செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017
19. ஆதார் கார்டும் நானும்
ஆதார் கார்டு பதிவு செய்ய ஆரம்பித்த காலத்திலேயே நானும் என் குடும்பத்தினரும் கூட்டத்தோடு கூட்டமாகப் போய் பதிவு செய்து விட்டோம். ஆதார் கார்டு எந்த ஒரு அரசு வேலைக்கும் தேவையில்லை என்று உச்ச நீதி மன்றம் அன்றிலிருந்து இன்று வரை கரடியாய் கத்திக்கொண்டிருக்கிறது.
ஆனால் அரசோ மும்முரமாய் அனைத்து துறைகளிலும் ஆதார் ஆதார் என்று ஆப்பு வைத்துக்கொண்டே போகிறது. தற்பாதைய லேடஸ்ட் ஆப்பு மொபைல் போனை ஆதாருடன் இணைப்பது.
என்னுடைய மொபைலில் பிஎஸ்என்எல் காரன் ஒரு நாள் இதைப் பற்றி ஒரு செய்தி அனுப்பியிருந்தான். நானும் உடனே ஓடிப்போய் என் மொபைல் நெம்பரை ஆதார் நெம்பருடன் இணைக்கப்பார்த்தேன்.
என் கை விரலை ஒரு ஸ்கேனரில் வைக்கச்சொன்னார்கள். நானும் வைத்தேன். ஸ்கேனர் கம்மென்று இருந்தது. அந்த ஆபரேட்டர் பொறுமையாக ஒவ்வொரு விரலாக ஸ்கேனரில் வைத்துப் பார்த்தார். ஆனால் அந்த ஸகேனர் எதற்கும் அசைவதாகக் காணோம்.
அப்புறம் அந்த ஆபரேட்டர் என் மேல் பரிதாப ப் பட்டு "சார், உங்கள் கைவிரல் ரேகைகளெல்லாம் தேய்ந்து அழிந்து போய்விட்டன. இப்போதைக்கு ஒண்ணும் செய்ய முடியாது. இந்த ஆதார்-மொபைல் லிங்க் செய்வதற்கு ஒரு வருடம் கெடு இருக்கிறது, அதனால் அதற்குள் இந்த பிரச்சினைக்கு ஏதாவது வழு பிறக்கும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்" என்று என்னை வழியனுப்பி வைத்தார்.
நானும் என் கை ரேகைகளை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா என்று வழி தேடிக்கொண்டிருக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)