சனி, 25 பிப்ரவரி, 2017

எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்!

Image result for lean manImage result for big man    ➨➨➨

காலம் மனிதனின் வாழ்வில் பல மாற்றங்களைத் தோற்றுவிக்கிறது. இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவாகும்.

என்னுள் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றத்தைப் பற்றி இங்கு விவரிக்கிறேன்.

நான் உயர் நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது துப்பறியும் நாவல்களில் ஆர்வம் உண்டாயிற்று. என் ஒன்று விட்ட அண்ணன் இந்த ஈடுபாட்டை என்னுள் ஏற்படுத்தினான். இந்த ஆர்வம் ஒரு கட்டத்தில்   (கெரசின், பெட்ரோல் ஆகிய எதுவுமில்லாமலேயே) கொழுந்து விட்டு  எரிய ஆரம்பித்தது.

எப்படியென்றால் வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுத்துக்  கொண்டிருக்கும் போதே, டெஸ்க்குக்கு அடியில் இந்த நாவல்களை வைத்துப் படிக்கும் அளவிற்குப் போய்விட்டது. வீட்டில் இரவு என்னேரமானாலும் எடுத்த புத்தகத்தைப் படித்து முடிக்காமல் தூங்க மாட்டேன்.

ஒரு மணி நேரத்தில் தமிழ் புத்தகங்களானால் 130 பக்கங்கள் படிப்பேன். ஆங்கில புத்தகங்களானால் 90 பக்கங்கள் படிப்பேன். ஆனந்த விகடன், குமுதம் வாரப் பத்திரிகைகளை தவறாமல் வாங்கி அவைகளில் வரும் தொடர்கதைகளை தனியே பிரித்து வைத்து, அது முடிந்தவுடன் பைண்ட் செய்து வைப்பேன்.

இப்படியெல்லாம் படித்துக் கொண்டிருந்த நான் இப்போது ஆனந்த விகடன் குமுதம் பத்திரிக்கைகளைத் தொடுவதே இல்லை. அவைகள் முன் மாதிரி இல்லை என்பதுவும் ஒரு காரணம். மற்ற கதைகளைப் படிப்பதற்கு ஆர்வம் இல்லை.

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் ஒரு "டேப்" எனக்கு பரிசளித்தார். அதில் அமேசான்காரன் இலவசமாகவும் சலீசான விலையிலும் பல புத்தகங்களைக் கொடுத்தான். அவைகைள வாங்கி வைத்துள்ளேன். அதில் பல துப்பறியிம் கதைகள்

அவைகளைப் படிக்கலாமென்று ஆரம்பித்தேன். ஒரு நான்கைந்து பக்கங்கள் பிடித்தால் அதில் வரும் சஸ்பென்சைத் தாங்க முடிவதில்லை. நரம்புகள் புடைக்கின்றன. இரத்தம் சூடேறுகிறது. நெஞ்சு படபடக்கிறது. பிறகு அந்தக் கதையைத் தொடர முடிவதில்லை. மறு நாள் படிக்க ஆரம்பித்தால் இன்னும் ஒரு நான்கு பக்கங்களே படிக்க முடிகிறது.

இப்படியாக ஒரு கதையை முடிக்க பத்துப் பதினைந்து நாட்கள் ஆகின்றன. நினைத்துப் பார்த்தேன். ஒரு நானூறு பக்க நாவலை மூன்று மணி நேரத்தில் படித்த நான் எப்படி ஆகி விட்டேன் என்று நினைக்கும் போதுதான் என் வயதின் தாக்கம் புரிகிறது. இனி அந்த நாட்கள் வரப்போவதில்லை. மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டியதுதான்.

19 கருத்துகள்:

  1. ஐயா
    //எனக்கு வயதாகிவிட்டபடியால் என் மூளை துருப்பிடித்து விட்டது. அந்த துருவை எடுக்கக் கூடிய சாதனங்கள் ஏதும் என்னிடம் கைவசம் இல்லை. //

    ஆழ்ந்து படிக்க மூளைக்கு நல்ல இரத்த ஓட்டமும் பிராண வாயுவும் தேவை. மூளை துரும்பெடுத்தது போலவே நுரையீரல் oxygen கிரகிக்கும் ஆற்றல் படிப்படியாக குறைகிறது. ஒரு பலூன் எடுத்துக்கொள்ளுங்கள். பலமுறை காற்றை ஊதி பின்னர் விட்டு என்று செய்தால், பலூன் எப்படி தொய்ந்து போகிறதோ அப்படி நுரையீரலில் உள்ள காற்று பைகள் தொய்ந்து போய்விடுகின்றன (distention of alveoli).

    அதே போன்று இரத்தக்குழாய்களும். நீங்கள் வீட்டில் போட்ட தண்ணீர்குழாய்கள் எப்படி காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக துரும்பு, ஆலம், மண் போன்றவை சேர்ந்து அடைபடுகின்றனவோ அதே போன்று தமணிகளும் கொஞ்சம் அடைபட்டு
    கடத்து திறனை இழக்கின்றன.

    ஆகவே தற்போது இருக்கும் லொடக்கா வண்டியை ரொம்பவும் துன்புறுத்தாமல் அவசியமான வேலைகளுக்கு மட்டும் உபயோகித்து நாட்களை கடத்துங்கள்.

    ஆனால் அவ்வப்போது ஒரு மொக்கையோ நல்லதோ பதிவு மட்டும் எழுதி வாருங்கள். நாங்களும் உங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் அல்லவா?
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தற்போது இருக்கும் லொடக்கா வண்டியை//

      எங்க ஊர்ல லொடக்ளாஸ் வண்டி என்போம். இந்த வண்டிய பழைய இரும்புக்காரனுக்குப் போட்டுட்டு புதுசா ஒண்ணு வாங்கலாம்னு நினைக்கிறேன். அங்க ஹைதராபத்தில யாராச்சும் இருந்தா சொல்லுங்கோ, வந்த வெலைக்குப் போட்டுடலாம்?

      நீக்கு
  2. உங்கள் அளவு இல்லை என்றாலும், என்னாலும் பழைய மாதிரி படிக்க முடியவில்லை ஸார்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா! தாங்களே சொல்லியது போல வயதாக வயதாக நமது இரசனையும் மாறுபடுவதால், இளம் வயதில் நாம் விரும்பி படித்த அல்லது விரும்பி செய்த செயல்களின் பேரில் தற்போது ஈடுபாடு ஏற்படுவதில்லை. எடுத்துக்காட்டாக திரைப்படத்தை இரண்டாவது காட்சிக்கு பலமுறை சென்ற நாம், தற்போது வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து திரைப்படங்களை ஒரு மணி நேரத்திற்கு மேல் கூட பார்க்க இயலவில்லை. எனவே அப்படி இருந்த நாம் காலத்தின் கோலத்தால் இப்படியும் இருக்கவேண்டியிருக்கிறது. பழைய காலத்தை நினைத்துப்பார்த்து மகிழவேண்டியதுதான்.

    திரு ஜெயக்குமார் அவர்கள் திருவனந்தபுரத்தில் இருக்கிறார் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வயது ஒரு காரணமாக இருக்கலாம் ஐயா. ஆனால் ஆர்வத்தைத் தடுக்க முடியாதே?

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான். இப்போதெல்லாம் எனக்கு செய்தித்தாள்களில் வரும் பொடிப்பொடி எழுத்துக்களைப் படித்தால், வெகு விரைவில் கண்களுக்கு அயற்சி ஏற்பட்டு தூக்கத்தினை வரவழைத்து விடுகிறது.

    நான் தூக்கமாத்திரைகளுக்கு பதிலாக இவற்றைத்தான் இப்போதெல்லாம் பெரிதும் பயன்படுத்தி வருகிறேன்.

    முன்பு போல என்னாலும் ஆர்வமாகப் படிக்க முடிவது இல்லை.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. இப்போதும் நிறைய பக்கங்கள் படிக்கிறேன். ஆனாலும் 7வதிலிருந்து கல்லூரிவரை படித்த அளவு இப்போது படிக்க முடிவதில்லை. ஓரிரு சிட்டிங்ல சாண்டில்யன், துப்பறியும் சாம்பு, தமிழ்வாணன், சுஜாதா, பிடி சாமி,(என்ன காம்பினேஷன்) போன்றவர்கள் எழுதிய பல புத்தகங்கள் படித்துள்ளேன். இப்போ அப்படி ஒரேடியாகப் படிக்க முடிவதில்லை. இதற்கு ஜெயகுமார் அவர்களின் விளக்கமும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. நானும் அப்படித்தான் ,ஒரு காலத்தில் ராஜேஷ்குமார் நாவல்களை படிப்பேன் !அவரும் இப்போது எழுதுவதில்லை ,அவரைப் போல வேறு யாரும் எழுதுவதில்லை ,நானும் இப்போ படிப்பதுமில்லை :)

    பதிலளிநீக்கு
  8. வாசிப்பது என்பது வயதின் காரணமாக மாற்றத்தை அடைகிறது என்றாலும் ஒரு சிலர் அதிலேயே மூழ்கிக் கிடக்கிறார்களே ஐயா...

    பதிலளிநீக்கு
  9. நானும் உங்களை போலத்தான் ஒரு வெறித்தனமாக படிப்பேன் அமெரிக்கா வரும் வரை அதன் பின் அந்த பழக்கம் குறைந்துவிட்டது இப்போது படிப்பதெல்லாம் மேலோட்டமாகத்தான்

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    தேடல் உள்ள உயிர்களுக்கே தினம் பசியிருக்கும்.... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. இல்லாமல் இருப்பதை நினைத்து (ஞாபக மறதி உட்பட) சந்தோஷப்படுங்கள் ஐயா...

    பதிலளிநீக்கு



  12. இந்த வயதில் நமக்கு ஏற்படும் மனக்குளறுபடிகளை , எங்கள் வீட்டில்
    த .கே .சா . (தட்டுக்கெட்டச்சாவடி ) என்று குறிப்பிடுவது வழக்கம் ..

    வெள்ளைக்காரன் யோசித்துதான் அறுவது வயதில் Retirement என்று வைத்திருக்கிறான் !

    Dr .ராதாகிருஷ்ணன் -ஜவஹர் போன்றவர்களின் வழ்கையிலிருந்து சில tid -bits களில் கூட அவர்களும் இந்த தடுமாற்றங்களிலிருந்து தப்ப வில்லை என்று
    படிக்கும் பொழுது , கொஞ்சம் மனநிம்மதி ஏற்படுகின்றது !

    மாலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளைக்காரன் 55 வயசில் ரிடைர்மென்ட் வச்சிருந்தான். அந்தக் காலத்தில் பெரும்பலானோர் 60 ம் கண்டத்தை தாண்டுவதில்லை. இப்போது பனிதனின் ஆயுள் கூடி விட்டது. ஆனாலும் முதுமையின் ரேகைகள் தென்படுவதைத் தடுக்க முடிவதில்லை.

      நீக்கு
  13. எனது பதிவு முதுமை ஒரு பரிசு படியுங்கள் எல்லாக் கவலைகளும் நீங்கும் சுட்டி வேண்டுமா தேடிக் கொள்கிறீர்களா கூகிளில் தமிழில் கேட்டால் கிடைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதுமை எனக்களித்த சுதந்திரம் எனக்குப்
      பிடித்திருக்கிறது//

      உண்மை

      நீக்கு
  14. பதில்கள்
    1. நான் ஏற்கெனவே என் கருத்தை அங்கு பதிவிட்டுள்ளேன். அதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று புரியவில்லை.

      ஒரு சமயம் நான் உங்கள் பதிவில் கருத்து இட்டது பிடிக்கவில்லையானால் அதை நீக்கியிருக்கலாமே.

      உங்களுடைய இந்தக் கருத்தின் தொனி ஏதோ சரியாகப் படவில்லை.

      நீக்கு
    2. உண்மைதான் வாசிப்பு குறைந்துவிட்டது எனக்கும் :)

      நீக்கு