திங்கள், 11 ஜூன், 2012

பதிவர் சந்திப்பின் நோக்கம் என்ன?

11-6-2012:
பின் குறிப்பு - முன்னால் போடப்படுகிறது.
அன்புடைய சக பதிவர்களுக்கு,
யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. சங்கவி மிகுந்த ஆர்வத்துடன் கோவைப் பதிவர் குழுமம் ஆரம்பித்துள்ளார். அவருக்கு எல்லோரும் ஆதரவு அளிப்போம். நான் கடைசி வரை இல்லாமல் இருந்து விட்டு, சகட்டு மேனிக்கு குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பது நியாயமல்ல. குழுமம் வளரவேண்டும் என்பதே என் ஆசை. எல்லோருடைய ஆசையும் அதுவாகத்தான் இருக்கும்.

நடந்தவைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். இன்னும் சங்கவி, குழும சந்திப்பைப் பற்றி பதிவிடவில்லை என்று நினைக்கிறேன். அவர் பதிவிட்ட பின் மற்ற கருத்துகளையும் பரிசீலனை செய்யலாம். 

======================================================================


10-6-2012 அன்று கோவைப் பதிவர் குழுமத்தின் சந்திப்பு நடந்தது. எனக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை. எதிலாவது முதலாவதாக வரவேண்டும் என்பதுதான் அது. அந்த ஆசை நேற்று நிறைவேறியது. லால்குடி ரெஸ்டாரென்ட்டுக்கு நான் 1.35 க்குப் போனேன். நான்தான் முதல் ஆள். அதே மாதிரி எனக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் 4.45 க்கு முதல் ஆளாக வெளியேறினேன். இப்படி இரண்டு சாநனைகளை ஒரே நாளில் நடத்தினேன்.

என் ஆயுளில் அதிக விலையில் சினிமா பார்த்ததும் இந்த சந்திப்பில் நிறைவேறியது. நான் வெளியில் வரும்போது பதிவர் அறிமுகங்கள் ஏறக்குறைய முடிந்து விட்டன. பிறகு நடந்தவைகளை மற்றவர்கள் பதிவில் பார்த்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும். நான் எடுத்த சில புகைப்படங்கள்.






பதிவர் குழுமத்தலைவர் சங்கவி அரசியலில் குதிக்கத் தயாராகிறார். (வேஷ்டி சட்டையைக் கவனிக்கவும்) 





ஆங்காங்கே பதிவர் சந்திப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் என்ன பலன் என்று யோசித்தால் வெறுமையே மிஞ்சுகிறது.

எனக்கு சில கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் தமிழில் பல அழகான, ஆழமான கருத்துகள் கொண்ட பழமொழிகள் உள்ளன. அதில் ஒன்று "கிழவன் பேச்சு கின்னாரக்காரனுக்கு ஏறுமா" என்பது ஒன்று.

ஏறுகிறதோ இல்லையோ, ஊதுகிற சங்கை ஊதி வைத்தால் விடியறபோது விடியட்டும் என்றபடி என் கருத்துக்களை இங்கே பதிக்கின்றேன்.

1. எந்த ஒரு சங்கமும் தொடர்ந்தும், நீடித்தும் நடக்கவேண்டுமென்றால் பொருளாதார வசதி வேண்டும். பதிவர்கள் எந்த அளவிற்கு இதை வழங்க முடியுமோ அந்த அளவிற்குள் செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும்.

2. பதிவர்கள் குழுமத்தின் நோக்கங்கள் தெளிவாகவும் அந்தக் கூட்டத்தினருக்கு பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும். இதை வரையறுக்காமல் எந்த செயலையும் மேற்கொள்ளக்கூடாது. உதாரணத்திற்கு பதிவர் கூட்டத்தில் சினிமா காட்டுவது தேவையற்ற ஒன்று. நேரத்தை விரயம் செய்யும் செயல்.

3. அகலக்கால் வைத்து தடுமாறுவதை விட மெதுவாகச் செல்வது இலக்கை விரைவில் அடைய உதவும்.