புதன், 2 மார்ச், 2016

அட்டாலியிலிருந்து !

அநேகம் பேருக்கு அட்டாலி என்றால் என்ன என்று தெரியாமலிருக்கலாம். இங்கிலீஷில் Barn என்று சொல்வார்களே அதைத்தான் எங்க ஊர்ல அட்டாலின்னு சொல்ற வளக்கம். உங்க ஊர்ல எல்லாம் பரண் அப்படீன்னு சொல்வாங்க.

வேண்டாத அதாவது உடனடித் தேவைக்கு வேண்டாத சாமான்களை இங்கு போட்டு வைப்பார்கள். அப்படி என்னுடைய பழைய பதிவுகளை கூகுளாண்டவர் பரணில் போட்டு வைத்திருக்கிறார். கொஞ்ச நாட்களாக எனக்கு கடுமையான கற்பனை வறட்சி. ஒரு டாபிக்கும் கிடைக்கமாட்டேன் என்கிறது.

அதனால் பரணில் ஏறித் தேடிப்பார்த்தேன். பழைய பதிவுகளில் ஒரு நல்ல சீரீஸ் கிடைத்தது. அதை வைத்து கொஞ்சம் நாட்களை ஓட்டலாம் என்று முடிவு செய்து முதல் பதிவை இங்கு போடுகிறேன்.

1.தேவலோகத்தில் ஒரு புரட்சி


நான் நேற்றிரவு ஒரு கனா கண்டேன். அந்தக் கனவில் மும்மூர்த்திகளும் தோன்றி, மகனே, உன்னால் ஒரு பெரிய காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கு நீ தயாரா என்று கேட்டார்கள். ஆஹா, மும்மூர்த்திகளும் கேட்கும்போது மறுத்தால் நன்றாக இருக்காது என்று, சரி என்று சொன்னேன்.

அப்போது அவர்கள் சொன்னதின் சுருக்கம்:

முமூ (மும்மூர்த்திகள்) - மகனே, இந்திர லோகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். அங்கே தற்போது இந்திரன் என்று ஒரு கையாலாகாத ராஜா ஆண்டு கொண்டிருக்கிறான். அவன்  ஒரு சரியான சோம்பேறி. எப்போதும் டான்ஸ் பார்த்துக்கொண்டு நாட்டின் நலனைக் கவனிப்பதில்லை. தேவர்கள் எல்லோரும் சோர்ந்திருக்கிறார்கள். நீதான் அந்த நாட்டை சீர்திருத்தவேண்டும்.

நான் - ஐயன்மீர், எனக்கு வயதாகி விட்டது. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. என்னால் எப்படி இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும்?

முமூ (மும்மூர்த்திகள்) - தேவலோகத்திற்கு வந்து ஒரு "புல்" பாட்டில் சோமபானம் அருந்தி ஒரு மணி நேரம் ஊர்வசியின் நாட்டியம் பார்த்தால் உன் சோர்வெல்லாம் பறந்து போய்விடும்.

நான் - ஊர்வசி இப்போ அங்கதான் இருக்காங்களா?

முமூ - மகனே, அது சினிமா ஊர்வசி இல்லை, நிஜ ஊர்வசி. நீ முதலில் புறப்படு. காலம் கழிந்து கொண்டே இருக்கிறது.

நான் - அது சரி, அங்கே நான் என்ன சீர்திருத்தம் வேண்டுமானாலும் செய்யலாமா?

முமூ - நீ என்ன செய்தாலும் யாரும் உன்னை ஒன்றும் கேட்க மாட்டார்கள். கேட்கக்கூடாது என்று உத்திரவு போட்டிருக்கிறோம். தவிர, உனக்கு சர்வ சக்தியும், சர்வக்ஞானமும் சர்வ பராக்கிரமும் கொடுத்திருக்கிறோம். நீ கிழித்த கோட்டை ஒருவரும் தாண்ட மாட்டார்கள்.   உனக்கு 100 ஆண்டுகள் டைம் கொடுத்திருக்கிறோம். அதற்குள் நீ எப்படியாவது தேவலோகத்தை சுறுசுறுப்பாக்கிவிடவேண்டும்.

நான் - அப்படியே செய்கிறேன். எனக்குத் துணையாக பூலோகத்திலிருந்து இரண்டு பேர் வேண்டுமே?

முமூ - எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். சீக்கிரம் புறப்பட்டால் போதும்.

நான் உள்ளூர் பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூட்டிக்கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன்.

அவர்களுடைய புஷ்பக விமானத்தில் ஏறிச்சென்றோம். அந்த புஷ்பக விமானம் அரதப் பழசு. லொடலொடவென்று சத்தம். உட்காருவதற்கு மரப் பெஞ்சுகள். ஏர் ஹோஸ்டஸ் ஒருவரும் இல்லை. சரி. நாம் பதவி ஏற்றதும் முதலில் நம்முடைய உபயோகத்திற்காக சவுதி மன்னர் டிசைன் செய்திருக்கும் விமானம் போல் ஒன்று வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எல்லோரும் தேவலோகம் போய்ச் சேர்ந்தோம்.  அங்கு இறங்கியதும்தான் கவனித்தேன். எங்களை வரவேற்க ஒரு ஈ, எறும்பு கூட விமான நிலையத்திற்கு வரவில்லை. மும்மூர்த்திகளிடம் என்ன, நம்மை வரவேற்க ஒருவரையும் காணவில்லையே என்றேன். அதற்கு விஷ்ணு, நாட்டின் நிலை எவ்வளவு சீர்கெட்டுக் கிடக்கிறது பார்த்தாயா, இதையெல்லாம் சீர்திருத்தத்தான் உன்னை வரவழைத்திருக்கிறோம் என்றார்.
ஒரே வருடத்தில் பாருங்கள். நான் என்னவெல்லாம் மாற்றிக்காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு இந்திர சபைக்குச் சென்றோம். அங்கு இந்திரன் ரம்பை ஊர்வசியின் நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டு நாங்கள் வந்ததையே கவனிக்கவில்லை. பிரம்மா அவனருகில் சென்று அவனைத் தொட்டபிறகுதான் அவன் நாங்கள் வந்ததை அறிந்து எங்களை வரவேற்றான்.

நாட்டியம் பார்க்கத் தடை ஏற்பட்ட வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது. மும்மூர்த்திகளும் அவனைப் பார்த்து இதோ இங்கு வந்திருக்கும் மானிடன்தான் இனிமேல் இந்த தேவலோகத்திற்கு அரசன். நீ இனி ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்றார்கள். இந்திரனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

அதெப்படி மூன்று மாத நோட்டீஸ் கொடுக்காமல் என் பதவியைப் பறிக்கலாம் என்றான். மும்மூர்த்திகள் அதற்குப் பதிலாக உனக்கு மூன்று மாத சம்பளம் இதோ, வாங்கிக்கொண்டு உடனடியாக இடத்தைக் காலி செய் என்றார்கள். அவன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. நான் தேவர்களைச் சேர்த்துக்கொண்டு ஸ்ட்ரைக் செய்வேன் என்றான். மும்மூர்த்திகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

என்னைப் பார்த்தார்கள். அவர்கள் எனக்கு சர்வ சுதந்திரமும் சர்வ வல்லமையும் கொடுத்திருந்த படியால், நான் அவர்களைப் பார்த்து நீங்கள் கவலைப்படவேண்டாம், இனிமேல் நான் கவனித்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்று சொல்லி அவர்களை வழியனுப்பினேன்.


தொடரும்...