திங்கள், 28 செப்டம்பர், 2015

மாலைகளும் மரியாதையும்.

                                                  Image result for Flower Decorated Indian Deities
கடவுள் விக்கிரகங்களுக்கு மாலைகளால் அலங்காரம் பண்ணுவது காலம் காலமாய் வந்த பழக்கம். ஒவ்வொரு அர்ச்சகருக்கும் ஒவ்வொரு ரசனை உண்டு. சிலர் செய்த அலங்காரத்தினால் அந்த விக்கிரகத்திற்கே அழகி கூடும். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல தோன்றும். அநுத மாதிரி அலங்காரம் செய்யக்கூடியவர்கள் வெகு சிலரே.

எப்படி அலங்காரம் செய்திருந்தாலும் அது ஒரு நாள் மட்டுமே. அடுத்த நாள் அதை நீக்கித்தான் ஆகவேண்டும். அப்படி நீக்கப்பட்ட அலங்காரப் பூக்களை கோயில்களில் என்ன செய்கிறார்கள் என்று நான் பார்த்ததில்லை. அனேகமாக குப்பைகளோடுதான் சேர்த்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

கடவுள் விக்கிரகங்களுக்குப் போட்ட மாலை புனிதமானது என்று கருதுகிறோம். அதில் கடவுளின் அருள் இறங்கியிருக்கிறது என்றும் நம்புகிறோம். அதனால்தான் அர்ச்சகர் பெரிய பிரமுகர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுக்கு இந்த சாமியின் மேல் உள்ள மாலைகளில் ஒன்றை எடுத்து அவர் கழுத்தில் போடுவார்கள்.

மாலை யாரோ வழிபாட்டுக்காகக் கொடுத்தது. அடுத்த நாள் எப்படியும் குப்பைக்குத்தான் போகப்போகிறது. அதை இன்று ஒரு மனிதனுக்குப் போட்டால் தனக்கு ஏதோ ஒரு வகையில் ஆதாயம் கிடைக்கும் என்றுதான்  அந்த அர்ச்சகர் அந்த மாலையை அவருக்குப் போடுகிறார். இது வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

அந்த முக்கிய பிரமுகர் அந்த மாலை கழுத்தில் போட்ட பிறகு என்ன செய்கிறார் என்றால் அதைக் கழட்டி தன் உதவியாளரிடம் கொடுக்கிறார். அவர் அதை அந்த பிரமுகர் வந்திருக்கும் காருக்கு அணிவிக்கிறார். அடுத்த நாள் அந்த காரைத்துடைக்கும் ஆள் அதை எடுத்து குப்பையில் வீசுவார். எப்படியும் அந்த மாலை குப்பைக்குத்தான் போகப்போகிறது.

இந்த நிகழ்வில் உள்ள தாத்பரியம் ஒன்றே. அந்தப் பிரமுகர் கொஞ்சநேரம் தனக்கு ஏதோ பெரிய கௌரவம் வந்து விட்டதாக நினைக்கிளார்.  இது ஒரு பெரிய மாயை. நானும் சில சமயம் கோவில்களுக்குப் போகும்போது அந்த அர்ச்சகர் சாமியின் மேல் இருக்கும் மாலைகளில் ஒன்றைக் கழட்டி எனக்கு கொடுக்க முற்படுவார். நான் அதை மறுத்து விடுவேன்.

காரணம் அந்த மாலையை என் கழுத்தில் போடுவதால் அர்ச்கருக்கு கூட பத்து ரூபாய் காணிக்கை கிடைக்கும் என்பதைத்தவிர, எனக்கு கடவுளின் அருள் ஸ்பெஷலாக க் கிடைத்து விட்டது என்று நான் கருதுவதில்லை. தவிர முக்கியமான பிரச்சினை என்னவென்றால் என் கழுத்தில் போடப்பட்ட அந்த மாலையை அப்புறம் என்ன செய்வது என்பது பெரிய பிரச்சினை.

அதில் கடவுளின் அருள் ஒட்டிக்கொண்டிருப்பதால் அது புனிதமான ஒன்று ஆகி விடுகிறது. அப்படிக் கருதும்போது அதை குப்பையில் போட்டால் கடவுளுக்கு கோபம் வந்து அந்த அருளை திருப்பி எடுத்துக்கொண்டால் என்ன செய்வது என்ற பயம் வருகிறது. அத்தோடு விட்டாலும் பரவாயில்லை. என் அருளை நீ இவ்வாறு அவமதிக்கிறாயா என்று ஏதாவது தண்டனை கொடுத்தாலும் கொடுக்கலாம். இந்த வம்புகளெல்லாம் வேண்டாமென்று நான் இந்த மாலை மரியாதைகளைத் தவிர்த்து விடுவேன்.

இப்போது எங்கள் ஊரில் ஒரு புது கலாச்சாரம் சில கோவில்களில் பரவி வருகிறது. ஏதாவது விசேஷ தினங்கள் என்றால் அந்த சாமி விக்கிரகத்திற்கு ரூபாய் நோட்டுகளில் மாலை கட்டி சாத்துகிறார்கள். இந்த மாலைகளையும் பூ மாலைகளைப் போல் அடுத்த நாள் குப்பையில் போடுவார்களா என்பது தெரியவில்லை. அநேகமாக அப்படிச் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இதே போல் மனிதர்களைக் கௌரவிக்க மேடைகளில் மாலை போடுகிறார்கள். சில சமயங்களில் மாலைகள் போறாவிட்டால் ஒருவருக்குப் போட்டதையே இன்னொருவருக்கும் போடுவது உண்டு. இந்த மாலைகளின் ஆயுள் சில மணித்துளிகளே. அவை எவ்வளவு விலை உயர்ந்த மாலைகளாயிருந்தாலும் இதை கதிதான். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அந்த மாலைகளை உடனடியாகக் குப்பைக்குப் போய்விடும். சில சமயம் அவைகளுக்கு அந்தப் பெரிய மனிதர்களின் காரை அலங்கரிக்கும் பேறு கிடைக்கலாம்.

சில சமயம் பூ மாலைகளுக்குப் பதிலாக சந்தன் மாலை அல்லது வேறு செயற்கை மாலைகளை அணிவிக்கிறார்கள். இவை பூ மாலை போல் வாடாது. அதனால் அதை வீட்டிற்கு கொண்டு போய் வைத்துக்கொள்ளலாமே என்ற ஆசை பலருக்கும் வருவதுண்டு. அப்படி வீட்டிற்கு கொண்டு போகப்படும் மாலைகளை என்ன எய்வது, எத்தனை நாள் வைத்துக்கொள்வமு என்பது பிரச்சினைகளே.

எனக்கும் என் மனைவிக்கும்  சமீபத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த மாதிரி சந்தன மாலைகளை போட்டு விட்டார்கள். அவைகளின் விலை அநேகமாக ஜோடி 500 ரூபாய்க்குக் குறையாமலிருக்கும். அவைகளை வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு ஜன்னலில் மாட்டியிருக்கிறோம். நான் அல்ல, என் மனைவி மாட்டி வைத்திருக்கிறாள். எத்தனை நாளைக்கு அதை வைத்திருப்பாள் என்று தெரியவில்லை. எப்படியும் ஒரு நாள் அது குப்பைக்குப் போகவேண்டியதுதான்.


இந்த சந்தன மாலைகள் எவ்வளவு விலை உயர்ந்த தாக இருந்தாலும் அதை இன்னொரு தடவை உபயோகிக்க முடியமா? ஒருவருக்குப் போட்ட மாலையை இன்னொருவருக்கு போடக்கூடாது என்பது சம்பிரதாயம்.

இந்த மாலையை என்ன செய்யலாம் என்று உங்கள் கருத்துகளைக்கூறலாம்.

இதே போல் திருமண மாலைகைள ஆற்றிலோ குளத்திலோ அல்லது வேறு நீர் நிலைகளிலோதான் போடவேண்டும் என்று ஐதிகம் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். பிள்ளையார்கள்க் கரைத்தே நீர் நிலைகளை எல்லாம் மாசடைந்து கிடக்கின்றன. அதன்கூட இதுவும் சேர வேண்டுமா?

இந்த சிந்தனைகள் ஏன் உதித்தன என்றால், எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரைப் பார்க்கப்போக வேண்டியிருக்கிறது. அவர் எனக்கு சந்தன மாலை வாங்கி வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதை வாங்கி பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து இப்போது தொங்கும் இரண்டு மாலைகளுக்குத் துணையாக அதையும் தொங்க விடலாமா அல்லது அவருக்கு நாசூக்காகச் சொல்லி இந்த விபரீத முடிவை ரத்து செய்யச்சொல்ல லாமா என்று தீவிர ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன்.