திங்கள், 5 ஆகஸ்ட், 2013

பிரபல பதிவர் ஆக ஏழு வழிகள்.

நீங்கள் புதிதாகப் பதிவு எழுத வந்திருக்கிறீர்களா? பதிவுலகில் நீங்கள் பிரபல பதிவர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? மேலே படியுங்கள்.

நீங்கள் பிரபல பதிவர் ஆவதற்கு எனக்குத் தெரிந்த சில வழிகள் கொடுத்திருக்கிறேன். வடிவேலு சொன்ன மாதிரி "நானும் ரவுடிதான்" என்கிற மாதிரி பதிவுலகில் பிரகாசிக்க இவை உதவும். ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் உண்டு. பதிவுலகில் பிரபலம் ஆகி என்ன செய்யப் போகிறேன் என்று கேட்பவர்கள் இந்தப் பதிவைப் படிப்பதால் பயனில்லை.

1. பதிவு எப்படியிருந்தாலும் அதன் தலைப்பு        அட்டகாசமாக இருக்கவேண்டும்.
பதிவைப் படிக்க வருபவர்கள் பதிவின் தலைப்பைப் பார்த்துத்தான் வருகிறார்கள். தலைப்பு அவர்களுக்குப் பிடித்திருக்கவேண்டும். அவர்களை சுண்டி இழுக்கவேண்டும். தெருவில் போகும் ஒரு பெண்ணிடம் ஒருவன் நகையை பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். "பெண்ணிடம் நகை திருட்டு" என்று தலைப்பு வைத்தால் எத்தனை பேர் உங்கள் பதிவைப் படிக்க வருவார்கள்?

"தெருவில் இளம் பெண்ணிடம் அத்து மீறல்" என்று தலைப்பு வையுங்கள். அப்புறம் பாருங்கள். ஹிட்ஸ் அள்ளிக்கொண்டு போகும்.


2. பதிவு எழுதும் டாபிக் மிகவும் முக்கியம். 

தலித் மற்றும் வன்னியர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இதில் முன்னுரிமை பெறுகின்றன. இந்த விஷயம் சாகாவரம் பெற்ற விஷயம். தமிழன் இருக்கும் வரை இது உயிருடன் இருக்கும். அவர்களை சாதி வெறியர்கள் என்று குற்றம் சாட்டி எழுதவேண்டும். ஒரு பதிவில் வன்னியர்களைத் திட்ட வேண்டும். அடித்த பதிவில் தலித்துகளைத் திட்டவேண்டும்.

3. அடுத்து தமிழீழம்.

இதுவும் ஒரு சாகாவரம் பெற்ற சப்ஜெக்ட். ஏனென்றால் தமிழீழம் எப்போதும் வரப்போவதில்லை. இதை மட்டும் சொன்னாலே போதும். பின்னூட்டங்களில் உங்களை திட்டு திட்டென்று திட்டுவார்கள். அவைகளைப் படிக்காதீர்கள். சும்மா பப்ளிஷ் பண்ணிவிட்டு வேறு வேலையைப் பாருங்கள்.

மாத த்திற்கு ஒரு முறை இந்தப் பதிவுகள் வெளிவரவேண்டும்.

4. அரசியல் தலைவர்கள், சினிமா நடிகைகள், பதிவர்கள் இவர்களின் தனிப்பட்ட கசாமுசா விஷயங்கள்.

மனிதனுக்கு எப்பொழுதும் அடுத்தவர்களுடைய அந்தரங்கங்களைத் தெரிந்து கொள்வது என்பது இரத்தத்தில் ஊறியுள்ள ஒரு குணம். ஒரு சினிமா நடிகை ஒரு நடிகனுடன் ஐந்து நிமிடம் பேசி விட்டால் போதும். அதற்கு கண், காது, மூக்கு எல்லோம் வைத்து ஒரு கதை கட்டி விடுவார்கள். இத்தகைய செய்திகளுக்குத்தான் இன்று மார்க்கெட் இருக்கிறது.

வாரப் பத்திரிக்கைகள் அனைத்தும் இத்தகைய செய்திகளை வைத்துத்தான் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டு இருக்கின்றன.

"ஜில்ஜில் ரமாமணி இன்று ...?' அப்படீன்னு ஒரு தலைப்பு வைத்துப்பாருங்கள்! உங்கள் பதிவின் ஹிட்ஸ் எங்கேயோ போய்விடும். மேட்டர், ஜில்ஜில் ரமாமணி இன்று சாப்பிட்டாள் அப்படீன்னு இருந்தாப்போதும்.

5. அரசியல் ஆரூடங்கள்

அரசியலில் பதிவுகள் போட அன்றாடம் எவ்வளவோ விஷயங்கள் கிடைக்கும். அன்றைய தினத்தந்தியைப் பாருங்கள். முதல் பக்கத்தில் என்ன செய்தி வந்திருக்கிறதோ அதை அப்படியே பதியுங்கள். கடைசியில் ஒரு பாரா உங்கள் கருத்துகளை சொல்லி பதிவை முடித்து விடுங்கள். உங்கள் கருத்து கொஞ்சம் ஏறுமாறாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.


6. பெண்களை மட்டம் தட்டும் பதிவுகள். 

காதலாவது கத்தரிக்காயாவது அப்படீன்னு இன்றைய காதலை ஒரு பிடி பிடியுங்கள். சரமாரியாக பின்னூட்டங்கள் வரும். அடுத்த பதிவில் காதலைப் போன்று புனிதமானது உலகத்தில் வேறு எதுவும் இல்லை என்று ஒரு பதிவு போடுங்கள்.

7. அடுத்து மாணவர்களைப் பற்றி

மாணவர்கள் ஏதாவது போராட்டம் நடத்தினால் அதைப்பற்றி உடனே பதிவு போட்டு விடுங்கள். இந்தக்காலத்து மாணவர்களுக்கு பொறுப்பே கிடையாது என்று எழுதினால் போதும். உங்களை அனைவரும் (மாணவர்களைத்தவிர மற்றவர்கள்- உங்கள் பதிவை எந்த மாணவனும் படிக்கப்போவதில்லை.) பிலுபிலு வென்று பிடித்து உலுக்குவார்கள்.

கடைசியாக முக்கிய குறிப்பு

 உங்கள் தோல் தடிப்பாக, எருமைத்தோல் மாதிரி இருக்கவேண்டும். பின்னூட்டங்களில் உங்களை வாய்க்கு வந்த படியும் வாயில் வராதபடியும் அர்ச்சனை செய்வார்கள். அத்தனையையும் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும்.

இன்னும் பல வழிகள் இருக்கலாம். இந்த யுத்திகளெல்லாம் என்னால் நேரடியாக சோதித்து அறிந்த அரிய உண்மைகள். ரிசல்ட்டுக்கு உத்திரவாதம் தருகிறேன். அதனால் அவைகளை மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன். மற்ற வழிகளை பிற பதிவுகளுக்குப்போய் அறிந்து கொள்ளவும்.