புதன், 14 அக்டோபர், 2015

இரு பிரபல வலைப்பதிவர்களின் சந்திப்பு

                            Image result for திருச்ச மலைக்கோட்டை

புதுக்கோட்டை பதிவர் திருவிழாவிற்குச்  செல்வதென்று முடிவு செய்தவுடனேயே என்னுடைய பயணத்திட்டத்தில் திரு வை.கோபால கிருஷ்ணன் இடம் பிடித்து விட்டார். திருச்சியில் அவரை சந்தித்துவிட்டுப் பிறகு புதுக்கோட்டை செல்வதென்று முடிவு செய்து அவருக்கும் செய்தி அனுப்பினேன்.

உடனே அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த பதிலைப் பார்த்தவுடன்  "வாங்கோ, வாங்கோ, பேஷா வாங்கோ" என்கிற அழைப்புச் சத்தம் நேரில் கேட்கிற மாதிரியே இருந்தது. அவர் ஒரு பின்னூட்டப்போட்டி வைத்திருந்தது பதிவர்களுக்கு நினைவு இருக்கலாம். அந்தப் போட்டியை நான் நிறைவு செய்ததற்காக அவர் எனக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்பினார். ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடலாமே என்று திட்டமிட்டேன். அதற்குத் தகுந்த மாதிரி ரயில் டிக்கெட்டுகள் வாங்கினேன்.

திருச்சி ஜங்ஷனில் இறங்கியதுமே அவருக்குப் போன் செய்தேன். ஒன்றாம் நெம்பர் பஸ்சில் ஏறி மெயின்கார்டு கேட் வந்து இறங்குங்கள். நான் வந்து உங்களை "பிக்அப்" செய்துகொள்கிறேன் என்றார். அதே மாதிரி மெயின்கார்டு கேட்டில் இறங்கி ரோடை தாண்டியதுமே அங்கு காத்துக் கொண்டு இருந்தார். என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றி நேராக அவர் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் "மதுரா கபே" க்கு அழைத்துச் சென்றார்.




திரு வைகோவும் மதுரா கபே 
ஓட்டல் முதலாளி திரு ஸ்வாமிநாத அய்யரும்

அந்த ஓட்டலின் முதலாளி திரு.ஸ்வாமிநாதய்யர் தஞ்சாவூரிலிருந்து வெகு நாட்களுக்கு முன் இங்கு வந்து இந்த ஓட்டலை நடத்திக்கொண்டு இருக்கிறார், அவர் குடும்பம் முழுவதும் அங்கேயே குடியிருக்கிறார்கள். அனைத்து ஐட்டங்களையும் வீட்டில் செய்வது போலவே அவ்வளவு சுவையாகவும் சுத்தமாகவும் செய்கிறார்கள். தலை வாழை இலை போட்டு ஒவ்வொரு பதார்த்தத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுபவர்கள் திருப்தி அடையும் அளவிற்கு பரிமாறுகிறார்கள். சாப்பாடு "அன்லிமிடட்".

நான் சாப்பிட்ட அன்று பீட்ரூட் பொரியல், புடலங்காய் கூட்டு, கடாரங்காய் ஊறுகாய், அப்பளம், வடை,பாயசம், சாம்பார், மோர்க்குழம்பு, ரசம், தயிர், மோர் ஆகியவை பரிமாறப்பட்டன. அனைத்தும் மிகவும் சுவையாக இருந்தன. நான் வழக்கமாக சாப்பிடுவதைப்போல் இரண்டு மடங்கு சாப்பிட்டேன்.

சாப்பிட்ட பிறகு வைகோ அவர்களின் வீட்டிற்குப் போனோம். அங்கு அவர்கள் எனக்கு மாலை மரியாதைகள் செய்து திக்கு முக்காடச் செய்துவிட்டார். அத்தோடு அவர் வைத்திருந்த போட்டிக்கான பரிசையும் கொடுத்தார்.



இந்தப் பரிசைப் பற்றின தகவல்கள் தனிப்பதிவாக வரும்.


நான் வைகோ அவர்களுக்குச் செய்த பதில் மரியாதை

இவ்வறு பரிசு மழையில் மூச்சு முட்டிப்போன நிலையில் அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்கிறீர்களா என்று கேட்டவுடன் அவர் அறையில் படுத்துவிட்டேன். ஏசி அறை. பயணக் களைப்பு. பிறகு சொல்லா வேண்டும். ஒரு மணி நேரம் சோர்க்கத்திற்குப் போய்த் திரும்பினேன்.

எழுந்து முகம் கழுவி வந்து உட்கார்ந்ததும் சூடாக பஜ்ஜி, இன்னும் பல பலகாரங்கள் வந்து விட்டன. முடிந்தவரை அவைகளைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு வந்த டிகிரி காப்பியைக் குடித்தேன். மணி மூன்றரை ஆகிவிட்டது. உடனே புறப்பட்டால்தான் புதுக்கோட்டை மாலைக்குள் போய்ச்சேர முடியும். அதனால் அவர்களிடம் பிரியா விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

வைகோ அவர்களின் வீட்டிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டேண்ட் இரண்டு பர்லாங்க் இருக்கும். என்னை ஆட்டோவில் ஏற்றி அங்கு கொண்டு விடுகிறேன் என்று வைகோ அடம் பிடித்தார். ஐயா, எனக்கு வழி நன்றாகத்தெரியும், நான் பத்திரமாக நடந்து போய்விடுவேன் என்று பல முறை வற்புறுத்திக் கூறியதால் அரை மனதாக என்னைத் தனியாகப் போக விட்டார். அப்போதும் லிப்டில் என்னுடன் கீழே இறங்கி வந்து "பார்த்துப்போங்கோ, பார்த்துப்போங்கோ," என்று பல முறை பத்திரம் சொல்லி என்னை வழியனுப்பினார்.

சில அடிகள் எடுத்து வைத்தவுடன் என்னைக் கூப்பிட்டுக்கொண்டே பின்னால் வந்து விட்டார். என்னவென்றால் அவர் வீடு இருக்கும் வீதி முனையில் ஒரு கருப்பராயன் கோவில் சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். அந்த கருப்பராயனையும் தரிசனம் செய்து விட்டுப் போங்கோ என்று ஒரு வேண்டுகோள். அப்படியே செய்து விட்டு சத்திரம் பஸ் ஸ்டேண்ட் போய்ச்சேர்ந்தேன். உடனே ஒரு டவுன் பஸ் திருச்சி மத்திய பஸ் ஸ்டேண்ட் செல்லப் புறப்பட்டுக்கொண்டு இருந்தது. அதில் ஏறி எந்த விதமான சிரமமும் இல்லாமல் திருச்சி மத்திய பஸ் ஸ்டேண்ட் போய்ச் சேர்ந்தேன்.

உடன் பிறந்தவர்கள் கூட இவ்வளவு பரிவுடன் ஒருவரை கவனிக்க மாட்டார்கள். அவ்வளவு பரிவுடனும் பாசத்துடனும் என்னை உபசரித்த திரு வைகோ அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை. அவருக்கு என் நன்றியை பல முறை சொல்லிக்கொள்கிறேன்.