தெரு
நாய்களைக் கொல்வது ஜீவகாருண்யத்திற்கு எதிரானது என்று மனேகா காந்தி என்று ஒருவர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இப்போது நெரு நாய்களைக் கொல்வதில்லை என்று சொல்கிறார்கள். தெருநாய்கள் பொது ஜனங்களுக்குத் தொந்திரவாக இருந்தால் சாத்வீக முறையில் அவைகளைப் பிடித்து அவைகளுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்து விட்டால் அப்புறம் தெரு நாய்கள் இல்லாமல் போய்விடும். இப்படி ஒரு திட்டம் இருக்கிறது.
அதாவது கொக்கை எப்படி பிடிக்கிறது என்று ஒருத்தன் கேட்டானாம். அதற்கு மற்றொருவன் சொன்னானாம், நல்ல வெயில் அடிக்கும்போது கொக்கு தலையில் ஒரு கை வெண்ணெயை வைத்து விட்டால், அந்த வெண்ணை உருகி, கொக்கின் கண்ணை மூடிவிடும். அப்போது போய் கொக்கை லபக்கென்று பிடித்துக் கொள்ளலாம் என்றானாம். அது மாதிரிதான் இந்தத் திட்டமும்.
ஆனாலும்
தெரு நாய்கள் வருடாவருடம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறதே தவிர குறைந்த மாதிரி காணோம். நாம்தான் சிந்தனையாளராயிற்றே? இந்தப் பிரச்சினை குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது சில பல கருத்துக்கள் தோன்றின. உலக நன்மையை முன்னிட்டு அந்தக் கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.
ஜீவகாருண்யம்
என்பது உயிர்களைக் கொல்லாமல் இருப்பது. சரிதானே? அதனால்தானே தெரு நாய்களுக்காக மனேகா காந்தி போராட்டம் நடத்தினார்கள். எனக்குத் தோன்றிய எண்ணம் என்னவென்றால் பல மனிதர்கள் இந்த ஆடு, மாடு, கோழி ஆகியவற்றின் மாமிசங்களை உண்கிறார்களே, அவர்களுக்கு அந்த மாமிசம் எங்கிருந்து கிடைக்கிறது? அந்த ஆடு மாடு கோழிகளையெல்லாம் கொல்லாமலே அந்த மாமிசங்கள் கிடைக்கின்றனவா அல்லது அவைகளைக் கொன்றுதான் அந்த மாமிசங்கள் கிடைக்கின்றனவா? அப்படி அவைகளைக் கொல்கிறார்கள் என்றால் அது ஜீவகாருண்ய அடிப்படையில் தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா?
இந்த
எண்ணம் தோன்றிய நாளிலிருந்து என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை. இப்படியே தூங்காமல் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது வேறொரு எண்ணம் தோன்றியது.
நான்
ஒரு விவசாயப் பட்டதாரி. செடி கொடிகளுக்கும் உயிர் இருக்கிறது என்று நான் படிக்கும்போது சொல்லிக் கொடுத்தார்கள். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கும் என்று நம்புகிறேன். அப்படியானால் அந்த செடிகொடிகளைக் கொன்றுதானே நாம் சாப்பிடுகிற அரிசி, பருப்பெல்லாம் கிடைக்கிறது? எந்த உயிரானாலும் கொல்லாமலிருப்பதுதானே ஜீவகாருண்யம்? இதை ஏன் ஒருவரும் அந்த மனேக்காவுக்குச் சொல்லவில்லை?
சரி,
இப்படி வைத்துக்கொள்வோம். அந்த செடிகளெல்லாம் இறந்த பிறகுதான் அதிலிருந்து அரிசி பருப்பெல்லாம் எடுக்கிறோம் என்று வைத்துக் கொளவோம். அப்போது வேறொரு எண்ணம் உதித்தது. உதாரணத்திற்கு நெல் பயிரை எடுத்துக் கொள்வோம். நெல் பயிர் வளரும்போது கூடவே வேறு செடிகளும் வளருகின்றன. விவசாயிகள் அவைகளை களைகள் என்று கூறி அவைகளைப் பிடுங்கி விடுகிறார்கள். அந்தக் களைச் செடிகள் உயிருள்ளவைதானே. அவைகளைப் பிடுங்கி எறிவது ஜீவகாருண்யத்திற்கு எதிரான செயல்தானே?
இதை
ஏன் இதுவரை ஒருவரும் எதிர்த்து பிரசாரம் பண்ணவில்லை? இனிமேல் யாரும் களை எடுக்கக்கூடாது என்று ஏன் மனேக்கா காந்தி சொல்லவில்லை? இந்த எண்ணம் என் மனதைக் குடைந்துகொண்டே இருக்கிறது. அதனால் நான் உடனடியாக “களை பிடுங்க எதிர்ப்பு” கட்சி ஆரம்பித்து கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டம் அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போகிறேன். வெளிநாட்டுப் பணங்கள் அதிக அளவில் பெறும் “தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்” மகத்தான ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கிறேன்.
மேலும்
நமது உயிருக்கும் மேலான பதிவுலகக் கண்மணிகளும் ஆதரவு கொடுத்தால், இந்தக் களை பிடுங்கா போராட்டம் மகத்தான வெற்றி பெறுவது உறுதி, உறுதி, உறுதி.