வெள்ளி, 4 மே, 2012

மனச்சோர்வும் தற்கொலைகளும்



வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். இதைத் தவிர காரணமே இல்லாமலும் மனச்சோர்வு ஏற்படலாம். காரணம் எதுவாயினும், இது ஒரு நோய் என்று அறியவேண்டும். பொதுவாக இந்த நோய் தாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு ஒரு நோய் இருக்கிறது என்று உணர மாட்டார்கள். தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முனைவார்கள். சுற்றி உள்ளவர்கள்தான் சில அறிகுறிகளை வைத்து ஒருவர் இந்த நோயினால் தாக்கப்பட்டுள்ளார் என்று அறிந்து அதற்கான முறையான வைத்தியம் செய்ய வேண்டும்.

இந்த நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்:

  1.   தனிமையை விரும்புதல்: கலகலப்பாக இருக்கும் ஒருவர் தனிமையை விரும்புகிறார் என்றால் அவருக்கு மனக்கலக்கம் ஏற்பட்டுள்ளது என்று அறியலாம்.
  
  2.   நண்பர்களிடம் தொடர்பு இல்லாமை: ஒருவர் வழக்கமாக பழகி வரும் நண்பர்களை விட்டு விலகி இருப்பாரேயானால் அது மனச்சோர்வாக இருக்கலாம்.

  3.   போதை மருந்துகள்/பானங்கள்: இவைகளை உபயோகப்படுத்துதலும் இவைகளுக்கு அடிமையாதலும் நிச்சயமான மன நோய்க்கு அறிகுறிகள்.
  
  4.   பசியின்மை/அதிகப்பசி: இவை இரண்டும் நல்ல அறிகுறிகள் அல்ல. சாதாரணமாக இருக்கும் ஒருவர் சாப்பிடாமலோ அல்லது அதிகமாகச் சாப்பிட்டாலோ அது மனச்சோர்வாக இருக்கலாம்

  5.   எரிந்து விழுதல்/கோபப்படுதல்: வழக்கத்துக்கு மாறான கோபம் அல்லது எரிச்சல் ஒருவரிடம் காணப்படுமாயின் அது மன நோயாக இருக்கலாம்
.
இவ்வகையான மன நோய்க்கு காரணம் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இந்த நோய் பீடித்தவருக்கு சரியான கவனிப்பு இல்லையானால் பல விளைவுகள் ஏற்படும். பொதுவாக பலர் தற்கொலை செய்யக் காரணம் மனச்சோர்வே.

குறிப்பாக இளைஞர்களிடத்திலும் வயதானவர்களிடத்திலும் இந்த மனச்சோர்வு அதிகமாக ஏற்படுகிறது. சூழ்நிலை மாற்றம், எதிர்பாராத துக்கங்கள், தீராத நோய்கள், பரீட்சையில் தோல்வியடைதல் அல்லது மதிப்பெண்கள் குறைவாக வாங்குதல் போன்ற காரணங்களினால் இந்த சோர்வு ஏற்படலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பவர்கள் கவனமாக இருந்து அந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் யாராவது இந்த சோர்விற்கு ஆளாகி உள்ளார்களா என்று கவனிப்புடன் இருப்பது அவசியம்.

மனச்சோர்வு ஆரம்ப நிலையில் இருந்தால் குடும்ப அங்கத்தினர்களே இதை சரி செய்து விடலாம். நல்ல ஆறுதல், கவனிப்பு, கண்காணிப்பு, ஆலோசனைகள் மூலம் ஒருவரின் மனச்சோர்வைப் போக்கலாம். கொஞ்சம் தீவிரமாக இருந்தால் மருத்துவரை சந்திப்பது அவசியம். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த பொறுப்பு இருக்கிறது. இதை அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இளைஞர்களும், முதியவர்களும் தங்கள் மன வலிமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். இது ஒவ்வொரு குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பொறுத்தது. குடும்பத்திலுள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். அந்தக் குடும்பத்தில் யாருக்கும் மனச்சோர்வு வராது.