வியாழன், 24 மே, 2012

தமிழ் மணம் ரேங்க் எனும் மாயை


                                                                Tamil Blogs Traffic Ranking

மாயை என்றால் ஏதோ மாயாஜாலம் என்றுதான் பலருடைய எண்ணம். தெரிவது போல் இருந்து மறைவது ஒரு விதத்தில் மாயாஜாலம்தான். ஆனால் நாம் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு வினாடிக்கும் மாறுவதை நாம் உணருவதில்லை. அதனால் அது மாயை என்று நமக்குத் தெரிவதில்லை.

உதாரணத்திற்கு நம் தமிழ்மணம் தர வரிசை எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அது தினம் தினம் அல்லது வாரந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. என்னுடைய பதிவின் தமிழ்மணத் தர வரிசை எண்ணை மேலே கொடுத்திருக்கிறேன். போன வருடம் இது 48 ஆக இருந்தது. இன்று அது 23 ஆக மாறியிருக்கிறது. தர வரிசை எண் குறையக் குறைய அதன் மதிப்பு கூடுகிறதென்று சொல்லுகிறார்கள். எனக்கென்னமோ அதனால் என்ன மதிப்பு கூடிவிட்டது என்று உணர முடியவில்லை.

சிலர் இந்த மாயைக்காக அதிக முயற்சி எடுத்துக் கொள்ளுகிறார்கள். நாடும் அந்த மாயைக்கு உட்பட்டவன்தான். ஆனால் இதனால் என்ன பயன் என்று யோசித்தால் ஒன்றும் விளங்க மாட்டேனென்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் பதிவுலகத்தைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. அப்படித் தெரிந்தவர்கள் கூட இந்த தமிழ்மணத் தரவரிசையைப் பற்றி அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே.

அப்டிப்பட்ட ஒன்றுக்குமே உதவாத ஒன்றைப் பற்றி நான் எவ்வளவு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறேன் என்று நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. இனி அதைப் பற்றி அதிக சிந்தனையும் அதற்காக அதிக உழைப்பும் வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

பதிவுலகத்திற்காக நடைமுறை வாழ்க்கையைப் புறக்கணிக்கக் கூடாது. அது அர்த்தமற்றது.