முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரிவள்ளல் என்று நம் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. நம்மையும் இப்படி யாராவது வள்ளல் என்று போற்ற மாட்டார்களா என்று ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒரு மூலையில் ஒரு நப்பாசை ஒட்டிக்கொண்டிருக்கும். உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாது, ஆனால் என் மனதிற்குள் அப்படி ஒரு ஆசை ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
அந்த ஆசையைத் தீர்க்கவென்றே இப்போது தீவிரவாதிகள் கிளம்பியிருக்கிறார்களாம். அவர்கள் நம்மை வாரிவழங்கும் வள்ளல்கள் என்று போற்றுகிறார்களாம். எப்படி என்று கேட்கிறீர்களா?
தீவிரவாதிகளுக்கு இன்று முக்கியமாகத் தேவைப்படுவது ஒரு பெயர் அதாவது ஒரு Identity. உங்கள் பெயரை வைத்து ஒரு தீவிரவாதி தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். எப்படி?
பேங்க் அல்லது மொபைல் டீலர், கேஸ் கம்பெனி இப்படி பல இடங்களில் உங்களுடைய அடையாளத்தை நிரூபிக்க பல ஆதாரங்களைக் கேட்கிறார்கள். ரேஷன் கார்டு, வாக்குரிமை அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு இப்படி பல ஆதாரங்களின் நகல்களை இங்கு நாம் பாரிவள்ளல் ரேஞ்சில் வாரி வழங்குகிறோம். தற்சமயம் மோடியின் தயவால் அவைகளை நாமே சர்டிபை பண்ணிக்கொள்ளலாம்.
ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரி ஆதாரம் கேட்கிறார்கள். பேங்கில் ரேஷன் கார்டு செல்லாது. டெலிபோன் ஆபீசில் வாக்காளர் அட்டை செல்லாது. இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனி ரூல்ஸ் வைத்திருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து இந்த நகல்களைக் கேட்பதால் நான் அனைத்து அடையாள ஆதாரங்களையும் பத்துப்பத்து காப்பி எடுத்து அனைத்தையும் ஒரு பையில் வைத்திருக்கிறேன். இம்மாதிரி ஆதாரம் கேட்கும் இடங்களுக்குச் சென்றால் அந்தப் பையை அப்படியே கொண்டு போய்விடுவேன். அவர்கள் அட்ரஸ் புரூப் என்றால் அந்தப் பையில் இருக்கிம் அனைத்துக் காப்பிகளையும் அவர்கள் முன்னால் போட்டு உங்களிக்கு எத் பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவது வழக்கம்.
இந்த ஆதாரங்களைக் கொடுத்து நம் காரியங்களை முடித்தவுடன் இதைப்பற்றி நாம் அறவே மறந்து விடுகிறோம். ஆனால் இவை பின்னால் என்ன ஆகிறது தெரியுமா? எல்லோரும் இவ்வாறு செய்வதில்லை. ஆனாலும் சில இடங்களில் தில்லு முல்லு நடக்கிறது. தீவீரவாதிகள், அல்லது போலி பெயர்களில் உலாவ விரும்புகிறவர்கள் அனைவரும் நாம் இப்படிக்கொடுக்கும் நம் விவரங்கள் அடங்கிய காப்பிகளை விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். அதை வைத்து அவர்கள் பாஸ்போர்ட் வாங்குகிறார்கள், ரயில் டிக்கட் வாங்குகிறார்கள், பேங்க் கணக்கு ஆரம்பிக்கிறார்கள், இன்னும் என்னென்னமோ செய்கிறார்கள்.
இதற்கு என்று ஏஜண்டுகள் இருக்கிறார்கள். நீங்கள் வீட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் உங்கள் பெயரில் எவனோ ஒருவன் வெளி நாட்டுக்குப் பறந்து கொண்டிருப்பான். உங்கள் பெயரில் இருக்கும் பேங்க் கணக்கில் பல தில்லு முல்லுகள் நடக்கும். நினைத்தாலே பயமாக இருக்கிறதல்லவா? இது நாம் பாரி வள்ளலாக ஆனதின் விளைவு.
இதற்கு மாற்று என்ன? இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலில் ஒரு வழி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி ஆதாரங்களின் நகல்களில் சர்டிபை செய்ய கையெழுத்து போடும்போது இன்ன காரியத்திற்காக என்று குறிப்பிடவேண்டும். பேங்க் கணக்கு ஆரம்பிக்க, சிம் கார்டு வாங்க என்று குறிப்பிடவேண்டும். அதன் கீழ் கையெழுத்து போட்டுவிட்டு தேதியை மறக்காமல் எழுத வேண்டும். இந்த இரண்டு குறிப்புகளையும் கடைப்பிடித்தால் ஓரளவு திருட்டுகளைத் தவிர்க்க முடியும் என்று வல்லுநர்கள் சொல்லுகிறார்கள்.
இந்த விபரங்களை எல்லோருக்கும் அறிவியுங்கள்.