வியாழன், 8 நவம்பர், 2012

நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன இருக்கிறது?


தமிழ் நாட்டில் நாம் சாப்பிடுவது பெரும்பாலும் அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் காய்கறிகள் கலந்த உணவுகள்தான். இவைகளைப் பலவிதங்களில் சாப்பிடுகிறோம். இந்த உணவுகள் நம் இரைப்பையில் ஜீரணமாகி நம் உடலில் எவ்வாறு சேர்கின்றன, அவைகளின் வேலை என்ன என்பதைத் தெரிந்து கொள்வது சில தவறான கருத்துகளை மாற்ற உதவும்.

அரிசி, பருப்பு, எண்ணை மற்றும் காய்கறிகள்

இவைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

அரிசி: இதில் தானியவகை உணவுகள் அனைத்தும் அடங்கும். கோதுமை, அரிசி, ராகி, சோளம், கம்பு, மற்றும் இவைகளிலிருந்து தயார் செய்யப்படும் அனைத்து உணவு வகைகளையும் இந்த குரூப்பில் சேர்த்துக் கொள்ளவும்

இந்த வகை உணவுகளில் உள்ள பொருள் ஸ்டார்ச்சு என்று சொல்லப்படும் கார்போஹைட்ரேட். கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என்ற மூன்று கனிமங்கள்தான் இவைகளில் இருப்பதால் “கார்போஹைட்ரேட்ஸ்” என்ற பெயர் வந்தது. இந்த வகை உணவுகள்தான் நாம் உயிர் வாழவும், வேலை செய்யவும் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன.

இந்த ஸ்டார்ச்சு சத்தானது மனிதர்களில் இரைப்பையில் ஜீரணமாகி குளுகோஸ் ஆக மாறுகிறது. இந்த குளுகோஸ் குடல்வால்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் கலக்கிறது. இரத்த ஓட்டத்தின் மூலமாக குளுகோஸ் உடலின் எல்லா பாகங்களுக்கும் போகிறது. இந்த குளுகோஸ் உடலிலுள்ள செல்களின் உள்ளே சென்று ரசாயன மாற்றங்கள் அடைந்து சக்தியாக மாறுகிறது. உடல் அவயவங்கள் ஓய்வில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த இயக்கத்திற்கு சக்தி அவசியம். அந்த சக்தி இவ்வாறுதான் கிடைக்கிறது.

இது தவிர, மனிதர்கள் வேலை செய்யும்போது அந்த உழைப்பிற்கும் சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தியும் இவ்வாறு செல்களில் குளுகோஸ் மாற்றம் அடைவதால்தான் கிடைக்கிறது. சாப்பிட்ட உணவு முழுவதும் ஜீரணமாகி இவ்வாறு சக்தியாக மாறி செலவான பிறகு உடலுக்கு சோர்வு உண்டாகிறது. அப்போது உடலுக்கு சற்று ஓய்வும் உணவும் தேவைப்படுகின்றது. உணவு உண்டவுடன் மறுபடியும் இந்த சுழற்சி மூலம் சக்தி கிடைக்கிறது.

இதுதான் அரிசி, மற்றும் அதுபோன்ற தானிய உணவுகளின் பயன். இந்த தானியங்களில் சிறிதளவு புரதச்சத்தும், எண்ணைச் சத்தும் இருக்கும். ஆனால் அவை உடலின் தேவைக்குப் போதாது. அந்தத் தேவையை ஈடுகட்ட பருப்பு வகை உணவுகளும் எண்ணை வகை உணவுகளும் தேவை.

பருப்பு: எல்லாவிதமான பருப்புகளும் இதில் அடங்கும். துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பீன்ஸ் கொட்டைகள், கொள்ளு, பாசிப்பயறு முதலான பருப்புகளை நாம் சாப்பிடுகிறோம். இந்த பருப்புகளில் 
உள்ள முக்கிய பொருள் புரதச்சத்து ஆகும். புரதத்தில் நைட்ரஜன் தனிமம் ஒன்று 
அதிகப்படியாக இருக்கும். இந்த நைட்ரஜன் எல்லா உயிர்களுக்கும் 
இன்றியமையாத ஒரு தனிமம் (Element). அனைத்து ஜீவராசிகளின் செல்களின் கருக்களும் புரொட்டீனால் (புரதம்) ஆனவை. புரொட்டீன் இல்லையென்றால் உயிர் இல்லை. அந்த அளவிற்கு இது முக்கியமானது. எல்லா பருப்புகளிலும் சுமார் 25 சதம் புரொட்டீன் இருக்கும்.

ஜீவராசிகளின் செல்களுக்கு ஒரு குணம் என்னவென்றால், அவை 14 முதல் 24 நாட்களுக்கு ஒரு முறை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும். மனிதனும் இந்த தத்துவத்திற்கு விலக்கல்ல. ஆகவே நாம் ஒவ்வொருவரும் 24 நாட்களுக்கு ஒரு முறை புது அவதாரம் எடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி செல்கள் புதுப்பித்துக்கொள்ள புரொட்டீன் அவசியம் தேவைப்படுகின்றது. செல்களில் உள்ள பழைய புரொட்டீன் அழிக்கப்பட்டு யூரியாவாக மாறி சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.

இப்படி புது செல்கள் உருவாகத் தேவைப்படும் புரொட்டீன்கள், பருப்பு வகை உணவுகளிலிருந்து கிடைக்கிறது. உடம்பின் ஒரு கிலோ எடைக்கு அரை கிராம் புரொட்டீன் வேண்டும் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். அப்படியானால் 60 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 30 கிராம் புரொட்டீன் வேண்டும். பருப்பு மற்றும் மற்ற உணவுகளில் உள்ள புரொட்டீன் 40 முதல் 50 சதம்தான் உடலில் சேரும். ஆகவே இவ்வொரு மனிதனும் ஏறக்குறைய 60 கிராம் புரொட்டீன் இருக்கும் உணவுகளை ஒவ்வொரு நாளும் சாப்பிடவேண்டும்.

எண்ணை வகைகள்:   எண்ணை என்றாலே கொழுப்பு என்றுதான் எல்லோரும் நினைக்கின்றனர். அது ஓரளவிற்குத்தான் சரி. அதிக கொழுப்பு சாப்பிடுபவர்கள் உடலில் கொழுப்பு அதிகமாகச் சேரும் என்பது உண்மைதான். ஆனால் தினமும் உணவில் கொழுப்பு சத்து அளவாகச் சேரவேண்டும்.

இது இரண்டு விதத்தில் உடலுக்கு உதவுகிறது. ஒன்று நம் உடலிலுள்ள கொழுப்பை புதுப்பிக்கத் தேவைப்படுகிறது. இரண்டாவது உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கிறது.

மாமிச உணவுகளில் (மீன் தவிர) பொதுவாக கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறது. அசைவம் அதிகமாக சாப்பிடுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். தாவர எண்ணை வகைகளில் எல்லா வகை எண்ணைகளையும் நம் முன்னோர்கள் உபயாகித்து வந்திருக்கிறார்கள். அவைகளை நாமும் உபயோகிக்கலாம். தவறு எதுவுமில்லை. ஆனால் அளவாக உபயோகிக்கவேண்டும். விளம்பரங்களில் பயங்காட்டுவது போல பயப்பட வேண்டியது அவசியம் இல்லை.

காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள்.
இவைகள் மனித உடலுக்கு வேண்டிய தாதுக்களையும், நார்ச்சத்தையும் கொடுக்கின்றன. தாதுக்கள் மனித உடம்பிற்கு வேண்டிய வைட்டமின்கள், என்சைம்கள், ஹார்மோன்கள் ஆகியவைகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமாகிறது. நார்ச்சத்து மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கும்.

எந்த வகை உணவையும் தனியாக சாப்பிட்டு வந்தால் நாளடைவில் உடல் க்ஷீணிக்கும். ஆகவே எல்லா வகை உணவுகளையும் கலந்து சரியான விகிதத்தில் சாப்பிட்டு வரவேண்டும். இதைத் தான் சரி விகித உணவு என்று சொல்கிறார்கள். மனிதன் ஆரோக்கியமான வாழ்வு வாழ சரி விகித உணவு அவசியம்.