திங்கள், 25 மே, 2015

ஆனந்தம் என்றால் என்ன?

                                        Image result for குண்டலினி சக்தி
இவ்வுலகில் இன்பத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அதே போல் துன்பத்தை வெறுக்காதவர்களும் யாரும் இல்லை. வாழ்க்கையின் குறிக்கோள் இந்த இரண்டு மட்டுமே என்று ஆகிப்போனது. சம்ஸ்கிருதத்தில் இதையே "சுகப்பிராப்தி, துக்க நாஸ்தி" என்று சுருக்கமாகச்
சொல்லுகிறார்கள்.

படிப்பதற்கும் கேட்பதற்கும் இது எவ்வளவு எளிமையாகத் தோன்றுகிறது. ஆனால் நடைமுறையில் எல்லோராலும் இந்த நோக்கத்தை அடைய முடிகிறதா? இல்லையே? ஏன்?

இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடித்தான் எல்லோரும் அலைகிறோம். எனக்கு மட்டும் இந்தக் கேள்விக்கான பதில் தெரிந்திருந்தால் நான் இன்று உலகத்திற்கே ராஜாவாக இருப்பேன். ஆனால் என்னுடைய நல்ல காலமோ கெட்ட காலமோ, அந்த விடை தெரியவில்லை. வீட்டிற்கு ராஜாவாகவே முடியவில்லை. உலகத்திற்கு ராஜாவாகிறாராம் என்று வீட்டுக்காரி வேறு முனகுகிறாள்.

இருக்கட்டும். விடை எங்கே கிடைக்கும் என்றாவது யோசிப்போம்.

ஆன்மீகவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால் "நீ உன்னை அறிந்தால் சுக-துக்கம் இரண்டையும் ஒன்றாக உணர்வாய்" என்கிறார்கள். அதாவது நீ என்பது ஆத்மா. ஆத்மா வேறு. அநாத்மா (அதாவது உன் உடல்) வேறு, அதனால் உன் உடலுக்கு ஏற்படும் சுக துக்கங்களுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை,

இதைப் புரிந்து கொள்ள இந்த ஒரு ஜன்மம் போறாது. முதலில் ஆத்மா என்றால் என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும். பிறகு ஆத்மா வேறு அநாத்மா வேறு என்பதை உணரவேண்டும். பிறகு சுகதுக்கங்கள் நம்முடையவை (அதாவது ஆத்மாவினுடையவை) அல்ல. அவை அநாத்மாவினுடையவை என்று புரியவேண்டும்.

தலைவலி வந்து விட்டால் அது யாருக்கோ வந்திருக்கிறது, நமக்கென்ன என்று இருக்கவேண்டும். ஆத்மாவை உன் உடலிலிருந்து ஐந்தடி உயரத்தில் இருப்பதாக பாவனை செய்துகொள். அப்போது நீ உன் உடலை தனியாக ஒரு இடத்தில் இருந்து பார்க்கிறாய். அப்போது உன் உடலுக்கு ஏற்படும் எந்த உணர்வும் உன்னைப் பாதிக்காது அல்லவா?

இப்படி யாரும் இதுவரை செய்ததாக சரித்திரம் இல்லை. ஆனால் இதைக் காலம் காலமாய் நிஜ சாமியார்களும் போலி சாமியார்களும் சொல்லிச் சொல்லியே காசு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி செய்யக்கூடிய சக்தி உங்களில் யாருக்காவது இருந்து நீங்கள் (அதாவது உங்கள் ஆத்மா) உடலிலிருந்து ஐந்தடி மேலே போனால் அவ்வளவுதான், மின் மயானத்திற்கு உங்கள் அநாத்மாவைக் கொண்டு போய் தகனம் செய்து விடுவார்கள்.

ஆகவே இந்த உபாயம் நமக்கு உதவாது. வேறு ஏதாவது உபாயங்க்ள இருந்தால் இதைப் படிக்கும் அன்பர்கள் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அதுவரை சுகம் வரும்போது ஆனந்தத்தையும் துன்பம் வரும்போது துக்கத்தையும் அனுஷ்டிக்கவும்.