வியாழன், 30 ஜூன், 2016

வேலையில்லாமல் கஷ்டப்படும் நபர்களுக்காக ஒரு கதை


                     Image result for Road side temple

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு இருக்கும். நான் என் அலுவலகத்திற்குப் போகும் வழியில் ஒரு நாற்சந்தியில் ஒரு மூலையில் கொஞ்சம் இடம் விஸ்தாரமாய் இருந்தது. ஒரு நாள் அந்த இடத்தில் ஒரு சிறிய ஓலைப் பந்தல் 6 க்கு 6 அடி அளவில் போடப்பட்டு அதற்குள் ஒரு அடி உயரமுள்ள ஒரு வட்ட வடிவிலான கருங்கல் நட்டு வைக்கப்பட்டிருந்தது. ஆற்றுப் படுகைகளில் கிடைக்குமே அந்த மாதிரியான கல்.

அந்தக் கல்லுக்கு விபூதி பட்டை போட்டு சந்தனப்பொட்டு, குங்குமப்  பொட்டு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கல்லுக்கு முன் ஒரு உடைத்த தேங்காய், இரண்டு வாழைப் பழங்கள், ஒரு வாழைப்பழத்தில் இரண்டு ஊதுபத்திகள், தாம்பூலம் , ஒரு சிறிய பித்தளைச்சொம்பிற்கு வாயில் ஒரு மஞ்சள் துணியைக்கட்டி, நடுவில் கொஞ்சம் கிழித்து விட்டு, வைத்திருந்தது. இவைகளுக்கு முன்னால் ஒரு ஒல்லியான ஆசாமி காவி வேட்டி, துண்டுடன் உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் படித்தபடி இருந்தான்.

சரி ஏதோ பைத்தியக்காரன் போலிருக்குது என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால் போகப்போகத்தான் தெரிந்தது அவன் பைத்தியக்காரன் இல்லை, மற்றவர்களைப் பைத்தியம் பண்ண வந்தவன் என்று. கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோயிலுக்கும் பக்தர்கள் சேர்ந்தார்கள். அந்த வழியில் போகும் மாட்டு வண்டிக்காரர்கள் அங்கு நின்று அந்த சாமியைக் கும்பிட்டு விட்டுப் போகத் தொடங்கினார்கள்.

இவ்வாறு பக்தர்கள் அதிகரிக்கவே அந்தப் பூசாரி பந்தலை விஸ்தரித்து சாமியை வலுப்படுத்தினான். ஒரு வருடம் சென்றது. முதல் விழாவை விமரிசையாகக் கொண்டாடினான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான். சாமியும் ஆசாமியும் நிரந்தரமாகி விட்டார்கள்.

அந்த ரோட்டில் பக்கத்து ஊரிலுள்ள செங்கல் காளவாய்களிலிருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகள் அந்த வழியாகப் போவது வழக்கம். இந்தப் பூசாரி அப்படிப் போகும் வண்டுகளிலிருந்து இரண்டிரண்டு செங்கல்கள் வாங்கிக் கொள்வான். இப்படியே செங்கல்களைச் சேகரித்தான். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சிமென்ட், மணல் ஆகியவைகளை வாங்கிக் கொடுத்தார்கள். சில மாதங்களில் ஒரு பத்துக்குப் பத்து கோவில் அங்கே உருவாகி விட்டது.

அந்த சாமி கேட்பவர்களுக்கு கேட்டதை எல்லாம் கொடுக்கும் சக்தி உள்ளது என்று புகழ் பரவ ஆரம்பித்தது. பலர் அந்தக் கோவிலின் நிரந்தர புரவலர்கள் ஆனார்கள். ஒவ்வொரு இந்துப் பண்டிகையையும் விமரிசையாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். இப்படி அந்தக் கோவில் நிரந்தரமானதாக ஆகிவிட்டது. சமீபத்தில் அந்த வழியாகப் போனபோது கவனித்தேன். சாமிக்கு கருங்கல் தரை, வெள்ளிக் கவசம், உற்சவ வாகனங்கள் இத்தியாதிகளுடன் மிகவும் செல்வாக்காக விளங்கியது.

சாமிக்கே இப்படியென்றால் பூசாரியைப் பற்றிக் கேட்க வேண்டுமா? அவரும் பட்டில் காவி உடுத்துக்கொண்டு ரொம்பவும் சௌக்கியமாக இருந்தார்.

நம் இளைஞர்கள் பலர் படித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கோவில் பூசாரியைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.