திங்கள், 16 பிப்ரவரி, 2015

எங்க ஊர் பைரவ சேனை

                                           
                                       Image result for street dogs

எங்கள் ஊரில் பைரவர் சேனை மிகவும் கட்டுப்பாடாக செயல்பட்டு வருகிறது. (வாழ்க மனேகா காந்தி - அவர்கள்தானே பைரவர்களைக் காப்பாற்ற உச்ச நீதி மன்றத்தில் ஆணை வாங்கினார்கள்).

நான் தினமும் நடைப் பயிற்சிக்காக செல்லும்போது இவர்கள் தங்களுடைய பணியில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பணி என்னவென்றால் தங்கள் தங்கள் பிரதேசத்தை பிறருடைய ஆக்கிரமிப்பில் இருந்து காப்பது.  இவர்களுடைய கட்டுக்கோப்பு அமைப்பு மிகவும் பாராட்டத் தகுந்ததாக இருக்கிறது.

இந்த சேனை பல குழுக்களாகப் பிரிந்து செயல்படுகிறது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு பகுதியை எல்லையாக அமைத்திருக்கிறார்கள். பொதுவாக இது ஒரு வீதியாகும். ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அல்லது ஆறு பேர் இருப்பார்கள். ஒரு பகுதிக்கும் இன்னொரு பகுதிக்கும் இடையில் பொதுப் பகுதி ஒன்று இருக்கும். அதில் எந்தக் குழுவும் உரிமை கொண்டாடக்கூடாது.

ஒரு குழுவிலிருந்து ஒருவர் அடுத்த குழுவின் எல்லையில் பிரவேசித்து விட்டால் போர் மூண்டு விடும். ஆஹா போர் என்றால் இதுதான் போர். இந்தப் போர் நடக்கும்போது அனல் பறக்கும். அதைத் தூரத்திலிருந்தே பார்த்து கவனித்து நீங்கள் இந்தப் பகுதியை விட்டு அடுத்த பகுதியில் உங்கள் நடைப் பயிற்சியைத் தொடர வேண்டும்.

இல்லையென்றால் நீங்கள் அடுத்த பத்து நிமிடத்தில் உங்கள் ஊரின் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பீர்கள். இந்தப் போரில் ஒரு விசேடம் என்னவென்றால் பைரவர்களில் ஒருவருக்கும் எந்த விதமான ஊறும் விளையாது. ஒரு குறிப்பிட்ட தூரத்தில் நின்று கொண்டுதான் வாய்ச்சவடால் அடித்துக் கொண்டிருக்கும்.

இப்படி ஒரு அரை மணி நேரம் நடந்த பிறகு ஏதாவது ஒரு குழுவிற்கு சோர்வு வந்து  விடும். அதன்பிறகு நடப்பதுதான் போரின் உச்சகட்டம். ஒரு குழு சோர்வடைந்து விட்டது என்பதை அடுத்த குழு எப்படியோ உணர்ந்து கொள்ளும். பிறகு அந்தக் குழு எதிர்க்குழுவைத் தாக்குவது போல் ஓடும். எதிர்க்குழு உறுப்பினர்கள் தங்கள் தங்கள் வாலைக் கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டு புறமுதுகிட்டு ஓடுவார்கள்.

பைரவர் வாலைத் தன் பின்னங்கால்களுக்கு நடுவில் வைத்துக்கொண்டார் என்றால் அது பயமும் தோல்வியும் அடைந்ததற்கு அடையாளம்.  தோல்வியுற்று பின்வாங்கும் கொழுவை தங்கள் எல்லையிலிருந்து வெகு தூரம் விரட்டி விட்டு அங்கே நின்று கொசுறுக்கு கொஞ்ச நேரம் வசை பாடிவிட்டு தங்கள் எல்லைக்குத் திரும்புவார்கள்.

இந்த நுணுக்கங்களை எல்லாம் அறிந்து இருந்தால் ஒழிய நீங்கள் தடைப் பயிற்சிக்குச் செல்லக்கூடாது. இந்தப் பயத்தானால் ஒவ்வொருவர் தாங்கள் வளர்க்கும் செல்லப் பைரவர்களைத் தங்கள் கூட நடைப் பயிற்சிக்கு அழைத்து வருவார்கள். இந்தச் செல்லப் பைரவர்களை காவல் பைரவர் குழு நடத்துவதே ஒரு பெரிய நாடகம் போல் இருக்கும்.

தூரமாக நின்று கொண்டு இந்தக் குழு அந்த வீட்டுப் பைரவருக்கு சவால் விடும். இதைக் கண்ட வீட்டுப் பைரவர் ஆக்ரோஷத்துடன் அந்தக் குழுவின் மேல் பாயத்துடிக்கும். இதைத் தடுக்க அந்த வீட்டுப் பைரவரின் வளர்ப்பாளர் படும் பாடு இருக்கிறதே, அது ஒரு காணக்கிடைக்காத காட்சி.

தப்பித்தவறி அவர் தன்னுடைய பிடியை விட்டு விட்டால் அப்புறம் நடப்பது ஒரு அரிய போராகும். இதில் பெரும்பாலும் வீட்டுப் பைரவர் தோற்றுப்போவார். அப்புறம் அவரை மருத்துவ மனையில் சேர்த்து வைத்தியம் பார்ப்பார்கள்.

நான் இந்த நுணுங்கங்களை நன்கு அறிந்திருப்பதால் இது வரை மருத்துவ மனைக்குப் போகாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். நடைப் பயிற்சி மேற்கொள்ளும் பதிவுலக நண்பர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பின்குறிப்பு: பைரவர் என்றால் யார் என்று நண்பர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அவர்களை "நாய்" என்று யாராவது சொன்னால் அவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.