நான் என் அனுபவத்தில் கண்டது என்னவென்றால், மனிதனின் உடல் இரும்பால் ஆனது இல்லை. இரும்பிற்கே ஒரு காலத்திற்குப் பிறகு சோர்வு வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். Metal fatique பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அப்படியிருக்க உடல் அங்ககப் பொருட்களால் ஆனது. அது வயதினால் மூப்படைவது இயற்கையே. ஆனால் பலர் இதைத் தடுக்கலாம், ஒழுங்கான பழக்கங்களினாலும் யோகாசனம் காயகல்பம் போன்ற உடல் பயிற்சியினாலும், உடல் மூப்படைவதை தள்ளிப்போடலாம் என்று சொல்கிறார்கள்.
என்ன செய்தாலும் ஒரு கால கட்டத்தில் உடல் சோர்வு அடையத்தான் செய்யும். ஆனால் மனதோ இன்னும் இளமையாக இருக்கும். நான் 80 வயது இளைஞன் என்று சிலர் சொல்லிக் கொள்வார்கள். வயதானவர்களுக்கு இயற்கையாக வரும் சலிப்பையும் சோர்வையும் போக்க இவ்வாறான கூற்றுகள் பலராலும் சொல்லப்படுகின்றன.
ஆனால் உண்மை வேறுவிதமானது. வயதானபிறகு உடலின் இயக்கங்கள் முறைந்து போகின்றன. நம்மை நாமே எவ்வளவு நாட்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியும்? நம் உடல் நிலையை சரியாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு நம் செயல்களைச் செய்வோமேயானால் உடல் அதற்கு ஒத்துழைக்கும்.
நாம் சிறு வயதில் செய்த செயல்களை மனதில் வைத்துக்கொண்டு என்னால் செய்ய முடியும் என்று வீம்புக்காக செயல்களை செய்யும்போது உடல் ஒத்துழைக்காது. உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ மனைக்குப் போக நேரிடும்.
என் நண்பர் ஒருவர் இருதய பை-பாஸ் ஆபரேஷன் செய்தவர் தன் காரில் தானே ஓட்டிக்கொண்டு 300 கி.மீ. தூரத்திலுள்ள நன் சொந்த ஊருக்கப் போனார். இவ்வாறு அவர் பல முறை சென்றிருக்கிறார். ஆனால் இந்த முறை உடல் தலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேரவேண்டியதாகி விட்டது. எல்லா பரிசோதனைகளும் முடிந்து டாக்டர்கள் சொன்னது அவர் தன் வயதிற்கு மீறிய செயல் செய்ததுதான் இந்த உடல் நலக்குறைவுக்கு காரணம்.
நாம் தமக்கு வயதாகிவிட்டது என்பதை மறக்கிறோம் அல்லது மறந்துவிட ஆசைப்படுகிறோம். மற்றவர்கள் முன்னால் நாம் இளமையாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம். இந்த ஆசை தேவையற்றது. பல சமயங்களில் பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது.
இதை மூத்தவர்கள் உணர்ந்து அதற்குத் தக்கவாறு நடந்து கொண்டால் இன்னும் பல ஆண்டுகள் நலமாக வாழலாம்.