வெள்ளி, 2 செப்டம்பர், 2011

பதிவுலக நிதர்சனங்களும், என் வயிற்றெரிச்சலும்



பதிவுகளில் எதைப்பற்றி எழுதலாம் என்பதற்கு எந்த வரைமுறைகளும் இருப்பதாகத் தெரியவில்லை. எப்படி எழுதவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. யாரும் யாரைப் பற்றியும் அவதூறாக எழுதக்கூடாது என்கிற நடைமுறை ஒழுங்கெல்லாம் பதிவுலகில் தேவையில்லை.

அவரவர்களுக்குத் தோன்றியதை எழுதலாம். கூகுளாண்டவர் இந்த சுதந்திரத்தை எல்லாப் பதிவர்களுக்கும் வரமருளியிருக்கிறார். ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், பதிவின் தலைப்பு பார்ப்பவர்களின் கவனத்தை சுண்டி ஈர்த்து பதிவுக்குள் கொண்டு வரவேண்டும். அவ்வளவுதான். தலைப்புக்கும் பதிவில் எழுதியிருப்பதற்கும் சம்பந்தம் இருக்கவேண்டிய சட்டம் ஒன்றுமில்லை. தலைப்பு எவ்வளவு கேவலமாக இருக்கிறதோ அந்த அளவு பதிவின் ஹிட்ஸ் கூடும்.


அவதூறு பதிவுகள் போட்டால், அதைப்பற்றி யாரும் வெட்கப்படத் தேவையில்லை. பூக்காரி பதிவை ஞாபகம் வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்தப் பதிவை படிக்காதவர்கள் அபாக்கியசாலிகள். அத்தகைய பதிவுகள் உங்கள் பதிவுகளுக்கு நல்ல விளம்பரமாக அமையும். எதிர்ப்புகள் அதிகமாக வந்தால் ஒரு மன்னிப்பு பதிவு போட்டுவிட்டால் மேட்டர் முடிந்து விடும்.

பதிவுகளினால் சமூகத்திற்கு என்ன நன்மை என்று அடிக்கடி சில மேதாவிகள் கேட்பதுண்டு. இது ஏதாவது கேட்க வேண்டுமே என்பதற்காக கேட்கப்படும் கேள்விதானே தவிர இதற்கு யாரும் பதிலை எதிர்பார்ப்பதில்லை. பதில் சொல்வாரும் இல்லை.

ஆக மொத்தம் பதிவுகள் எதற்காக எழுதப்படுகின்றன என்று சுருக்கமாகச் சொல்லப்போனால் அவரவர்கள் பெருமை கொள்வதற்காகத்தான். நான் இவ்வளவு பதிவுகள் போட்டிருக்கிறேன், இத்தனை ஹிட்ஸ், etc. etc. என்று அவ்வப்போது அவர்கள் பதிவிலேயே போட்டுக்கொள்வார்கள். இது போக இந்தப் பதிவர்களை ஊக்கப்படுத்தவென்றே சில பதிவுகள் இருக்கின்றன. அவர்கள் இன்னாருடைய பதிவில் சமுதாய சீர்திருத்த சிந்தனைகள் கொட்டிக்கிடக்கின்றன, தேவையானவர்கள் போய் அள்ளிக்கொள்ளலாம் என்கிற மாதிரி எழுதுவார்கள். எல்லாம் இலவசம்தான்.

அபூர்வமாக நல்ல கருத்துகள் அல்லது பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட பதிவுகளும் இருக்கின்றன. அவைகளை எழுதுபவர்களும் படிப்பவர்களும் என்னைப் போன்ற, “காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது” மாதிரி ஆட்கள்தான். மக்களை எப்படியும் ஆண்டவன் அருளுக்கு ஆளாக்கி விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஆன்மீகப் பதிவுகள் சிலர் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு அருள் மழையை தாங்கும் சக்தியை ஆண்டவன்தான் கொடுக்கவேண்டும்.

கம்ப்யூட்டர் இயக்கத் தெரிந்த யார் வேண்டுமானாலும் பதிவு போடலாம். கம்ப்யூட்டர்கள் அவரவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வேலை செய்யும் ஆபீசில் இருந்தால் போதும். எப்படிப் பதிவுகள் ஆரம்பிப்பது என்பதற்கே பல பதிவுகள் போடப்படுகின்றன. தினம் மூன்று பதிவுகள் போடும் பதிவர்களிலிருந்து மூன்று மாதத்திற்கு ஒரு பதிவு போடுபவர்கள் வரை பல தரப்பட்ட பதிவர்கள் இருக்கிறார்கள். பதிவு போடுவதோடு நின்று விடாமல் கிடைத்த ஈமெயில் விலாசங்களுக்கெல்லாம் மெயில் தவறாது அனுப்புபவர்களும் உண்டு. யாம் பெற்ற இன்பம் (துன்பம்) எல்லோரும் பெறவேண்டும் என்கிற பரந்த மனப்பான்மை. அதுதான் ஏகப்பட்ட திரட்டிகள் இருக்கின்றனவே! அப்புறம் எதற்கு இந்த வாதனை?

தமிழில் பதிவு எழுதுவதில் ஒரு பெரிய சௌகரியம் என்னவென்றால் தமிழ் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்படிப்பட்ட தப்புகளையும் செய்யலாம். தமிழாசிரியர் படித்தால் தூக்குப்போட்டுக் கொள்ள (கொல்ல)  வைக்கும் அளவுக்கும் எழுதலாம். கேட்பார் யாருமில்லை.

பதிவுகளுக்கு நீள, அகல வரம்புகள் எதுவுமில்லை. நாலு வரி கவிதையும் போடலாம். நாற்பது பக்கம் கட்டுரையும் எழுதலாம். அப்படி எழுத ஒரு தனி அலுவலகம் வேண்டும். கூட, அத்தகைய பதிவுகளில் வரும் போட்டோக்களை எடுப்பதற்கு ஒரு தனி போட்டோகிராபி டீமே வேண்டும். இந்தப் பதிவுகளினால் என்ன வருமானம் வந்து, அலுவலர்களுக்கு எப்படி சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகிறது என்பதைப்பற்றி யாராவது ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும். அப்படியே மொக்கைப் பதிவு போட்டாலும் முந்நூறு பின்னூட்டங்கள் வரவழைப்பது எப்படி என்பது போன்ற டிப்ஸ்களும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

ஏன் இப்படி திடீரென்று ஞானோதயம் வந்தது என்றால், இத்தகைய பதிவுகளுக்குத்தான் மவுசு கூடுகிறதே தவிர, என்னை மாதிரி நல்ல, தரமான, ஆழ்ந்த கருத்துகளுடன் எழுதும் பதிவுகளை சீந்துவாரைக் காணோம். அந்த வயிற்றெரிச்சல்தானே தவிர, யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. அப்படி யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அமிர்தாஞ்சனம் வாங்கி தடவுங்கள். சரியாகப் போய்விடும்.