வியாழன், 5 மார்ச், 2015

உ.வடை சாப்பிடுவது எப்படி?


                                            Image result for உளுந்து வடை

வடையைப் பற்றி எழுதச்சொல்லி ஒரு அன்பர் கேட்டிருந்தார். வடை என்றால் முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது, வடை என்றால் அது உளுந்து வடைதான். மற்றதெல்லாம் வடை அல்ல. உளுந்து வடை செய்ய உளுந்து வேண்டும். இதுதான் தெரியுமே என்று சொல்லக் கூடாது. ரேஷன் கடை உளுந்தைப் போட்டு வடை செய்து விட்டு வடை நல்லா இல்லைன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.

நல்ல புது உளுந்து வாங்கி தண்ணீரில் ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும். ஒரு டம்ளர் உளுந்துக்கு கால் டம்ளர் அரிசி வீதம் சேர்த்து ஊறவைக்கவேண்டும். அரை மணி நேரம் ஊறினால் போதும். கல்லுரலில் போட்டு ஆட்டி நைசாக ஆவதற்கு கொஞ்சம் முன்பாகவே எடுத்து விடவேண்டும்.

மாவு ஆட்டின பிறகு உடனே வடை சுட்டு விடவேண்டும். நேரம் ஆக ஆக வடை எண்ணையை அதிகம் குடிக்க ஆரம்பித்து விடும். அப்புறம் வடையைப் பிழிந்தால் எண்ணை சொட்டும். ஆனால் ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணை கொஞ்சமாவது இருந்தால்தான் வடை ருசியாக இருக்கும். சுத்தமான மரச்செக்கில் ஆட்டின கடலை எண்ணைதான் வடை சுடத் தகுந்தது. எந்த வித சுத்திகரிப்பு செய்த எண்ணைகளையும் உபயோகப்படுத்தவேண்டாம்.

வடைக்கு ஆட்டும் முன்பே இரண்டு வேலைகள் செய்து விடுங்கள். அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார் தயார் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.அது ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இருக்கட்டும். இன்னொரு வாயமன்ற பாத்திரத்தில் நல்ல புளிக்காத கெட்டித்தயிர் எடுத்து அளவாகத் தண்ணீர் விட்டுக் கலக்கி, கடுகு உ,பருப்பு, ப.மிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி, அளவாக உப்புப் போட்டுக் கலக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.

கேஸ் ஸ்டவ்வில்தான் வடை சுடுவீர்கள் என்று நம்புகிறேன். அதில் இருக்கும் இன்னொரு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முக்கால் பங்கு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். வடை சுட்டு எறக்கும்போது இந்த கொதி நீர் தயாராக இருக்கவேண்டும். அதை கீழே இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். வடை, முதல் அடைசல் எடுத்தவுடன் அவைகளை அப்படியே இந்த கொதி நீரில் போடவும், ஒரு நிமிடம் கழித்து அந்த வடைகளை எடுத்து தண்ணீர் நன்றாக வடிந்தவுடன் சாம்பார் வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

அடுத்த அடைசல் வடை எடுத்தவுடன் இதே மாதிரி கொதி நீரில் போட்டு எடுத்து, தாளித்து வைத்திருக்கும் தயிர் பாத்திரத்திற்குள் போடவும். இப்படியே ஒரு மூன்று அடைசல் வடைகளை ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளும் போட்டு விடுங்கள். அடுப்பு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, சாம்பார் வடைகள் இருக்கும் பாத்திரத்தை மட்டும் இன்னொரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதனுள் வைத்துக் கொஞ்ச நேரம் கழித்து எடுத்து விடுங்கள். அப்போதுதான் சாம்பார் சூடாக இருக்கும்.

தயிர் வடை இருக்கும் பாத்திரத்தை அவ்வாறு சூடுபடுத்தி விடாதீர்கள். அப்புறம் தயிர் பிருத்துப் போகும்.

இப்போது எல்லாம் ரெடி. ஒரு தட்டு எடுத்துக்கொண்டு அதில் இரண்டு சாம்பார் வடை வைத்துக் கொள்ளுங்கள். அது மூழ்கும் வரை சாம்பார் ஊற்றிக்கொள்ளவும். ஒரு ஸ்பூனால் வடையைப் பிய்த்து சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிடவும்.
                                              Image result for சாம்பார் வடை

ஒரு முறை சாம்பார் வடை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து இரண்டு தயிர் வடை இதே மாதிரி சாப்பிடவும். இப்படியே மாற்றி மாற்றி சாம்பார் வடை-தயிர் வடை என்று சாப்பிடவும். சொஞ்ச நேரத்தில் வடைகள் தீர்ந்து விடும். அப்போது சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.
                                                   Image result for தயிர் வடை

ஒரு அரை மணி நேரம் கழித்து நான்கு "யூனிஎன்ஜைம்" மாத்திரைகள் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கவும்.
                                            Image result for unienzyme tablet
இதுதாங்க வடை சாப்பிடும் முறை. இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

"கந்தா, காரவடை, காசுக்கு ரெண்டு வடை"  என்று யாராவது பின்னூட்டம் போட்டால் எனக்குக் கோபம் வந்து சாபம் கொடுத்து விடுவேன். ஜாக்கிரதை.