செவ்வாய், 17 மார்ச், 2015

வாழைக்காய் வடை

                                            
உளுந்து வடை தெரியும், மசால் வடை தெரியும், இது என்னங்க வாழைக்காய் வடை, வாழைக்காய் மாதிரி வடையா என்று குழப்பிக் கொள்ளவேண்டாம். இங்கு கொடுத்துள்ள குறிப்புகளைப் படித்து அதே மாதிரி செய்து சாப்பிடவும். (அம்மா செய்ய ஐயா சாப்பிடுவார். ஆளுக்கு ஒரு வேலை) அப்புறம் எனக்கு "சமையல் சக்கரவர்த்தி" என்னும் பட்டமே கொடுத்து விடுவீர்கள்.

போனவாரம் என் சம்பந்தி தோட்டத்திற்குப் போயிருந்தோம். அவர் அப்போதுதான் ஒரு முற்றின வழைத்தார் வெட்டி வைத்திருந்தார், மொந்தன் வாழைத்தார். மொந்தன் வாழைக்காய்கள் கறி செய்வதற்குத்தான் பயன்படும். பழுக்காது. நாங்கள் திரும்பி வரும்போது ஒரு சீப்பு (வாழைக்காய் சீப்புங்க, தலை சீவற சீப்புன்னு நெனக்காதீங்க) கொடுத்தனுப்பினார்.

அதை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தோம். அடுத்த நாள் அவைகளில் லேசாக மஞ்சள் நிறம் தட்டியது. அவை நல்ல முத்தின காய்களாக இருந்த தால் பழுக்க ஆரம்பிக்கிறது என்று புரிந்தது. அத்தனை காய்களையும் உடனே கறி செய்து சாப்பிட முடியாது. தவிர வாழைக்காய் கறி கொஞ்சம் திகட்டிப்போய் விட்டது.

என் தங்கைக்கு யாரோ எப்போதோ சொல்லியிருந்த குறிப்பு நினைவிற்கு வந்தது. வாழைக்காய் வடை சுடலாமா என்று ஒரு மந்திராலோசனை செய்து அந்த யோசனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று நான் பகல் தூக்கத்தை முடித்துவிட்டு எழுந்திருக்கும்போதே கமகமவென்று மசால் வாசனை மூக்கைத் துளைத்தது.

அவசர அவசரமாக முகத்தைக் கழுவி விட்டு வந்தால் ஒரு தட்டில் வடை மாதிரி நாலைந்து சமாச்சாரம் இருந்தது. ஒன்றைப் பிய்த்து வாயில் வைத்தேன். அப்படியே கரைந்து வயிற்றுக்குள் போய்விட்டது. இது என்னடா என்று அடுத்ததைப் பிய்க்காமல் வாயில் போட்டேன். கொஞ்ச நேரம் வாயில் இருந்தது. அப்போதுதான் அதன் ருசி நாக்கிற்கு உரைத்தது.

இது வரை நான் அப்படிப்பட்ட ஒரு வடை ருசியை அனுபவித்ததில்லை. கொஞ்சம் மொறுமொறுப்பு. கொஞ்சம் இனிப்பு சுவை. லேசான காரம். ஒரு பக்கத்தில் மசால் வாசனை. வடையில் வழக்கமாக க் காணப்படும் எண்ணையே இல்லை. இந்த ருசியை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

இதுதான் வாழைக்காய் வடை என்றார்கள். நான் முதலில் கொடுத்த வடைகளைச் சாப்பிட்டவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை கொடுத்தார்கள். அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை. .............................
இப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது. என்ன என்று கேட்டேன். அவ்வளவுதான் சுட்டவடைகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று பதில் வந்தது.

எத்தனை வடை சாப்பிட்டேன் என்று நினைவிற்கு வரவில்லை. அப்படியான ஒரு சுவை. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த மனப்பான்மையில் அந்த வடை சுடுவதின் ரகசியங்களைக் கேட்டறிந்து உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்ல முற்றின வாழைக்காய்கள் ஒரு பத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவைகளை அப்படியே இட்லிப்பானையில் வைத்து வேகவையுங்கள். நன்றாக வேகவேண்டும். ஆனால் குழைந்து போகக்கூடாது. அவைகளை ஆறின பிறகு எடுத்து தோல்களை உறித்து விடவும். தோல்கள் வேண்டாம். அவைகளைக் கடாசிவிடவும்.

இதன் கூட ஒரு டம்ளர் பொட்டுக்கடலை, அரைமூடி தேங்காய் துருவின தேங்காய்த் துருவல், ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு துண்டு லவங்கப்பட்டை, இரண்டு தேக்கரண்டி மிளகாய்த்தூள், அளவான உப்பு, கொஞ்சம் கருவேப்பிலை, சொஞ்சம் கொத்தமல்லித் தழை இவைகளைச் சேர்த்து கல்லுரலில் போட்டு நைசாக வரும் வரை ஆட்டிக் கொள்ளவும். ஆட்டும்போது தேவையான தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். ஆட்டின மாவு வடை சுடும் பக்குவத்திற்கு ஆட்ட வேண்டும்.

அவ்வளவுதான். இந்த மாவை சிறு சிறு வடைகளாக எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

இந்த வேலைகளை எல்லாம் வீட்டுக்கார அம்மா செய்யும்போது நீங்கள் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கவும். ஒவ்வொரு அடைசலாக சுட்டவுடன் தட்டில் உங்களுக்கு வரும். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடவும். ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும்.

இதுதாங்க வாழைக்காய் வடை சுடும் சாப்பிடும் பக்குவம். எப்படி ஆண்களும் பெண்களும் வீட்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பதை இந்தப் பதிவில் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளேன் என்பதை ரசிக்கவும்.