ஞாயிறு, 25 ஜனவரி, 2015

சுயநலம் vs பொது நலம்

                              

"சுயநலம்" "Selfish" என்றாலே ஏதோ செய்யத்தகாத குற்றம் செய்ததாக கருதும் உலகத்தில் இன்று நாம் வாழ்கிறோம். சுயநலம் கொண்டவன் என்று ஒருவனைக் குறை கூறுவது மிகவும் சாதாரணமாக நடக்கிறது. ஆனால் இது போலித்தனத்தின் (Hypocrisy) உச்சகட்ட சிந்தனையாகும்.

சுயநலம் என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவேண்டும். தன்னைக் காப்பாற்றிக்கொண்டால்தான் அடுத்தவர்களைக் காப்பாற்றத் தேவையான சக்தி பிறக்கும். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாமல் நான் பொது நலவாதி,  பிறரைக் காப்பாற்றுவதே என் பிறவி நோக்கம் என்று இருந்தால் நீங்கள் மறைந்து போவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது.

ஒரு குடும்பத்தில் ஒருவன் மூத்த மகனாகப் பிறக்கிறான். அவனுக்குக் கீழே நான்கு உடன் பிறப்புகள். அனைவரையும் கடைத்தேற்ற வேண்டிய பொறுப்பு மூத்த மகனுக்கு உண்டு. ஆனால் அவன் தன்னுடைய நலத்தைக் கருதாமல் உடன் பிறப்புகளை மட்டும் கடைத்தேற்றி விட்டு வயதான காலத்தில் தனி மரமாக நின்று கொண்டு இருந்தால் அவன் மீது கூடப் பிறந்தவர்களோ உறவினர்களோ அனுதாபம் காட்ட மாட்டார்கள் என்பதை அவன் புரிந்து கொள்ளாவிட்டால் அவன் இந்த உலகில் வாழத் தகுதி அற்றவன்.

சிலர் பொது நல சேவை செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தான் சம்பாதிப்பதை எல்லாம் பிறருக்குச் சேவை செய்தே காலம் கழிப்பார்கள். தன் குடும்பம் எப்படி நடக்கிறது என்பதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்க்ள எல்லோரும் இந்நாளைய அரசியல்வாதிகளைப் பார்த்து நடந்து கொள்ளவேண்டும்.

ஆகவே சுயநலம் என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல. தனக்கு மிஞ்சித்தான் தானதருமம் என்று சொல்லியதை நினைவில் கொள்ளவேண்டும். மகாபாரதத்தில் வரும் கர்ணனைப் போல் பகழ் பெறவேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.