சனி, 31 மார்ச், 2012

மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி?


"பாஸ் மனைவியிடம் நடந்து கொள்வது எப்படின்னு ஒன்னு போடுங்க பாஸ்! நிறைய பேருக்கு உதவியா இருக்கும்!"

நிலவன்பன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி இந்தப் பதிவு போடுகிறேன். தெரிந்த விஷயங்களை தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது ஒரு முக்கிய மனித நேயப் பண்பாடு. ஆகவே எனக்குத் தெரிந்ததை எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்தப் பதிவினால் வரும் பாவ புண்ணியங்கள் அனைத்தும் நிலவன்பனையே சேரும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் ஒரு கதை சொல்லுகிறேன்.


ஒரு ஊரில் ஒரு பெரிய ஜகஜ்ஜாலக் கில்லாடி இருந்தார்.(என்னை மாதிரி இல்லாவிட்டாலும் என்னில் பாதி அளவுக்கு தேறுவார்). அவருக்கு பெரிய பேச்சாளர் ஆகவேண்டும் என்ற ஆசை. ஒரு பேச்சாளரிடம் போய் ட்யூஷன் எடுத்துக்கொண்டார். பிறகு அடுத்த ஊருக்குச் சென்று ஒரு விளம்பரம் செய்தார். உங்களுக்கு பணக்காரர் ஆக விருப்பமா? இன்று அதைப் பற்றிய பேச்சு இந்த ஊர் பார்க்கில் நடக்கிறது. விருப்பமானவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம். அனுமதிக்கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. இவ்வாறு விளம்பரம் செய்தார். 


யாருக்குத்தான் பணத்தின் மேல் ஆசை இல்லை?


அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்தப் பார்க்கில் ஏகப்பட்ட கூட்டம். நம்ம பேச்சாளர் மேடை ஏறினார். கூட்டத்தைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். இங்கு பணக்காரர்கள் யாரோ, அவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள். பாதிபேர் கையைத் தூக்கினார்கள். அடுத்து இன்னொரு கேள்வி கேட்டார். யார் யாரிடம் பணம் இல்லையோ அவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள் என்றார். மீதிப் பாதிப் பேர் கையைத்தூக்கினார்கள்.

பிறகு பேச்சாளர் சொன்னார். யார் யாரிடம் பணம் இல்லையோ அவர்கள் எல்லாம் மீதிப் பேர்களிடம் பணக்காரர் ஆகும் வழியைக் கேட்டுக்கொள்ளுங்கள், என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கிப் போயவிட்டார். கூடியிருந்த ஜனங்களுக்கு வெகு நேரம் கழித்துத்தான் தாங்கள் முட்டாளாக்கப்பட்டது விளங்கியது.

அந்த மாதிரி இந்தப் பதிவைப் படிப்பவர்களில் பாதிப்பேராவது மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது என்று அனுபவத்தில் கற்றுக்கொண்டிருப்பார்கள். இந்த வித்தை தெரியாதவர்களை அவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். அப்புறம்தான் மனதில் உறைத்தது. மனைவியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று தெரிந்தவர்கள் ஒருவரும் அடுத்தவர்களுக்கு அந்த வித்தையைக் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் வீட்டுக்கு வெளியில் மிகுந்த தன்மானம் கொண்டவர்கள்.

பக்தி மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். முக்தியடைவதற்கு சுலபமான வழி பூரண சரணாகதிதான். கடவுளே, நீயேதான் எல்லாம், உன்னையே சரணடைந்தேன், எனக்கு முக்திக்கு வழிகாட்டுவது உன் பொறுப்பு என்று பகவான் பாதத்தில் விழுந்து விடுவதுதான் அந்த வழி.

இந்த தத்துவத்தை நன்றாக மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

இப்போது நமது சப்ஜெக்ட்டுக்கு வருவோம். மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி? தலைப்பில் ஒரு தவறு. மனைவியிடம் காலம் தள்ளுவது எப்படி என்று இருந்திருக்க வேண்டும். அதுதான் சரியான தலைப்பு. அப்படி காலம் தள்ளுவது என்றால் என்னென்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.

1. பரிபூர்ண சரணாகதித் தத்துவத்தை பூரணமாக கடைப்பிடிக்கவேண்டும். இதில் கொஞ்சம் கூட தயக்கம் இருக்கக்கூடாது.

2. எது நடந்தாலும் அதை பகவத் பிரசாதமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

3. எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் ரொம்ப பேஷ், பிரமாதம் என்று சொல்ல வேண்டும்.

4. நீங்கள் மனவி போட்ட கோட்டைத் தாண்டுவது இல்லை என்கிற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. குறிப்பாக உங்கள் அலுவலக நண்பர்களுக்கு.

5. எக்காரணம் கொண்டும் நண்பர்களையோ அல்லது உங்கள் வழி சொந்தக் காரர்களையோ வீட்டுக்கு வரவழைக்கக் கூடாது. அவர்களைப் பார்க்க வேண்டுமென்றால் ரயில்வே ஸ்டேஷனிலோ அல்லது பஸ் ஸ்டேண்டிலோ பார்த்துவிட்டு அனுப்பி விடவும்.

6. உங்கள் மனைவி வழி சொந்தக்காரர்கள் வந்தால் முகத்தை உம்மென்று இஞ்சி தின்ற குரங்கு மாதிரி வைத்துக்கொள்ளக் கூடாது. சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கவேண்டும்.

7. சம்பளம் வாங்கி வந்ததும் நயாபைசா குறையாமல் மனைவியிடம் கொடுத்து விடவேண்டும். தினமும் என்னென்ன செலவு என்று சொல்லி தேவையான பணம் மட்டும் வாங்கிக் கொள்ளவேண்டும்.

8. வீட்டில் எல்லா முடிவுகளையும் மனைவி எடுத்தாலும் நீங்கள் எடுத்ததாகத்தான் கணக்கு. யார் கேட்டாலும் அப்படித்தான் சொல்ல வேண்டும்.

9. கேட்கும் கேள்விக்குத்தான் பதில் பேச வேண்டும். நீங்களாக எதுவும் பேசக்கூடாது.

10. உங்களுக்கு பையன்கள் இருந்தால் அவர்களுக்கு இந்தப்பாடங்களை ஒழுங்காக சொல்லிக் கொடுக்கவும்.


வேறு சந்தேகங்கள் இருந்தால் எழுதி அனுப்பவும்.