சனி, 17 டிசம்பர், 2011

ஈமு கோழி பித்தலாட்டம்

விவசாயிகளை தொழிற்சாலைகள் எவ்வாறு பழி வாங்குகின்றன என்று பலருக்கும் தெரியும். அவர்களை இப்போது சில சமூக விரோதிகளும் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

ஈமு கோழி என்று ஒரு ரகம்.


சுமார் 5 அல்லது 6 அடி உயரம் வளரும். அறுபது அல்லது எழுபது கிலோ எடை இருக்கும். ஒன்றரை வயது ஆன கோழி முட்டையிட ஆரம்பிக்கும். முட்டை ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு கோழியின் இறைச்சிக்கோ முட்டைக்கோ மார்க்கெட் இல்லை.

ஆனால் இந்தக் கோழியைக் காட்டி பலர் லட்சக்கணக்கில் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கூகுளில் பல ஏமாற்றுக்கதைகள் வெளியாகி உள்ளன. ஆனாலும் மக்கள் மேலும் ஏமாறத் தயாராக இருக்கிறார்கள்.

லேடஸ்ட்டாக கோவை சாயிபாபா காலனியில் ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டால் உங்களுக்காக அவர்களே அவர்கள் வைத்திருக்கும் ஈமு பண்ணையில் ஆறு ஈமு கோழிகள் வாங்கி விட்டுவிடுவார்கள். அவைகளைப் பராமரிப்பது, முட்டைகளை விறபது ஆகிய அனைத்து வேலைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

ஈமு கோழி வளர்ப்பில் எக்கச்சக்கமான லாபம் வருவதாக அவர்கள் சொல்லுகிறார்கள். அதனால் உங்கள் முதலீடான ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். எவ்வளவு பேர் முதலீடு செய்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் மற்ற மாவட்டங்களில் இந்த மாதிரி கம்பெனிகளுக்கு இருக்கும் ஆதரவைப் பார்த்தால் ஏகப்பட்ட பேர் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம் கொடுக்கக் கூடிய தொழில் மீட்டர் வட்டித் தொழில்தான். அதிலும் அதிக முதலீடு செய்தால் அந்த அளவுக்கு லாபம் காண முடியாது. ஆகவே இந்த கம்பெனி முழுதுமாக மோசடிக் கம்பெனி என்று படுகிறது. மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.