரவில்லை. விளைவு என்னவென்றால் என் தளம் ஹைஜாக் செய்யப்பட்டு விட்டது. 

திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பதிவுலகில் மிகப் பிரபலமானவர் என்று முன்பே தெரியும். ஆனாலும் அவர் இவ்வளவு பிரபலம் என்று நான் நினைக்கவில்லை.

எவ்வளவு பின்னூட்டங்கள் ! அதற்கு அவர் பதிலளித்திருக்கும் விதம். இவை என்னை ஆச்சரியப்படுத்தி விட்டன. 

பொதுவாக பதிவர்கள் (நான் உட்பட) பின்னூட்டங்களை ஆழ்ந்து படிப்பதில்லை என்று அறிவேன். ஆனால் திரு வை.கோபாலகிருஷ்ணன் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் கவனமாகப் படித்து பொருத்தமான பதில்கள் கொடுத்திருக்கிறார்.

மொத்தப் பதிவையும் பிடிஎப் பைலாகத் தரவிறக்கி உள்ளேன். மொத்தம் 100 பக்கத்திற்கு மேல். பின்னூட்டங்கள் 107. இதன் மொத்தத்தையும் வேண்டுபவர்கள் எனக்கு தங்கள் மெயில் விலாசத்துடன் பின்னூட்டம் போடவும்

இவ்வாறு என் தளத்தை மேன்மைப் படுத்திய திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றி.

வேறு பதிவர்கள் தங்கள் படைப்புகளை என் தளத்தில் வெளியிட ஆசைப்பட்டால் என் தளம் வாடகைக்கு கிடைக்கும் என்று அன்புடன் கூறிக்கொள்கிறேன்.

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

நெடுங்கதைகள் படிப்பதில் உள்ள சிரமங்கள்

                      

சமீப காலமாக பொழுதைப் போக்குவதற்கு ஒரு வழியாக கதைகள் படிக்கலாம் என்று முயற்சித்தேன். என் நண்பர் ஒருவர் அன்பளித்த கைக் கணிணியில் (Tablet)  நிறைய கதைகளைச் சேமித்து வைத்தேன்.

அதில் பல கதைகள் ஆங்கிலத்தில் இருந்தன. பரவாயில்லை, நமக்குத்தான் ஆங்கிலம் நன்றாகத்  தெரியுமே என்று சில கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.

இளம் வயதில் ஆங்கிலக் கதைகள் பல படித்திருக்கிறேன். அந்த ஆசிரியர்களைப் பற்றி இப்போதுள்ள இளைஞர்கள் அறிய மாட்டார்கள். கோனன் டாயில், மார்க் ட்வைன், ஆர். எல். ஸ்டீவன்சன், எச்.ஜி.வெல்ஸ், மாப்பசான், இப்படி பல ஆசிரியர்கள்.

இப்போது ஆங்கிலத்தில் பலர் நன்றாகவே எழுதுகிறார்கள். எனக்கு இப்போது, அதாவது வயதானபின் சேர்த்துள்ள பல சொத்துக்களில்  ஒன்று "மறதி". குறிப்பாக மனிதர்களின் பெயர்கள். ஏதாவது ஒரு விசேஷத்தில் புதிதாகப் பலரை சந்திக்க நேரிடுகிறது. யாராவது சிலர் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். அப்படி அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அந்தப் பக்கம் போனவுடன் அவர் பெயர் என்ன என்று எவ்வளவு யோசித்தாலும் நினைவிற்கு வருவதில்லை. சரி, போகட்டும் என்று விட்டு விடுவது வழக்கமாய் விட்டது.

அந்த மாதிரி பல கதாசிரியர்களின் பெயர்கள் நினைவிற்கு வருவதில்லை. அதுவாவது தொலையட்டும். கதைக்கு வருவோம். கதையில் கதாபாத்திரங்கள் பலர் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இந்த இங்கிலீஷ்காரன்களின் பெயர்களே ஒரு பெரிய மர்மம். இத்தனை வயதிற்கு அப்புறமும் அந்த மர்மத்தை விடுவிக்க என்னால் முடியவில்லை.

உதாரணத்திற்கு ஒன்று: John Fitzgerald Kennedy  என்று ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தது  பலருக்கு நினைவிருக்கலாம். சாதாரண மக்கள் இவரை  Mr.Kennedy கூப்பிடவேண்டும். பெயரை எழுதும்போது முழுசாக John Fitzgerald Kennedy என்று எழுத வேண்டுமாம். அதையே சுருகி எழுதும்போது John F. Kennedy என்று எழுதுகிறார்கள். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரை John என்று கூப்பிடலாமாம். பெண்டாட்டி இவரை "ஜோ" என்று செல்லமாகக் கூப்பிடுவாள்.

ஆங்கிலக் கதைகள் ஆரம்பிக்கும்போது ஒருவனை ஒரு பெயரில் அழைத்திருப்பார்கள். இரண்டு பக்கம் கழித்து அவனை இன்னொரு பெயரில் அழைப்பார்கள். இவன் யாருடா, புதிதாக இருக்கிறதே என்று யோசிப்பதற்குள் அவன் காதலி அவனை வேறு ஒரு செல்லப் பெயரில் கூப்பிடுவாள். இந்தக் குழப்பத்திலிருந்து விடுபடுவதற்குள் மளமளவென்று பத்துப் பதினைந்து நபர்கள் கதைக்குள் புகுத்தப்பட்டிருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ஐந்து பெயர்கள்.

ஆச்சா, தலை சுற்ற ஆரம்பித்து விடும். சரி, முதலில் இருந்து வரலாம் என்று திரும்பவும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பித்தால், இரண்டு மூன்று பக்கத்திற்கு மேல் கவனம் நிலைப்பதில்லை. புத்தகத்தை மூடி வைத்து விட்டு ஒரு இரண்டு மணி நேரம் கழித்துப் படிக்க ஆரம்பித்தால் கதையை எங்கே விட்டோமென்பது தெரியமாட்டேன்   என்கிறது.

மறுபடியும் முதல் பக்கத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டும். இப்படி ஒரு கதையைப் படிப்பதற்கு முதல் பக்கத்தை மட்டும் ஒரு ஐம்பது தடவை படித்திருப்பேன்.

தமிழ்க்கதைகளில் இந்த மாதிரி குழப்பங்கள் கிடையாது. பத்துப் பேர் கதையில் இருந்தாலும் எல்லாம் சுப்பன், குப்பன் என்றிருப்பதால் குழப்பம் வருவதில்லை. ஆனால் என்ன கஷ்டம் என்றால் தமிழ்க் கதைகளை எல்லாம் ஏற்கெனவே படித்து முடித்தாயிற்று. இப்போது வரும் கதைகள் மனதிற்கு உகந்ததாய் இல்லை.

ஆனால் எந்தக் கதைகளைப் படிக்க ஆரம்பித்தாலும் ஒரு சௌகரியம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்த மூன்றாவது நிமிடம் தூக்கம் வந்து விடுகிறது. வயதான காலத்தில் அது ஒரு பெரிய சௌகரியமல்லவா?

சனி, 25 ஜூன், 2016

நண்பனைச் சிக்கலில் இருந்து விடுவித்த கதை.

                   
                         Image result for Thief and police

ஒரு நல்ல திருடன்தான் ஒரு நல்ல போலீஸ்காரன் ஆகமுடியும் என்று சொல்வார்கள். அதேபோல் சில தந்திரவாதிகளின் ஏமாற்றுதலில்
இருந்து தப்பிக்க நீங்களும் ஒரு ஏமாற்றுப் பேர்வழியாக இருக்க வேண்டும். ஏமாற்ற வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அந்த குயுக்தி முறைகளை அறிந்திருப்பது அவசியம்.

என் நண்பர் ஒருவர் தன் வீட்டில் உள்ள ஒரு போர்ஷனை வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் குடியிருந்த ஒருவன் இவரிடம் அவ்வப்போது ஆயிரம் இரண்டாயிரம் என்று கைமாத்து வாங்குவான். சொன்ன நாளில் திருப்பிக்கொடுத்து விடுவான். இப்படி சில மாதங்கள் ஆகியவுடன் என் நண்பருக்கு அவன் மீது அபார நம்பிக்கை வந்து விட்டது.

ஒரு நாள் அவன் தன் மனைவியின் வேலையை நிரந்தரமாக்க அவள் வேலை செய்யும் நிறுவனத்தில் இரண்டு லட்சம் ரூபாய் கேட்கிறார்கள், கொடுக்கலாமா என்று இவரிடம் கேட்டிருக்கிறான். இவருக்கு அந்தக் கம்பெனியை நன்றாகத் தெரியும். கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். இரண்டு நாள் கழித்து அவன் இவரிடம் வந்து, சார், ஒரு லட்சம் ரூபாய் சேகரித்து விட்டேன். இன்னும் ஒரு லட்சம் வேண்டும். நாளைக்குள் பணம் கட்டவேண்டும் என்கிறார்கள். ஊரில் ஒரு இடம் இருக்கிறது. அதை விற்றால் ஒரு லட்சம் வரும். வந்தவுடன் கொடுத்து விடுகிறேன். நீங்கள்தான் என்னை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று அழுதிருக்கிறான்.

நண்பருக்கு அப்படியே மனது வெய்யிலில் வைத்த ஐஸ் கட்டியாக உருகிவிட்டது. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். அவனும் அதை பவ்யமாக வாங்கிக்கொண்டு போய் பணத்தை வாங்கிவிட்டான். இவர் அவனிடம் ஒரு புரோநோட் வேண்டுமென்றிருக்கிறார். அவன் ஸ்டேஷனரி கடையில் விற்கும் ஒரு புரோநோட் பாரத்தை வாங்கி ஒன்றும் எழுதாமல் கீழே மட்டும் ஒரு கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கிறான். நண்பரும் அதை வாங்கி வைத்துவிட்டார்.

நாலைந்து மாதம் ஆகி விட்டது. பணம் திரும்பி வரவில்லை. இதனிடையில் அவன் வேறு வீட்டிற்கு குடி போய்விட்டான்.  இவர் அவனை நெருக்கியிருக்கிறார். அவன் ஒரு நாள் ஒரு லட்சத்தி நான்காயிரத்திற்கு (நான்காயிரம் வட்டி) இவர்பேரில் ஒரு செக் கொடுத்து விட்டு, சார் இதை உடனே பேங்கில் போடவேண்டாம், ஊரில் இருந்து வரவேண்டிய பணம் இன்னும் வரவில்லை, வந்தவுடன் நான் சொல்கிறேன், அப்போது இந்த செக்கைப் பேங்கில் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறான்.

நண்பரும் சரியென்று அந்த செக்கை வாங்கி வைத்துக்கொண்டார்.
ஒரு மாதம் சென்றது. அவனிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. போன் பண்ணினால் எடுப்பதில்லை. சரி, என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று நண்பர் செக்கை கலெக்ஷனுக்குப் போட்டார். கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்பி வந்து விட்டது.

இந்த நிலைமையில் நண்பர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். நான், பொறுப்போம், பார்க்கலாம், அவனை எப்படியாவது பிடித்து என்ன விவரம் என்று கேளுங்கள் என்றேன். இரண்டு நாள் கழித்து நண்பர் ஓடோடி வந்தார். இதற்குள் அவர் யாரையோ சிபாரிசு பிடித்து பேங்க் மேனேஜரைக் கைக்குள் போட்டுக்கொண்டார். அவர் மூலம் அவன் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்துக்கொண்டார். இரண்டாயிரம் ரூபாய்தான் இருந்தது. அவன் வருவதாகச் சொன்ன ஒரு லட்சம் ரூபாய் வந்தாலும் மொத்தம் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் ரூபாய்தானே இருக்கும், நம் செக் ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய்க்கு அல்லவா, இது எப்படி பாஸ் ஆகும் என்று புலம்பினார்.

நான் அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு. நாளைக்கு பேங்குக்கு வரும்போது உங்கள் செக் புக்கை எடுத்து வாருங்கள், மிச்ச்த்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறி அவரை அனுப்பி வைத்தேன். மறுநாள் பேங்க்குக்குப் போனால் நண்பர் காத்துக் கொண்டிருந்தார். அந்த கடன் வாங்கினவனும் கூட இருந்தான். அவனிடம் என்னப்பா இன்றைக்கு செக்கை கலெக்ஷனுக்குப் போட்டு விடலாமா என்று கேட்டேன். அவன் தாரளமாகப் போடலாம் சார் என்றான்.

அவனுடைய எண்ணம் அவன் கணக்கில் வரப்போகும் ஒரு லட்சத்தையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து இரண்டாயிரம்தானே இருக்கும். நாம் இவர்களுக்குக் கொடுத்தது ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய்க்கான செக்கல்லவா? இவர்கள் அந்தச் செக்கை பாஸ் பண்ணமுடியாது என்ற நினைப்பில் சம்மதம் சொல்லிவிட்டான். அதுவுமில்லாமல் கவுன்டர் கிளார்க்கிடம் ஐம்பதாயிரத்திற்கு தனியாக ஒரு செக் கொடுத்து வைத்திருந்தான். இவன் எதிர் பார்க்கும் பணம் வந்தவுடன் அந்த ஐம்பதாயிரம் பணத்தை எடுப்பது அவன் திட்டம்.

நானும் நண்பரும் மேனேஜர் ரூமுக்குப் போய் அவருக்கு முன்னால் அமர்ந்தோம். அவர் இன்னும் தபால் வரவில்லை, கொஞ்சம் பொறுங்கள் என்றார். சிறிது நேரத்தில் தபால் வந்தது. எதிர் பார்த்த ஒரு லட்சம் ரூபாயும் வந்திருந்தது. அவர் அந்த கடன்காரனின் கணக்கைப் பார்த்தார். பார்த்துவிட்டு எங்களிடம் சென்னார், இந்தப் பணத்தைப் போட்டாலும் ஒரு லடசத்தி இரண்டாயிரம் ரூபாய்தானே வருகிறது. உங்கள் செக் ஒரு லட்சத்தி நாலாயிரம் ரூபாய் அல்லவா? பாஸ் ஆகாதே என்றார்.

அவரிடம் நான்,  சார் எவ்வளவு ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது என்றேன். அவர் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் பற்றாக்குறையாக இருக்கிறது என்றார். நான் நண்பரிடம் மேனேஜர் சென்ன தொகைக்கு உங்கள் செக் ஒன்று அந்த திருடன் பெயருக்கு எழுதுங்கள் என்றேன். அப்படியே எழுதிக்கொடுத்தார். மேனேஜரிடம் அந்தச் செக்கைக் கொடுத்து சார் இந்தப் பணத்தை அவன் கணக்கில் சேர்த்து விட்டு பிறகு எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது பாருங்கள் என்றேன். அவர் அப்படியே செய்து விட்டு, சார் உங்கள் செக் இப்போ பாஸ் ஆகிவிடும் என்றார். அப்படியே செய்யுங்கள் என்று சொல்லி என் நண்பருடைய  செக்கைப் பாஸ் பண்ண வைத்தேன்.

இரண்டாயிரத்தி ஐந்நூறு செலவில் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் பணம் வசூலாகி விட்டது. பேங்க் மேனைஜர் அசந்து விட்டார். சார் நீங்கள் பலே கில்லாடியாக இருக்கிறீர்களே என்று பாரட்டினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தோம்.

அதற்குள் இந்த செக் பாஸான விவரம் கவுன்டர் கிளார்க் மூலம் அந்த கடன்காரனுக்குத் தெரிந்து விட்டது. வெளியில் எங்களைப் பார்த்தவுடன் காச் மூச்சென்று கத்தினான். நான் சொன்னேன், நீ செக்கைப் போடச் சொன்னதினால்தானே நாங்கள் போட்டோம், இப்ப எதற்கு கத்துகிறாய், உன் வேலையைப் பார் என்று சொல்லி அவன் அனுப்பினோம்.

அடுத்த நாள் ஒரு பெரிய பிரியாணி ஒட்டலில் நான் கேட்ட ஐட்டங்கள் எல்லாம் என் நண்பர்  வாங்கிக் கொடுத்தார்.

வியாழன், 2 ஜூன், 2016

கைக்கு விலங்கு வந்தது.

                   Image result for rioting crowd

அன்று மாலை வெளியான செய்தித்தாள்களில் கிறுக்கர்கள் தமிழ்ச் சங்க நடவடிக்கைகளை விவரமாகப் பிரசுரித்திருந்தார்கள். அவைகளின் சாராம்சம்.

தமிழ்நாட்டில் விரைவில் இனக்கலவரம் மூளப்போகிறது. தமிழ் நாட்டிலுள்ள மண்ணின் மைந்தர்கள் அல்லாதவர்களை வெளியேற்ற போராட்டம் வெடிக்கப் போகிறது. வெளி மாநிலத்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு குடி பெயரவும். இத்தியாதி, இத்தியாதி.

இந்தச் செய்திகளைப் பார்த்தவுடன் ஏதோ அனர்த்தம் விளையப்போகிறது என்று என் உள் மனது எச்சரித்தது. சரி வருவது வரட்டும் என்று தூங்கப்போனேன். காலையில் எழுந்து அன்றைய செய்தித்தாள்களைப் படித்தால் பகீரென்றது. வெளி மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறியவர்கள் எல்லோரும் இன்று பந்த் நடத்தப்போகிறோம் என்று அறிக்கை விட்டிருந்தார்கள்."என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்ற பாடலைப் பாடியபடியே சங்க அலுவலகத்திற்குப் போனேன். சங்க அலுவலகமே தெரியாத அளவிற்கு அந்தத் தெரு முழுவதும் ஜனக்கூட்டம். எள் போட்டால் எள் கீழே விழாது. அந்த அளவிற்குக் கூட்டம். என்னவென்று நைசாக விசாரித்தேன். இந்தக் கூட்டம் கிறுக்கர்க்ள தமிழ்ச்சங்கத்திற்கு எதிராக பந்த் செய்யும் கூட்டம் என்றார்கள்.

நான், உபதலைவர், காரியதரிசி, பொது ஆகிய நாங்கள் கட்டிடத்தின் பின் வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் எங்கள் அலுவலகத்தினுள் பிரவேசித்தோம். இதே வழியாக ஏற்கெனவே டிரைவரும் ஸ்டெனோவும் ஆபீசிற்குள் வந்திருந்தார்கள். வெளியிலிருந்து சத்தம் அதிகமாகிக்கொண்டு வந்தது.

டிரைவரிடம் அவர்கள் என்ன கோஷம் போடுகிறார்கள் என்று கேட்டேன். அவர் சொன்னார். தமிழ்நாடு எங்களுக்கே என்று அவரவர்கள் பாஷையில் கோஷம் போடுகிறார்கள் என்றார். பரவாயில்லையே, தமிழ்நாட்டின் தலைவிதி இந்த அளவிற்குப் போய்விட்டதா என்று நினைத்துக்கொண்டு, பொதுவிடம் காவல் துறைக்கு போன் பண்ணுங்கள் என்றேன்.

அதற்குள் போலீஸ் சைரன்கள் சத்தம் பலமாகக் கேட்டது. டிரைவர் ஜன்னல் வழியாக நைசாக எட்டிப்பார்த்து விட்டு. பத்து ஜீப்களில் போலீஸ் ஆபீசர்களும் மூன்று பஸ்களில் போலீஸ் ஜவான்களும் வந்திருக்கிறார்கள் என்றான். நல்லதாகப் போயிற்று என்றேன். சற்று நேரத்தில் நான்கு போலீஸ் ஆபீசர்களும் பத்துப் பதினைந்து போலீஸ் ஜவான்களும் ஆபீசுக்குள் வந்து சேர்ந்தார்கள்.

அவர்களில் முதன்மையாகத் தெரிந்தவர் "யாரய்யா இந்த சங்கத்தின் தலைவர் என்றார். நான் பவ்யமாக நான்தான் என்றேன். இவர்கள் எல்லாம் யார் என்றார், நான் விவரம் சொன்னேன். அவர் பின்னால் திரும்பி இந்த டிரைவர் மற்றும் ஸ்டேனோவை விட்டு விட்டு மற்றவர்களை அரெஸ்ட் செய்யுங்கள் என்றார். உடனே போலீஸ் ஜவான்கள் எங்கள் கைகளில் விலங்கு மாட்ட வந்தார்கள்.

நான் அந்த சீனியர் போலீஸ் ஆபிசரிடம், சார் நாங்கள் எல்லாம் பெரிய உத்தியோகத்தில் இருந்து ரிடைர்டு ஆனவர்கள், தவிர எல்லோரும் சீனியர் சிடிசன்ஸ், எங்களுக்கு விலங்கு மாட்டி அவமானப்படுத்தாதீர்கள், நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் வருகிறோம் என்றேன்.

எங்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றி கலெக்டர் ஆபீசுக்கு கூட்டிப்போனார்கள். அங்குள்ள மீட்டிங்க் ஹாலில் எங்களை உட்காரவைத்து போலீஸ்காரர்கள் சுற்றிலும் நின்று கொண்டார்கள். கொஞ்ச நேரம் கழித்து கலெக்டர் அம்மா (உ.பி. மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்தார்கள். நாங்கள் எல்லோரும் எழுந்திருந்து வணக்கம் சொன்னோம்.

அந்த அம்மா என்னைப் பார்த்து " என்னா மேன், என்னா தகறார் பண்றே? என்றார்கள். அவர்கள் கலெக்டராக வந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. இந்த இரண்டு மாதத்தில் அவர் கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தைகள் இந்த மூன்று மட்டும்தான். நான் பவ்யமாக எழுந்திருந்து தமிழில் ஏதோ சொல்லப்போனேன். அதற்குள் போலீஸ் கமிஷனர் ஆங்கிலத்தில் விலாவாரியாக எங்கள் சங்கத்தின் செயல்பாடுகளை கலெக்டர் அம்மாவிடம் சொன்னார்.

எனக்கு அவர் சொன்னது அரைகுறையாகப் புரிந்தது. அதாவது எங்களை பயங்கர தீவிரவாதிகள் என்று சொல்லுகிறார் என்பது வரைக்கும் என் அரைகுறை ஆங்கில அறிவிற்குப் புரிந்தது. கலெக்டர் அம்மாவும் ஆங்கிலத்தில் அவரிடம் இந்த ஆட்கள் எல்லாம் மிகவும் வயதானவர்களாகத் தெரிகிறது. உங்கள் மாமூல் முறைகளைக் கையாண்டீர்களானால் இவர்கள் மேல் லோகம் போய் சேர்ந்து விடுவார்கள். அப்புறம் என் பெயர் கெட்டுவிடும். கொஞ்சம் அறிவுரை சொல்லி சங்கத்தை உடனடியாக மூடச்சொல்லி அனுப்புங்கள் என்றார்.

போலீஸ் கமிஷனர் எங்களை வெளியில் கூப்பிட்டு வந்து, கலெக்டர் அம்மா சொன்னதைக் கேட்டீர்கள் அல்லவா? உடனடியாகப் போய் சங்கத்தைக் கலைத்து விட்டு அவரவர்கள் வீட்டுக்குப் போய் ஒழுங்காக இருங்கள் என்றார். நாங்களும் அவருக்கு மிக்க நன்றி சொல்லிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து ஆபீஸ் வந்து சேர்ந்தோம்.

ஆபீசில் கட்டிடத்தின் சொந்தக்காரர் எங்களுக்காகக் காத்திருந்தார், எங்களைப் பார்த்தவுடன் "என்ன சார் வயதானவங்களாச்சேன்னு உங்களுக்கு கட்டிடத்தை வாடகைக்குக் கொடுத்தால் இப்படி கலாட்டா பண்ணுகிறீர்களே" என்று சத்தம் போட்டார். நாங்கள் அவரைப் பார்த்து மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா. தெரியாமல் சில தவறுகள் நடந்துவிட்டது. நாங்கள் இப்போதே ஆபீசைக் காலி செய்து விடுகிறோம். நாங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்றோம். இதைக்கேட்டவுடன் அவருக்கு வாயெல்லாம் பல்லாக ஆகி விட்டது. சரி, சீக்கிரம் காலி பண்ணுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

நாங்கள் சங்கத்தைக் கலைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டோம்.

ஞாயிறு, 13 மார்ச், 2016

இன்னும் ஒரு புதுப்பெண்டாட்டி

நான் அடிக்கடி புதுப்பெண்டாட்டி கட்டுவது உங்களுக்குத் தெரியும். அந்த வழக்கப்படி முந்தாநாள் ஒரு புதுப்பெண்டாட்டி கட்டினேன். இதோ என் புதுப்பெண்டாட்டியின் போட்டோ.

                                             Image result for samsung galaxy a7 gold

அவளுடைய முன்னழகையும் பின்னழகையும் பாருங்கள்.

என் பழைய பெண்டாட்டி (மொபைல் போன் என்று புரிந்து கொள்ளவும்) நன்றாகத்தான் இருந்தாள். இருந்தாலும் அவளைக் கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் அவள் மீது லேசாக சலிப்பு வர ஆரம்பித்தது. செய்தித்தாள்களில் இவளைப் பற்றி முழுப்பக்க விளம்பரங்களை வர ஆரம்பித்தன. அவைகளைப் பார்த்து இவள் மேல் ஒரு மோகம் வந்து விட்டது.

இப்போது நான் கொஞ்சம் தைரியசாலியாகி விட்டேன். எப்போதுமே தைரியசாலிதான் என்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் இப்போது தைரியம் அப்படியே பொங்கிப் பிரவகிக்கிறது.

ஆன்லைனில் புகுந்து விளையாடுகிறேன். அமேசான் தளத்திற்குப் போய் இதன் விலை என்னவென்று பார்த்தேன். வெறும் 23000 ரூபாய்தான். சே, பிச்சைக்காசு. உடனே ஒன்று அனுப்புடா என்றேன். அவ்வளவுதான், என் பேங்க் கணக்கில் இருந்து 23000 ரூபாய் அடுத்த நொடியில் காணோம். மொபைல் போனில் செய்தி மேல் செய்தி.

உங்கள் ஆர்டருக்கு நன்றி.

இதோ உங்கள் போனைப் பேக் செய்து விட்டோம்.

இதோ உங்கள் போன் கூரியர் ஆபீசுக்குப் போய்விட்டது.

இதோ உங்கள் போன் கோயமுத்தூர் வந்து விட்டது.

இதோ உங்கள் போன் இன்னும் சில மணிகளில் உங்களுக்கு வந்து சேரும்.


இப்படியாக வரிசையாக குறுஞ்செய்திகள். ஆனாலும் அமேசான்காரன் கொடுக்கிற காசுக்கு நல்லா ஜால்ரா போடறான்.

கடைசியாகப் போன் பார்சல் வந்தே விட்டது. திறந்து பார்த்தேன். போன் முழுசாக இருந்தது. இதில் பழைய போனில் இருக்கும் சிம் கார்டைப் போட முடியாதாம். அதற்கென்று இப்போது புதிதாக வந்திருக்கும் "நானோ சிம்" கார்டைத்தான் போடவேண்டுமாம், அதை டெலிபோன் ஆபீசில் போய் வாங்கிப் போட்டு டெஸ்ட் பண்ணினேன்.

சிம் போடும் முறையே புதிதாக இருந்தது.


                      

போனின் பக்கத்தில் ஒரு சிறு துளை இருக்கிறது. இதைப் பார்க்க ஒரு பூதக் கண்ணாடி வேண்டும். அந்த துளைக்குள் அவன் கொடுத்துள்ள ஒரு ஊசியை சொருகி அழுத்தினால் ஒரு ட்ரே வெளி வரும். படத்தைப் பார்க்கவும். அதில் சிம் கார்டை வைத்து ஜாக்கிரதையாக போனுக்குள் அழுத்தவேண்டும். இரண்டு சிம் கார்டுகளுக்கும் அப்படியேதான்.

எப்படியோ போனை ரெடி பண்ணி ஆத்துக்காரியுடன் பேசி விட்டேன். அவளுக்கு நான் இந்தப் புதுப் பெண்டாட்டியைக் கட்டினது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாததால் சகித்துக்கொண்டிருக்கிறாள்.

இப்போது இந்த போனில் இருக்கும் நுணுக்கங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். முதல் அனுபவம், லண்டனில் இருக்கும் என் மச்சினன் பையனுடன் விடியோ கால் முறையில் பேசினேன். இன்னும் என்னென்னமோ இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கவேண்டும்.

சனி, 20 பிப்ரவரி, 2016

நான் எடுத்த உறுதி மொழிகள்


                                 

நான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர். எங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு மாதாந்திர செய்தி மடல் வெளியிடப்படுகிறது. இந்த மாத செய்தி மடலில் பிரசுரமான ஒரு கேள்வி-பதில் பகுதி பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பி இங்கே பதிகிறேன்.

கேள்வி: முதியோர் வைத்திய நிபுணரிடம் கேட்கப்பட்ட கேள்வி.

எனக்கு வயது 75. கூட்டுக்குடும்பத்தில் நன்றாகவே இருக்கிறேன். பொதுவாக இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு இளைஞர்கள்தான் காரணம் என்று சொல்வதை விட, முதியவர்களாகிய நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? உங்களின் நீண்டகால அனுபவம் என்னைப்போன்ற பல முதியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று இக்கடித த்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

பதில்:

இதுவரை யாரும் கேட்காத ஒரு பயனுள்ள கேள்வியைக் கேட்பது உங்கள் பரந்த உள்ளத்தைக் காட்டுகிறது. இதோ, முதியவர்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கொடுத்துள்ளேன்.

உறுதி மொழி 


  • எனக்கு வயதாகிக்கொண்டு வருவதை உணர்கிறேன். சீக்கிரமே நான் முதுமையை எட்டி விடுவேன். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் குணம் எனக்கு வந்து விடக்கூடாது. குறிப்பாக எல்லா விஷயங்களைப் பற்றியும், எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏதாவது கருத்துச் சொல்லியே ஆகவேண்டும் என்ற உணர்வு எனக்கு எழக்கூடாது.
  • எல்லோரது தவறுகளையும் திருத்துவதுதான் என் வேலை என்ற நினைப்பு எனக்கு வரக்கூடாது.எனது அனுபவமும் அறிவும் எனது பொக்கிஷம். அறிவுரை என்ற பெயரில் எல்லோரிடமும் அதை இறைத்து விடமாட்டேன்.
  • நீள நீளமான வாக்கியங்களைத் தவிர்த்து, ஒற்றை வார்த்தையில் எதையும் சொல்லும் பக்குவம் வரவேண்டும்.
  • என் கஷ்டங்களையும் வலிகளையும் பற்றி எல்லோரிடமும் பலம்பாமல், அடுத்தவர் கஷ்டங்களையும் காது கொடுத்து கேட்கும் பொறுமை பெற வேண்டும்.
  • எல்லாமே ஞாபகத்தில் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும் ஞாபகத்தில் இருந்தால் போதும். துயரமான தருணங்களை என் ஞாபக மறதி நோய் எடுத்துக்கொள்ளட்டும்.
  • நானும் தவறுகள் செய்யக்கூடிய சாதாரண மனிதப்பிறவிதான் என்ற நினைப்பு எனக்கு எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் வாக்கு வாதங்களை அது தவிர்த்து விடும்.
  • எல்லோருக்கும் கருணை காட்டும் மனம் வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் வேண்டும். அடுத்தவர்களின் சிறந்த குணங்களைக் கண்டறிந்து பாராட்டும் தாராள உள்ளம் வேண்டும். யாரையும் அதிகாரம் செய்யும் முரட்டு குணம் மட்டும் வேண்டாம்.

                                                  Image result for flower

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

என் ஆசிரியரைக் கண்டேன் - பாகம் 2

(வாசலைத் திறந்தவுடனேயே திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு அன்புடன் என் பெயரைச்சொல்லி வரவேற்றார். நான் கண் கலங்கிப்போனேன். இவ்வளவு வருடங்கள் கழித்தும் என்னை நினைவு வைத்திருக்கிறாரே என்ற ஆனந்தம் என் கண்ணில் நீரை வரவழைத்தது.)

திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் ஒரு தாவரவியல் பேராசிரியர், அவர் படிப்புக்கு ஏற்றாற்போல் பலவிதமான செடிகளும் மரங்களும் அவர் வீட்டைச்சுற்றி இருந்தன. அவர் வீடு ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கிறது. அதில் ஒரு பகுதியில் அவர் தந்தையார் கட்டின வீடு இருக்கிறது. அதற்கும் 100 ஆண்டு வயது இருக்கும். மீதி உள்ள இடங்களில் எல்லாம் செடி, கொடி, மரங்கள் இருக்கின்றன.

நான் அவரைப் பார்த்த ஆனந்தத்தில் அந்த செடி கொடிகளை போட்டோ எடுக்கத் தவறி விட்டேன். அவர் இந்த செடிகளின் பேரில் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அவருடைய மருமகன் டாக்டர் அகஸ்டின் செல்வசீலன் என்னுடைய மாணவர். என்னுடன் ஒரே பிரிவில் பணியாற்றியவர். அவரும் அப்போது அங்கு வந்திருந்தார். என் பயணத்திட்டத்தை இப்படி ஒத்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தோம்.

நாங்கள் மூவரும் அவருடைய தோட்டத்தைச் சுற்றிப்பார்த்தோம், ஒவ்வொரு இடத்திலும் உள்ள செடிமொடிகளைப் பற்றிய விவரங்களைக் கூறிக்கொண்டே வந்தார். மழை நீர் சேகரிப்பிற்கான தொட்டியையும் காண்பித்தார். அங்கு ஒரு விசாலமான பகுதியை மைதானமாக விட்டிருந்தார். வருடத்திற்கொரு முறை அங்கு ஒரு விழா நடக்கும் என்று திரு அகஸ்டின் கூறினார்.

பின்பு நாங்க்ள திரும்பி வந்து தேனீர் அருந்தினோம். பின்பு திரு. டாக்டர் டேனியல் சுந்தரராஜ் தான் செய்து வரும் ஆன்மீகப் பணிகளைப் பற்றிப் பேசினார். வாரம் ஒரு முறை அந்த ஊரில் உள்ள சீனியர் சிடிசன்களை வரவழைத்து அவர்களுக்கான நற்போதனைகள் செய்கிறார்.

வாரத்தில் ஒரு நாள் சிறுவர்களுக்கு அன்னதானமும் நற்போதனைகளும் செய்கிறார். வாரத்தில் மற்றொரு நாள் அந்த ஊரில் உள்ள வயதான பெண்மணிகளை வீட்டிற்கு வரவழைத்து வேதம் ஓதுகிறார்கள். இந்த காரியங்களுக்கெல்லாம் அவருடைய மருமகள் உறுதுணையாய் இருக்கிறார்கள். நான் சென்றிருந்த அன்று கூட இவ்வாறான கூட்டம் ஒன்று நடந்தது.

இது போக மற்ற சமயங்களில் மத சம்பந்தமான புத்தகங்கள் எழுதி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். அப்படி வெளியான புத்தகங்களைக் காண்பித்தார். எனக்கும் ஒரு புத்தகத்தில் வாழ்த்துக்கூறி கையெழுத்துப் போட்டு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நான் அவருடைய நினைவாகப் பொக்கிஷம் போல் பாதுகாப்பேன். 


இதையெல்லாம் பார்த்து நான் என் அன்றாட வாழ்க்கையை நினைத்து வெட்கிப்போனேன். உண்பதுவும் உறங்குவதுவும் தவிர நான் ஒன்றும் செய்யவதில்லை என்று நினைக்கும்போது மனம் குற்ற உணர்வால் வேதனையுற்றது. என்ன செய்வது? நான் ஒரு சோம்பேறியாக வளர்ந்து விட்டேன்.

பிறகு, திரு. அகஸ்டின் அவர்களுடன் ஊரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். அந்த ஊரின் முக்கியமான சர்ச்சைப் பார்த்தோம்.

நூறு ஆண்டுகளுக்கும் பழமையான நாசரெத்தின் தபால் நிலையத்தைப் பார்த்தோம்.


பிறகு நாசரெத்தின் பேருந்து நிலையம் பார்த்தோம்.

பின்பு வீட்டிற்கு வந்ததும் மதிய உணவு தயாராக இருந்தது. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்களும் அவர்களுடைய இரு மகள்களும் நன்கு உபசரித்தார்கள். என்ன, ஒரு குறை என்றால் என்னால் அதிகம் சாப்பிட முடியவில்லை. சாப்பிட்டபின் சற்று ஓய்வெடுக்க மாடியில் உள்ள ஒரு கட்டிலை திரு. அகஸ்டின் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார். உண்ட களைப்பு நீங்க, சுமார் ஒரு மணி நேரம் தூங்கினேன். மாலை இரண்டரை மணிக்கு விழிப்பு வந்தது. அங்குள்ள பாத்ரூமில் முகம் கைகால் கழுவிக்கோண்டு வந்தவுடன் சூடாக ஒரு தேனீர் கொடுத்தார்கள். அது தூக்கக் கலக்கத்தை விரட்டியடித்தது.

பிறகு கீழே இறங்கி வந்தேன். திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் அந்த ஊரிலுள்ள வயதான பெண்மணிகளை அழைத்து கூட்டம் நடத்திக்கொண்டு இருந்தார். அவரை அதிகம் தொந்திரவு செய்யாமல் விடை பெற்றுக்கொண்டு ரயில் நிலையம் வந்தோம். மூன்றேகாலுக்கு திருநெல்வேலி செல்லும் ரயில் வந்தது. அதில் ஏறி நாலேகாலுக்கு திருநெல்வேலி வந்து சேர்ந்தேன்.


திருநெல்வேலி போய்வந்தேன் என்றால் தெரிந்தவர்கள் கேட்கும் அடுத்த கேள்வி, இருட்டுக்கடை அல்வா வாங்கினீர்களா என்பதுதான். அதனால் ரயில் நிலையத்திலிருந்து டவுன் பஸ் நிலையம் போய் அங்கிருந்து நெல்லையப்பர் கோவில் சென்றேன். அந்தக் கோவில் வாசலுக்கு எதிரில்தான் இருட்டுக்கடை இருக்கிறது.

நான் போய்ச் சேர்ந்த நேரம் நாலேமுக்கால். அப்போதே சுமார் நூறு பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். கடைக்கு எந்த விதமான விளம்பரங்களோ, போர்டோ இருக்கவில்லை. கருப்பான சரப் பலகைகள் மட்டும் போட்டு அடைத்திருந்தார்கள். கடை ஐந்து மணிக்குத் திறந்தார்கள். கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அல்வா வாங்கினார்கள். என்னால் முண்டியடிக்க முடியாததால் அரை மணி நேரம் பொறுமையாக காத்திருந்து ஆறு அரை கிலோ அல்வாப் பொட்டலங்கள் வாங்கினேன்.

வியாபாரம் சுறுசுறுப்பாகவும் கச்சிதமாகவும் நடக்கிறது. பிறகு வந்த வழியே திரும்பி ஓட்டல் அறைக்கு ஆறு மணிக்கு வந்து சேர்ந்தேன். எட்டரை மணிவரை ஓய்வெடுத்தபின் அறையைக் காலி செய்து விட்டு ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். இரவு 9.45 க்கு கோவை செல்லும் ரயில் வந்தது. அதில் ஏறி என்னுடைய இடத்தில் படுத்துக்கொண்டேன். நீண்ட நாளைய ஆசை நிறைவேறிய திருப்தியில் நன்றாக தூங்கிப்போனேன்.


மறுநாள் காலை 7.45 க்கு கோவை வந்து சேர்ந்தேன். என் உறவுப் பெண் ஒன்றுக்காக கார் வந்திருந்தது. அதில் என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.

செவ்வாய், 17 நவம்பர், 2015

மனிதனும் சம்பிரதாயங்களும்

  

மனிதன் எக்காலத்திலும் சூழ்நிலைக்கு அடிமையே. இயற்கைச் சூழ்நிலை மட்டுமல்ல. சமூகச் சூழ்நிலைக்கும் அவன் அடிமையே. அடிமை என்ற வார்த்தை சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அப்படியானால் சூழ்நிலைக்கு அனுசரித்துப் போதல் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

ஒவ்வொருவரும் சுகமாகவே வாழ விரும்புகிறான். துக்கத்தை ஒருவரும் விரும்புவதில்லை. இது உலக வழக்கம். இதில் தவறு எதுவுமில்லை. அடுத்தவர்களைக் கெடுக்காமல் சுகமாக வாழ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

ஒருவனுக்கு எது சுகம் என்பதை அடுத்தவர்கள் தீர்மானிக்க முடியாது. அவரவர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். அதே மாதிரி ஒருவன் சுகம் என்று அனுபவிப்பதை இன்னொருவன்  அது சுகம் அல்ல என்று சொல்லலாம். அது அவனுடைய கருத்து. எல்லோருடைய கருத்தும் ஒன்றாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

பழக்க வழக்கங்களும் அம்மாதிரியேதான். அவரவர்களுக்குப் பிடித்த எண்ணங்களுடன்தான் ஒருவன் தன்னுடைய பழக்க வழக்கங்களை நடைமுறைப்படுத்துவான். இதுதான் சரி, இது தவறு என்ற ஒரு பொது விதி சில செயல்களுக்குத்தான் பொருந்தும். வீதிகளில் வண்டிகள் ஓட்டுவது இப்படித்தான் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அது எல்லோருக்கும் பொது. அதை மீறினால் சிக்கல்கள் வரும்.

ஆனால் கோயிலுக்குப் போவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். நம்பிக்கையிருப்பவர்கள் போகலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் போகாமல் இருக்கலாம். ஆனால் கோயிலுக்குப் போவது தவறு என்று கோவிலுக்குப் போகாதவர்கள்  கோவிலுக்குப் போகிறவர்களைப் பார்த்து சொல்லுவது தேவையில்லை. அதே மாதிரி கோவிலுக்குப் போகாமல் இருப்பது தவறு என்றும் கோவிலுக்குப் போகிறவர்கள் சொல்லக் கூடாது.

எனக்குத் தெரிந்த தத்துவம் இதுதான்.

ஞாயிறு, 8 நவம்பர், 2015

கணினியும் கண்ணாடிகளும்

                                      Image result for spectacled cine actress

நாற்பது வயதுக்கு மேல் எழுத்துகளோடு வாழும் எவருக்கும் கண் கண்ணாடி போடுவது அவசியமாகி விடுகிறது. நான் என்னுடைய 43 வது வயதில் கண்ணாடி போட்டேன். அது வரை மங்கலாகத் தெரிந்துகொண்டிருந்த எழுத்துக்கள் எல்லாம் பளிச்சென்று இருந்தன. கண்ணாடி போடவேண்டியதின் அவசியம் அன்று புரிந்தது.

அப்போதெல்லாம் "பைஃபோகல்" எனப்படும் கண்ணாடிகள்தான் பிரபலமாக இருந்தன. (ஏன் இப்போதும் பெரும்பாலானவர்கள் அப்படிப்பட்ட கண்ணாடிகளைத்தான் உபயோகிக்கிறார்கள்.) அப்போது கம்ப்யூட்டர்கள் வரவில்லை. அதனால் இந்தக் கண்ணாடிகள் போதுமானவையாக இருந்தன.

கம்ப்யூட்டர்கள் இன்று இருக்கும் மாதிரியில் வர ஆரம்பித்த உடன் கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு கண்ணாடி போட்டவர்கள் கஷ்டப்பட்டார்கள். "பைஃபோகல்" கண்ணாடி புத்தகங்களைப் படிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதைப் போட்டுக்கொண்டு கம்ப்யூட்டர் திரையைப் பார்ப்பதற்கு தலையைத் தூக்கித் தூக்கி பார்த்ததில் கழுத்து வலி வந்தது.

இந்த சிரமத்தைப் போக்குவதற்காக "பைஃபோகல்" கண்ணாடியில் கீழ் பாகத்தின் பவரில் ஒரு தனிக்கண்ணாடி தயார் செய்து உபயோகப் படுத்தினார்கள். இதனால் தலையைத் தூக்கி கம்ப்யூட்டர் திரையைப் பார்க்க வேண்டியதில்லை. சாதாரணமாகப் பார்த்தால் போதும்.

இது வரைக்கும் எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் எங்கள் சங்கத்திற்கு ஒரு கண் டாக்டர் வந்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன ஒரு நுணுக்கம் அனைவருக்கும் பயன்படும் என்று கருதுகிறேன்.

"பைஃபோகல்" கண்ணாடியில் கீழ் உள்ள பாகத்தின் பவர் புஸ்தகங்கள் படிப்பதற்காக நிர்ணயித்தது. புத்தகங்களை நாம் சாதாரணமாக ஒன்றரை அடி தூரத்தில் வைத்துப் படிப்போம். அதற்கு இந்த "பைஃபோகல்" கண்ணாடிகள் போதுமானவை. ஆனால் கம்ப்யூட்டர் திரையை நாம் இரண்டடி தூரத்தில் வைத்துப் பார்க்கறோம். அதற்கும் இந்த புத்தகம் படிப்பதற்கான பவர் உள்ள கண்ணாடியையே பயன்படுத்தினால் கண்ணிற்கு அசதி உண்டாகும்.

படிப்பதற்கு உபயோகப்படுத்தும் கண்ணாடியின் பவரில் 0.5 பவரைக் குறைத்து ஒரு கண்ணாடி உபயோகப்படுத்தினால் இந்த அசதி வராது. இந்த நுணுக்கத்தை அந்த கண் டாக்டர் கூறினார்.

நான் அதற்கு முன்பிருந்தே அப்படியான ஒரு கண்ணாடியைத்தான் உபயோகப்படுத்தி வருகிறேன். சைனா கண்ணாடிகள் எல்லா பவர்களிலும் மிகவும் சலீசாகக் கிடைக்கின்றன. விலை 100 முதல் 150 க்குள்தான் இருக்கும். எனக்கு படிப்பதற்கான பவர்  +3.0. கம்ப்யூட்டரைப் பார்ப்பதற்காக நான் உபயோகப்படுத்தும் கண்ணாடியின் பவர் +2.5. இந்த முறையில் நான் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தி வருகிறேன்.

பலரும் இந்த நுணுக்கத்தை அறிந்திருக்கலாம். ஆனாலும் சிலருக்குத் தெரியாமல் இருக்க க்கூடும். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

                                     Image result for computer