வியாழன், 15 மார்ச், 2012

சிறு வயதில் நான் செய்த ஜகஜ்ஜால புரட்டுகள்

பாக்கெட் மணி என்ற வழக்கம் தோன்றாத காலத்தில் நான் படித்தேன். வீட்டில் தினம் மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும். தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் இனிப்பு பலகாரம் கிடைக்கும். வருடத்திற்கு இரண்டு செட் புது துணி கிடைக்கும்.

அவ்வப்போது நான் செய்யும் லீலைகள் வெளியானால் பூசை கிடைக்கும். அவ்வளவுதான். இதைத் தவிர வேறொன்றும் எதிர்பார்க்கக்கூடாது. எதிர் பார்த்தாலும் பிரயோஜனமில்லை.

நான் ஹைஸ்கூலில் நான்காவது பார்ம் படித்துக் கொண்டிருந்தபோது இந்த வாழ்க்கை போரடித்தது. முக்கியமாக சினிமாக்கள் பார்க்கவேண்டும். தேங்காய் பர்பி சாப்பிடவேண்டும். கேக் சாப்பிடவேண்டும். இப்படியெல்லாம் சிலபல விபரீத ஆசைகள் தோன்றலாயின.

என்ன செய்வது என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்ததில் ஒரு வழி புலனாயிற்று.  என் நண்பன் ஒருவனின் அப்பா புஸ்தகம் பைண்டிங்க் செய்வார். அவன் வீட்டிற்குப் போயிருந்த சமயங்களில் அதை நான் கவனித்திருந்தேன். ஓரளவு அந்த வித்தையில் தேர்ச்சியும் பெற்றிருந்தேன்.

ஏன் நாம் கற்ற வித்தையை நம் வாழ்க்கைக்கு பயன்படுத்தக்கூடாது என்று ஒரு நாள் புத்தருக்கு ஞானோதயம் வந்த மாதிரி எனக்கும் வந்தது. உடனே அதற்கான வழி முறைகளில் இறங்கினேன். புஸ்தகங்கள் பைண்ட் செய்து கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்தேன். எல்லாம் வாய் வார்த்தைகள் மூலமாகத்தான். சில பையன்கள் புஸ்தகங்களை பைண்ட் செய்யக் கொடுத்தார்கள்.

நானும் அவைகளைப் பைண்ட் செய்து கொடுத்தேன். தொழில் சுத்தமாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் பெருகினார்கள். ஒரு புத்தகம் பைண்ட் செய்ய நாலணா செலவு ஆகும். நான் வாடிக்கையாளர்களிடம் எட்டணா வாங்குவேன். சும்மா 100 பர்சென்ட் லாபம் மட்டுமே.

இப்படி நான் படிக்கும்போதே ஒரு தொழிலதிபர் ஆனேன். பர்பி, கேக் எல்லாம் சாப்பிட்டேன். அப்புறம் கொஞ்ச நாள் கழித்து தொழில் நசித்து விட்டது. காரணம் ஞாபகமில்லை.