திங்கள், 28 ஏப்ரல், 2014

பேனாக்களும் நானும்


பேனாக்கள் வளர்ந்த கதை மிகவும் சுவாரஸ்யமானது. பழங்காலத்தில் தமிழ் நாட்டில் பனை ஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள் என்று கேட்டிருக்கிறோம். நான் அப்படி எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பார்த்திருக்கிறேனே தவிர அப்படி எழுதுபவர்களைப் பார்த்ததில்லை. இந்தப் பழக்கம் தமிழ் நாட்டில் மட்டும்தான் இருந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இங்குதான் பனை மரங்கள் உண்டு. மற்ற தேசங்களில் எப்படி எழுதினார்க்ள என்பதற்கு ஒரு ஆராய்ச்சிதான் செய்யவேண்டும். அந்த ஆசை எனக்கு இப்போது இல்லை.


நான் ஒரு முறை காரைக்குடிக்குப் போயிருந்தபோது அங்கு செட்டிநாட்டு பழம் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்குப் போயிருந்தேன். பல கலைநயம் பொருந்திய பழங்காலத்து பொருட்கள் அங்கு இருந்தன. அவை செட்டிநாட்டு நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் பொருட்கள். அதில் ஒரு எழுத்தாணியையும் பார்த்தேன். நான் அதற்கு முன் எழுத்தாணியைப் பார்த்தது இல்லை. அது ஒரு பக்கம் கத்தியும் மற்றொரு பக்கம் ஒரு கூரான ஊசியும் கொண்டு ஒரு பேனாக் கத்தியைப் போல் இருந்தது. இது என்ன என்று கடைக்காரரிடம் கேட்டதற்கு அவர் இதுதான் எழுத்தாணி என்று சொன்னார்.


உடனே அதன் விலையைக் கேட்டு அதை வாங்கிக்கொண்டேன். நான் ஒரு கம்பனாக மாறிவிட்டதாக ஒரு கற்பனை தோன்றியது. பழங்காலத்து நாகரிகத்தை பேணிக்காக்கும் ஒரு பெருமிதம் மனதில் உண்டானது. இப்போதும் அதை என் வீட்டு ஷோகேசில் வைத்திருக்கிறேன். பல முறை அதை என் சகதர்மிணி தூக்கிப் போடப் பார்த்தும் என் கவனத்தினால் அது காப்பாற்றப்பட்டு இன்று வரை தமிழனின் நாகரிகச் சின்னமாக, நானும் ஒரு தமிழன் என்று பறை சாற்றிக்கொண்டு இருக்கிறது.

தொடரும்...