சனி, 3 அக்டோபர், 2015

விழாக்களும் தவறுகளும்





நேற்று (2-10-2015) கிருஷ்ணகிரியில் நான் இணைந்திருக்கும் ஓய்வு பெற்ற விவசாய வல்லுனர்கள் சங்கத்தின் ஆண்டு மகாநாடு நடந்தது. என்னையும் சேர்த்து சுமார் 350 பேர் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் சங்க உறுப்பினர்கள் மகாநாட்டு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டனர். அனைத்து ஏற்பாடுகளையும் நன்றாகத் திட்டமிட்டு செயல் புரிந்தனர்.

ஆனாலும் விழா நடக்கும்போது நான் கண்ட சில குறைகளை இங்கே சுட்டிக்காட்டுகிறேன். இந்த தவறுகள் நமது பதிவர் மகாநாட்டிலும் ஏற்படலாம். இவைகளைத் தவிர்க்காவிட்டால் விழாவின் பெருமை கெடும் என்று கருதுகிறேன்.

வருகைப் பதிவு செய்த கல்லூரி மாணவிகள்
1.  ஒலி பெருக்கி ஏற்பாடுகள்

மகாநாடு ஒரு கல்யாண அரங்கில் நடைபெற்றது. அந்த அரங்கில் 1000 பேர் இருக்க முடியும். எங்கள் சங்க உறுப்பினர்கள் 350 பேர்கள் வந்திருந்தார்கள். ஏறக்குறைய அரங்கின் முக்கால் பங்கு நிறைந்திருந்தது. ஒலி பெருக்கி ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். ஆனால் அதன் தரம் மிகவும் மோசமாக இருந்தது. மேடையில் பேசுபவர்களின் பேச்சு ஒருவருக்கும் தெளிவாகக் கேட்கவில்லை.

ஒலி பெருக்கிகள் நல்ல தரம் வாய்ந்தவைகளாக இல்லாவிட்டால் விழாவில் கலந்து கொள்பவர்கள் விழா நிகழ்வுகளை சரியாக அனுபவிக்க இயலாமல் போகும்.

                                 

2. மூத்த உறுப்பினர்களைக் கௌரவித்தல்.

இதற்காக மிகவும் பொருட் செலவில் ஒவ்வொருவரின் பெயர் பொரித்த நினைவுப் பொருள் தயார் செய்து அவைகளை மேடையில் அலங்காரமாக வைத்திருந்தார்கள். அவைகளைக் கொடுப்பதற்காக  அந்த பெயர்களைப் படிக்கும்போது அவர்களில் பலர் கூட்டத்திற்கு வரவில்லை என்று தெரிந்தது. வந்திருந்தவர்களும் அரங்கின் பல இடங்களில் உட்கார்ந்திருந்தபடியால் இந்த நிகழ்ச்சியில் குழப்பமும் காலதாமதமும் கணிசமாக ஏற்பட்டது.

பரிசுப்பொருட்களையும் சரியாக அடையாளம் கண்டு காலதாமதமில்லாமல் எடுத்துக்கொடுக்க சுறுசுறுப்பானவர்களாகவும் சமயோசித புத்தி கொண்டவர்களுமான சிலரை மேடையில் இருக்க வைக்கவேண்டும்.


பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி
                                   
பரிசுகள் வாங்குபவர்களை முதலிலேயே கணக்கு எடுத்து அவர்களின் பெயர்களை மட்டும் படித்தால் நல்லது. தவிர அந்த பரிசு வாங்குபவர்களை அடையாளம் கண்டு முதலிலேயே மேடைக்குப் பக்கத்தில் அமர வைத்தால் வரிசையாக அவர்கள் வந்து பரிசு வாங்கிக்கொண்டு போக ஏதுவாக இருக்கும். இதை சரியாக திட்டமிடாவிட்டால் குழப்பமும் நேர விரயமும் மிஞ்சும். பரிசு பெற்ற, விழாவிற்கு வராத பதிவர்களின் பெயர்களை கடைசியில் ஒன்றாக வாசித்து விடலாம்.

3. கூட்டத்தினர் அமைதியாக இருக்கவேண்டியதின் அவசியம்.

எந்த ஒரு விழாவானாலும் சில, பல பிரபலங்களைக் கூப்பிட்டு மேடை ஏற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. அப்போதுதான் விழாவிற்கு ஒரு களை கட்டும். அப்படிக் கூப்பிட்டு மேடையில் இருக்கும் பிரபலங்களுக்கு நாம் செய்யும் மரியாதை அவர்கள் பேசும்போது அமைதியாக இருந்து அவர்கள் பேசும் பேச்சைக்கேட்பதே.

எங்கள் விழாவிற்கு வந்திருந்த பலர் தங்கள் நண்பர்களை பல நாட்கள், ஏன் பல வருடங்கள் கழித்து சந்திக்கின்றார்கள். அவர்களுடன் அளவளாவ வேண்டுமென்ற ஆவல் கட்டாயம் இருக்கும். ஆனால் அப்படி அளவளாவ விழா அரங்கு தகுந்த இடமல்ல. கூட்டத்தில் சிறுசிறு குழுக்களாக பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தால் மேடையில் பேசும் பேச்சாளருக்கு எப்படியிருக்கும்?

பதிவர்கள் சந்திப்பு அரசியல் கூட்டம் அல்ல. அரசியல் கூட்டங்களில் என்ன சலசலப்பு இருந்தாலும் பேச்சாளர்கள் அதைக் கண்டுகோள்ளாமல் பேசிக்கொண்டே போவார்கள். ஆனால் ஒரு படித்தவர்கள், பண்பாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு விழாவில் இப்படி சளசளவென்று பேசிக்கொண்டிருந்தால், பேசுபவருக்கு எப்படியிருக்கும்? அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?

நான் கலந்து கொண்ட எங்கள் சங்க மகாநாட்டில் விழா நிகழ்ச்சிகளின்போது ஒரே சந்தை இரைச்சல். மேடையில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்று தெரியாத அளவிற்கு சத்தம். பலமுறை மைக்கில் வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல் போய் விட்டது. ஆனால் இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மூத்த குடிமக்கள். வயதானால் ஒருவன் மீண்டும் குழந்தையாகிறான் என்று கேட்டிருக்கிறோம். அதை நேற்று நான் கண்ணாரக் கண்டேன். அனவரும் குழந்தைகளை போல் இரைச்சல் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நான் பதிவர்கள் மகாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு விடுக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், விழா நிகழ்ச்சிகளின்போது முழு அமைதி காக்கவேண்டும். பல பெரிய அதிகாரிகளையும் பேச்சாளர்களையும் அழைத்து மேடையில் அமர்த்தி விட்டு அவர்கள் பேசும்போது அரங்கில் இரைச்சலாக இருந்தால் பதிவர்களின் பேரில் அவர்களுக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும்?

அது தவிர விழாக் குழுவினர் இந்த சமயத்தில் என்ன மன நிலையில் இருப்பார்கள் என்பதையும் சிறிது கற்பனை செய்து பாருங்கள். நாம் கலந்து கொள்ளப்போவது திருமண விழா அல்ல. சக பதிவர்களைப் பார்த்ததும் மெய் மறந்து அவர்களுடன் அளவளாவ வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கையே. அந்த ஆவலை சாப்பிடும்போதோ அல்லது தேநீர் அருந்தும்போதோ நிறைவேற்றிக்கொள்ளலாம்.

அல்லது முதல் நாளே புதுக்கோட்டைக்கு வருபவர்கள் 10 ம் தேதி மாலை விழா அரங்கிற்கு வந்து விட்டால் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டு அளவளாவ சௌகரியமாக இருக்கும்.

4. தேனீர் கொடுத்தல்.

விழா நடக்கும்போது எக்காரணம் கொண்டும் தேனீர் விநியோகிக்கக் கூடாது. இது எப்படியும் சலசலப்பைத் தோற்றுவித்து விழாவின் போக்கை கெடுக்கும். இந்த தேனீர் விநியோகம் அதற்கென்று தனிப்பட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் கொடுப்பதுதான் உசிதம்.

5. பதிவர்களின் கடமை.

இந்த விழா பதிவர்களாகிய நாம் நடத்தும் விழா. திரு. முத்து நிலவன் தனிப்பட்டு நடத்தும் சொந்த விழா அல்ல. அவர் முன்னின்று விழா ஏற்பாடுகளை நமக்காகச் செய்கின்றார். இந்த விழாவில் பதிவர்களின் பெருமை அடங்கியிருக்கிறது. பதிவர்களாகிய நாம் மற்றவர்களைவிட மேம்பட்ட அறிவாளிகள் என்ற இறுமாப்புடன் வலம் வருகிறோம். அப்படி நினைக்கும் நாம் நடந்து கொள்ளும் பாங்கு அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமல்லவா? இதை பதிவர் மகாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டுகிறேன்.