சனி, 31 ஜூலை, 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 2

ஆயத்தங்கள்.
இந்த தொடர் பதிவுகளில் எழுதும் விஷயங்கள் இந்த மாதிரி சுற்றுலா செல்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். என்னுடைய சொந்த அனுபவங்களைப் பற்றித்தான் அதிகமாக எழுதியிருக்கிறேன். என் கருத்துப்படி அதுதான் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். சில விவரங்கள் அதிகப்படியானதாகத் தோன்றலாம். முன்பின் எந்த அனுபவமும் இல்லாதவர்களும் தெரிந்து கொள்ளவே அந்த விவரங்கள்.
சுற்றுலா செல்வதில் முக்கியமானது முன்னேற்பாடுகள். போகும் இடத்தின் விவரங்கள், தங்கும் இடங்கள், வாகன வசதிகள், மொழி தெரிந்த ஒருவர். அங்கு கிடைக்கும் உணவுகள் ஆகியவை பற்றி நன்கு தெரிந்திருக்கவேண்டும். தங்குமிடங்களுக்கு கூடியமட்டும் முன்பதிவு செய்தல் நலம். குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் முன்பதிவு செய்யாவிடில் தங்கும் விடுதிகள் கிடைப்பது கடினமாகிவிடும்.
அடுத்தது: கொண்டு செல்லும் சாமான்கள். சிலவற்றை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்.(சோப்பு, சீப்பு, முதலியன) சில, போகும் இடங்களில் கிடைக்காமல் போகலாம். (மருந்துகள், உடைகள், முதலியன). இவைகளைப் போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தது: மனநிலை. நம் வீட்டில் இருக்கும் எல்லா சௌகரியங்களும் போகும் இடத்திலும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இதில் ஏமாற்றம் ஏற்பட்டால் சுற்றுலா முழுவதும் வீணாகிவிடும். எதிர்பாராத பல அசௌகரியங்கள் ஏற்படலாம். அவைகளை அனுசரித்துப் போகவேண்டும். அப்படியில்லாமல் அந்த அசௌகரியங்களைப் பற்றியே குறைப்பட்டுக் கொண்டிருந்தால் எல்லோருக்கும் வேதனையாக இருக்கும்.
சுற்றுலா செல்லும்போது யாராவது ஒருவர்கொஞ்சம் அனுபவம் உள்ளவர் தலைமைப்பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கும் திறன் அவரிடம் இருக்கவேண்டும். அவர் எடுக்கும் முடிவுகளை எல்லோரும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
நாங்கள் அனைவரும் ஒன்றாகப் பேசி கலந்தாலோசித்து இந்த விஷயங்களில் முடிவு எடுத்தோம். நான்தான் லீடர். புறப்படும் நாளன்று எல்லா சாமான்களையும் மூட்டை கட்டி ரெடியாக வைத்தோம். ஒரு கால் டாக்சி ஏற்பாடு செய்து அதில் விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். (இவ்வளவு செலவு செய்கிறீர்கள், ஏன் கஞ்சத்தனமாக கால் டாக்சி பிடித்தீர்கள், முழு டாக்சியாகவே பிடித்திருக்கக் கூடாதா என்பவர்களுக்கு பதில் இல்லை)
விமானநிலைய நடைமுறைகள் புதிதாகப் போகிறவர்களுக்கு புரிவது கொஞ்சம் கடினம். என்னால் முடிந்தவரையில் எளிமையாக விளக்க முயலுகிறேன்.
1.   டிக்கெட்: இது பல வழிகளில் கிடைக்கிறது. இன்டர்நெட். டிராவல் ஏஜெண்டுகள், ஏர்லைன்ஸ் நிறுவன நேரடி விற்பனை கவுண்டர் என்று பல இடங்களில் வாங்கலாம். வாங்கும் நாள், ஏர்லைன்ஸ் கம்பெனி இவைகளைப்பொறுத்து டிக்கெட்டின் விலை வித்தியாசப்படும். ஒரே பயணத்தில் பக்கத்து சீட்காரருக்கு டிபன் கொடுப்பார்கள், ஆனால் உங்களுக்கு கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் நீங்கள் வாங்கிய டிக்கெட் மலிவானது. எது எப்படியிருந்தாலும் டிக்கெட்டை வீட்டில் வைத்துவிட்டு விமான நிலையம் சென்றால் தலைகீழாக நின்றாலும் உங்களை பறக்க அனுமதிக்க மாட்டார்கள். அதேபோல் பணமும் முக்கியம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவைகளையும் கொண்டு செல்லலாம்


2.   லக்கேஜ்: விமானக் கம்பெனிகள் இவற்றை இரண்டாகப் பிரித்திருக்கின்றன. விமானத்தின் லக்கேஜ் கேபினில் போடும் மூட்டைமுடிச்சுகள் ஒருவகை. இவை ஒரு டிக்கெட்டுக்கு 20 கிலோ மட்டும் அனுமதிக்கப்படும். அதற்கு அதிகமானால் எடைக்குத்தகுந்த மாதிரி அதிகக் கட்டணம் கட்டவேண்டும். ஆகவே ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இதற்குசெக்இன் லக்கேஜ்என்று பெயர். இந்த மூட்டைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்காகவும் நல்ல பூட்டுக்களுடனும்  இருப்பது நலம். ஏனென்றால் விமான நிலைய ஊழியர்கள் இவைகளை கொஞ்சம் கரடுமுரடாக கையாளுவார்கள். இந்த லக்கேஜ்களில் டைம் பாம்ப், வெடிகுண்டுகள், ஜெலடின் குச்சிகள் போன்றவைகளையோ அல்லது அது மாதிரி தோற்றம் உள்ளவைகளையோ எடுத்துச்சென்றால் உங்கள் பயணம் அரோகராதான்.

அடுத்த வகைகேபின் லக்கேஜ்எனப்படும் பயணிகள் தங்களுடனேயே எடுத்துச்செல்லக் கூடியவை. இவை சுமார் 10 கிலோவிற்கு மேற்படாமல் சிறிய சூட் கேஸாகவோ அல்லது ரெக்ஸின் பேக்காகவோ இருக்கலாம். பயணிகளின் சீட்டுக்கு மேல் இருக்கும் லக்கேஜ் கேபினில் வைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். அனுபவப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்வது நல்லது. இந்த வகை பைகளில் எந்த விதமான ஆயுதங்களையும் கொண்டு செல்லக்கூடாது. கத்தரிக்கோல், ஸ்க்ரூ டிரைவர், நெயில் கட்டர். கத்திகள், பெரிய ஊசிகள், முதலானவைகளைக் கொண்டு செல்லக்கூடாது. ஊறுகாய், ஜாம், சமையல் பொடிகள், தின்பண்டங்கள் ஆகியவைகளும் இதில் அடங்கும். தெரியாமல் கொண்டு சென்று ஸகேனில் தெரிந்தால் அவைகள் பறிமுதல் செய்யப்படும். அய்யோ, அப்பா என்று கூக்குரல் போட்டால் ஒன்றும் நடக்காது.

இது தவிர பெண்கள் ஒரு சாதாரண லேடீஸ் பேக் கொண்டு செல்லலாம். ஆண்கள் ஒரு லேப்டாப் கொண்டு செல்லலாம்.
இந்த சாமான்கள் அனைத்தும் மெஷின் மூலம் ஸ்கேன் செய்யப்படும். ஆட்சேபணைக்குரிய எந்தப்பொருள் இருந்தாலும் வம்புதான். ஆகவே முதலிலேயே ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

தொடரும்….