மணற்கேணி கட்டுரைப்போட்டிக்கு இந்தக் கட்டுரையை எழுதி அனுப்பியிருந்தேன். நடுவர்களால் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. எழுதினது வீணாகப் போகவேண்டாம் என்பதால் இந்தப் பதிவில் போடுகிறேன். கட்டுரையின் நீளம் அதிகமாக இருப்பதால் பிரித்து போடுகிறேன்.
ஆசிரியர் பெயர்: Palaniappan Kandaswamy
நிலத்தடி நீர் என்றால் சாதாரண மக்களுக்கும் தெரியும். நிலத்திற்கு அடியில் இருக்கும் நீர் என்று வார்த்தையிலிருந்தே புரிகிறது. நிலத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழைநீர் மண்ணிற்குள்ளே ஊடுருவி அடியில் இருக்கும் பாறைகளுக்கு மேல் சேர்ந்து நிலத்தடி நீர் ஆகிறது என்பது பாலபாடம். பாறைகள் பல அடுக்குகளாக இருக்கும். மேல் மட்டத்திலுள்ள பாறைகளில் உள்ள வெடிப்புகளின் ஊடே நீர் கசிந்து கீழே சென்று அதற்கடுத்த மட்டத்திலுள்ள பாறைகளின் மேலும் சேமிக்கப்படும். இவ்வாறு நிலத்தடி நீர் பல மட்டங்களில் சேமிக்கப்பட்டு இருக்கும். இந்த நிலத்தடி நீர், நிலமட்டத்தின் சரிவுகளுக்கு ஏற்ப பள்ளத்தை நோக்கி நகரும்/ஓடும். நீர் மெதுவாக நகர்ந்தாலும் ஓடுகிறது என்று சொல்வதுதான் மரபு. இந்த நீரோட்டத்திற்கு “நிலத்தடி நீரோட்டம்” என்று பெயர்.
அடிமட்ட பாறைகள், சரிவான பூமிகளின் கடைசி பகுதியில், தரையின் மேல் மட்டத்திற்கு வந்து விடுவதால், அங்கே இந்த நிலத்தடி நீர் கசிந்து ஒன்று சேர்ந்து ஊற்றாக வெளிவருகிறது. இந்த ஊற்று நீர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஓடையாகவும், ஆறாகவும் மாறுகின்றன. மழை காலங்களில் நிலங்களின் மேல் மட்டத்திலிருந்து வடியும் நீரும் ஆற்றுடன் கலக்கும். ஆறுகள் கடைசியில் கடலில் கலந்து விடுகின்றன. கடல்நீர் மறுபடியும் ஆவியாகி, மேகமாகி, நிலப்பிரதேசங்களில் மழையாகப் பெய்கிறது. இந்த “நீர்ச்சுழற்சி” யைப்பற்றி எல்லாரும் படித்திருப்பார்கள்.
இது இயற்கையின் நியதி. மனிதன் இயற்கை விதிகளில் தலையிடாத வரையில் இதுமாதிரிதான் நடந்து கொண்டிருந்திருக்கிறது. மனிதனும் முடிந்தவரை இயற்கையோடு ஒன்றிணைந்துதான் வாழ்ந்திருக்கிறான். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தச்செய்தியை நன்றாக கவனத்தில் கொள்ளவும். நாடோடியாக அலைந்த காலம் போய், நிலையாக வாழும் நாகரிகம் தோன்றிய காலத்தில், நிலத்தடி நீர் ஆறுகளாக மாறி ஓடும் இடங்களில் மட்டுமே வாழ்ந்து, அங்கேயே ஆற்றுப்பாசனம் மூலம் விவசாயம் செய்து, அதிலிருந்து வரும் உணவுகளை உண்டு வாழ்ந்து வந்தான்.
காலப்போக்கில் ஆற்றுப்பகுதிகளின் சீற்றங்களை சமாளிக்க முடியாமலும், மற்றும் மக்கள் தொகை பெருகியதாலும் மழை நன்றாகப் பெய்யக்கூடிய மேட்டுப்பகுதிகளுக்கு மனிதன் குடி பெயர்ந்தான். அங்கு மானாவாரி விவசாயம் செய்து, கிடைக்கக்கூடிய உணவுகளை உண்டு வாழ்ந்தான். எதேச்சையாக நிலத்தை ஆழமாகத் தோண்டும்போது நீர் சுரப்பதைக் கண்டுபிடித்த பிறகு, கிணறுகள் தோன்றின. அவன் வாழக்கூடிய எல்லையும் விரிவடைந்தது. அதே நீரைக்கொண்டு விவசாயமும் செய்ய ஆரம்பித்தான். இவ்வாறுதான் நிலத்தடி நீரைக்கொண்டு செய்யப்படும் கிணற்றுப்பாசன விவசாய முறை பரவலாகப் பெருக ஆரம்பித்திருக்க வேண்டும். இது ஏறக்குறைய ஒரு இருநூறு முன்னூறு வருடங்களுக்கு முன்பு தோன்றியிருக்கலாம்.
தொடரும்...
தொடரும்...