புதன், 14 ஜூன், 2017

11. நாட்டு நடப்பு – 3

                                           Image result for மணப்பெண் அலங்காரம்
இன்றைய செய்தி-கோவையில் நான்கு இடங்களில் பெண்களிடமிருந்து நகை பறிப்பு. தங்கம் பவுன் 11 ஆயிரம் ரூபாயக்கு மேல் விற்கிறது. தங்கத்தை விற்பது எளிது. ஆகவே அதை திருட பல கயவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் தமிழ்நாட்டுப்பெண்களுக்கு கழுத்தில் ஒரு இரண்டு பவுனாவது இல்லாவிட்டால் அவர்களுக்கு மூச்சு விட முடியாது. மிடில் கிளாஸ் குடும்பம் என்றால் குறைந்தது ஒரு பத்து பவுனாவது கழுத்தில் வேண்டும். பத்து பவுன் என்றால் இன்றைய விலையில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்.

இதைப்பார்க்கும் வழிப்பறித்திருடனுக்கு அல்வா சாப்படுகிற மாதிரி. இரு சக்கர வாகனங்களில் இரண்டு பேர் வேகமாக மேலே இடிப்பது போல் பக்கத்தில் உரசிக்கொண்டு போவார்கள். பின்னால் உட்கார்ந்திருப்பவன் கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் கழுத்தில் இருக்கும் நகையை அறுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிடுவார்கள். என்ன நடந்தது என்று அந்த பெண்ணுக்குத் தெரிவதற்குள் அந்த திருடர்கள் கண்ணுக்குத்தெரியாத தூரத்திற்கு சென்று விடுவார்கள்.

நகையை பறிகொடுத்த பெண் சுதாரித்து சத்தம் போடுவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருக்கும். போலீசுக்கு தகவல் போய் அவர்கள் வந்து விசாரிக்கும்போது இந்தப்பெண்ணிற்கு அழுகைதான் வருமே ஒழிய கோவையாக வார்த்தைகள் வராது.

பிறகு என்ன? வீட்டிற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பத்து-இருபது தடவை நடந்தபின் ‘நகை போனால் போகிறது, இந்த தொந்தரவிலிருந்து தப்பித்தால் போதும்’ என்று கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் துக்க விசாரிப்புகள் வேறு. 

சொந்தக்காரர்களின் விசாரிப்பு வேறு விதமாக இருக்கும். உனக்கு எப்போதும் ஜாக்கிரதை போறாது. வெளியில் நகை போட்டுக்கொண்டு போகையில் அக்கம் பக்கம் பார்த்து ஜாக்கிரதையாக போகக்கூடாதா? நகை போன துக்கம் ஒரு பக்கம், இந்த ஈவிரக்கமில்லாத விசாரிப்புகள் இன்னொரு பக்கம், எல்லாம் சேர்ந்து அந்தப்பெண் படும் பாடு இருக்கறதே அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

இதை விடக்கொடுமை என்னவென்றால் அந்தப்பெண்ணின் கணவன் இருக்கிறானே அவன் படுத்தும் பாடு ஆயுளுக்கும் தொடர் கதையாகத்தொடரும். அதுவும் அவன் வாங்கிக் கொடுத்த நகையாக இருந்ததோ போச்சு, அவன் பேச்சைக் கேட்டு காதில் இரத்தம் வந்து விடும்.

சரி உலகத்தில் இப்படி நடக்கிறதே, நாமாவது ஜாக்கிரதையாக ஏதாவது டூப்ளிகேட் நகை அல்லது வடநாட்டுப்பெண்கள் போடுவது போல் ஏதாவது ஒரு அரை பவுனில் ஒரு செயின் கண்ணுக்குத் தெரியாமல் போடலாம் என்று நினைப்பார்களா? மாட்டார்கள், அவள் அஜாக்கிரதையாக இருந்ததால்தான் அவள் நகையை திருடன் அறுத்துக்கொண்டு போனான். நானெல்லாம் அப்படி அஜாக்கிரதையாக போகமாட்டேன் என்று பீத்திக்கொள்வாள். அவளும் ஒரு நாள் தன் நகையை திருட்டுக்கொடுப்பாள்.

வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதில்லை. அப்படியே ஏதாவது அணிந்தாலும் அது கண்ணுக்கே தெரியாத மாதிரி இருக்கும். அதுவும் அந்தப் பெண்களின் நிறத்தில் ஒன்றிப்போய்விடும். மேலும் அவர்கள் அணிவது 18 அல்லது 14 கேரட் தங்க நகைகள்தான். நம் தமிழ் பெண்களுக்கு மட்டும் இந்த நகை மோகம் எப்படி பிடித்த்து என்று தனியாக ஒரு ஆராய்ச்சி நடத்த வேண்டும்.

15 கருத்துகள்:

  1. // பத்து பவுன் என்றால் இன்றைய விலையில் குறைந்தது ஒரு லட்சம் ரூபாய்//

    March, 2009 விலை!

    //வீட்டிற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் பத்து-இருபது தடவை நடந்தபின் ‘நகை போனால் போகிறது, இந்த தொந்தரவிலிருந்து தப்பித்தால் போதும்’ என்று கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினால் //

    :)))))) உண்மை!

    பதிலளிநீக்கு
  2. //வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதில்லை. அப்படியே ஏதாவது அணிந்தாலும் அது கண்ணுக்கே தெரியாத மாதிரி இருக்கும். அதுவும் அந்தப் பெண்களின் நிறத்தில் ஒன்றிப்போய்விடும்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இது படிக்கப் பளிச்சுன்னு நல்லா இருக்குது. அந்த
    பறங்கிப்பழ / பளாச்சுளை நிறத்தினை நினைத்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. பொன் நகை தொலைந்ததும் ஒரு பெண் படும் பாட்டினை
    புன்னகை ஏற்படுமாறு மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. சொல்ல மறந்துட்டேன் ......

    தங்களின் படத்தேர்வினில் அந்தக்குட்டி நல்லா ஷோக்கா இருக்கிறாள்.

    கரும்பச்சைக்கலரில் புடவைக்கும் நகைகளுக்கும் மேட்ச் ஆக உள்ளது.

    நல்ல கலர் வேறு ..... ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    பதிலளிநீக்கு
  5. வெளிநாட்டில் உள்ள நம் பெண்களும் நகையாசையுடன் தான் இருக்கிறார்கள்! கண்கூடாகப் பார்த்தேன் - இதற்கு அவரவர் மனப்பாங்கு தான் காரணம்!
    நீங்கள் சொல்வதை மற்றபடி ஒப்புக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். அவசரமாக பணம் பிரட்ட உபயோகப்படும் என்றால் அதை ஏன் கழுத்தில் டாலடிக்கும் வண்ணம் போட்டு ரிஸ்க் எடுக்கவேண்டும்? இது மற்றவர்களை விட, தான் பணமுள்ளவள் என்று பீத்திக்கொள்வதைத் தவிர வேறு நோக்கமில்லாதது என்று கருதுகிறேன். வெறும் கழுத்துக்குப் பதில் சிறிய செயின் போட்டுக்கொண்டால் போதுமானது.

    இப்போதைய தலைமுறைக்கு நகை ஆசை குறைந்துவருகிறது என்று நினைக்கிறேன். (ஏன்னா, இருக்கற காசில், வண்டி, பெரிய வீடு, பயணம் என்று வேறு திசை நோக்கி இளையவர்களின் ஆசை திரும்பியிருக்கிறது).

    இப்படின்னு சொன்னாலும், ஆண்களும் மோதிரம் போட்டுக்கொள்கிறோம்தானே. கழுத்தில், ஜெயில் காப்பு மாதிரி பெரிய செயின் போட்டுக்கொள்கிறோமே. கையில் பிரேஸ்லெட் என்று ஒரு காப்பைப் போட்டுக்கொள்கிறோமே. அதுவும் தவறுதான்.

    பதிலளிநீக்கு
  7. தமிழ் நாட்டு பெண்களுக்கு மட்டும் நகைமீது தனி மோகம்தான் ஐயா.

    பதிலளிநீக்கு
  8. திருடன் போலீஸ் என்று ஒரு கதை எழுதி இருந்தேன் the nexus between the police and chain snatchers அதுதான் நினைவுக்கு வந்தது நீங்கள் படித்த நினைவு இருக்கிறதா

    பதிலளிநீக்கு
  9. நகைமோகம் நங்கைகளின் தீராத தாகம். நகை களவு பற்றி சிந்திக்கும் பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
  10. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// நம்மவர்கள் நகை மோகத்தால் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றார்கள் என்றே கூறவேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. //வெளிநாட்டிலே பெரும்பாலான பெண்கள் நகைகளையே அணிவதில்லை. அப்படியே ஏதாவது அணிந்தாலும் அது கண்ணுக்கே தெரியாத மாதிரி இருக்கும். அதுவும் அந்தப் பெண்களின் நிறத்தில் ஒன்றிப்போய்விடும்.//
    அருமையாக சொன்னீர்கள். மற்றும் அவர்கள் வெள்ளியிலும் இந்திய ரூபாய் 800க்கும்,400க்கும் குறைவான பெறுமதி நகைகளையும் அணிகிறார்கள். இங்கே உள்ளவர்கள் ஏன் இப்படி மோசமாக நடக்கிறார்களோ தெரியல்ல? மாட்டோடு சண்டை போடும் விளையாட்டு தடைக்கெதிராக உயிரையும் கொடுப்போம் என்று போராடிய மாதிரியான விஷயம் தான் தங்க நகை மோகம் போலும்.

    பதிலளிநீக்கு