வெள்ளி, 1 மார்ச், 2013

2. இந்திரனுடன் ஒரு ஒப்பந்தம்.


அரண்டு போன இந்திரனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போனேன். இங்க பாரு, இந்திரா. கவலைப்படாதே, உனக்கு என்ன வேண்டுமோ அதைச்சொல்லு, நான் ஏற்பாடு செய்கிறேன் என்றேன். அப்போதுதான் அவன் கொஞ்சம் தெம்பானான்.

இந்திரன் சொன்னான். இதப்பாருங்க புது ராஜா, நான் இந்த "சேர்ல" உக்காந்து பல கோடி வருஷம் ஆச்சு. இந்த ரம்பை, ஊர்வசி நாட்டியம், சோமபானம், இந்திராணியுடன் சல்லாபம் இப்படி எல்லாம் பழகிப்போச்சு. இது எல்லாம் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

சில பேர் இந்த "சேருக்கு" ஆசைப்பட்டு என்னென்னமோ யாகம் எல்லாம் செஞ்சாங்க. அவங்களையெல்லாம் சாம, பேத, தான, தண்ட உபாயங்களினால் ஒழிச்சுக் கட்டி விட்டேன். இப்ப இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்கிறாங்களே, இது நியாயமா என்று அழுதான்.

நான் யோசிச்சேன். நமக்கும் இந்த ஊரு புதுசு, பழைய ஆள் ஒருத்தன் நம்ம பக்கம் இருந்தா, நாம தைரியமா இருக்கலாம் என்று யோசனை செய்து இந்திரனிடம் கூறினேன்.

இந்திரா, பயப்படாதே. உன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. நீ எப்போதும்போல் டான்ஸ் பார்த்துக்கொண்டு இந்திராணியுடன் சந்தோஷமாக இருக்கலாம். உனக்கு என்ன வேண்டுமோ சொல்லு, அதை நான் செய்து தருகிறேன். நீ செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் என்ன செய்தாலும் அவைகளை நீ கண்டு கொள்ளாதே என்றேன்.

இந்திரன் மிகவும் சந்தோஷப்பட்டு, நீதான் என் கண்கண்ட தெய்வம். எனக்கு இந்த "சேரும்" பழைய வாழ்க்கையும் இருந்தால் போதும், நீ என்ன செய்தாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன், என்ன, எனக்கு அவ்வப்போது கொஞ்சம் "சபலம்" வரும், அப்போது மட்டும் நீ கவனித்துக் கொண்டால் போதும் என்றான்.

அதற்கென்ன, அப்படியே செய்தால் போகிறது என்று சொல்லிவிட்டு, இனி நீதான் இங்கு ராஜா, நான் வெறும் மந்திரிதான், என்னை மந்திரி என்று கூப்பிட்டால் போதும் என்று சொல்லி விட்டு அடுத்து என் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் எதிர்ப்பை வெற்றிகரமாகச் சமாளித்த கர்வம் என் முகத்தில் தெரிந்தது. அதை கர்சீப்பினால் அழுந்தத் துடைத்தேன். ஆரம்பத்திலேயே இந்த கர்வம் வந்தால் காரியங்கள் கெட்டுப்போகும் அல்லவா?

அடுத்து, நான் கூட்டிக்கொண்டு வந்திருந்த பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூப்பிட்டேன். இதுவரை நடந்தவைகளை அவர்கள் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இப்போதுதான் வாயைத் திறந்தார்கள். பஞ்சாயத்துத் தலைவர் சென்னார் - "தலைவரே, அருமையான டீல், இனி நமக்கு இங்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள், உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை, ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணட்டுமா" என்றார்.

நாம ஒருத்தருக்கொருவர் பாராட்டுவது இப்போது வேண்டாம், நிறைய வேலைகள் இருக்கின்றன, வேலையைத் துவங்குவோம் என்று சொல்லிவிட்டு, இனிமேல் பஞ்சாயத்து தலைவர் பெயர் "பொது உறவுச் செயலாளர்" சுருக்கமாக "பொது". ரெவின்யூ இன்பெக்டர் என் "ஸ்பெஷல் செக்ரடரியாக" (சுருக்கமாக "செக்கு") இருப்பார்.

முதலில் நமக்கு நல்லதாக ஒரு ஆபீஸ் வேண்டுமே என்றேன். அங்கு திரிந்து கொண்டிருந்த ஒரு தேவனைக் கூப்பிட்டு இந்த ஊரில் நல்ல பில்டிங்க் கான்ட்ராக்டர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவன் திருதிருவென விழித்தான். மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டேன். மறுபடியும் அப்படியே விழித்தான். நமது "பொது" வைக்கூப்பிட்டு இதைப் பாருங்க, பொது, நம்ம ஆபீஸ் கட்ட ஒரு நல்ல கான்ட்ராக்டர் வேணுமே, இந்த ஊர்ல யார் இருக்காங்கன்னு இவங்கிட்ட விசாரிச்சு சொல்லுங்க, என்றேன்.

அவர் அவனை நைசாக அந்தப் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போய் பேசினார். கொஞ்ச நேரம் கழித்து இருவரும் வந்தனர். அந்த தேவன் வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டே வந்தான். "பொது" சொன்னார். நம்ம பாஷை முதலில் இவனுக்குப் புரியலைங்க. அப்புறம் நான் புரிய வச்சேனுங்க. இங்க "மயன்" அப்படீன்னு ஒரு கான்ட்ராக்டர் இருக்காராம். ஊர்ல என்ன வேலைன்னாலும் அவர்தான் செய்வாராம். இந்த ஆள் அவரோட செக்ரட்டரியாம். நாம சொன்னா அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வருவாராம். இந்த சேவைக்காக நாம் இவரைக் கவனித்துக் கொள்ளவேண்டுமாம்.

என்னடா இது, இந்த ஊர் நம்ம ஊரை விட மோசமாக இருக்கும் போல இருக்குதே, சரி அதை அப்புறம் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு அந்த தேவனிடம் மயனை கூட்டிக்கொண்டு வரும்படி சொன்னேன். கொஞ்ச நேரத்தில் மயன் வந்தான். அவனைப் பார்த்ததும் நான் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன்.

தலையில் வைரக் கிரீடம், கழுத்தில் ஏறக்குறைய ஒரு கிலோ தங்க நகைகள், தங்க வாள், பத்துவிரல்களிலும் தங்க மோதிரங்கள், இப்படி ஒரு நடமாடும் நகைக் கடை மாதிரி தெரிந்தான். சரி இருக்கட்டும், இவனை இன்று சரி செய்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்தேன்.

நான் - நீர்தான் இந்த ஊரில் கான்டராக்டராமே.

மயன் - என்னை தேவலோக சிற்பி என்பார்கள். நீ யார்?

நான் - நான்தான் இந்த ஊருக்கு இப்போது ராஜா. என்னை மந்திரி என்று கூப்பிடவேண்டும். முதலில் என்னை மரியாதையுடன் அழைத்துப் பழகும்.

மயன் - என்னை உட்காரச் சொல்லக்கூட உனக்குத் தெரியவில்லையே.

நான் - அப்படியா, உட்கார்.

மயன் - எங்கே உட்காருவது?

நான் - தரையில்தான்.

மயன் - என்னை என்னவென்று நினைத்தாய், மானிடப் பயலே

என்று சொல்லிக்கொண்டு என் மேல் பாய்ந்தான். அவனைக் கையசைத்து அப்படியே நிற்கவைத்தேன். அவனைப் பார்த்து "இது என்ன டிரஸ், ஜிகிஜிகு வென்று டிராமாக்காரன் போல் டிரஸ். முதலில் இதை மாற்றி காக்கி அரைச்சட்டையும் காக்கி அரை டிராயரும் போட்டுக்கொண்டு வா" என்றேன். அவனுக்கு பயங்கர கோபம் வந்தது. என்னை கடிப்பவன்போல் பாய்வதற்கு எத்தனித்தான்.

இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று அவனுடைய ஆடை ஆபரணங்களைக் களைந்து வெறும் உள்ளாடையுடன் அவன் கைகளைக் கட்டி நிற்கவைத்தேன். அட, மடக்கான்ட்ராக்டரே, இனி நான்தான் உங்களுக்கு எஜமான், என் பேச்சைத்தான் நீ இனிமேல் கேட்கவேண்டும். மறுத்தால் உன்னை நரகத்திற்கு அனுப்பிவிடுவேன் என்றேன். அவனுக்கு இப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.

மந்திரி ஐயா, என்னை மன்னியுங்கள், உங்கள் பிரபல்யம் தெரியாமல் தப்பு செய்துவிட்டேன். இனி நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று காலில் விழுந்தான். சரி என்று சொல்லிவிட்டு, இத பார், மயன், நாங்கள் மூன்று பேர் வந்திருக்கிறோம், எங்களுக்கு ஆபீஸ் நல்ல முறையில் கட்டிக்கொடுக்கவேண்டும். அதில் இன்னும் பல டிபார்ட்மென்ட்டுகளை இருத்த கூடுதல் இடம் வேண்டும்.  கூடவே, நாங்கள் தங்குவதற்கான் வசதிகளையும் கட்டவேண்டும். எப்போது ரெடியாகும் என்றேன். அவன் நீங்கள் இந்திரன் அரண்மனையில் சிறிது நேரம் இளைப்பாருங்கள், அதற்குள் முடித்து விடுகிறேன் என்றான்.

நாங்கள் இந்திரன் அரண்மனையில் சிறிது இளைப்பாறி விட்டு வந்தால் நிஜமாகவே எங்கள் ஆபீஸ் ரெடியாக இருந்தது. மயனைப் பாராட்டினேன். மயனே, நீ கெட்டிக்காரன், உனக்கு நிறைய வேலை இருக்கிறது. உன் பரிவாரங்களுடன் இந்த ஆபீசுக்கே வந்து விடு என்றேன். அவனும் சரியென்றான்.

எங்களுக்கு பிரயாணக் களைப்பு அதிகமாக இருந்ததால் தூங்கப் போனோம். மயன் நிஜமாகவே 5 ஸ்டார் வசதிகளுடன் எங்கள் இருப்பிடத்தை தயார் செய்திருந்தான். நன்றாகத் தூங்கி எழுந்தோம். முகம், கைகால்களை கழுவிக்கொண்டு டீ சாப்பிட்டு விட்டு ஆபீஸ் போனோம். 

சும்மா சொல்லப்படாது. மயன் உண்மையிலேயே படு கெட்டிக்காரன். ஆபீசை வெகு ஜோராக கட்டியிருந்தான். என்னுடைய ரூம் சகல வசதிகளுடன் இருந்தது. மயன் வெராண்டாவில் கையைக்கட்டிக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான். காக்கி அரை டிராயரும் காக்கி அரைச்சட்டையும் போட்டிருந்தான். பரிதாபமாக இருந்தது. அவனையும் நம்ம பொது மற்றும் செக்கை ரூமுக்கு கூப்பிட்டேன்.

முதல் மந்திராலோசனை கூட்டம் துவங்கியது.

இங்க பாருங்க மயன் (இனி இவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்போம் என்று முடிவு செய்தேன்), இனி உங்கள் பதவி "சீப் இன்ஜியர்". இனிமேல் நீங்கள் கோட், சூட் போட்டுக்கொண்டு ஆபீஸ் வரலாம். உங்கள் கீழ் பணிபுரியும் ஆட்கள் இந்த காக்கி யூனிபார்ம் போட்டுக் கொள்ளட்டும். நாளை காலை நாம் எல்லோரும் இந்த தேவலோகத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு, பிறகு என்னென்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம்.

அப்போது மயன் சொன்னார்- மந்திரி சார், நாம் நகர் வலம் போகும்போது நாரதர் இருந்தால் நன்றாக இருக்கும். அவருக்குத்தான் நாட்டு நிலவரம் நன்றாகத் தெரியும் என்றார். அப்படியே ஆகட்டும், காலையில் வரச்சொல்லி செய்தி அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டு எங்கள் இருப்பிடத்திற்கு சென்றோம்.

சரி தூங்கலாம் என்று பார்த்தால் எங்கும் வெளிச்சமாகவே இருக்கிறது. இருட்டே ஆகவில்லை. சூரியன் மறையவே இல்லை. சரி இதை தூங்கி எழுந்து கவனிக்கலாம் என்று முகத்தை போர்வையால் நன்கு மூடிக்கொண்டு தூங்கினேன்.