செவ்வாய், 15 அக்டோபர், 2019

போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே!


இந்தப்பதிவின் தலைப்பை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்பதில் ஐயம் இல்லை. நான் கடந்த சில வருடங்களாக பதிவுலகில் அதிகம் ஈடுபடவில்லை, காரணங்கள் பல. அவை இங்கு தேவையில்லை.

பிளாக்கரில் ஏதோ நோண்டிக்கொண்டு இருக்கையில் என்னுடைய பிளாக்கைப் பற்றி கூகுளார் சில விபரங்களை என் முன் எடுத்து வைத்தார். முக்கியமாக அவர் சொன்னது என்னுடைய பிளாக் இன்னும் உயிருடன் இருக்கிறது. அதை இன்னும் சில அன்பர்கள் பார்த்துக்கொண்டும் பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

நான் இந்தப் பதிவுலகம் அஸ்தமித்துப் போய்விட்டது என்று நம்பிக்கொண்டிருக்கையில் இந்த விபரங்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தன.

15-10-2019 அன்று எடுத்த ஸ்கிரீன் ஷாட்

இந்த விபரங்கள் 15-10-19 அன்று கூகுளாரின் தயவில் ஸ்கிரீன் ஷாட்டாக எடுக்கப்பட்டது. இது வரைக்கும் என்னுடைய பதிவை 13 லட்சம் பேருக்கு மேல் பார்த்திருக்கிறார்கள் என்கிற விஷயம் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தவிர போன மாதம் ஏறக்குறைய 5000 பேர் இந்த தளத்தைப் பார்வையிட்டு இருக்கிறார்கள்.

இந்த எண்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால் நம் தளத்திற்கு இன்னும் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றுவது சரியல்ல. அவர்களுக்காகவாவது இனி பதிவுகள் எழுதியே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இந்தப் பதிவுலகில் நான் 2009 ம் ஆண்டு அடியெடுத்து வைத்தேன். இன்றைக்கு ஏறக்குறைய 10 வருடங்கள் ஓடி விட்டன. அன்று பதிவுலகில் கொடி கட்டிப் பறந்தவர்களில் அநேகம் பேர் காணாமல் போய்விட்டார்கள். ஒரு சிலர்தான் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதில் முக்கியமானவர்கள்.

1, துளசி டீச்சர் அவர்கள்
2.திரு.வெங்கட் நாகராஜ் அவர்கள்
3. திரு G.N.பாலசுப்பிரமணியன்
4. திரு ஸ்ரீராம் அவர்கள்
5.திரு கண்ணன் அவர்கள்
6.திரு வே.நடனசபாபதி அவர்கள்

இன்னும் மற்ற சிலர்.

இது தவிர வருடந்தோறும் பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டு பதிவர்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கவும் வசதியாக இருந்தது. அனைத்தும் இப்போது கனாக் கண்ட மாதிரி காணாமல் போயின. எல்லாம் காலத்தின் கோலம். இதில் முகப்புத்தகம், வாட்ஸப்  போன்றவைகளின் பங்கும் உண்டு.

ஆனால் மற்ற மொழிகளில் பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன, சில பதிவுகளின் மூலம் சிலர் பணம் கூட ஈட்டுகிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். எனக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாது. நான் எழுதுவதைப் படித்து விட்டு ஏதோ நான்கு பேர் என்னைத் திட்டி பின்னூட்டம் போட்டால் அதுவே போதும் எனக்கு. பாராட்டுகளை விட கண்டன பின்னூட்டங்கள்தான் என்னை விழிப்பாக வைத்திருக்கும். என் வயதில் அது ஒன்றே எனக்குத் தேவையானது.

பார்ப்போம்.



12 கருத்துகள்:

  1. திரும்பி தொடர்ந்து எழுதப் போகிறீர்கள் என்பது சந்தோஷமான செய்தி.  காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. என்னையும் குறிப்பிட்டிருபப்தற்கு நன்றிகள்.  திருமதி கீதா சாம்பசிவம் (எண்ணங்கள்)  திருமதி வல்லிசிம்ஹன் (நாச்சியார்) கீதமஞ்சரி போன்றவர்களும் இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, ஸ்ரீராம். எல்லோரும் எழுதுவதைப் படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்கிறேன். பதிவில் குறிப்பிடாததற்கு வருந்துகிறேன்.

      நீக்கு
  3. நல்வரவு. வாழ்த்துகள் .அன்பு ஸ்ரீராம் நன்றி மா.

    பதிலளிநீக்கு
  4. இந்த விஷயத்தைத் தெரிந்துகொள்ள இத்தனை மாதங்கள் ஆகிவிட்டதா உங்களுக்கு... கந்தசாமி சார்? (திருப்தியா... கோபமான பின்னூட்டம் பார்த்து)

    இனியாவது, வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பதிவு போடுங்க. நாட்டுல எத்தனையோ டாபிக்குகள் இருக்கே.

    நிறையபேர் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தமிழ்மணம் போல அவைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள இப்போது வசதி இல்லை.

    பதிலளிநீக்கு
  5. போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடு. யார் மச்சான்? நீங்கள் தாத்தா அல்லவா? என்ன பூ? தமிழ்மணம் 1ம் ரேங்க் ஒன்னும் கிடைக்காது. அதுவே காணாமல் போய்விட்டது. ஆனால் நாங்கள் இருக்கிறோம். வந்து வம்பு பண்ண. வருகைக்கு வாழ்த்துக்கள், 

    பதிலளிநீக்கு
  6. நீண்ட நாள் கழித்து ஒரு பதிவுகளை கண்ட வுடன் மகிழ்ச்சி. நன்றி ஐயா . . . . .
    !

    அ.ஆரிப்

    பதிலளிநீக்கு
  7. நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிவுலகம் வந்திருக்கும் தங்களை வருக வருக என வரவேற்கிறேன்! தாங்கள் எழுதுவதைப் படித்து விட்டு ஏதோ நான்கு பேர் தங்களைத் திட்டி பின்னூட்டம் போட்டால் அதுவே போதும் என்று எழுதியிருக்கிறீர்கள். ‘பழுத்த மரம் தான் கல்லடிபடும்’ என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல.

    ”போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
    ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
    எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்”

    என்ற கவியரசார் சொன்னதுபோல் தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு